Friday, August 7, 2009

பங்குச் சந்தையில் பாதுகாப்பாக முதலீடு செய்ய

நான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ததே இல்லை. என்னுடைய கருத்துக்கள் எல்லாம் படித்தறிவில் வந்தவைதான். அதை மனதில் வைத்துக் கொண்டு புரிந்து கொள்ளுங்கள் :-)

1. முதலீடு செய்ய விரும்பும் நிறுவனத்தைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளுங்கள். யார் அதை ஆரம்பித்தார்கள், தற்போதைய உரிமையாளர்கள் யார் யார், நிர்வாகிப்பது யார், அந்தத் துறை எப்படி வளர்கிறது, துறையில் இந்த நிறுவனத்துக்கு எவ்வளவு சந்தைப் பங்கு என்று புரிந்து கொள்ளுங்கள்.

புரியாத நிறுவனத்தில் பங்கின் விலை ஏற்ற இறக்கங்களை வைத்து மட்டும் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஆண்டு தோறும், காலாண்டுகள் தோறும் வெளியிடும் நிதிநிலை அறிக்கைகளை படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். Balance Sheet‌ ல் இருக்கும் ஒவ்வொரு விபரமும் புரிவது வரை அந்த நிறுவனத்தைப் பற்று உங்களுக்குத் தெரியவில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

2. குடும்பத் தேவைகள், எதிர்கால சேமிப்பு, குழந்தைகள் கல்வி, மருத்துவத் தேவைகள் இவை எல்லாவற்றுக்கும் பணம் ஒதுக்கியது போக எஞ்சிய பணத்தை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஒதுக்குங்கள்.

3. ஒரே நிறுவனத்தின் பங்குகளை வாங்காமல், மேலே சொன்ன மாதிரி ஆய்வு செய்து 4-5 நிறுவனங்களை தேர்ந்தெடுத்து விட்டு தீர்மானித்த அளவில் பங்குகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளில் பணம் சம்பாதிக்க முயற்சிக்காமல், நீண்ட காலம் வைத்திருந்து முதலீட்டை வளர்க்க முயற்சிக்கலாம். 4,5ல் ஒன்று இறங்கினாலும் மற்றவை ஏறும்படி இருக்க வேண்டும்.

4. ஏதாவது நிறுவனம் முழுவதுமாக சறுகிப் போகிறது என்று தோன்றினால் (சமீபத்திய சத்தியம்) அதை பட்டியலில் இருந்து நீக்கி விட்டு வேறு நிறுவனத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.