Thursday, May 31, 2007

Wednesday, May 30, 2007

Tuesday, May 29, 2007

நடுவில் கொஞ்சம் கதை - நிவதி (ERP) 7

http://kaniporul.blogspot.com/2010/08/erp-7_12.html

Sunday, May 27, 2007

Saturday, May 26, 2007

Friday, May 25, 2007

Thursday, May 24, 2007

Wednesday, May 23, 2007

ERP அறிமுகம் (நிவதி - 1)

http://kaniporul.blogspot.com/2010/08/erp_5181.html

Tuesday, May 15, 2007

எல்லைகளைத் தாண்டி (தோலின் கதை - 23)

தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்குப் பிறகு, தில்லியிலிருந்து கொல்கத்தா போக ரயில் சீட்டோ, விமானச் சீட்டோ சென்னையிலேயே பதிவு செய்து கொள்ள முடிகிறது. வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை வீட்டிலிருந்தே கையாள முடிகிறது.

குளிர்பதனப் பெட்டியில் முட்டைகளின் எண்ணிக்கைக் குறைந்தால் அதில் பதித்திருக்கும் சில்லு மூலமாக அருகில் இருக்கும் கடையின் கணினிக்குத் தகவல் போய்க் கடையிலிருந்து முட்டை கொண்டு வரும் வசதி வந்து விடலாம். முட்டை வந்ததும் செல்பேசியில் சில விசைகளை அழுத்தி அதற்கான மதிப்பை கடையின் கணக்குக்கு மாற்றிக் கொடுத்து விடும் நாள் வந்து விடலாம்.

இது போல தாமாகவே பொருள் தேவைகள் பரிமாறிக் கொள்ளப் படும் மின்னணு வசதிகள் வளர்ந்த நாடுகளின் வணிகத் துறையில் ஓரளவு வந்து விட்டன. கார்பொரேட் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனம் அலுவலகங்களில் தேவைப்படும் பொருட்களை வழங்கும் சேவையை செய்கிறது. அதன் வாடிக்கையாளர் நிறுவனக் கணினியில் என்னென்ன பொருட்கள் தேவை என்று பதிவு செய்து வாங்குபவர் தமது ஒப்பதலை அளித்து விட்டால், கணினித் தொடர்பு மூலமாக விபரங்கள் கார்ப்பொரேட் எக்ஸ்பிரசுக்கு வந்து சேர்ந்து, பொருளை வாடிக்கையாளருக்கு அனுப்பி விடுகிறார்களாம்.

 • போஸ்டனில் ஒரு வலைப்பதிவர் ஒரு சோடி காலணி வாங்கி அதன் விபரம் கடைக் கணினியில் பதிந்து சரக்கு குறைகிறது.
 • சரக்கு இவ்வளவுக்குக் கீழ் குறைந்தால், ஒரே நாளில் இந்த பாணி காலணியில் இத்தனை எண்ணிக்கை விற்பனை ஆனால், காலணி நிறுவனத்துக்குத் தகவல் போக வேண்டும் என்று வழி சொல்லி வைத்திருந்தால் தகவல் கணினி இணைப்பு மூலம் நியூயார்க்கில் இருக்கும் காலணி நிறுவனத்துக்குப் போய்ச் சேர்ந்து விடும்.

 • இன்னும் 15 நாட்களில் அந்தக் கடைக்கு அனுப்பும் வகையில் கைவசம் சரக்கு இருக்கிறது என்றால் அதைக் குறித்துக் கொண்டு, அந்த நிறுவனத்தில் சரக்கு வைத்திருக்கும் கொள்கைப்படி காலணி உற்பத்தி நிறுவனத்தின் கணினிக்கு புதிய தேவை விபரம் அனுப்பப்பட்டு விடலாம். எந்த நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற விபரமும் ஏற்கனவே பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கலாம்.

 • காலணி தொழிற்சாலையின் கணினி, அங்கத்திய சரக்குக் கையிருப்பை அவதானித்து தேவைப்பட்டால் புதிதாக உற்பத்திக்கும், அதற்குத் தேவைப்படும் பொருட்களை வாங்கவும் செய்திகள் அனுப்பலாம். அதை அடிப்படையாகக் கொண்டு தோல் தொழிற்சாலைக்குத் தகவல் வந்து சேரலாம்.
இப்படி ஒரு கணினி வலைப்பின்னல் இருந்தால் இன்றைக்கு நிகழும் குழப்பங்களினால் ஆகும் செலவுகளின் பெரும்பகுதி குறைந்து விடும். இது அனைத்துமே மனிதர்களால் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிறுவனமாக தகவல் கையாளும் கணினி அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு நிறுவனங்களின் கணினி அமைப்புகளை கவனமாக இணைத்து விட்டால் இது நடந்து விடும்.

வங்கித் துறையில் ஒவ்வொரு வங்கியாக கணினி மயமாக்கப்பட்டு, வங்கிகளுக்கிடையே நடைபெறும் பரிமாற்றங்கள் ஒரு மையக் கணினி வழியாக நடைபெறுவது போலவும் செய்யலாம்.

Monday, May 14, 2007

கட்டி மேய்த்தல் (தோலின் கதை - 22)

ஐரோப்பிய உடை வடிவமைப்பு வல்லுனர் உருவாக்கிய மாதிரியின் படி தோல், காலணி செய்யப்பட வேண்டும்.

 • தோல் பதனிடுதல் இந்தியாவில் நடக்கலாம்,
 • காலணி செய்வது சீனாவில் நடக்கும்.
 • தான் நினைத்த நிறம், பார்வை, மென்மை, வழவழப்பு உருவாகியிருக்கிறதா என்று காலணி விற்பனை நிறுவனம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 • அதற்காக நிறத்தின் மாதிரித் துண்டு, மற்ற இயல்புகளின் மாதிரிகளை இந்தியாவுக்கும், சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் அனுப்ப வேண்டும்.
 • அதை அடிப்படையைக் கொண்டு செய்யப்பட்ட தோல் இந்தியாவிலிருந்து சீனாவுக்குப் பறக்க வேண்டும்.
 • சீனாவில் காலணி செய்யப்பட்டு அமெரிக்க வாங்கும் நிறுவனப் பிரதிநிதிக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.
 • இடையில் யாருக்காவது நிறைவு இல்லா விட்டால், வேலையை மறுபடியும் செய்ய வேண்டும்.
இது பருவம் ஆரம்பிக்கும் முன்னர் தயாரிப்பு வேலைகளுக்கு. விற்பனைத் தேவையைப் பொறுத்து என்ன நிறத்தில் என்ன பாணி பொருள் எவ்வளவு வேண்டும் என்று ஒவ்வொரு கடையும் காலணி விற்பனை நிறுவனத்துக்கு தகவல் அனுப்ப வேண்டும். அந்தத் தகவல்களைத் திரட்டி, காலணி உற்பத்தி நிறுவனத்துக்கு அனுப்ப அவர்கள் அதற்குத் தேவையான தோல் முதலான பொருட்களை வாங்க அந்தந்த நிறுவனங்களுக்கு செய்தி தர வேண்டும்.

உற்பத்தி நடக்கும் போது முதலில் செய்து அனுப்பிய மாதிரியுடன் ஒத்துப் போகும் படி நிறம், வடிவம், மென்மை இருக்க வேண்டும். மாதிரி உருவாக்கலில் இருந்த நுணுக்கம் மாறிப் போய் பெரிய அளவில் உற்பத்தியில் சிறிய மாறுதல்கள் வந்து விடலாம், அப்படி வந்த மாறுதல்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவையா என்று சந்தேகம் இருந்தால் இத்தனை கை மாறி தகவல் போய்ச் சேர வேண்டும்.

தோல் உற்பத்தி சாலைக்கும், உற்பத்தி பொருட்கள் கடைகளுக்கும் போய்ச் சேர வேண்டும். அவை போகும் விபரங்கள், தாமதம் ஏற்பட்டால் அது குறித்த தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும். இவ்வளவுக்கும் எதிர்த் திசையில் பணம் வந்து சேர வேண்டும்

இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நாடுகளுக்கிடையே நடைபெறுவதால் தகவல் தொடர்பு மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.

Sunday, May 13, 2007

யார் மணி கட்டுவது (தோலின் கதை - 21)

எவ்வளவு அதிகமாக வேதிப் பொருளை விற்கிறார்களோ அவ்வளவுக்கு ஆதாயம் இந்த வேதி நிறுவனங்களுக்கு. பொதுவாக மருந்து, உணவு வேதிப் பொருட்கள், பிற பயன்பாட்டுக்கான வேதிப் பொருட்களுடன் ஒரு பிரிவாக தோல் வேதிப் பொருட்களை விற்கும் பெரு நிறுனங்களே இந்த வேலையில் ஈடுபடுகின்றன. இந்த நிறுவனங்கள் புதிய நுட்பங்களை உருவாக்கி அதன் செலவையும் வேதிப் பொருளின் விலையில் ஏற்றிக் கொள்கிறார்கள்.

இப்படி தோல் துறைக்கு வேதிப் பொருள் விற்பதில் கடும் போட்டி நிலவுகிறது. தோல் செய்ய செலவாகும் மதிப்பின் கிட்டத்தட்ட 15-20 சதவீதம் வேதிப் பொருள், 50%க்கு மேல் பச்சைத் தோலின் மதிப்பு.

வேதிப் பொருளின் அளவைக் குறைக்க ஆசைப்பட்டாலும் 20% செலவை 18% ஆகக் குறைக்கப் போய் 50% மதிப்புடைய தோலின் மதிப்பு 40% ஆகக் குறைந்து விட்டால் பெரும் இழப்பு ஏற்பட்டு விடும். அதனால் தோல் பதனிடும் நிறுவன மேலாளர்கள், வேதிப் பொருள் வழங்கும் நிறுனங்களின் தொழில் நுட்ப ஆலோசனைகளுக்கு மாறாக செய்யத் துணிய மாட்டார்கள்.

வேதி நிறுவனங்களின் தொழில் நுட்பக் கவனம் என்னவோ, எப்படி அதிகமான வேதிப் பொருட்களை விற்பது என்பதில்தான் இருக்கிறது. வீணாகப் போகும் அளவைக் குறைப்பதால் தோல் நிறுவனத்துக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஆதாயம் இருந்தாலும் வேதிப் பொருளை விற்கும் நிறுவனத்துக்கு குறுகிய கால நோக்கில் இழப்புதான்.

