Wednesday, February 21, 2007

வரவுக்கு மேல் செலவு செய்வது எப்படி? (economics 47)

தனிநபர் ஒருவர் வரவுக்கு மேல் செலவு செய்தால் ஒரு நாள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் கணக்கு கொடுக்க வேண்டி வரும் என்பது பொதுவாகச் சொல்லப்படுவது. அதே விதி தொழில் நிறுவனங்களுக்கும், அரசாங்கங்களுக்கும் கூட பொருந்தும். வருவாய்க்குள் வாழாவிட்டால் கடைசியில் தொல்லைதான்.

கடன் என்பது வேறு ஒருவரின் சேமிப்பிலிருந்து வருவது. தனது வருவாயில் ஒரு பகுதியை செலவளிக்காமல் சேமித்து வைப்பதை இன்னொருவர் கடனாகப் பெற முடிகிறது. அப்படி கடனாக வாங்கியவர், உடனடி நுகர் பொருட்களில் அதைச் செலவிட்டால் முதலீடு எதுவும் உருவாகமல் கடனைத் திருப்ப வழியில்லாமல் போய் விடும்.

இதற்கு விதிவிலக்கு முதலீடு. வருமானம் பத்தாயிரம் ரூபாய். பத்தாயிரமும் வீட்டு செலவுக்குப் போய் விடுகிறது. இனிமேல் செலவு செய்ய வேண்டுமானால் கடன்தான் வாங்க வேண்டும்? இந்தக் கூடுதல் செலவு எதிர்காலத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்கக் கூடிய முதலீட்டுக்குப் பயன்பட்டால் கடன் வாங்கி கூட செலவு செய்யலாம்.

தனி நபர்கள், நிறுனங்கள், அரசுகள் வருவாயை மிஞ்சி செலவு செய்வது அடிப்படை ஒன்றேயானாலும் வெவ்வேறு முறையில் புரிந்து கொள்ளப்படுகின்றன.

  • தனி நபர்கள் துண்டு நிதித் திட்டம் போடுவது, வங்கிக் கடன் அல்லது தனிப்பட்ட கடன்களை அடிப்படையாக வைத்து. கணக்கியலில் தனிநபரின் எல்லா வரவையும் கூட்டி, எல்லா செலவையும் அதிலிருந்து கழித்து அவரது சேமிப்பை கணக்கிடுவார்கள்.

  • தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் புதிய திட்டங்களை செயல்படுத்த ஆரம்பிக்கும் போது கடன் வாங்கி செலவளிப்பார்கள். இதை முதலீடு என்று தனியாக கணக்கு வைத்து முழுச் செலவையும் அதே ஆண்டில் காட்டாமல் திட்டங்கள் பலன் கொடுக்க ஆரம்பிக்கும் ஆண்டுகளுக்கு செலவை பகிர்ந்தளித்து கொள்வார்கள்.

  • அரசாங்கம் வருமானத்தை மிஞ்சி செலவு செய்யத் திட்டம் போடும் போது பற்றாக் குறை நிதிநிலை. குறையை ஈடு செய்ய கடன் பத்திரங்களை வங்கிகளுக்கு விற்பது மூலம் பொது மக்களின் சேமிப்பை அரசு கடனாக வாங்கிக் கொள்ளும். அரசின் பற்றாக்குறை கடன் வாங்கல் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு, தனி நபர்களுக்குக் கிடைக்கக் கூடிய வங்கிக் கடன் வசதிகள் குறைந்து விடும்.
யாராயிருந்தாலும், செலவிடுவது முதலீடாக இருந்தால் பற்றாக்குறை நிலைமை ஏற்றுக் கொள்ளக் கூடியது. கடன் வாங்கி உடனடித் தேவைகளைப் பார்த்துக் கொள்ளும் பழக்கம் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாத ஒன்று.

Tuesday, February 20, 2007

ஒன்று போட்டால் பத்தாவது எப்படி? (economics 46)

புதிய முதலீடு எப்படி நாட்டின் மொத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது என்பதற்கு ஒரு சுவையான கணக்கு இருக்கிறது.

ஏற்கனவே பார்த்தது போல ஒருவருக்குக் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கு உடனடிச் செலவுக்கும் மீதியிருப்பது சேமிப்புக்கும் போகிறது. புதிய முதலீடாக 50,000 ரூபாய்க்கு ஒருவர் வீட்டின் வெளியே மதில் சுவர் கட்டுகிறாரல என்று வைத்துக் கொள்வோம். அதில் வேலை பார்க்கும் கட்டிடத் தொழிலாளர்கள், செங்கல் சூளை பணியாளர்கள், மற்றும் பலரும் சேர்த்து நாட்டின் மொத்த வருமானம் 50,000 ரூபாய் உயரும்.

