Monday, April 30, 2007

பச்சைத் தோல்களைத் திரட்ட.. (தோலின் கதை - 2)

முதல் படி பச்சைத் தோல் வாங்குதல்.

ஒவ்வொரு ஊரிலும் இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்குகளின் தோல்களை சேகரித்து விற்கும் வியாபாரிகள் இருப்பார்கள். பெரிய இறைச்சி கிடங்குகள் இருக்கும் இடத்துக்கு அருகில் தோல் வாங்க விற்க சிறப்புச் சந்தையே இருக்கலாம். இந்த தோல்களின் எண்ணிக்கையும், தரமும் இடம், காலம் பொறுத்து பெரிதளவு மாறுபடும்.
  • குளிர்காலத்தில் எடுக்கப்படும் தோல் வெப்பத்தால் சேதமடையாமல் இருக்கும். வெயில் காலத்தில் சேதம் அதிகமாக இருக்கும்.
  • மழைக் காலத்தில் தோலில் பூச்சிக் கடிகள் இருப்பதால் தரம் குறையும்.
  • தீபாவளி, பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் இறைச்சி உண்பது அதிகமாக இருப்பதால் கிடைக்கும் தோலின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
தோல் பதனிடும் சாலை, தோல் வாங்கும் போது ஆயிரக் கணக்கான எண்ணிக்கையில் தொகுத்து கிடைக்கும். அதன் உள்ளே என்ன மாதிரியான தரமுடைய தோல்கள் இருக்கின்றன என்பது தெரியாது. ஆனால் தோல் பதனிட்ட பிறகு காலணி செய்யும் போது ஒவ்வொரு தோலாக வெட்டி காலணி செய்வார்கள். செய்த காலணியை வாங்கும் மக்களும் பூதக் கண்ணாடி வைத்துக் கொண்டு என்ற பழுதும் இல்லாததைத்தான் ஏற்றுக் கொள்வார்கள்.

வாங்கிய தோலுக்குக் கொடுத்த விலை சரியானதுதானா என்று கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு தோலின் தரத்தை சரிவர நிர்ணயித்து பிரித்துப் பார்க்க வேண்டும். ஆயிரம் தோல்களில் எத்தனை முதல் தரம், எத்தனை இரண்டாவது தரம் என்று தரம் பிரித்துப் பார்த்தால்தான் வாங்கிய விலை நியாயமானதா என்று தெரியும்.

பச்சைத் தோலாக இருக்கும் போது மேற்பரப்பில் இருக்கும் காயங்கள், தழும்புகள், வெட்டுகள் தெளிவாகத் தெரியாது. பரப்பில் இருக்கும் முடியைத் தள்ளி, பிற தேவையில்லாத பகுதிகளையும் விலக்கிய பிறகுதான் தோலின் தரம் தெரிய வரும்.

Saturday, April 28, 2007

தோலின் கதை...

எந்த ஒரு தொழில் நிறுவனமும், ஒருவர் தனியாகவோ (proprietorship), கூட்டுச் சேர்ந்தோ (partnership), பங்கு போட்டுக் கொண்டோ (limited company) உழைத்து அந்த உழைப்பின் பலனாக வரும் பொருள் அல்லது சேவையை மற்றவர்களுக்கு வழங்குவதை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

அந்த பலனின் மதிப்பைப் பொறுத்து நிறுவனத்துக்கு பணம் கிடைக்கிறது.

இந்த உழைப்பு, பொருட்களை வாங்கி மதிப்பை அதிகமாக்கி விற்பதற்காக இருக்கலாம், அல்லது நேரடியாக சேவை வழங்குவதாக இருக்கலாம்.

'எதை விற்றாலும் வாங்குபவர்கள் சேவையைத்தான் வாங்குகிறார்கள்' என்பார்கள் சந்தைப்படுத்தலில். தொலைக்காட்சி வாங்குகிறார் ஒருவர் என்றால் அவர் வாங்குவது ஒரு பெட்டியை அல்ல, அந்தப் பெட்டியின் மூலம் தம்மை மகிழ்வித்துக் கொள்ள கிடைக்கும் சேவையைத்தான் வாங்குகிறார். ஒரு ஊரில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே தெரியாது என்றால் யாருமே தொலைக்காட்சி பெட்டி வாங்க மாட்டார்கள்தானே!