இதனால் மேலே சொன்ன முதல் அணுகு முறை தவறிப் போய் விடுகிறது. இரண்டாவதாகச் சொன்ன தேவையும் கவனிக்கப்படாமல் போய் விடுகிறது.

தமது வருவாயில் ஒரு சிறு பகுதியை மட்டும் ஈட்டும் தோல் பதனிடும் பொருள் பிரிவில் பெருமளவு முதலீடு செய்து தோல் பதனிடும் முறையில் வேதிப் பொருட்கள் பயன்பாட்டை எப்படி ஒழித்துக் கட்டலாம் என்று செய்யும் முனைப்பு யாருக்கும் இல்லை. நடைமுறையில் இருக்கும் பழக்கத்தை மாற்றப் போய் தமது மூக்கைத் தாமே சிதைத்துக் கொள்ள வேதிப் பொருள் தயாரித்து விற்கும் நிறுவனங்களுக்கும் விருப்பம் இல்லை.

சுற்றுப் புறச் சூழல் மாசுபடுவது பெரிய பிரச்சனையாகி எப்படியாவது வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவழிப்பது ஆரம்பித்தால் சில ஆண்டுகளில் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கலாம்.

இனிமேல் இந்தத் துறையில் மேலாண்மை சிக்கல்களைப் பார்க்கலாம்.

Saturday, May 12, 2007

குப்பையில் மாணிக்கம் (தோலின் கதை - 20)

ஐரோப்பிய நாடுகளில் குப்பையில் எதுவும் எறியாத பொருளாதாரம் உருவாக வேண்டும் என்று வரையறுக்கிறார்கள். நம் நாட்டில் இயல்பாக நடைபெறும் ஒன்று அது.
 • பழைய செய்தித் தாளைப் பொட்டலம் கட்டப் பயன்படுத்துவோம்.
 • அப்பாவின் பேன்டு பழசாகி விட்டால், அதை வெட்டி பையனுக்கு அரை நிக்கர் அல்லது கடைக்குக் கொண்டு போக துணிப்பை தைத்துக் கொள்வோம்.
 • துணி கிழிந்து விட்டால் அடுப்புத் துணியாக, தரை துடைக்கும் துணியாகப் பயன்படுத்துவோம்.
இப்படி எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அதை வீணாக்காமல் கடைசி சொட்டு வரைப் பயன்படுத்தும் பழக்கம் பொருளாதார பண்பாட்டுக் காரணங்களால் நம்மிடையே இருந்தது. ஆயத்த உடைகள், பல்லாயிரக் கணக்கான ரூபாய் வருமானங்கள் வந்த பிறகு நம்மிடமும் தூக்கி எறியும் பழக்கம் பரவி விட்டது.

எந்தப் பொருளையும் இயற்கையிலிருந்து எடுத்துப் பயன்படுத்தினால் அதை முற்றிலும் பயன்படுத்தி, திரும்பவும் இயற்கையின் தனிமங்களாக மாறக் கூடிய வகையில் நமது வாழ்க்கை இருக்க வேண்டும் என்பதுதான் இந்த பூமியின் வளங்களை அழித்து விடாமல் வாழும் ஒரே வழி.

தோல் துறைக்குத் திரும்ப வருவோம்.

வேதிப் பொருள் மாசு படுத்தலை எப்படிக் கட்டுப்படுத்துவது. முதலில், பயன்படுத்தாமல் நீரில் வெளியேறும் வேதிப் பொருட்களின் அளவைக் குறைத்து, அப்படி தவறி வெளியேறுவதை மட்டும் கவனமாகப் பிரிக்கும் வேலை செய்ய வேண்டும். இரண்டாவதாக நீண்ட கால நோக்கில் இயற்கையாக செரிக்க முடியாத வேதிப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இந்த இரண்டிலுமே இன்றைய நிலையில் பெரும் தடைகள் இருக்கின்றன.

உலகின் எந்தப் பகுதிக்குப் போனாலும் தோல் தொழில் என்பது சிறு மற்றும் நடுத்தர அளவு நிறுவனங்களில் நடைபெறுகின்றன. தொழிற் புரட்சிக்கு முந்தைய ஆயிரம் ஆண்டுகளாக கிராமங்களில் குடியிருப்புகளில் ஒரு சில குடும்பங்கள் செய்து வந்த தோல் பதனிடும், காலணி தைக்கும் வேலை தொழிற்சாலை முறைக்கு மாறிய பிறகும் சின்ன அளவிலேயே நடை பெறுகின்றன.

தொழிலின் தன்மையால் பெரும் முதலீட்டில் பெரு நிறுனங்கள் நுழைவது நடக்கவில்லை. தோல் பதனிடுதலில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள், இந்தியாவில், இங்கிலாந்தில், அமெரிக்காவில் இருக்கும் சில சிறப்பு ஆராய்ச்சி நிறுவனங்களில் நடைபெறும் ஆராய்ச்சிகளைச் சார்ந்தே இருக்கின்றன. அந்த ஆராய்ச்சி முடிவுகளையும் நடைமுறைத் தொழில் நுட்பமாக மாற்றுவது, தோல் தொழிற்சாலைகளுக்கு வேதிப் பொருட்களை விற்கும் நிறுவனங்களின் கையில்தான் இருக்கிறது.

Friday, May 11, 2007

நஞ்சாகும் மீன்கள் (தோலின் கதை - 19)

இப்போது ஒரு தொழிற்சாலையிலிருந்து கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கழிவின் அளவு ஆற்றின் அளவை விடச் சிறிதாக இருந்தால் ஆற்றின் இயற்கையான செரித்துக் கொள்ளும் திறனால் சுத்தமாக்கிக் கொள்ளும். ஆனால் கழிவின் அளவு மிக அதிகமாக இருந்தால் ஆற்று நீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனின் அளவு குறைந்து விடும். இயற்கையாக செரித்து விட முடியாத வேதிப் பொருட்கள், உலோக மூலக் கூறுகளாக கழிவுகளாக வந்து கலந்தால் அவை நீரில் அப்படியே கரைந்து இருக்கும்.

இத்தகைய நீரில் மீன்களுக்கு சுவாசிக்க முடியாமல் ஆறு இறந்து போய் விடும். அந்த அளவு நிலைமை மோசமாகா விட்டாலும், உலோகங்கள் போன்ற நச்சுப் பொருட்கள் மீன்களின் உடம்பில் புகுந்து அதைச் சாப்பிடும் விலங்குகள், மனிதர்களையும் பாதிக்கும்.

இதே போன்ற கதைதான் நிலத்தில் கலக்கும் கழிவு நீர்களின் விளைவுகளும். இந்தக் கழிவுகள் பெட்ரோல் சார்ந்த வேதிப் பொருட்களை பெருமளவு பயன்படுத்தும் நிலைமையால் விளைவது.

கழிவு நீரைச் சுத்தப்படுத்திதான் பொது ஆறுகளில், நிலங்களில் வெளி விட வேண்டும் என்று சட்டங்கள் இருக்கின்றன. சுத்திகரிப்பு ஆலைகளும் பெருமளவு பொருட்செலவில் கட்டப்பட்டுள்ளன். நம் ஊரில் ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை பகுதிகளில் தனித்தனியாகவோ கூட்டாகவோ கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் தோல் பதனிடும் நிறுவனங்கள்.

என்னதான் சுத்திகரித்தாலும் 100% பாதுகாப்பான நிலைக்கு நீரை மாற்றுவது என்பது நடக்கவே முடியாத ஒன்று. அதனால் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை, நீதிமன்றங்களை திருப்திப் படுத்தும் அளவுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்து நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எவ்வளவுக்களவு அதிகமாக தூய்மை செய்கிறோம் அவ்வளவுக்களவு செலவு அதிகமாகும். கழிவு நீரை 90% தூய்மை செய்ய ஒரு அலகுக்கு 5 ரூபாய் செலவாகிறது என்றால் 99% தூய்மை செய்ய 50 ரூபாயும், 99.99% தூய்மை செய்ய 200 ரூபாயும் செலவாகலாம். அது பொருளாதார அடிப்படையில் கட்டுப்படாகாது என்பது ஒரு புறம்.

அதனால்தான் குடிக்கும் கோலா பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் இருப்பது இயற்கைதான் என்று வாதாடுகின்றார்கள் பத்து ரூபாய்க்கு அரை லிட்டர் நீரை விற்கும் நிறுவனங்கள்.

இன்னொரு புறம் தூய்மை செய்யப்படும் போது பிரித்து எடுக்கப்பட்ட வேதிக் கழிவை என்ன செய்வது!

பாழ்படும் நிலமும் நீரும் (தோலின் கதை - 18)

தோல் பதனிடும் போது பல வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பார்த்தோம்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக் கொண்டால்
 • பதப்படுத்த மரங்களின் பட்டை, கொட்டை போன்ற தாவரப் பொருட்களும்,
 • தோல் வலைப்பின்னலின் இடைவெளிகளை நிரப்ப குளுகோஸ் போன்ற இயற்கைப் பொருட்களும்,
 • தோலை மென்மைப்படுத்த விலங்கு அல்லது தாவர எண்ணெய்களும் பயன்படுத்தப்பட்டன.
 • தோலின் மேற்பரப்பை அழகு படுத்த முட்டை மஞ்சள்கரு, பால் கூடப் பயன்படுத்தப்பட்டன.
அப்படி உருவான தோலிற்கு பன்முகத் தன்மை, பல பயன்படு தன்மை குறைவாகவும், பயன்படும் நாட்கள் குறைவாகவும் இருந்தாலும் பயன்படுத்திய பிறகு எளிதாக மக்கிப் போகும் இயல்பு இருந்தது.