அத்தோடு நின்று விடுவதில்லை. கூடுதலாக வரும் வருமானத்தை இவர்கள் என்ன செய்வார்கள்? ஒரு பகுதியை சேமிப்பார்கள், ஒரு பகுதியை செலவளிப்பார்கள். வருவாயில் 20% சேமிப்பு என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவருக்கும் இந்த வீதம் வேறாக இருந்தாலும் இந்தக் கணக்குக்காக ஒரே மாதிரியாக 20% என்று எடுத்துக் கொள்வோம்.

ஐம்பதாயிரத்தில் 10,000 முடங்கி விட 40,000 அடுத்தச் சுற்றில் செலவாகிறது. செலவு செய்த இடத்தைப் பொறுத்து அந்தச் செலவு, காய்கறி விற்றவர், பால் விற்றவர், துணி விற்றவர், பேருந்து நிறுவனம் எனப் பலருக்கு வருமானத்தை அதிகரிக்கச் செய்கிறது. இரண்டாவது சுற்றுக்குப் பிறகு மொத்த உற்பத்தி அதிகரிப்பு 90,000 ரூபாய்.

மூன்றாவது சுற்றிலும் அதே 80% செலவளிப்பு என்று வைத்துக் கொள்வோம். 32,000 ரூபாய்க்கு தேவை அதிகரித்து உற்பத்தி நடக்கும். மொத்தம் 1,22,000 ரூபாய்.

இப்படியே குறைந்து கொண்டே போய் மொத்த உற்பத்தி 2,50,000 ரூபாய் அதிகரிக்கும். 50,000 ரூபாய் உற்பத்தி முதலீடு தண்ணீரில் விழுந்த கல்லைப் போல வட்ட வட்டமாக பரவி 2,50,000 ரூபாயை உருவாக்கி விடும். கணக்குப் போடத் தெரிந்தவர்கள், இது எப்படி வந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இடையில் யாராவது செலவளிக்காமல் சேமித்து விட்டால் இந்த அளவு குறைந்து விடும். எல்லோருமே கையில் கிடைப்பதை எல்லாம் செலவளித்துக் கொண்டே இருந்தால் இந்த சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இப்படி புதிய முதலீடுகள் வருமானத்தை பல சுற்றுகளில் உயர்த்துவதன் மூலம் நாட்டின் மொத்த உற்பத்தி உயர உதவுகின்றன்.

அதே போல முதலீடு குறைந்தால், வருமானம் குறைவது பலசுற்றுகளில் கூடிக் கொண்டே போய் மொத்த உற்பத்தியைக் குறைத்து விடுகின்றன.

விலைவீக்கம் அதிகமானால் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி வீதத்தை வங்கிகள் உயர்த்தும் போது முதலீடுகள் தள்ளிப் போடப்படுகின்றன. அதனால், மொத்தத் தேவை குறைந்து விலைகளும் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதில் அபாயம் என்னவென்றால் விலைகள் குறையும் போது, கூடவே வேலை வாய்ப்புகளும் குறைந்து விடும்.

நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகமானால் வளர்ச்சி வீதம் குறைவாக இருந்தால் வளர்ச்சியைத் தூண்ட புதிய முதலீடுகள் தேவைப்படும். வட்டி வீதத்தைக் குறைத்தாலும் தனியார் நிறுவனங்களை முதலீடு செய்யத் தூண்டுவது நடக்காமல் போகலாம். அத்தகைய நேரங்களில் அரசு புதிய திட்டங்களில், பொதுப் பணிகளில் பணம் செலவளிக்கும்.

சென்னையிலிருந்து, பெங்களூர் வரை சாலை போட 200 கோடி ரூபாய் அரசு செலவளித்தால் அது எப்படி செலவாகிறது என்பதைப் பொறுத்து மொத்த உற்பத்தி 1000 கோடி வரை உயர முடியும்.

