Monday, August 4, 2008

பணம் ஒரு அளவை

கேள்வி:
ஒரு வணிக நிறுவனத்தின் நோக்கம் என்ன? எதற்காக வணிக நிறுவனம் அமைப்பதற்கு வழி செய்து கொடுத்திருக்கிறோம்?

பதில்:
1. பணம் சம்பாதிக்கிறது! தொழில் நடத்தி நிறைய சம்பாதிக்கிறதுதான் முதல் நோக்கம்.
2. அடுத்ததா வேணும்னா அடுத்தவங்களுக்கு சேவை செய்றது என்று வைத்துக் கொள்ளலாம்.

திருத்தம்:
அப்படியா? பணம் சம்பாதிக்கிறது வேறு, சேவை செய்றது வேறு என்று நினைக்கிறீங்களா?
பணி செய்தால் சம்பளம் கிடைக்கும். பணி செய்வதற்கும் சம்பளம் கிடைப்பதற்கும் ஒரு உறவு இருக்கிறது.

இன்னொரு பக்கம் கிரிக்கெட் பார்க்கப் போனால், வேலைக்குப் போக முடியாது. கிரிக்கெட் பார்க்கப் போவதற்கும் வேலைக்குப் போவதற்கும் ஒரு உறவு இருக்கிறது.

சேவை செய்வதற்கும் பணி செய்வதற்குமான உறவு எதைப் போன்றது? ஒன்றுக்கொன்று நேரடி உறவுடையதா, அல்லது எதிர்மறை உறவுடையதா? ஒரு நிறுவனம் நல்ல சேவை கொடுக்கிறதா என்பதற்கான அளவு கோல்தானே சம்பாதிக்கும் பணம்?

நாம் நல்ல சேவை கொடுத்ததாகச் சொல்லிக் கொள்கிறோம். அது உண்மைதானா, நம்முடைய சேவையின் நன்மை என்ன என்று எப்படி அளப்பது? எப்படி மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள்? அதுதான் ஈட்டும் பணம்.

இன்போசிஸ் 16000 கோடிகள் சம்பாதித்தது என்று சொன்னால், அவர்கள் சேவைகளை வாங்கிப் பலனடைந்த வாடிக்கையாளர்கள் 16000 கோடி ரூபாய்கள் இன்போசிஸ்ஸுக்குக் கொடுத்தார்கள் என்று பொருள். சேவை செய்வதன் அளவு கோல்தான் பணம்.

அதனால் நிறுவனத்தின் நோக்கம் என்று கேட்டால், பணம் சம்பாதிப்பது என்று மட்டும் சொன்னால் போதும். பணம் எப்படிச் சம்பாதிக்கலாம், சேவை அளிப்பதன் மூலம்.

அல்லது நிறுவனத்தில் நோக்கம் சேவை செய்வது என்று சொன்னால் போதும். எவ்வளவு சிறப்பாகச் சேவை செய்திருக்கிறோம் என்பதைப் பார்க்க வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை அளவிட்டுக் கொள்ள வேண்டும்.

'நான் நல்லா சேவை செய்தேன், ஆனால் பணம் வந்து சேரவில்லை' என்று சொன்னால் பொருள் இல்லை. நல்லா சேவை செய்திருந்தால் அதை வாங்கியவர் மனமுவந்து பணமும் கொடுத்திருப்பாரே!

'சில இடங்களில் சேவை நல்லா இல்லாமலேயே பணம் வாங்கி விடுகிறார்கள். டாடா உடுப்பி உணவு விடுதியை எடுத்துக் கொள்ளுங்கள். விலை இவ்வளவு அதிகம், அதற்கு ஏற்ற தரம் இல்லைதான். அங்கு போய்ச் சாப்பிடுபவர்கள் பணம் கொடுத்து விட்டுதான் வெளியில் வர வேண்டும். அவர்கள் பணம் கொடுக்கும் போது திருப்தி இல்லாமல் கொடுத்தாலும், அதை அளவிட்டால் டாடா உடுப்பி மிகச் சிறந்த சேவை அளிப்பதாக ஆகி விடுமே!'

அதுவும் சரிதான். சேவையின் சிறப்பை அளக்க பணம் ஒரு முக்கியமான அளவீடு. ஆனால், பணம் மட்டும் சரியான அளவீடாக இருக்க முடியாது. ஏனென்றால் பொருளாதார அமைப்பின் இயல்பால் எல்லோரும் சமமான நிலையில் இருந்து சேவைகளை வாங்கவும் விற்கவும் முடியாது. சில பண்டமாற்றுகளில் ஒருவரின் கை ஓங்கி இருக்கும். அவர் கொடுக்கும் சேவையை விட அதிகமான பணத்தை வாங்கி விடவோ, வாங்கிய சேவையை விட குறைவான பணத்தை கொடுத்து நகர்ந்து விடவோ முடியும்.

ஆகவே இரண்டாவதாக பார்க்க வேண்டியது, சம்பாதித்த பணம் என்ற அளவீட்டில் சில குறைபாடுகள் இருக்கலாம். இன்னும் புகுந்து பார்த்தால்தான் உண்மையான நிலவரம் வெளியில் வரும்.

1 comment:

தென்றல் said...

Welcome Back, சிவகுமார்!!