இப்போது செய்யப்படும் தோலில், பதப்படுத்த குரோமியம் உப்புகளும், இடைவெளிகளை நிரப்ப பெட்ரோல் சார்ந்த வேதிப் பொருட்களும், மென்மை அளிக்க பெட்ரோல் சார்ந்த எண்ணெய்ப் பொருட்களும், தோலின் மேற்பரப்பை அழகு படுத்தவும் செயற்கை வேதிப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் மூலம் தோலைப் பதப்படுத்தும் செலவு குறைந்து, கிடைக்கும் தோலின் வலிமையும், வகைகளும், பயன்படு நாட்களும் வெகுவாக உயர்ந்திருந்தாலும் பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரையும் பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட தோல் பொருட்களையும் சுற்றுச் சூழலை பாதிக்காமல் கையாளுவது பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது.

கழிவு நீரில் உள்ள சிக்கல், தோலை வேதிப் பொருட்களுடன் சேர்க்கும் போது தோலில் ஏறாமல் தண்ணீரிலேயே இருந்து விடும் வேதிப் பொருட்களின் கைவேலை. சாயம் ஏற்ற தோலின் எடையில் 10% சாயப் பொருளை போட்டால் தோல் 8%தான் ஏற்றுக் கொள்ளும் மீதி 2% நீரிலேயே தங்கி விடும். திறமையான தொழில் நுட்பம் மூலம் இதை 1.5% ஆகக் குறைக்கலாம் ஆனால் முற்றிலும் வேதிப் பொருளை பயன்படுத்தி விட முடியாது.

முப்பது நாற்பது வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படும் போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தலைவலி தரும். குரோமியம் உப்புகள், அமிலமும் காரமும் சேர்ந்து உருவாகும் நடுநிலை உப்புகள், சாயங்கள், எண்ணெய் பொருட்கள், தண்ணீரில் மிதக்கும் கூழ்மப் பொருட்கள் என்று கலவையான நீர் அப்படியே நிலத்திலோ நீர்நிலைகளிலோ கலக்கப்பட்டால் நிலமும், நீர்நிலையும் பாழடைந்து விடும்.

ஒரு ஆற்றில் ஓடும் நீரில், நாம் குடிக்கும் குடிநீரில் பத்து லட்சத்தில் 8 பங்கு உயிர் வாயு கரைந்திருக்கும். அதைத்தான் மீன் முதலான நீர் வாழ் உயிரனங்கள் சுவாசிக்கின்றன. தண்ணீரில் ஒரு மீன் செத்து விடுகிறது, அல்லது வேறு ஏதோ கழிவுப் பொருள் கலக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

நீரில் கலந்திருக்கும் உயிர் வாயு ஆக்சிஜனால் அது மெதுவாக எரிக்கப்பட்டு சில மணி நேரங்கள், அல்லது சில நாட்களில் அந்தக் கழிவு செரித்து விடும். ஓடும் நீரில் வளி மண்டலத்திலிருந்து உயிர் வாயு தொடர்ந்து கரைந்து கொண்டே இருப்பதால், இப்படி பயன்பட்டு விடும் உயிர் வாயு ஓரிரு கிலோ மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் நீருக்குக் கிடைத்து விடும்.

Wednesday, May 9, 2007

தலைக்கு ஏழு சோடி (தோலின் கதை - 17)

ராணிப்பேட்டையில் தொழில் செய்யும் ஒரு சிறு வணிகர், நான்கைந்து நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டிருப்பது சாதாரணமான ஒரு நிகழ்வு.

உலகின் காலணி உற்பத்தியில் ஏறக் குறைய 40% சீனாவில் நடைபெறுகிறது. சீனாவின் காலணி உற்பத்தி ஆண்டுக்கு 400 கோடி சோடிகள். இவற்றில் 200 கோடி சீனாவிலேயே விற்பனை ஆகிறது. மீதி 200 கோடி ஏற்றுமதி ஆகின்றன.

ஏற்றுமதியில் பெரும்பகுதி அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குப் போய் சேருகின்றன. அமெரிக்காவில் கிடைக்கும் காலணிகளில் பெரும் பகுதி சீனாவில் இருந்து வந்ததாகவே இருக்கும். 120 கோடி மக்கள் தொகை உடைய சீனாவில் 200 கோடி காலணிகள் விற்பனையாகும் அதே நேரத்தில் 30 கோடி மக்கள் வசிக்கும் அமெரிக்காவின் கிட்டத்தட்ட அதே அளவு காலணிகள் விற்கின்றன. அமெரிக்காவில் தலைக்கு 7 சோடி காலணிகள் ஆண்டுக்கு வாங்கிக் கொள்கிறார்கள்.

ஐரோப்பாவின் வளர்ந்த நாடுகளிலும் கிட்டத்தட்ட இந்த நிலைதான். குளிர் காலத்தின் தேவைப்படும் தோல் மேலாடைகள் வட இந்தியா, சீனாவின் வடக்குப் பகுதிகள், வட ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற குளிர் பகுதிகளில் தேவைப்படுகின்றன.

காரில், வீட்டு சொகுசு இருக்கைகளில் போடப்படும் தோல்கள் காசு நிறைய இருந்து எப்படி அதை வெளியில் காட்டிக் கொள்வது என்று துடிக்கும் செல்வந்தர்கள் இருக்கும் எல்லா பகுதிகளிலும் தேவைப்படுகின்றன.

நம்ம ஊரில் ஒரு சோடி காலணி வாங்கினால் அது கிழியும் வரை போட்டு, 2 - 3 ஆண்டுகள் வேலை வாங்கிய பிறகுதான் தூக்கிப் போடுவோம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதிய பருவத்தில் நான்கைந்து சோடி வாங்கிப் பயன்படுத்தும் நாடுகளில் நல்ல நிலையில் இருக்கும் போதே காலணிகளைத் தூக்கி எறிய வேண்டி இருக்கும். எப்படி இருந்தாலும் தோல் பொருளின் பயன்பாட்டுக்குப் பிந்தைய குப்பையில் கையாளுதலிலும் சில சிக்கல்கள் உள்ளன,

இயற்கையாக சிதைந்து போகக் கூடிய விலங்குத் தோலை அழுகாமல் தடுத்து, வேதிப் பொருட்களை ஊட்டி தோல் தயாரிக்கிறார்கள் என்று பார்த்தோம். இப்போது தேவை முடிந்து விட்டது, தோல் பொருள் சிதைந்து போய் விட வேண்டும். அப்படி சிதையும் போது, குப்பை நிரப்பப்பட்ட நிலம் மாசு படக் கூடாது.

ஊரு விட்டு ஊரு வந்து (தோலின் கதை - 16)

அதாவது இறைச்சி சாப்பிடும் இடங்களில் எல்லாம் கிடைக்கும் பச்சைத் தோல்கள் திரட்டப்பட்டு, இத்தாலி, இந்தியா, சீனா, தென் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் பதப்படுத்தப்படுகிறது. வளர்ந்த சமூகங்களில் இந்தப் பணி குறைந்ததன் காரணம், வேதிப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தண்ணீர் மாசுபடுத்தல்.

தோலிலிருந்து தோல் பொருள் செய்யும் தொழில் சீனா, வியட்நாம், இந்தியா போன்ற நாடுகளில் பெருமளவு நடைபெறுகின்றன.

மேலே சொன்ன இரண்டு தொழில்களுமே பிற நாடுகளிலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் பெரும்பான்மை உற்பத்தி ஆசியா, தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பாவில் நடைபெறுகிறது.

 • விலை உயர்ந்த தோல் பொருட்கள் விற்பனை ஆகும் சமூகங்கள் முன்னேறிய நாடுகளில் இருக்கின்றன. ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற சந்தைகளில் ஆண்டுக்கு இரண்டு பருவங்கள் புதிய புதிய வடிவமைப்புடைய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பல கோடி டாலர் மதிப்பில் விற்பனை ஆகின்றன.
 • இது போக குளிர் மிகுந்த பகுதிகளில் பொருளாதார முன்னேற்றம் குறைவாக இருந்தாலும் விலை குறைவான தோல் மேலாடைகள் தேவைப்படும்.
 • கடைசியாக வசதி குறைந்தவர்கள் கூடப் பயன்படுத்தும் விதமாக காலணிகள் உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றன.
தோல் பொருட்கள் விற்பனையில் பெரு மதிப்பு வளர்ந்த பொருளாதார நாடுகளில் நடைபெறுகிறது. இந்தியா, சீனா போன்று மக்கள் செல்வம் நிறைந்த நாடுகளில் விலை குறைவான காலணிகள் விற்கின்றன. இந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் போது இங்கும் விலை உயர்ந்த பொருட்களை விற்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

கிட்டத்தட்ட ஒரு முழுச் சுற்று சுற்றி இறைச்சி விலங்குகளிலிருந்து எடுக்கப்பட்ட தோல், பயன்படும் பொருளாக அதே இடத்துக்கு வந்து சேருகிறது.

எடுத்துக் காட்டாக
 • ஜெர்மனியில் மாட்டிறைச்சி பண்ணையிலிருந்து திரட்டப்பட்ட தோல்கள்,
 • இந்தோனேசியாவுக்கு அனுப்பப்பட்டு,
 • பாதி பதனிடப்பட்ட நிலையில், இந்திய நிறுவனத்தால் வாங்கப்பட்டு,
 • இந்தியாவில் பதத் தோல் தயாராகி,
 • காலணி உருவாக்கம் சீனாவில் நடந்து,
 • இறுதி விற்பனை நியூயார்க்கின் காலணி கடையில் நடக்கலாம்.
 • அதை வாங்கிப் பயன்படுத்துபவர் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்கா போயிருக்கும் வணிகராக இருக்கலாம்.
இந்த எடுத்துக் காட்டு வலிந்து சொல்லப்பட்டதாகப் பட்டாலும் இவ்வளவு பரிமாற்றங்களுக்குப் பிறகே பெருமளவு உற்பத்தி, விற்பனை நடைபெறுகின்றன. ஆண்டு தோறும் நாடு விட்டு நாடு பாயும் தோல் மற்றும் தோல் பொருட்களின் ஏற்றுமதி(அல்லது இறக்குமதி) மதிப்பு 60 பில்லியன் டாலரைத் தாண்டுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்சம் கோடி ரூபாய்கள்.

இதைத் தவிர தோல் பதனிடுதலில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள், இயந்திரங்கள், காலணி, தோலாடை செய்யத் தேவைப்படும் இயந்திரங்கள், பிற தோல் இல்லாத பொருட்கள் இவற்றை வாங்கி விற்றலிலும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் புழங்குகின்றன.