Monday, February 19, 2007

பொருளாதாரச் சுழற்சி (economics 45)

இந்து வளர்ச்சி வீதம் என்று சொல்லப்பட்ட 3-4 % வளர்ச்சிதான் இந்தியாவுக்கு விதித்தது என்று 1990கள் வரை நினைத்து வந்தார்கள். உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, விலை வீக்கம் இரண்டும் பாதகமாக இருந்தது வங்கி வட்டி வீதம் 12%, ஐந்து ஆண்டுகளில் போட்ட பணம் இரட்டிப்பாகி விடும் என்று விளம்பரம் செய்வார்கள். அப்போது பணவீக்க வீதம் 10% த்துக்கு மேலும் வளர்ச்சி வீதம் 4% ஆகவும் இருந்தது.

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஆரம்பித்த பிறகு, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆரம்பித்த பிறகு, விலைவீக்க வீதம் 4% ஆகவும், வளர்ச்சி 7-8% ஆகவும் ஆனது. இப்போது வளர்ச்சி 9% மேல் போய் 10% வளர்ச்சிக்கும் திட்டம் போடுகிறார்கள்.

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எப்போதும் ஒரே அளவில் இருப்பதில்லை. குறிப்பிட்ட ஆண்டுகளில் அதிகமாகவும் குறிப்பிட்ட ஆண்டுகளில் குறைவாகவும் இருக்கலாம். பல ஆண்டுகள் தொடர்ந்து உயர் வளர்ச்சியும் அல்லது தொடர்ச்சியான குறைந்த வளர்ச்சியும் நிலவும். இதை பொருளாதாரச் சுழற்சி என்று சொல்கிறார்கள்.

பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் போது எல்லோருக்கும் நம்பிக்கை அதிகமாக இருப்பதால் புதிய முயற்சிகளில் முதலீடு செய்வார்கள். புதிய தொழில்கள் தொடங்கப்படும், ஏற்கனவே இருக்கும் தொழில்கள் புதிய கருவிகளை வாங்கிப் போடும், ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும். இப்படிச் செலவாகும் பணம் எல்லாம் பணப்புழக்கத்தை அதிகமாக்கி மக்களின் கையில் செலவுக்கு பணம் கூடும். நுகர்பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். அதனால் வணிக நிறுவனங்களின் லாபம் கூடுகிறது.

அதைப் பார்த்து இன்னும் முதலீட்டை அதிகப்படுத்துவார்கள். இப்படியாக ஒவ்வொன்றும் அடுத்த நிலையைத் தூண்ட பொருளாதாரம் வளர்ந்து கொண்டே போகும். இப்படி எல்லோருமே புதிய முயற்சிகளில் செலவுகளில் ஈடுபடும் போது ஒரு பகுதி தவறான முடிவுகளால் வீணாவது தவிர்க்க முடியாதது. அப்படி வீணாகும் மதிப்புக்கு நிகரான பொருட்கள் உற்பத்தியாகாது. ஆனால், பணத்தின் அளவு அதிகரித்திருக்கும். அதிக பணம் குறைந்த பொருட்களை வாங்க சந்தைக்கு வரும் போது விலைவாசி உயரும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால், செழிப்பான காலங்களில்
  • புதிய முதலீடுகள் அதிகரிக்கும்.
  • வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்
  • ஊழியர்களில் சம்பளம் அதிகரிக்கும்.
  • வணிக நிறுவனங்களின் விற்பனை/லாபம் அதிகரிக்கும்.
  • விலைவாசி அதிகரிக்கும்.
இப்படித் தவறுகள் அதிகமானால் வளர்ச்சி குன்றி விலைவாசி ஏற ஆரம்பிக்கும். வளர்ச்சி வீதம் குறைய ஆரம்பிக்கும் போது எதிர்மறை நிகழ்ச்சிகள் அரங்கேறும்.

மக்களின் வாங்கும் திறன் குறைவதால் விற்பனை குறையும். லாபம் குறையும், முதலீடு முயற்சிகள் நிறுத்தப்படும். வேலை வாய்ப்புகள் குறைந்து வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். பொருட்களின் விலையும் குறைய ஆரம்பிக்க வேண்டும். இதுவும் ஒரு சுழற்சியாக பல ஆண்டுகள் தொடர்ந்து பொருளாதாரத்தை முடக்கிப் போட்டு விடலாம்.

Saturday, February 17, 2007

முதலீடு (economics 44)

பணத்தை நிலத்தில், வீட்டில், நகையில் முடக்குவது உண்மையான முதலீடு கிடையாது. அவை பணச் சேமிப்பு அவ்வளவுதான்.