எல்லா தொழில்களுமே வாங்கி, மதிப்பு கூட்டி விற்பதை செய்தாலும் ஒவ்வொரு தொழிலிலும் சிறப்பு நுணுக்கங்கள் இருக்கும். அதைக் கற்றுக் கொள்ள பல ஆண்டுகள் கல்லூரி படிப்பு, பல ஆண்டுகள் நடைமுறை அனுபவங்கள் தேவைப்படும்.

நான் தோல் துறையில் பணி புரிவதால், தோல் துறையில் நுணுக்கங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். தோல் துறையை எடுத்துக்காட்டாகக் கொண்டு பொதுவான மேலாண்மை கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.

நம்மில் பெரும்பாலோருக்கு பதத்தோல் என்பது நாம் வாங்கிப் பயன்படுத்தும் செருப்பிலோ, மேலணியிலோ அல்லது தோலால் மூடப்பட்ட இருக்கைகளிலோ இடம்பெற்றுள்ள ஒன்று என்பதோடு சரி!

பதத்தோலைப் பற்றித் தெரிந்து கொள்ளாவிட்டால் வாழ்வே இருண்டு விடப் போவதில்லை என்றாலும், தோல் பொருள்களை வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும், ஏதேனும் தொந்தரவுகள் முளைக்கும் போதும், கைவசம் கொஞ்சம் விபரங்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

தோல் துறையில் முதலில் வரும் முறை-சார்ந்த நிறுவனங்கள் டேனரி எனப்படும் தோல் பதனிடும் சாலைகள். இந்த பதனிடும் சாலைகள் பச்சைத் தோலை வாங்கி, வேதிப் பொருட்களால் பதப்படுத்தி, இயந்திரங்கள் மூலம் மாற்றங்கள் நிகழ்த்தி காலணி/தோல் சட்டை/தோல் பொருட்கள் செய்வதற்கு ஏற்ற பதத் தோலாக விற்கின்றன.
இதற்கு நூற்றுக் கணக்கான ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.

Friday, April 20, 2007

பணம் பெருக்கும் வங்கிகள் (economics - 50)

பொதுவாக பணம் என்றால் நாணயங்களும் நோட்டுகளும்தான் நாம் கணக்கில் எடுத்துக் கொள்வோம். கொடுக்கல் வாங்கப் பயன்படும் எல்லா இடைப் பொருளும் பணம் என்று வைத்துக் கொண்டால் வங்கிக் காசோலைகளும், கடனட்டைகளும் கூட பணம்தான்.

நாணயங்களும் நோட்டும் மத்திய ரிசர்வ் வங்கியால் அச்சடித்து வெளியிடப்படுகின்றன. வங்கிக் கடன்கள் பணத்தை எப்படி அதிகரிக்கின்றன?

ஒரு வங்கிக்கு 100 ரூபாய் வைப்புத் தொகை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் 35 ரூபாய் அரசுப் பத்திரங்களில் போய் விடுகிறது. மீதி இருக்கும் 65 ரூபாயை ஒரு தொழில் நிறுவனத்துக்குக் கடனாக அளிக்கிறது. இந்தக் கடன் பணமாக மாற்றப் படுவதில்லை. அந்த நிறுவனக் கணக்கில் 65 ரூபாய் வரவு வைத்து விடுவார்கள்.

வங்கியின் இருப்பில் 65 ரூபாய் இருக்கும் அதே நேரத்தில் 65 ரூபாய்க்கு காசோலை எழுதும் வசதி நிறுவனத்துக்குக் கிடைத்து விடுகிறது. நாட்டில் புழங்கும் பணத்தின் அளவில் 65 ரூபாய் சேர்ந்து கொள்கிறது.

இப்போது கடன் வாங்கிய நிறுவனம், அதை தனக்கு இயந்திரம் விற்ற நிறுவனத்துக்குக் காசோலையாக கொடுத்து விடுகிறது. இயந்திர நிறுவனம் அந்தக் காசோலையை தனது வங்கியில் போடுகிறது. இரண்டாவது வங்கியின் வைப்புத் தொகை 65 ரூபாய் அதிகரித்து விடுகிறது. அந்த 65ல் 35% சதவீதம் போக மீதி சுமார் 40 ரூபாய் அந்த வங்கி கடன் கொடுக்க முடியும்.