Tuesday, May 8, 2007

இத்தனை பேர் மெனெக்கெடு (தோலின் கதை - 15)

ஒரு சின்ன வளையம் வந்து சேராததால் உற்பத்தி முழுவதும் நின்று போகும் கதைகளும் உண்டு.
 • நவம்பர், டிசம்பர் மாதம் நியூயார்க் கடைகளில் காலணி விற்பனைக்கு கிடைக்க வேண்டுமென்றால் செப்டம்பர் மாத வாக்கில் இந்தியா/சீனாவிலிருந்து காலணி கப்பலில் கிளம்பி விட வேண்டும்,
 • செப்டம்பரில் உற்பத்தி முடிய வேண்டுமானால் தேவைப்படும் எல்லா பொருட்களும் ஆகஸ்டு வாக்கில் காலணித் தொழிற்சாலைக்குக் கிடைத்திருக்க வேண்டும்.
 • ஆகஸ்டில் தோல் செய்து கொடுக்க வேண்டும் என்றால் ஜூலையிலேயே தோல் தொழிற்சாலைக்கு பச்சைத் தோல் மற்றும் தேவையான வேதிப் பொருட்கள் கைவசம் இருக்க வேண்டும்.
 • அதற்கு மே, ஜூன் மாதங்களிலேயே தோல் தேவை விபரங்கள் வந்து சேர வேண்டும்.
அதனால்தான் 2008 டிசம்பருக்கான காலணிகளின் வடிவமைப்பு வேலைகள் 2007 இறுதியிலேயே தொடங்க வேண்டியிருக்கிறது.

 1. தோல் காலணிகள், உடுப்புகள், விலை உயர்ந்த தோல் பொருட்கள் அதிகமாக விற்பனை ஆவது குளிர் பகுதிகளில்தான். விலையும் அதிகமாக இருப்பதால் வளர்ந்த நாடுகளில்தான் உயர்தர தோலினால் செய்யப்படும் பொருட்கள் விற்பனையாகின்றன.
  தோல் பொருட்களின் தேவை வட அமெரிக்கா, வட ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பெருமளவு இருக்கிறது. இது தவிர எல்லா நாடுகளிலுமே எளிமையான திறந்த காலணிகள் பயன்படுத்தப்படுகின்றன.

 2. இறைச்சி உண்பது எல்லா நாடுகளிலுமே பரவி இருப்பதால் அதன் பக்க விளைவாகக் கிடைக்கும் பச்சைத் தோல்கள் உலகம் எங்கும் கிடைக்கின்றன. ஆனால், தோல் பதனிடும் தொழிலின் மாசு படுத்தும் தன்மையால் வளர்ந்த ஐரோப்பிய, வட அமெரிக்க சமூகங்கள் தோல் பதனிடுதலை வளர்ச்சியடையும் நாடுகளுக்குத் தள்ளி விட்டன. உலகெங்கும் கிடைக்கும் பச்சைத் தோல்கள் பாதி வரை பதப்படுத்தப்பட்டோ, அல்லது பச்சைத் தோல்களாகவோ, இந்தியாவுக்கு, சீனாவுக்கு, பிரேசிலுக்கு வருகின்றன.
  இத்தாலி இந்தத் தொழிலின் நுட்பங்களில் வித்தகர்களாக இருப்பதால் உயர்தரத் தோல் பதனிடும் வேலை இத்தாலியிலும் பெருமளவு நடைபெறுகிறது.

 3. பதனிடப்பட்ட தோலை பொருட்களாகச் செய்யும் தொழிற்சாலைகளில் பெரும்பகுதி சீனாவில் இருக்கின்றன. உலக காலணி உற்பத்தியில் கிட்டத்தட்ட 40% சீனாவில் நடைபெறுவதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. தொழிலாளர்களின் ஊதியம் அதிகமாக இருப்பதால் வளர்ந்த நாடுகளில் இந்த உற்பத்தித் தொழிற்சாலைகளும் பெரிதும் குறைந்து விட்டன.

செருப்புன்ன சும்மாவா! (தோலின் கதை - 14)

காலணி செய்ய பெரும்பங்கு தேவைப்படும் மேல் தோல் தவிர, இன்னும் நூற்றுக் கணக்கான பொருட்கள் தேவைப்படும். குறிப்பிட்ட வடிவமைப்புடைய காலணியைச் செய்ய என்னென்ன பொருட்களை எவ்வளவு பயன்படுத்தினோம் என்று குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வடிவமைப்பைப் பொறுத்து காலணியில் பயன்படும் தோலின் அளவு மாறுபடும்.
 • காலணியைக் கட்டும் கயிறு
 • அந்தக் கயிறு நுழைந்து போகும் துளைகளின் பொருத்தும் உலோக வட்டுகள்
 • குதிகாலில் விறைப்பாக இருக்கப் புகுத்தப்படும் உலோகத் தகடு
 • முன் பக்கம் உறுதி அளிக்க வைக்கும் வளையம்
 • அடிப்பாதத்தைத் தொட்டுக் கொண்டிருக்க மென்மையான தகடு
 • அடிப்புறத்தில் பொருத்தப்படும் சோல் என்று காலணியின் பகுதிகளைத் தவிர்த்து,
 • தைக்க நூல், ஒட்டும் பசை, இணைக்க சின்ன ஆணிகள், அலங்கார வளையங்கள், விலைச் சீட்டு, நிறுவனத்தின் பெயர்ச் சீட்டு
  என்று பல பொருட்களைச் சேர்க்க வேண்டியிருக்கும்.
இந்தப் பொருட்களை யாரிடம் வாங்க வேண்டும், என்ன விலை என்றெல்லாம் திட்டமிட்டுக் கொண்டு, ஒரு காலணி செய்ய தேவைப்படும் பொருட்களின் மதிப்பை கணக்கிட வேண்டும்.

தோலை வெட்டும் இயந்திரம், இயந்திர இயக்குனரின் சம்பளம் இது வெட்டுவதற்கான செலவு, வெட்டிய துண்டுகளை இணைத்து மேற்புறத்தைச் செய்ய 20-30 தொழிலாளர்கள் வரிசையாக உட்கார்ந்து தைப்பது, ஒட்டுவது, பிரிப்பது என்று வரிசையாக வேலை செய்வார்கள். இந்த மேல்புறம் உருவாக என்ன செலவாகிறது என்று தெரிய வேண்டும்.

அடுத்ததாக அடிப்புறத்தை இணைக்கும் பிரிவில் என்ன செலவு என்றும் கணக்கிட்டு விட்டால் ஒரு காலணியின் உற்பத்திச் செலவு கிடைத்து விடும். இதனுடன், போக்குவரத்து செலவுகள், காப்பீட்டு தொகை, போக்குவரத்து செலவுகள், தரகுத் தொகை ஏதாவது கொடுக்க வேண்டியிருப்பது, பிற அலுவலகச் செலவினங்களைச் சேர்த்து விலையை நிர்ணயிப்பார்கள்,

பொதுவாக இந்தத்துறையில் இந்த விலைக் கணக்கீட்டை காலணி செய்யும் தொழிற்சாலை காலணி வாங்கும் நிறுவனத்துடன் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வார்கள். குறிப்பிட்ட மாதிரி காலணி செய்ய எவ்வளவு தோல் தேவைப்படுகிறது, அதன் விலை என்ன என்பது விலையின் பெரும்பகுதியைத் தீர்மானிக்கும். சில நேரங்களில் காலணி வாங்கும் வாடிக்கையாளர் தானே தோல் வாங்கித் தருவதாகக் கூடச் சொல்லி விடுவார்.

ஒரு காலணி மாதிரியின் கவர்ச்சி, செய்நேர்த்தி, செலவுக் கணக்கு எல்லோருக்கும் ஒத்து வந்தால், அதை அடிப்படையாகக் கொண்டு சில நூறு சோடி காலணிகள் செய்து கடைகளுக்கு ஒன்றொன்று அனுப்புவார்கள். கடைக்காரர்கள் தமக்குப் பிடித்த வடிவமைப்புகளில் எவ்வளவு விற்பனையாகும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தமக்கு எத்தனை காலணிகள் என்ன நிறத்தில் அடுத்த பருவத்துக்கு தேவை என்று விபரம் அனுப்ப, அதை எல்லாம் ஒன்று சேர்த்து காலணி தொழிற்சாலைக்கு ஆர்டர் வரும்.

வரும் தேவையைப் பொறுத்து காலணித் தொழிற்சாலை தேவையான தோல் வாங்க வேண்டும். தோல் பதனிடும் ஆலை, தோலைச் செய்து கொடுக்க ஒரு மாதம் வரை ஆகலாம். தோலைத் தவிர்த்த பிற பொருட்களையும் வெவ்வேறு இடங்களிலிருந்து வாங்க ஏற்பாடு செய்து எல்லாம் கைக்கு வந்த பிறகுதான் காலணி உற்பத்தியைத் தொடங்க முடியும்.

Sunday, May 6, 2007

காலணி உருவாகிறது (தோலின் கதை - 13)

முதலில் குறிப்பிட்ட பருவத்தில் எத்தகைய பாணியில் காலணி விற்பனையாகும் என்று தீர்மானிக்க வேண்டும். 2008 கிருத்துமஸ் விடுமுறைகளின் போது விற்பனையாகக் கூடிய காலணிகள் இப்போது உற்பத்தியாக ஆரம்பித்திருக்க வேண்டும். பெரு எண்ணிக்கையில் உற்பத்தி ஆக ஆரம்பிக்கும் முன்னர், மாதிரி செய்து பார்க்க வேண்டும்.

கிட்டத்தட்ட ஒரு ஆண்டு முன்பே, ஐரோப்பாவின் தலை சிறந்து ஆடை வடிவமைப்பாளர்கள் குறிப்பிட்ட பருவத்துக்கான தமது படைப்புகளை ஓவியங்களாக வரைவார்கள். காலணியின் வடிவம், நிறம், என்ன பொருள் என்று முடிவு செய்த பிறகு, அந்த எண்ணத்தை மாதிரியாக உருவாக்கச் சொல்லி அனுப்புவார்கள்.