உண்மையான முதலீடு என்பது அதன் மூலம் வேறு பொருட்களை உற்பத்தி செய்ய உதவும் அசையும் அசையாச் சொத்துக்களை உருவாக்குவதுதான். நாட்டின் வருமானத்தை தீர்மானிக்கும், நுகர்வோர் செலவினங்கள், தொழில் முறை முதலீடு, அரசாங்க செலவுகள், ஏற்றுமதி/இறக்குமதி இவற்றில் இரண்டாவதான முதலீட்டுச் செலவுகள்தான் அதிகமாக ஏறி இறங்கக் கூடியது.

  • இயல்பான காலங்களில், மக்கள் பயன்படுத்த வாங்கும் பொருட்களின் மதிப்பு சிறிதளவே ஏறவோ இறங்கவோ செய்யும்.
  • அரசின் செலவினங்களும் குறித்த வரம்புக்குள்தான் நடக்கும்.
  • ஏற்றுமதி இறக்குமதி, நாட்டின் ஒப்பீட்டு மேன்மை (comparative advantage) பொறுத்துதான் அமைய முடியும்.
  • தொழில் முறை முதலீடு மட்டும்தான் ஒரே ஆண்டுக்குள் பெருமளவு வேறுபடக் கூடியது.
பொதுவாக பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தால் புதிய முயற்சிகளில் முதலீடு செய்பவர்கள் அதிகமாவார்கள். தற்போது இந்திய தொழில் உலகில் தெரியும் நம்பிக்கை கோடிக் கணக்கான ரூபாய்கள் முதலீட்டை மாதம் தோறும் உருவாக்கி வருகிறது. சின்ன நிறுவனங்களில் கூட அலுவலகத்தில் இடவசதியை அதிகமாக்கிக் கொள்கிறார்கள். புதிய கருவிகள் வாங்குகிறார்கள். பெரிய நிறுவனங்கள் ஐரோப்பா அல்லது அமெரிக்கா போய் அந்த ஊர் நிறுவனங்களை வாங்க முதலீடு செய்கிறார்கள்.

இரண்டாவதாக முதலீடு செய்யும் பொருளின் விலையும், அதற்குத் தேவையான பணத்திற்கு கொடுக்க வேண்டிய வட்டியும் முதலீட்டு அளவை தீர்மானிக்கும். மத்திய வங்கி வட்டி வீதத்தை ஏற்றினால் முதலீடு செய்பவர்கள் குறைந்து விடுவார்கள்.

இப்போது ஓரிரு வாரங்களாக செய்தித் தாள்களில் விலைவாசி உயர்வைக் குறித்த விவாதங்கள். இதில் அடிபடும் சொல்கள், விலையேற்றப் புள்ளி (inflation), வங்கி ரொக்க வைப்பு வீதம் (cash reserve ratio), வங்கி வட்டி வீதம்.

விலையேற்ற வீதம் 6.5% ஆக உயர்ந்து விட்டது என்று சொன்னால், கடந்த ஆண்டு இதே நாளில் இருந்த விலைவாசியை விட இன்றைக்கு பொருட்களின் விலை நூற்றுக்கு ஆறு ரூபாய் ஏறி விட்டது என்று பொருள். இதைக் கணக்கிட உணவுப் பொருட்கள், அன்றாட பயன்படு பொருட்கள், நீடித்து உழைக்கும் பொருட்கள், எரிபொருட்கள் என்று வகைப்படுத்தப்பட்ட நுகர்பொருட்களின் தொகுப்பின் விலைகளைக் குறிப்பிட்ட விகிதத்தில் கூட்டி அதன் மாறுபாட்டை கண்காணிக்கிறார்கள்.

விலை ஏன் ஏறுகிறது? பொருட்களின் தேவை அதிகமானால், அல்லது பொருட்கள் கிடைப்பது குறைந்தால். தேவை என்பது நுகர் பொருள், முதலீடு, அரசு செலவினங்கள், ஏற்றுமதி என்று பிரிகிறது.

மத்திய வங்கி வட்டி, பிற வங்கிகளுக்கு தான் அளிக்கும் கடனுக்கான வட்டியை உயர்த்தினால், பொதுவாக கடன் வட்டி வீதம் உயர்ந்து முதலீடு செய்பவர்கள் செலவை தள்ளிப் போடுவார்கள். இதன் மூலம் பொருட்களின்/சேவைகளின் தேவை அளவு குறைந்து விலைவாசி உயர்வை மட்டுப்படுத்தலாம்.