இப்படி நீண்டு கொண்டே போய் வங்கிகளின் அமைப்பிலிருந்து காசாக வெளியே எடுக்கப்படா விட்டால் ஒவ்வொரு சுற்றிலும் குறைந்து கொண்டே போனாலும் மொத்தத்தில் முதலில் போடப்பட்ட 100 ரூபாய் மூலம் வங்கிகள் 250 ரூபாய் உருவாக்கி விடும்.

இப்போது கடனட்டைகள் வந்து விட்டதால் இந்தப் பணி இன்னும் எளிதாகி விட்டது. காசோலை ஏற்றுக் கொள்ளாத இடங்களில் கூட கடனட்டை மூலம் பணப்பெருக்கம் ஜாம் ஜாமென்று நடைபெறுகிறது.

அரசின் கட்டுப்பாடு இல்லாமல் சொந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வங்கிகள் கடன் கொடுத்துக் கொண்டிருந்தால் 100 ரூபாய் வைப்புத் தொகை முடிவே இல்லாமல் பணப் புழக்கத்தைப் பெருக்கிக் கொண்டே போய் விட முடியும். இதில்தான் ரிசர்வ் வங்கி என்ற மத்திய வங்கியின் பணி வருகிறது.

Wednesday, April 18, 2007

குட்டி போடும் பணம் (economics - 49)

ஆரம்ப காலங்களின் நாணயம் கிடையாது. பண்ட மாற்று முறைக்குப் பிறகு குறிப்பிட்ட பொருட்களை செலவாணியாகப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. தானியம், கால்நடைகள் போன்று பல பொருட்களைத் தாண்டி தங்கம் நாணயமாக பயனுக்கு வந்தது.

அந்தக் காலத்தில் பொற்கொல்லர்களிடம்தான் தங்கம் இருந்தது. யாரிடமாவது தேவைக்கதிகமாக தங்கம் கைவசம் இருந்தால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பொற்கொல்லர்களிடம் கொடுத்து வைப்பார்கள். தேவைப்படும் போது திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அந்தச் சேவைக்குக் கட்டணம் பெற்றுக் கொள்வார்கள் வங்கிகளாக செயற்பட்ட பொற்கொல்லர்கள்.

இப்போது வங்கிகளில் நகைகளைப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைப்பது போன்ற முறை அது. நாம் கொடுத்த நகை அப்படியே திரும்பிக் கிடைக்கும். நகை இல்லாமல், தங்க நாணயங்களைக் கொடுத்து வைக்கும் போது என்ன நடந்திருக்கும்?

ஒருவர் கொடுத்த நாணயத்துக்கும் மற்ற நாணயங்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போனது. திருப்பிக் கொடுக்கும் போது மொத்தக் கலவையிலிருந்து சரியான எண்ணிக்கையைக் கொடுத்தால் போதுமாக இருந்தது. இப்படிப் பார்த்தால் எப்போது பார்த்தாலும் தங்க நாணயப் பெட்டியில் ஏராளமான நாணயங்கள் சேர்ந்திருந்தன.

ஒவ்வொரு நாளும் தமது வைப்பைத் திரும்பப் பெற வருபவர்கள், புதிதாக சேமிப்பு போட வருபவர்கள் என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் நாடும் வங்கியின் கைவசம் தேங்கியிருக்கும் பணத்தின் அளவு கணிசமாக இருக்கும்.

இது சும்மா பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்காமல் தேவைப்படுபவர்களுக்குக் கடனாகக் கொடுக்கலாமே என்று ஒரு புத்திசாலிக்குத் தோன்றியிருக்கும். இப்படி தமது பணத்தைக் கடனாகக் கொடுக்கிறார் என்று வாடிக்கையாளருக்கு சந்தேகம் வராத வரையில் பிரச்சனை இல்லை. யார் வந்து கேட்டாலும் பணத்தைக் கையிருப்பிலிருந்து கொடுக்க முடிந்து விட்டால் தொந்தரவே வராது. பணம் போட்டு வைத்த ஒவ்வொருவருக்கும் தான் போய்க் கேட்கும் போது போட்ட காசு உடனேயே கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தால் போதுமானது.