காலணித் தொழிற்சாலை, கையில் கிடைத்த ஓவியங்களில் என்னென்ன பகுதிகள் இருக்கின்றன என்று பிரித்து அட்டை வார்ப்புருக்களை செய்வார்கள். துணி எடுத்து தையல் காரரிடம் கொடுத்து சட்டை தைக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். சட்டையின் முன் வெட்டுப் பகுதி, பின் வெட்டுப் பகுதி, கழுத்தின் முன்,பின் புறங்கள், கழுத்துப் பட்டை, கைகளில் நீளும் பகுதி என்று துணியைத் துண்டுகளாக வெட்ட வேண்டியிருக்கும்.

அதே போல தோலையும் தேவைப்படும் துண்டுகளாக வெட்டி பிறகு தையல் இயந்திரங்களால் வெவ்வேறு பகுதிகளை இணைப்பார்கள். பொதுவாக காலணியின் மேல் புறத்தில், விரல்கள் நுழையும் பகுதி, பாதத்தைச் சுற்றி மூடும் பகுதி, குதிகாலை மூடும் பகுதி இவற்றை ஒரு வகையான தோலில் வெட்டி இணைத்துக் கொள்வார்கள்.

காலணியின் அடிப்புறம் தனியாக இணைக்கப்படும். முன்பெல்லாம் தோலால் செய்த காலணி அடிப் பாகங்கள் பயன்பட்டு வந்தாலும் சமீப காலங்களில் பெருமளவு செயற்கை பிளாஸ்டிக் பொருட்களே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மேல் காலணியைத் தைத்த பிறகு, உள்ளே ஒரு அடுக்காக துணி அல்லது மென்மையான தோல் பொருளை இணைத்தால்தான் பாதத்துக்கு இதமாக இருக்கும். இந்த மேல் பகுதிக்கு கால் பாதத்தின் வடிவம் இருக்காது, அது தட்டையாகத்தான் இருக்கும். பாதத்தின் வடிவத்தில் மரக்கட்டையில் அல்லது செயற்கை பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தி மாதிரி செய்து வைத்திருப்பார்கள்.

மேல் காலணியை மாதிரியின் மீது இழுத்துப் பொருத்தி சிறு சிறு ஆணிகளால் நிலைப்படுத்துவார்கள். இதன் அடியில் காலணி அடிப்பாகத்தை ஒட்டும் பொருட்களாக இணைத்து, இயந்திரங்களின் மூலம் இறுக்கமாகப் பொருந்த வைப்பார்கள். இந்த இணைப்பு சரியாக செய்யப்படா விட்டால், புதிதாக காலணி வாங்கிய பிறகு சில சமயம் அடிப்பாகம் பிய்ந்து கொண்டு வந்து விடும்.

மாதிரியை விட்டுப் பிரித்த பிறகு காலணியின் வடிவம் மாறாமல் நிலைத்திருக்க அதிக சூடான காற்றை அடிப்பது போன்ற வனைவு வேலைகள் முடிந்த பிறகு, காலணியைப் பிரித்து எடுத்து பெட்டியில் போட்டு அனுப்பி விடுவார்கள்.

Saturday, May 5, 2007

தோலின் சிறப்பு (தோலின் கதை - 12)

உலகில் பதப்படுத்தப்படும் தோல்களில் பாதிக்கும் மேல் காலணிகள் செய்யப் பயன்படுகின்றன.

ஏன் தோலைப் பயன்படுத்த வேண்டும்? மரக்கட்டையிலோ, செயற்கை பொருட்களிலோ, ரப்பரிலோ இல்லாத சிறப்புப் பண்பு தோலில் என்ன இருக்கிறது?

ஏற்கனவே சொன்னபடி, தோல் என்பது இயற்கையால் நெய்யப்பட்ட ஒரு உறுதியான முப்பரிமாண வலைப்பின்னல். விலங்குகளின் வெளிப் பாதுகாப்பாக, உள்ளுறுப்புகளைப் பாதுகாப்பதுடன், உள் வெப்ப நிலை மாறுபடாமல் பார்த்துக் கொள்வதும் தோலின் பணி.
 • இந்தப் பின்னணியுடனான தோலின் வலைப்பின்னல் வலிமை, அதன் வளைவுத் தன்மையுடன் ஒப்பிடும் போது செயற்கை இழைகளை விட அதிகமாக இருக்கிறது.

 • இதை விட முக்கியமாக தோலினால் செய்த காலணிகளை அணியும் போது, காலில் உருவாகும் வியர்வை ஆவியாகி தோலின் மூலம் ஊடுருவி வெளியே போகவும், வெளியிலிருந்து தூய காற்று காலை அடையவும் வழி இருக்கிறது.
இந்த இரண்டு பண்புகளையும் இணைத்து செயற்கைப் பொருள் ஒன்றை உருவாக்குவது சவாலாகவே இருந்து வருகிறது.
 • நிறைய துளைகள் போட்டு காற்றோட்டம் ஏற்படுத்திக் கொடுத்தால், வலிமை குறைந்து விடும்.

 • வலிமைக்காக உறுதியான பின்னலாக உருவாக்கினால் பாதத்துக்கு ஆரோக்கியமான சூழ்நிலை இல்லாமல் போய் விடும்.
இயற்கை அன்னை நெய்த இந்த துணியுடன் வேறு எதுவும் ஒப்பிட முடியாமல் போவது வியப்பில்லைதானே.

தோல் பதனிடும் போது தோலின் அழுகிப் போகும் தன்மையை மாற்றும் போது - வலிமை, காற்று போகும் இயல்பு மாறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சரியாகப் பதப்படுத்தாத தோல் சீக்கிரம் அழுகிப் போகலாம், அல்லது தவறான முறைகளால் அதன் வலிமை இழந்திருக்கலாம். அல்லது அளவுக்கதிகமான வேதிப்பொருள் பயன்பாட்டினால் சுவாசிக்கும் இயல்பு மறைந்து போயிருக்கலாம்.

சரி, அடுத்ததாக தோல் பொருட்கள் செய்யும் தொழிலில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

எங்கு பயன்படும்? (தோலின் கதை - 11)

எஃகுத் தொழில், எண்ணெய் சுத்திகரிப்பு, உணவுப் பொருள் பதப்படுத்துதல், துணித் துறை போன்றவை போல இயற்கை விளைபொருளை எடுத்து, வேதியியல், உயிரியியல், இயந்திர மாற்றங்களின் மூலம் ஒரு பயனுள்ள பொருளாக மாற்றும் முறைகளை (processing) பயன்படுத்துகிறது தோல் பதனிடுதல்.

தோலை எடுத்து பல்வேறு பொருட்களைச் செய்யும் பணி, இரும்புத் தகடுகளை அடிப்படையாகக் கொண்டு ஊர்தி செய்தல், துணியை வெட்டி ஆடை தைத்தல், பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து பொம்மைகள் செய்தல் போன்ற பல பகுதிகளை ஒன்று சேர்த்து மக்களுக்குப் பயன்படும் பொருளை உருவாக்குவதான (assembling) முறை உற்பத்தி பாணியைப் பின்பற்றுகிறது.

தோல் எங்கெங்கு பயன்படுகிறது?

 • காலணிகள் செய்வதற்கு,
 • குளிர் காலங்களில் அணியப்படும் தோல் மேலாடைகள் செய்ய
 • தோல் பை, பணப்பை, இடுப்புப் பட்டை, செல்பேசி உறை, பயணப் பெட்டிகள் என்று சிறு பொருட்கள் செய்ய

 • வீட்டு பயன்படு பொருட்களான சொகுசு இருக்கைகளின் மேல் உறையாக,
 • கார்களின் உட்புறத்தில் இருக்கைகள், பக்க கதவுகள், ஓட்டும் வளையம் போன்றவற்றின் மேல் உறையாக

 • பிளாஸ்டிக் பொருட்களின் வளர்ச்சிக்கு முன்பு, இயந்திரங்களில் உராய்வைத் தடுக்கும் வளையங்களாக,
 • சுற்றும் சக்கரங்களை இணைக்கும் பட்டிகளாகத் தோல் பயன்பட்டது.

 • குதிரையின் மீது உட்கார சேணங்கள்,
 • பெட்ரோலிலிருந்து நீரை முற்றிலும் உறிந்து நீக்க உதவும் சிறப்பு வகை தோல் என்று சிறிதளவு பயன்பாடுகளும் உண்டு.

Friday, May 4, 2007

செலவுக் கணக்கு (தோலின் கதை - 10)

நான்காவதாக, தவறான வேலை முறைகளால் தோலுக்கு அடிபடுவதோ, மேற்பரப்பில் கறைகள் ஏற்படுவதோ நிகழாமல் பார்த்துக் கொள்வது. இவ்வளவு பாடுபட்டுச் செய்யும் தோலில் கவனக் குறைவால் பழுது ஏற்பட்டு விட்டால் அது நேராக இழப்புக் கணக்கில் சேர்ந்து விடும்.

ஐந்தாவதாக, தோலின் பரப்பளவைக் கண்காணித்தல்.

தண்ணீரில் முக்கி, இயந்திரங்களில் அடித்து, வேதி வினைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் தோலின் பரப்பளவு வெகுவாக வேறுபடலாம். ஒரே பச்சைத் தோலை வெவ்வேறு முறையில் பதப்படுத்தினால் அதன் பரப்பளவு 10-20 சதவீதம் வரை கூடவே குறையவோ செய்யலாம்.

வாங்குவது எண்ணிக்கையின் அடிப்படையில்தான் என்றாலும், விற்கும் போது பரப்பளவின் அடிப்படையில் விற்க வேண்டியிருக்கிறது. தோல் பொருள் செய்பவர்கள் அதிகப் பரப்பு இருந்தால் கூடுதலான பொருளுக்குப் பயன்படுத்த முடியுமாதலால் பரப்புக்குத்தான் விலை. தோலின் பரப்பளவை எவ்வளவுக்களவு அதிகரிக்க முடியுமோ அவ்வளவுக்களவு கூடுதல் ஆதாயம் கிடைக்கும்.

நெளிவான ஆடைக்கு செய்யப்படும் தோலில் சுருக்கம் அதிகமாக இருப்பதால் பரப்பு குறைவாகவும், காலணிக்குப் பயன்படும் விறைப்பான தோலில் பரப்பு அதிகாமவும் இருக்கும்.