நூறு ரூபாய் வைப்புத் தொகை கிடைத்தால் அதில் ஆறு ரூபாய் கையில் வைத்துக் கொண்டு 94 ரூபாய்தான் கடன் கொடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு கட்டுப்பாடு உண்டு. காசைக் கொடுத்தவர்கள் திரும்பிக் கேட்டால் கொடுக்க வசதியாக இந்த ஆறு ரூபாய். கொடுத்த எல்லோரும் ஒரே நேரத்தில் வர மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் மீதி 94 ரூபாய் கடனாக வெளியே போகிறது.

இந்த வீதம்தான் CRR எனப்படும் ரொக்க வைப்பு வீதம், மத்திய வங்கியால் விதிக்கப்படுகிறது. முதலீட்டுக்குப் போகும் பணத்தின் அளவைக் குறைக்க வேண்டும் என்றால் இந்த வீதத்தை ஆறிலிருந்து ஆறரையாக உயர்த்தி விட்டால் போதும். 94 ரூபாய் கடன் வெளியே கொடுத்திருந்த வங்கி அரை ரூபாய் கடனைக் குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். கோடிக்கணக்கில் பணம் புரளும் போது இது கணிசமான தொகையாகி பல முதலீடுகளுக்கு காசு கிடைக்காமல் போய் விடும். இதனால் தேவை அளவு குறையும்.

Tuesday, February 13, 2007

செலவு செய்தலும் சேமித்தலும் (economics 43)

ஒருவரின் வருமானம் இரண்டாகப் பிரிகிறது. தேவையான அல்லது தேவையற்று பொருட்களை வாங்கச் செலவிடலாம் அல்லது சேமிப்பில் போடலாம்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் பெரும்பகுதி செலவில் போய் விடுகிறது. சில சமயம் வரவுக்கு மீறியும் செலவு செய்ய வேண்டி வந்து விடுகிறது. அதை மானியங்கள் மூலமாகவோ, கடன் வாங்குவது மூலமாகவோ சமாளிக்கிறோம்.

வருமானம் ஏற ஏற, செலவும் அதிகரிக்கிறது. ஆனால் அதிக வருமானத்தை முற்றிலும் செலவளித்து விடுவதில்லை. வசதி படைத்தவர்கள் தமது வருமானத்தில் கணிசமான பகுதியை சேமிக்க ஆரம்பிக்கிறார்கள்.

மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த ஒருவரின் வருமானம் ஆயிரம் ரூபாய்கள் அதிகமானால் என்ன செய்வார்? அது செலவு செய்யப் பயன்படுமா, சேமிப்பில் சேருமா? மாதம் ஐந்து லட்சம் சம்பாதிப்பவருக்கு ஆயிரம் ரூபாய் அதிகம் கிடைத்தால் செலவளிப்பாரா, சேமிப்பாரா?

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளினால் ஏழைகளின் வருமானம் அதிகமானால் மொத்தமாக வாங்கும் பொருட்களின் தேவை அதிகரிக்கும். பணக்காரர்களின் வருமானம் அதிகமானால் சேமிப்பு அதிகரிக்கும். என்பது பொதுவாகச் சொல்லக் கூடிய ஒன்று.

Friday, February 9, 2007

மொத்த உள்நாட்டு உற்பத்தி - தொடர்ச்சி (economics 42)

GDP அளவீட்டில் பல குறைபாடுகள் உண்டு.
  1. விலை கொடுத்து வாங்கி விற்கப்படாத பொருட்கள்/சேவைகள் இதில் சேர்க்கப்படுவதில்லை.

    குடும்பத் தலைவி குழந்தைகளை வளர்த்தல், துணி துவைத்தல் சமைத்தல் போன்ற வேலைகளைச் செய்வது மொத்த உற்பத்திக் கணக்கில் சேராது. அதே பெண்மணி வெளியில் வேலை தேடிக் கொண்டு இதே வேலைகளைச் செய்ய ஆள் வைத்து சம்பளம் கொடுத்தால் இவை அனைத்தும் கணக்கில் சேர்ந்து விடுகின்றன.
    காசு கொடுத்து வாங்காத, காசு வாங்கி செய்யாத பல சேவைகள், முதலீடுகள் நாட்டு உற்பத்திக் கணக்கீட்டில் சேருவதில்லை.