கைவசம் நூறு ரூபாய் வைப்புத் தொகை இருந்தால் அதில் 30 ரூபாயை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு மீதி 70 ரூபாயை வெளியில் கடனாகக் கொடுத்து விடலாம். எப்படியும் சும்மா தூங்கும் பணத்தை வெளியே விட்டு சம்பாதிக்க முடிவது ஆதாயம்தானே.

இப்படியே சுவை கண்ட பிறகு வைப்புத்தொகை அதிகமானால் கடன் கொடுப்பதையும் அதிகரிக்கலாம் என்று உணர்ந்து வைப்புத் தொகைக்கு சேவைக் கட்டணம் வசூலிக்காமல், தமக்குக் கிடைக்கும் வட்டித் தொகையில் ஒரு பகுதியை வைப்புதாரர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கவும் ஆரம்பித்தார்கள்.

ஆரம்ப காலங்களில் கட்டுப்பாடு இல்லாமல் கடன் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்டு பல வங்கிகள் திவாலாகின. இருபதாம் நூற்றாண்டில் அரசாங்கம் பொருளாதார நடவடிக்கைகளை நெறிப்படுத்த வேண்டும் என்று கண்டு கொள்ளப்பட்ட பிறகு வங்கிகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் (இந்தியாவின் ரிசர்வ் வங்கி போல) ஏற்படுத்தப்பட்டன.

அவை நூறு ரூபாய் வைப்புத் தொகை கிடைத்தால் எவ்வளவு சதவீதம் காசாக கைவசம் வைத்திருக்க வேண்டும் (cash reserve ratio) - ரொக்க இருப்பு வீதம், எவ்வளவு சதவீதம் பாதுகாப்பான அரசு கடன் பத்திரங்களாக வைத்திருக்க வேண்டும் (statutory liquidity ratio) - கட்டாய உடனடித் தேவை வீதம் என்று சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. 35% SLR என்று இருந்தால் வைப்புத் தொகையில் 35% அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கப்பட வேண்டும். திடீரென்று பல வாடிக்கையாளர்கள் காசை எடுக்க வந்து விட்டால் பத்திரத்தை விற்றுக் காசு கொடுத்து விட முடியும்.

இப்படி ஒதுக்கி வைத்தது போக மீதியிருக்கும் பணத்தை கடனாகக் கொடுக்கும் போது வங்கிகள் பணத்தை உருவாக்குகின்றன. எப்படி?

Tuesday, April 17, 2007

பணம் படுத்தும் பாடு (economics - 48)

'ஒரு டாலருக்கு 45 ரூபாய் கிடைக்கிறது என்பது எப்படி நிர்ணயமாகிறது?' என்று கேட்டார் அலுவக நண்பர் ஒருவர். விளக்க ஆரம்பித்தேன். ஆரம்பித்த சில நிமிடங்களில் ஒரு சிறிய கூட்டமே கூடி விட்டது.

ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையே நடக்கும் பரிமாற்றங்களில்தான் இந்த வீதம் தீர்மானமாகிறது.

நமக்கு டாலர் எப்போது தேவைப்படும்?
வெளி நாட்டுக்குப் பயணம் போகும் போதோ, வெளி நாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்யும் போதோ டாலர் தேவைப்படும். அதற்காக நம் கையில் இருக்கும் ரூபாய்களைக் கொடுத்து டாலராக மாற்ற முயற்சி செய்வோம்.

சரி, டாலரை எப்போது விற்க முயல்வோம்?
நம்ம மென்பொருளை வெளிநாட்டுக்கு விற்றதால் வாடிக்கையாளர் அனுப்பிய டாலர்களை உள்ளூரில் செலவழிக்க ரூபாயாக மாற்றும் போதும் அதே கடைக்குப் போவோம். அல்லது வெளி நாட்டு உறவினர் பணம் அனுப்பினால் மாற்ற வேண்டியிருக்கும்.