இப்படி எளிமையாகத் தென்படும் ஒரு தோலைச் செய்து விற்பதில் இவ்வளவு நுணுக்கங்கள். இதே போல நெசவுத் துறை, இரும்பு போன்ற உலோகத் துறைகள், எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலைகள், உணவுப் பொருள் பதப்படுத்தும் தொழில்கள் முதலான இயற்கைப் பொருட்களை தொழில் பயன்பாட்டுக்கு மாற்றும் எல்லா தொழில்களிலும் மேற்சொன்ன கணக்கீடுகள் தேவைப்படும்.

இந்த அடிப்படை உற்பத்திச் செலவினங்கள் போக வணிகச் செலவுகள் எல்லாத் தொழில்களுக்கும் பொதுவானவை உண்டு.
 • நிறுவனத்தை நடத்த மேலாளர்களுக்கு ஊதியம்
 • பொருளை ஏற்றி அனுப்பும் வண்டிக்குச் செலவு
 • வாங்கும் பொருட்களுக்கு வரி
 • விற்கும் போது விற்பனை வரி
 • இறக்குமதி/ஏற்றுமதி செய்ய வேண்டியிருந்தால் அது தொடர்பான செலவுகள்
 • இடைத்தரகர் இருந்தால் அவருக்கு பங்கு
 • விற்பனைக்கு அனுப்பும் போது காப்பீடு செய்ய கட்டணம்
 • வங்கிச் செலவுகள்
  என்று தலையைச் சுற்ற வைக்கும் செலவினங்கள் நூற்றுக் கணக்கில் இருக்கலாம்.
வரும் விருந்தினருக்கு தேநீர் வாங்கிக் கொடுப்பதிலிருந்து, வாடிக்கையாளரைச் சந்திக்க வெளிநாடு போவது, இயந்திரங்களை வாங்க பயணம் செய்தல், புதிய பருவத்துக்கான மாதிரிப் பொருட்களைச் செய்து கொடுப்பது என்று குறையில்லாமல் வேலை வைக்கும் நடவடிக்கைகள் ஏராளம் இருக்கும்.

தொழில் முனைவராக தொழில் நடத்தும் போது இது எல்லாவற்றையும் கவனத்தில் வைத்து முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். ஒரு குண்டூசி கூட வீணாகச் செலவானால், அது நிறுனத்தின் வருமானத்தைப் பாதிக்கும். அப்படிக் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு ஒவ்வொரு செலவினத்தையும் கண்காணித்து, முடிந்த அளவு வருவாயைப் பெருக்கும் முனைவோர்தான் வெற்றி பெற முடியும்.

இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் தவறுகள் செய்து பிழைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. நாம் ஒன்றைத் தவறாகச் செய்து கொண்டிருந்தால், மெக்சிகோவில் இருக்கும் அந்தத் தவறைச் செய்யாத நிறுவனம் விலை குறைவாக விற்று நம்மை தொழிலிலில் இருந்து துரத்தி விடும். வாங்குபவர்களும் விற்பவர்களும் உலகின் எந்தப் பகுதியிலும் செயல்படும் வசதியும் உரிமையும் இருக்கும் போது, நம்மால் முடிந்த அளவு, புதுப் புது முறைகளில் வீண் செலவுகளைக் குறைத்து பொருளின் மதிப்பை அதிகப்படுத்தினால்தான் தாக்குப் பிடிக்க முடியும்.

Thursday, May 3, 2007

அடிப்படைச் செலவுகள் - (தோலின் கதை - 9)

தோல் தொழிற்சாலை வாங்கும் மூலப் பொருள் பச்சைத் தோல். அதைப் பதப்படுத்தி, பொருட்கள் செய்யத் தோதுவான தோலாக விற்பதுதான் இந்தத் தொழிலின் மதிப்பு அதிகரித்தல். இதற்கு பல வேதிப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். பல இயந்திரப் பணிகளைச் செய்ய வேண்டும். இயந்திரங்களை இயக்கவும் பிற பணிகளைச் செய்யவும் தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும்.
 • பச்சைத் தோல் வாங்க எவ்வளவு செலவானது,
 • வேதிப் பொருட்களுக்கு எவ்வளவு செலவு,
 • இயந்திரப் பணிகளுக்கு என்ன செலவு,
 • மற்ற சம்பளம், விற்பனை செலவுகள்
  சேர்த்தால் மொத்த செலவு கிடைக்கும்.
இதை விடக் கூடுதல் விலைக்கு விற்றால்தான் நிறுவனம் இயங்க முடியும்.

பச்சைத் தோலை வாங்கும் போது ஒன்று இத்தனை ரூபாய் என்று கணக்குப் போட்டு மொத்தமாக வாங்குகிறோம். பாதியில்தான் அவற்றில் பல்வேறு தரங்களில் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரிய வருகிறது. வெவ்வேறு தரமுடைய தோலிலிருந்து பல வகையான தோல்கள் பல வகையான பயன்பாட்டுக்கு செய்கிறோம். அவற்றின் விலையும் வேறுபடும்.

இப்போது விற்கும் விலையை எப்படிக் கணக்கிடுவது. குறிப்பிட்ட தோல் செய்வதற்கு எந்தத் தரமுடைய தோல் எடுக்க வேண்டும், வேதிப் பொருட்களின் மொத்த விலை என்ன, இடையில் கழிந்து போன தோலின் மதிப்பு என்ன என்று கணக்கு போகும். விற்கும் விலையோ அந்த வகைத் தோலுக்கு சந்தையில் எவ்வளவு தேவை இருக்கிறது என்பதைப் பொறுத்தும் இருக்கிறது.

தோல் தொழிற்சாலை ஒன்று நடத்துபவர், சந்தையில் வாங்கும் பச்சைத் தோலுக்குக் கொடுக்கும் விலையை காலணித் தொழிற்சாலைக்கு விற்கும் தோலின் விலையுடன் எப்படித் தொடர்பு படுத்தி திறமையாகக் கணக்குப் போடுகிறார் என்பதைப் பொறுத்துதான் அவரது வெற்றி இருக்கிறது.

 1. முதலில் பச்சைத் தோல் வாங்கும் போதே உயர் தரத் தோல்கள் அதிகமாகக் கிடைக்கும்படி பொறுக்கி வாங்குவது, திறமையாகப் பேரம் பேசி விலை குறைப்பது செய்ய வேண்டும். இப்படி வாங்கி வந்த தோல் பாதி வரை பதப்படுத்திய பிறகு தரம் பிரித்தலில் என்ன மதிப்பு கிடைத்தது என்பதை ஒவ்வொரு தரத் தோலிலிருந்து என்ன மாதிரியான இறுதிப் பொருள் செய்து என்ன விலைக்கு விற்கலாம் என்பதைப் பொறுத்துக் கணக்கிட வேண்டும்.
  இந்தக் கணக்கைப் பொறுத்து அடுத்த முறை பச்சைத் தோல் வாங்கும் போது பேரம் பேச வேண்டும்.

 2. அடுத்ததாக சரியான தரமுள்ள தோலைப் பயன்படுத்துதல். நான்கு தரமுடைய தோல்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உயர் தரமுடைய தோல் பொருள் செய்ய முதல் தர தோல் தேவை என்று வைத்துக் கொள்வோம். ஒரு திறமையான நிர்வாகி இரண்டாம் தரம் என்று பிரிக்கப்பட்ட தோலிலிருந்து நுணுக்கமான வேதி, இயந்திர பணிமூலம் உயர்தரப் பொருளுக்கு ஏற்றதாக அதை மாற்றி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குச் செலவு குறைந்து ஆதாயம் அதிகமாகி விடும்.

  மாற்றாக தேவையில்லாமல் உயர் தரத் தோலைப் பயன்படுத்தினால் இழப்பு ஏற்பட்டு விடும். விற்கும் தோலின் விலையில் பாதிக்கும் மேல் பச்சைத் தோலின் மதிப்பாக இருக்கும்.

 3. மூன்றாவதாக வேதிப் பொருட்களின் பயன்பாடு. வீணாக்கலைக் குறைத்து குறைந்த அளவு வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி தோல் செய்ய முடிந்தவருக்கு செலவு குறையும்,

பூச்சு வேலை (தோலின் கதை - 8)

இது வரை சமையல் வேலை முடிந்தது. இனிமேல் பூச்சு வேலை. சுவருக்கு சாயம் பூசுவது போல, கதவுக்கு வண்ணம் அடிப்பது போல தோலின் மேற்பரப்பில் வித விதமாக நிறங்கள், பள பளப்புகள், வெவ்வேறு தொடும் உணர்வு தரும் பூச்சுக்களை அளிப்பார்கள். இதற்கும் பல விதமான பூச்சு வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி நூற்றுக் கணக்கான பாணிகளை உருவாக்க முடியும்.

இப்போதெல்லாம் பெரும்பகுதி வேதிப் பொருட்கள் கச்சா எண்ணெயிலிருந்து எடுத்தவையாகத்தான் இருக்கின்றன.

பெட்ரோல் கண்டு பிடிக்கப்படுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தோலைப் பதப்படுத்தி மனிதன் பயன்படுத்தி வந்தான். உணவைப் பாதுகாக்கும் நுட்பத்துக்கு சம காலத்தில் அல்லது அதற்கு முன்பே விலங்குத் தோலை பயன்படுத்தும் நுட்பம் உருவாகியிருக்கும்.

அந்த காலத்தில் இயற்கையில் கிடைக்கும் தாவரப் பொருட்கள், சாயங்கள், கொழுப்புகள் இவற்றைப் பயன்படுத்தியே பதப்படுத்தி வந்தார்கள். அப்படி செய்யும் தோலின் பண்புகளை விட இப்போது நவீன முறையில் செய்யப்படும் தோல்கள் உறுதியாகவும் பல்முனைப் பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் உள்ளன.

ஆனால், இவ்வளவு வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் வேலைகளின் போது வெளியாகும் கழிவு நீர் சுற்றுப் புறத்தை மாசுப்படுத்துகிறது.

பொதுவாக தோல் தொழிற்சாலை அருகில் போனால் நமது மூக்கைத் தாக்கும் நாற்றம் அவ்வளவு பிரச்சனைக்குரியது இல்லை. அது இயற்கையாக விலங்குத் தோல் அழுகும் நாற்றம்தான். தோலாக மாற்றப்படா விட்டாலும் அந்த அழுகல் நடக்கத்தான் போகிறது. அதை பயனுள்ள பொருளாக மாற்றுவதால் நன்மைதான்.