  2. இரண்டாவதாக பொருளாதார நடவடிக்கைகளின் போது பக்க விளைவாக தோன்றும் மாசு செய்யும் பொருட்களால் விளையும் தீங்கை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
    900 பில்லியன் டாலர் உற்பத்தி செய்யும் போது ஐம்பது பில்லியன் டாலர் மதிப்பிலான சுற்றுப் புறச் சூழல் கேடு விளைந்திருக்கலாம். அல்லது மாசுப் பொருட்களில் விளைவு நூறு பில்லியல் டாலர்களாக இருக்கலாம். இந்த விளைவுளகைக் கழித்தால்தான் உண்மையான உற்பத்தித் திறனின் அளவு கிடைக்கும்.

  3. இரண்டு நாடுகளின் உற்பத்தி திறனை ஒப்பிடும் போது GDPயை டாலர்களாக மாற்றி ஒப்பிடுவது வழக்கம். இந்தியாவின் GDP 4 லட்சம் கோடி என்று சொன்னால் சீனாவின் 15 லட்சம் யுவானுடன் எப்படி ஒப்பிடுவது? இரண்டையும் அந்த ஆண்டின் அன்னியச் செலாவணி வீதப்படி டாலர்களாக மாற்றினால் இந்தியாவின் GDP 800 பில்லியன் டாலர்கள், சீனாவின் GDP 1900 பில்லியன் டாலர்கள் என்று சொல்லி ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.

    இந்த ஒப்பிடுதலில்் பெரிய குறை இருக்கிறது. அன்னியச் செலாவணி வீதங்கள் இரண்டு நாடுகளுக்கிடையே நடக்கும் வர்த்தக அளவை மட்டும் பொறுத்து அமையும். உள்நாட்டுக்குள்ளேயே நடக்கும் பொருளாதார நடவடிக்கைகளின் மதிப்பை டாலர்களாக மாற்றிக் கணக்கிட்டால் உண்மையான மதிப்பு தெரியாமல் போய் விடலாம்.

    சென்னையில் வயிறார சாப்பிட 15 ரூபாய்க்கு உணவு கிடைக்கிறது. அதை டாலருக்கு மாற்றினால் 40 சென்டுகள்தான் GDPயில் சேரும். அதே தரத்திலான உணவு நியூயார்க்கில் 2 டாலருக்கு விற்கலாம். அப்போது அமெரிக்க GDPயில் 2 டாலர்கள் சேர்ந்து விடுகின்றன.
இதைச் சரிசெய்ய PPP (purchasing power parity) வாங்கும் திறன் ஒப்பீடு என்ற முறையில் உற்பத்தி அளவைக் கணக்கிடுகிறார்கள். அந்த அளவீட்டின் படி இந்தியாவின் GDP 3000 பில்லியன் டாலர்களைத் தாண்டி விடும். அமெரிக்காவின் GDP 6000 பில்லியன் டாலர்களுக்கும் அதிகம். சரியான மதிப்புகளை விக்கிபீடியாவில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

Wednesday, February 7, 2007

இன்னும் இருக்கு GDPயில் (economics 41)

மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடுதலில் இன்னும் சில விபரங்கள்.

ஒரு ஆண்டின் உற்பத்தியை அளவிடும் போது அப்போது நிலவும் சந்தை விலை மதிப்புகளைச் சேர்த்து கணக்கிடுகிறார்கள். ஆனால், எல்லோருக்கும் தெரிந்தது போல விலைகள் மாறாமல் இருப்பது இல்லை. ஆண்டுக்கு ஆண்டு பண வீக்கம் அதிகமாகும் போது பொருட்களின் விலையும் அதிகமாகிறது. குறிப்பிட்ட ஆண்டின் விலைமதிப்புகளை எடுத்துக் கணக்கிடப்படும் GDP, உற்பத்தி அளவை சரியாகக் காட்டாது.

இந்தியாவின் GDP 2006ல் 800 பில்லியன் டாலர்கள், 2007ல் அது 900 பில்லியன் டாலர்களாக மாறினால் விலைமதிப்பில் வளர்ச்சி 12.5%. ஆனால் உண்மையில் உற்பத்தி எவ்வளவு அதிரித்திருக்கிறது? இந்த இரண்டு ஆண்டுகளுக்குமிடையே விலைவாசி உயர்வு 5% ஆக இருந்தால் உண்மையான உற்பத்தி அதிகரிப்பு 7.5% தான்.