இப்படி ஏற்றுமதி, வெளிநாட்டு பண வரவு, வெளிநாட்டிலிருந்து முதலீடு என்று ஒரு வெளிநாட்டு பணம் நம்ம ஊர் பணமாக மாற வேண்டிய தேவைகள். இறக்குமதி, வெளிநாட்டிற்கு பணம் அனுப்புதல் என்று நம்ம பணம் வெளிநாட்டுப் பணமாக மாற வேண்டிய தேவைகள்.

கடையில் கத்தரிக்காய் விற்பது போல, தேவைதான் இந்த விலையையும் தீர்மானிக்கிறது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதிகள், அங்கிருந்து வரும் இறக்குமதிகளை விடக் குறைவாக இருந்தால் டாலர் விற்பவர்களை விட வாங்குபவர்கள் குறைவாக இருக்க டாலர் விலை ஏறும். அதாவது 44 ரூபாயக்கு ஒரு டாலர் என்பது 45 ரூபாய் என்று ஏறி விடும். இது போல எல்லா விற்பனை, வாங்குதல்களின் சமநிலையில் ஒரு விலை வீதம் அமைந்து விடுவதுதான் பணமாற்ற வீதம்.

பெரும்பாலும் சந்தையிலேயே இந்த வீதம் தீர்மானிக்கப் பட்டாலும், ஒரு நாட்டின் அரசோ, அல்லது பன்னாட்டு நிதி நிறுவனங்களோ, மாற்று வீதத்தை குறிப்பிட்ட அளவில் வைக்க முயலலாம். ரூபாய் மதிப்பு 44ஐ விடக் கூடவோ, குறையவோ கூடாது என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்தால் 44 ரூபாய் வீதத்தில் விற்பதை விட அதிகமான டாலர்கள் வாங்குபவர்கள் வந்து 45 ஆக மாறப் போகிறது என்று தெரிந்தால் தன் கைவசம் இருக்கும் டாலர்களை சந்தையில் விற்பனைக்கு அளித்து விலை ஏறாமல் பார்த்துக் கொள்ளும்.

இன்னொரு பக்கம் டாலர்களின் எண்ணிக்கை அதிகரித்து 43ஆக மாறப் போகிறது என்று தெரிந்தால் டாலர்களை வாங்கி தன் கையிருப்பில் வைத்துக் கொள்ள ஆரம்பிக்கலாம்.

இதுதான் இன்றைக்கு நிலவும் பணமாற்று வீதங்களின் அடிப்படை.

குறிப்பிட்ட அளவு தங்கம் இருந்தால்தான் பணம் வெளியிட முடியும் என்பது உண்மையா?

முன்பெல்லாம் அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது பணத்தின் அளவை மத்திய வங்கி தீர்மானிக்கும் வகையில்தான் இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைக்கு தேவையான அளவு பணம் அச்சடித்து வெளியிடுவது அரசின் பொறுப்பு.

தேவை என்பது என்ன?

நாட்டில் பத்தாயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் கைமாற வேண்டுமானால் பத்தாயிரம் கோடி பணம் புழக்கத்தில் இருக்க வேண்டும். (இந்தக் கணக்கில் இன்னும் பல காரணிகள் வரும், ஒரு எளிய புரிதலுக்கு இப்படியே வைத்துக் கொள்ளலாம்). பொருட்களின் அளவும் தரமும் உயராமல் திடீரென்று பணப்புழக்கம் இருபதாயிரம் கோடிகளாக உயர்ந்து விட்டால், இரண்டு மடங்கு பணம் அதே அளவு பொருட்களைத் துரத்த விலைவாசி இரண்டு மடங்காக உயர்வதுதான் மிஞ்சும்.

நாட்டின் உற்பத்தித் திறன் உயர்ந்து பொருட்களின் மதிப்பு உயர்ந்தால் அந்த மதிப்பை பரிமாறிக் கொள்ள வசதியாகக் கூடுதல் பணம் வெளியிடப் பட வேண்டும். இல்லையென்றால் பரிமாற்றங்கள் போதிய பணப்புழக்கம் இல்லாமல் முடங்கிப் போய் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டு விடும்.

இந்த இரண்டுக்கும் நடுவில் சரியான அளவில் பண அளவை கட்டுப்படுத்துவதுதான் மத்திய வங்கியின் பணி.