பிரச்சனை ஆரம்பிப்பது பதப்படுத்தப் பயன்படும் அமில உப்புகள், நிறமூட்டப் பயன்படும் சாயங்கள், பிற உப்புகள் தண்ணீரில் கரைந்து வெளி வருவதுதான். இந்த வேதிப் பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், கழிவு நீரை வெளியில் விடும் முன்னர் ஊறு விளைவிக்கும் வேதிப் பொருட்களை பிரித்து எடுக்கவும் பல கோடி ரூபாய்களை செலவிடுகின்றன தோல் நிறுவனங்கள். இருந்தாலும் இன்னும் இந்தப் பிரச்சனை முற்றிலும் சரி செய்யப்பட்டு விட்டதாகச் சொல்ல முடியாது.

Wednesday, May 2, 2007

அழகு படுத்துதல் (தோலின் கதை - 7)

தோலுக்கு என்ன நிறம் கொடுக்க வேண்டும், எவ்வளவு மென்மையாக இருக்க வேண்டும், என்ன மாதிரி மேற்பூச்சு செய்ய வேண்டும் என்பதெல்லாம், தோல் பொருட்களை வடிவமைக்கும் கலைஞர்களால் தீர்மானிக்கப் படுகிறது.

ஆண்டு தோறும் என்ன நிறம், எந்த மாதிரியான உடைகள் மக்கள் வாங்குவார்கள் என்று தீர்மானிப்பதில் ஐரோப்பாவின் ஃபேஷன் கலைஞர்கள் பெரும்பங்கு வகிக்கிறார்கள். ஆண்டுக்கு இரண்டு முறை வெயில் காலத்துக்கு ஒன்று, குளிர்காலத்துக்கு ஒன்று என்று புதிய பாணி உடைகளையும் காலணிகளையும், கைப்பைகளையும் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

மற்ற ஆடை அலங்காரத் துறைகளைப் போலவே தோல் துறையிலும் பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள்தான் அதிகமாக விற்பனையாகின்றன. அவற்றின் விலையும் அதிகம்.

அடுத்த பருவத்துக்கு எந்த மாதிரியான தோல் வேண்டும் என்று கிடைத்த வேண்டுகோளைப் பொறுத்து மேலே சொன்ன பதப்படுத்தப்பட்ட தோலை இன்னும் வேதி வினைகளுக்கு உட்படுத்துகிறார்கள். பதத் தோலின் தடிமனை வேண்டிய அளவுக்கு, இயந்திரம் மூலம் குறைத்து விட்டு, பெரிய உருளைகளில் போட்டு தண்ணீரில் மூழ்கடித்து, எண்ணெய்ப் பொருட்கள், சாயப் பொருட்கள், இடைவெளிகளை நிரப்பும் பொருட்கள் என்று புகுத்துவார்கள்.

அதிகமாக எண்ணெய்ப் பொருள் போட்டால் மென்மை அதிகமாகும் திடம் குறைந்து விடும், மேலங்கி செய்யப் பயன்படும் தோலுக்கு இது போன்ற சமையல் நடக்கும். திடமான காலணித் தோல் வேண்டுமானால் நிரப்பும் பொருட்களை அதிகமாக்கி எண்ணெயைக் குறைத்துக் கொள்வார்கள். தேவையான நிறத்துக்கு ஏற்ப சாயத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வளவும் செய்வதுற்கு இருபதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு, ஏழெட்டு மணி நேரத்துக்கும் அதிகமான சுழற்சி நடைபெறும். உருளையினுள் தண்ணீரில் மிதக்கும் தோல்கள் உருளையைச் சுற்றுவதன் மூலம் பதப்படுகின்றன.

வெளியில் எடுத்த தோல் துணி துவைக்கும் கருவியிலிருந்து வெளி வந்த துணிகளைப் போல இருக்கும். ஒரே வேறுபாடு, தோலின் நார்பின்னலும் தடிமனும் பருத்தித் துணிகளை அதிகமாக இருக்கும். தோலைக் கொஞ்சம் சுருக்கம் நீக்கி காய வைப்பார்கள். காயும் போதே புரத அமைப்பிலிருந்து தண்ணீர் வெளியேறி தோல் மொடமொடவென்று காய்ந்து விடும். இப்படி தொடுவதற்கு உலர்ந்ததாகப் படும் தோலில் கூட 10% நீர் நிரம்பியிருக்கும்.

இந்த மொடமொடவென்ற தோலை இயந்திரங்களால் மென்மையாக்கிப் பார்த்தால் இன்னும் குறைபாடுகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். ஈரமான நிலையில் தரம்பிரித்தது சரியில்லாமல் இருந்தால் இந்த நிலையில் குறைகள் வெளியே தெரிய ஆரம்பித்து விடும். அப்படி ஒத்து வராத தோல்களை ஒதுக்கி வைத்து விட்டு அடுத்த வேலைக்குத் தயாராவார்கள்.

தோல் கிடைக்கும் இடங்கள் (தோலின் கதை - 6)

இந்த ஊறுகாய்த் தோலில் குரோம் உப்புக்கரைசலைச் சேர்த்து பதப்படுத்தியதும் பாக்டீரியாக்கள் தாக்க முடியாத தோல் வலைப்பின்னல் கிடைத்து விடுகிறது.

பழைய காலத்தில் மரப்பட்டைகளையும், கொட்டைகளையும் ஊற வைத்து தயாரித்த கரைசல்களைக் கூடப் பயன்படுத்தினார்கள். ஏதாவது மரத்தில் பூச்சிக் கடித்து விட்டால் உடனேயே பால் வடியும், அந்தப் பால் நுண்ணுயிரிகளைக் கொன்று ஒரு தடுப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொள்ளும். அதே வேலைதான் மரப்பட்டையிலிருந்து வரும் சாறு தோலுக்கும் செய்கிறது.

இப்போது கிடைத்த தோல் சுத்தமாக, மேல் பரப்பு பார்க்கும் படியாக, அழுகிப் போய் விடாத நிலைக்கு வந்து விட்டது. தேவையான நிறம், வலைப்பின்னலுக்கிடையே இடைவெளிகளை நிரப்புதல், இடைவெளிகளில் எண்ணெய்ப் பொருட்களைச் சேர்த்து மென்மைத் தன்மை கொடுத்தல், மேற்பரப்பில் பாதுகாப்பு பூச்சு வழங்குதல் போன்ற வேலைகள் இருக்கின்றன.

பதப்படுத்தல் முடிந்த பிறகுதான் வாங்கிய தோலின் மதிப்பை தீர்மானிக்க முடியும்.
 • தோலின் பரப்பில் அடி பட்ட தழும்புகள் இருக்கிறதா,
 • தோல் வயதான விலங்குடையதாக இருந்தால் சுருக்கம் அதிகமாக இருக்கிறதா,
 • தோலை உரிக்கும் போது ஏதாவது கத்தி வெட்டு பட்டிருக்கிறதா,
 • விலங்கு உயிரோடு இருக்கும் போது அம்மைப் பட்ட தழும்புகள் இருக்கிறதா

  என்றெல்லாம் பார்த்து பல தரங்களாகப் பிரிப்பார்கள்.

எந்த பழுதும் இல்லாமல் இருந்தால் முதல் தரம் என்று ஆரம்பித்து பயன்படுத்தவே முடியாத கழிவுத் தோல் வரை கிடைக்கும். நல்ல தோலாக இருந்தால் விலை உயர்ந்த பொருள் செய்யப் பயன்படுத்தலாம். மோசமான தரமுடையதை கெட்டியாக மேற்பூச்சு பூசி விலை குறைவாகத்தான் விற்க முடியும். வாங்கிய ஆயிரம் தோலில் எவ்வளவு முதல், இரண்டாவது, மூன்றாவது... தரம் என்று கணக்கு போட்டுப் பார்த்தால்தான் வியாபாரிக்குக் கொடுத்த காசு கட்டுப்படியாகுமா என்பது புரியும்.

பொதுவாக மாட்டுத் தோல்தான் பெருமளவு சந்தைக்கு வரும். இந்தியாவைத் தவிர்த்து மற்ற நாடுகளிலெல்லாம் மாட்டிறைச்சிதான் பெரும்பான்மை மக்களின் உணவில் இடம் பெறுகிறது. இந்த இறைச்சிக்காக கொல்லப்படும் மாடுகளின் தோல்களிலிருந்துதான் நாம் வாங்கும் தோல் செருப்பில், தோல் பையில், பணப்பையில் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் எருமைத் தோலும், ஆட்டுத் தோலும் அதிகம். ஆட்டுத் தோலின் தடிமன் குறைவாக இருப்பதால் மென்மையான பெண்களுக்கான காலணிகள் செய்யப் பயன்படுகிறது. இந்திய ஆட்டுத் தோலின் பெரும்பகுதி ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வளர்ந்த பொருளாதாரங்களுக்கு விலை உயர்ந்து காலணிகளாக ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகிறது.

இவற்றைத் தவிர குளிர் பகுதிகளில் கம்பளிக்காக வளர்க்கப்படும் கம்பளி ஆட்டுத் தோலும் கிடைக்கிறது. இந்தக் கம்பளி ஆட்டுத் தோல் மென்மையாக இருப்பதால் தோல் மேலாடைகள் செய்ய பயன்படுகிறது.

Tuesday, May 1, 2007

பதப்படுத்தலுக்குத் தயாரிப்பு (தோலின் கதை - 5)

சின்ன வயதில் இழுத்துப் பிடித்து விண்ணென்று இருக்கும் தோல் வயது ஏற ஏற தளர்ந்து சுருங்கி விடுகிறது. இது எல்லாமே மனிதனுக்கும் பொருந்தும், மாடுகளுக்கும் பொருந்தும்.

இறந்து விலங்குகளின் தோலைப் பொருட்களாகச் செய்யும் போது, தோல் வலைப்பின்னலின் இயற்கையான உறுதி, வெப்ப நிலையைப் பாதுகாக்கும் தன்மை, வசதி போன்றவற்றைத்தான் விரும்புகிறோம்.