இப்படி விலை வீக்கத்தை ஒதுக்கி விட்டுப் பார்க்கும் அளவீட்டை உண்மையான உற்பத்தி என்றும், விலை வீக்கத்தை உள்ளிட்ட அளவீட்டை பெயரளவிலான உற்பத்தி என்றும் வைத்துக் கொள்ளலாம். விலை வீக்கத்தை கழித்து ஆண்டுக்கு ஆண்டு உற்பத்தி அளவை ஒப்பிட குறிப்பிட்ட ஆண்டில் நிலவிய விலைகளை சார்பாக வைத்துக் கொள்கிறார்கள்.

2007ல் தற்போதைய விலைமதிப்பில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 900 பில்லியன் டாலர்கள். 1991ல் நிலவிய விலைமதிப்பின்படி இதை மறு கணக்கிட்டு ஆண்டுக்காண்டு உற்பத்தி எவ்வளவு அதிகரித்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

இப்படி உற்பத்தியாகும் பொருட்களும், சேவைகளும் எங்கு போய்ச் சேருகின்றன?
  1. நுகர்பொருட்கள் -
    அன்றாடம் பயன்படுத்தும் நுகர் பொருட்கள் (FMCG) - சோப்பு, பற்பசை, உணவுப் பொருட்கள்,
    நீண்ட காலம் வைத்திருந்து பயன்படுத்தும் நுகர் பொருட்கள் (durable goods) - குளிர் சாதனப் பெட்டி, வாகனங்கள்,
    சேவைகள் - திரைப்படம் பார்த்தல், முடி வெட்டிக் கொள்ளுதல்
    என்று மூன்று வகையில் தனிநபர்கள், குடும்பங்களுக்கு போய்ச் சேருகின்றன.

  2. உற்பத்தியில் ஒரு பகுதி வணிக நிறுவனங்களின் எதிர்கால உற்பத்திக்குத் தேவையான பொருட்களாக (இயந்திரங்கள், கட்டிடங்கள்) உருவெடுக்கின்றன. இந்தப் பொருட்கள் இனி வரும் ஆண்டுகளில் மதிப்பு குறைந்து கொண்டே போகும். குறிப்பிட்ட ஆண்டில் இது போன்று முதலீட்டுக்கு ஒதுக்கப்பட்ட பொருட்களை மொத்த உற்பத்தியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    முந்தைய ஆண்டுகளில் அப்படிச் சேர்த்துக் கொண்ட முதலீடுகள் இந்த ஆண்டு உற்பத்திப் பணியில் தேய்ந்து மதிப்புக் குறைந்து போயிருக்கும் (depreciation). நியாயமாகப் பார்த்தால், அந்தத் தேய்மானத்தை மொத்த உற்பத்திக் கணக்கில் கழித்துக் கொள்ள வேண்டும். நடைமுறையில் அது சாத்தியமாவதில்லை. அதனால்தான் மொத்த உற்பத்தி (GDP) என்கிறோம். தேய்மானத்தைக் கழித்து விட்டால் அது நிகர உற்பத்தி ஆகி விடுகிறது. (NDP).

  3. அரசாங்கம் வாங்கும் பொருட்களும் அந்த ஆண்டு உற்பத்தியில் விளைந்தவைதான். ராணுவத் தளவாடங்கள், அலுவலகப் பொருட்கள், பொது வசதிகளுக்கான முதலீடு போன்றவை இதில் அடங்கும்.

    அரசின் செலவை கணக்கிடும் போது, மானியமாக வழங்கும் தொகைகள் உற்பத்தியைக் குறிக்காது. மானியத் தொகை பெற்றவர்கள் அதை செலவளிக்கும் பொருட்கள் உற்பத்திக் கணக்கில் சேரும்.

  4. கடைசியாக, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களும் இந்த ஆண்டு உற்பத்தியில் விளைந்தவையே. ஏற்றுமதி மதிப்பிலிருந்து இறக்குமதி மதிப்பைக் க கழித்துக் கொள்ள வேண்டும்.
நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்கள்/சேவைகள், தொழில் நிறுவனங்களில் முதலீடு (தேய்மானம் போக), அரசுகள் வாங்கும் பொருட்கள்/சேவைகள், ஏற்றுமதிப் பொருட்கள் (இறக்குமதி மதிப்பைக் குறைத்து) அனைத்தும் நாட்டின் உற்பத்தி மதிப்பைக் குறிக்கின்றன.

Tuesday, February 6, 2007

GDPன்னா என்னா? (economics 40)

ஒரு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை அளக்க உதவுவது மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் GDP (Gross Domestic Product).