சுண்ணாம்பில் ஊற வைக்கும் போது வலைப்பின்னலைத் தவிர்த்த பிற புரதங்கள், சர்க்கரைப் பொருட்கள், வேர் பிடித்து நிற்கும் முடிகள் உதிர்ந்து விடுகின்றன. கறுப்பு, பழுப்பு, மஞ்சள் என்று நிறமளிக்கும் நிறமிகளும் கரைந்து போய் விடும்.

வலைப்பின்னலின் வேதி மூலக் கூறுகளினுள் நீர் புகுந்து தோல் உப்பி விடுகிறது. இந்த நிலையில் தோலை வேதி முறையில் நிலைப்படுத்தும் வேலை நடக்கும். இதற்கு அமிலவேதிச் சமநிலையை மாற்ற வேண்டும்.

சுண்ணாம்பு காரம், ஊறுகாய் அமிலம் என்றும் நமக்குத் தெரியும். சாப்பிட்ட பிறகு சுண்ணாம்பு தடவி வெற்றிலை போடுவது மூலம் வயிற்றில் எதிர்த்து வரும் அமில சக்தியை சமப்படுத்துகிறோமோ என்னவோ!

சுண்ணாம்பில் ஊற வைத்த தோலில் காரச்சத்து நிரம்பி இருக்கும், இதைக் குறைத்து அமிலத்தில் ஊற வைத்தால்தான் தோலைப் பதப்படுத்தும் அமில உப்புக்கள் உள்ளே நுழைய முடியும்.

கொதிக்கும் தண்ணீரில் போட்டு கொழுக்கட்டை செய்வார்கள் எங்கள் ஊரில். அரிசியை ஊற வைத்து கெட்டியாக அரைத்து உப்பும் தேங்காயும் சேர்த்து, உருண்டை பிடித்து போட வேண்டும். இந்த உருண்டையை தண்ணீர் நன்கு கொதித்த பிறகுதான் போட வேண்டும். ஆறிய நீரில் போட்டு விட்டால் அரிசி மாவு கரைந்து விடும். கொதிக்கும் நீரில் போட்டதும், உருண்டையில் மேற்பரப்பு உடனேயே வெந்து விட கரைதல் தடுக்கப்பட்டு உள் பகுதிகளும் வேகும் வரை கொதிக்க வைக்கலாம்.

அதே தத்துவம்தான் தோலை வேதி வினைக்கு உட்படுத்துவதிலும். கார நிலையில் அமில உப்பைச் சேர்த்தால் மேற்பரப்பிலேயே எல்லா வினையும் நடந்து விடும். தோலையும் அமில நிலைக்கு மாற்றி அதன் பிறகு அமில உப்பைப் போட்டால் உப்புக் கரைசல் ஊடுருவிச் சென்று வலைப்பின்னலின் ஒவ்வொரு மூலக்கூறின் அருகில் போய் நின்று கொள்ளும். இது அனைத்துமே சமையல் போல தண்ணீருக்குள் நடைபெறுவதுதான்.

நல்ல சமையல் தெரிந்தவர்கள்தான் நல்ல தோல் செய்ய முடியும் என்று சொல்வார்கள்.

சுண்ணாம்புத் தோலை அமில நிலைக்கு முதலில் சுண்ணாம்பை சம நிலைப்படுத்தி விட்டு, அமிலத்தை ஊற்றுவார்கள். அமிலத்தை நேரடியாக ஊற்றினால் தோலைக் கெடுத்து விடும் என்பதால் உப்புக்கரைசலில் ஊற வைத்து அதன் பின் அமிலக் கரைசலை சேர்ப்பார்கள். எலுமிச்சம்பழத்தின் அமிலத்தோடு உப்பு சேர்த்து ஊற வைப்பதால்தான் ஊறுகாய் உருவாகிறது. பழத்தை நுண்ணுயிரிகள் தாக்காமல் பாதுகாக்கிறது. மேலே சொன்ன உப்பும், அமிலமும் சேர்ந்த கரைசலில் ஊறிய தோலுக்கு ஊறுகாய் போட்ட தோல் என்றுதான் பேர்.

தோலின் பணிகள் (தோலின் கதை - 4)

தோல் தொழிற்சாலைக்கு வரும் முன்னர் வழியில் அழுகி விடாமல் இருக்க பொதுவாக உப்புச் சேர்த்து பாதுகாத்திருப்பார்கள்.
 • முதல் வேலையாக ஓரங்களை வெட்டி நீக்கி விட்டு சோப்பு முதலிய வேதிப் பொருட்களுடன் தண்ணீரில் ஊற வைக்கிறார்கள். தண்ணீரில் ஊறும் போது மேலே ஒட்டியிருக்கும் அழுக்குகள் நீங்குவதோடு, உள்ளே புகுத்தப்பட்டிருந்த உப்பைக் கரைய வைத்து வெளியேற்றி விடுகிறது.

 • இப்படி நல்ல ஊறியிருக்கும் தோலை அடுத்து சுண்ணாம்பு கரைசலில் ஊற வைக்க வேண்டும். சுண்ணாம்புக் கரைசலுடன், முடியை உதிரச் செய்யும் சோடியும் சல்பைடு என்ற வேதிப் பொருளும் சேர்க்க வேண்டும். தோல் உண்மையில் ஒரு சிக்கலான உயிர் வலைப்பின்னல். கொத்து கொத்தாக புரத நார்கள் பின்னிப் பிணைந்து உருவானதுதான் தோல். இந்த பின்னல் அமைப்பால் தோலுக்கு உறுதித் தன்மையும் உடலைப் பாதுகாக்கும் இயல்பும் கிடைக்கிறது.
  • இந்த அடிப்படை பின்னலுக்கிடையேயான வெளிகளில் மற்ற புரதங்களும் சர்க்கரை சத்துக்களும் நிரம்பியிருக்கும்.
  • வெயில் காலங்களில் வேர்வையை வெளிப்படுத்தி உடல் வெப்ப நிலை ஏறாமல் பார்த்துக் கொள்ளும் வேர்வைச் சுரப்பிகளும் குளிராக இருக்கும் போது உடல் வெப்ப நிலை குறைந்து விடாமல் பாது காக்கும் கொழுப்புச் சுரப்பிகளும் தோலின் அடியில்தான் இருக்கும்.
  • உடலின் மேல்பரப்பில் இருக்கும் தோலின் மறு பரப்பில் ஒட்டிக் கொண்டிருப்பது சதை. அதைத்தான் இறைச்சியாக எடுத்துக் கொண்டாலும் சிறிதளவு பதப்படுத்த வரும் தோலிலும் ஒட்டியிருக்கும்.
விலங்கு உயிரோடு இருக்கும் போது, ஏன் நம்முடைய தோல் கூட, தோல் பல இன்றியமையாத வேலைகளைப் பார்க்கிறது.
 1. வெளிப்புற வெப்ப நிலை அதிகமாகும் போது வேர்வை வெளியேற்றுவதன் மூலம் தோல் பரப்பில் நீரை ஆவியாகச் செய்து, வெப்பத்தைக் குறைக்கிறது. வெயில் காலத்தில் தாகம் அதிகமாவதன் காரணம் இதுதான் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
 2. வெளிப்புற வெப்ப நிலை குறையும் போது, எண்ணெய்ப் பசையை சுரக்கச் செய்து, ஆவியாதலைக் குறைத்து உடல் வெப்ப நிலை குறைந்து விடாமல் பாதுகாக்கிறது. அதனால்தான் குளிர் காலத்தில் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது. தோல் வழியாக நீர் வெளியேறுவது குறைந்து போவதால் பெரும்பகுதி நீர் சிறுநீராக வெளியாகிறது.
 3. உடல் முழுமைக்குமான பாதுகாப்பு உறையாக உள்ளுறுப்புகளை வெளி உரசல்களிலிருந்து பாதுகாக்கிறது. யாராவது தொட்டால் உணர்ந்து கொள்வதற்கான தொடுதலின் உணர் உறுப்பு தோல்தான்.
 4. வியர்வையின் மூலம் ரத்தத்தில் தேவையில்லாத உப்புகளை வெளியில் தள்ளுகிறது.

இயற்கையை மாற்றுதல் (தோலின் கதை - 3)

பச்சைத் தோலை சந்தையிலிருந்து திரட்டி வருவதுதான் தோல் துறையில் முதல் வேலை என்று பார்த்தோம். பச்சைத் தோலை அப்படியே காலணியோ, தோல் சட்டையோ, தோல் பையோ செய்ய ஏன் பயன்படுத்த முடியாது?
 • பச்சைத் தோல் நீர் நிறைந்தது (ஏறக்குறைய எழுபது சதவீதம்). காய வைத்து இந்த நீரை நீக்கி விட்டால் தோல் விறைப்பாகவும் மொடமொடப்பாகவும் ஆகி விடும்.
 • அப்படியே விட்டு விட்டால், பாக்டீரியா முதலான நுண்ணுயிரிகள் பச்சைத் தோலைத் தாக்கி அழுகச் செய்கின்றன. தோலை குளிர்பதனப் படுத்தியோ, காய வைத்தோதான் இதைத் தடுக்க முடியும். இந்த நிலையில் பொருட்கள் செய்வது முடிந்த மாதிரிதான்!!
 • விலங்கு இறந்த பிறகு அதன் உடலில் இருந்து நீக்கப்பட்ட தோலில் இரத்தம், நிணம், சாணம் போன்ற மாசுப் பொருட்களும் முடி, சதை போன்ற தேவையில்லாத பொருட்களும் ஒட்டி உள்ளன.
பொருள்கள் செய்ய பயன்படுத்த்ப்பட வேண்டுமானால் தோல்
 • உலர்ந்ததாகவும் வளையும்படியுமாகவும் இருக்க வேண்டும்.
 • நுண்ணுயிர்களால் தாக்கப்படக் கூடாது.
 • தேவைப்படும், நிறம், மென்மைத் தன்மை மற்றும் பிற குணங்கள் கொண்டிருக்க வேண்டும்.
தோல் பதனிடுதல் மேற்சொன்ன மாற்றங்களை கொண்டு வருகிறது. தோல் பதனிடும் தொழிலின் முதல் பதப்படுத்தல் தோலை பாக்டீரியா தாக்குதலுக்கு தடுப்பு ஏற்படுத்துகிறது.