ஒரு ஆண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட எல்லா பொருட்களின் மதிப்பையும், எல்லா சேவைகளின் மதிப்பையும் சேர்த்துக் கூட்டினால் கிடைப்பது மொத்த உள்நாட்டு உற்பத்தி.

இதில் நுகர்வோர் வாங்கும் பொருட்கள்/சேவைகள், வணிக நிறுவனங்கள் முதலீட்டுக்காக வாங்கும் பொருட்கள்/சேவைகள், அரசுகள் வாங்கும் பொருட்கள்/சேவைகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் சேவைகள் அடங்கும். நூறு கோடி மக்களும் அந்த ஆண்டில் என்ன குப்பை கொட்டினார்கள் என்று தெரிந்து விடும்.

2005ம் ஆண்டில் இந்தியாவின் GDP 800 பில்லியன் டாலர்கள் என்றால் நாட்டு மக்களின் உழைப்பில் விளைந்த மதிப்பு இவ்வளவு என்று பொருள். 2006ம் ஆண்டில் அது 872 பில்லியன் டாலர்களாக உயர்ந்தால் 9% அதிக மதிப்பிலான உழைப்பு நடந்திருக்கிறது என்று தெரியும். இந்தியப் பொருளாதாரம் எவ்வளவு வேகமாக வளர்கிறது என்று பார்க்க ஒவ்வொரு ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பார்த்தால் போதும்.

சரி, இதை எப்படி அளப்பது? இரண்டு வழிகள் இருக்கின்றன:
  • ஒன்று, அந்த ஆண்டு விற்கப்பட்ட எல்லா பொருட்களின் விலை மதிப்புகளை கூட்டிப் பார்க்கலாம். GDP கணக்கு போடும் துறை ஒவ்வொரு வணிக நிறுவனத்தின் / தனி நபரின் விற்பனைக் கணக்குகளை கூட்டிப் பார்த்து நுகர்வோருக்குக் கிடைத்த பொருட்கள்/சேவைகளின் மதிப்பை அளவிடலாம்.
  • இன்னொன்று அந்த ஆண்டு ஒவ்வொரு வணிக நிறுவனமும் / தனி நபரும் செலவளித்த தொகைகளை கூட்டினாலும் அதே GDP கிடைத்து விடும்.
முடி திருத்துபவர் முப்பது ரூபாய் வீதம் அந்த ஆண்டில் இரண்டாயிரம் பேருக்கு முடி வெட்டியிருந்தால் இரண்டாயிரம் பேருக்கும் விற்ற முடிவெட்டின் மதிப்பைக் கணக்கிட்டால் அறுபதாயிரம் ரூபாய். இன்னொரு வழியில் சிகைக் கலைஞரிடம் ஒவ்வொருவரும் செலவளித்த பணத்தைக் கணக்கிட்டாலும் அதே அறுபதாயிரம் ரூபாய்தான்.

இந்த அளக்கும் முறைகளில் ஓரிரு சிக்கல்கள் வரலாம்.

ஒரே பொருள் பல முறை கைமாறும் போது அதன் மதிப்பு பல முறை சேர்ந்து விடக் கூடாது. இதைத் தவிரக்க விற்பனை மதிப்பைக் கணக்கிடும் போது இறுதியாக நுகர்வோர் கையில் போய்ச் சேரும் விற்பனையை மட்டும் சேர்த்துக் கொள்வார்கள்.

செலவுக் கணக்கு மூலம் அளக்கும் போது மற்ற நிறுவனங்களிலிருந்து வாங்கிய பொருட்கள் மீதான செலவைச் சேர்த்துக் கொள்ளாமல் அவற்றின் மதிப்பை அதிகரிக்க செலவிட்ட ஊதியங்கள், வட்டித் தொகைகள், லாபத் தொகைகள் போன்றவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆண்டு தோறும் நாம் வரவு செலவு கணக்காக வருமான வரித்துறைக்கு கொடுக்கும் விபரங்கள், கருத்துக் கணிப்புகள், கடைத்தெரு விற்பனை மதிப்பீடுகள், வேலை வாய்ப்பு விபரங்கள் போன்ற பல ஆவணங்களிலிருந்து GDP கணக்கிடப்படுகிறது. நாட்டின் மொத்த உற்பத்திக் கணக்கில் உங்கள் உழைப்பும் தெரிய அடுத்த தடவை தவறாமல் சரியான வருமான வரிக் கணக்கைக் காட்டுங்கள்.