Thursday, June 28, 2007

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 6

மென்பொருள் உருவாக்கம் முடிவே இல்லாமல் இழுத்துக் கொண்டிருந்தது. வருமானத்துக்காக சீன மொழி கற்பிப்பது, சீன மொழி பெயர்ப்பு சேவை என்று பக்க வேலைகளும் செய்து கொண்டிருந்தேன். அதன் மூலம் கிடைத்த வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் விற்க முயற்சித்தேன்.

அப்படி சீன மொழி கற்பிப்பது ஆரம்பித்து ஒரிரண்டு வாடிக்கையாளர்களைப் பிடித்தோம்.

'எங்கள் மென்பொருளை எப்படியாவது வாங்கிக் கொள்ளுங்கள்' என்று குறைந்த தொகைக்கு மென்பொருள், அதைத் தனிப்பயனாக்கும் பணி, பயனருக்கு பயிற்சி அளிப்பது, நடைமுறைப்படுத்துவதில் உதவி என்று முடிவில்லா புதைகுழிக்குள் மாட்டிக் கொண்டிருந்தோம், ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும்.

கறுப்பு நாட்களாக ஓடினாலும் அப்போது அவற்றின் வலி அவ்வளவாகத் தெரியவில்லை. ஏதோ எதிர்கால சாதனையை செய்து காட்டப் போகிறோம் என்ற நம்பிக்கை ஒவ்வொரு நாளும் செயல்பட வைத்தது. ஆனால் வருமானம் குறைவாக, செலவுகள் குறைய வழியில்லாமல் பல அழுத்தங்களும் பிரச்சனைகளும் சமாளிக்க வேண்டியிருந்தது.

காலையில் எட்டு மணியிலிருந்து மாலை எட்டு மணி வரை, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட வெளியே சுற்றிக் கொண்டிருப்பேன். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க மாலையில் கதை சொல்லித் தூங்க வைத்து, காலையில் எழுப்பிப் பள்ளிக்கு அனுப்புவதோடு திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று.

இதுவரை தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கே பணி செய்து கொண்டிருக்க, 2005ன் ஆரம்பத்தில் தோல் காலணி செய்யும் நிறுவனம் ஒன்றில் அவர்களுக்கான மென்பொருளைச் செய்ய வாய்ப்பு கொடுத்தார்கள். 2004 டிசம்பரில் ஆரம்பித்து மார்ச்சுக்குள் நான்கைந்து நிறுவனங்கள் வாடிக்கையாளராகக் கிடைத்தனர். மே மாதம் ஐஐஎம்மில் மேலாண்மை பயின்ற நண்பர் ஒருவர் இணைந்து கொண்டார்.

அவருடன் இணைந்து பல ஆர்டர்களைப் பிடித்தோம். ஆனாலும் மென்பொருளை ஒரு செய்பொருளாக (product) விற்கும் மனப்பாங்கால் செய்யும் வேலைக்கும், கிடைக்கும் பலனுக்கும், ஈட்டும் பணத்துக்கும் தொடர்பு இல்லாமல் இன்னும் பணப்புழக்கம் தள்ளாட்டத்திலேயே இருந்து வந்தது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இருபதை தாண்டி விட்டிருந்தாலும், பண வரத்து குறைவாகவே இருந்தது.

நண்பரின் முயற்சியால் நிறுவனத்தில் பங்குதாரராக முதலீடு செய்ய அவருடன் கூடப் படித்தவரும், கனடாவில் ஒரு நிறுவனத்தின் மூத்த பொறுப்பில் இருக்கும் அவரது சகோதரரும் முன்வந்தார்கள். பணத்தை முதலீடு செய்தவர்கள் சில காட்டமான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள்.

மென்பொருளை செய்பொருளாக விற்காமல், சேவையாக வழங்க வேண்டும் என்று நிறுவன நலனில் அக்கறை கொண்ட இன்னொரு இயக்குனர் புரிய வைத்தார்.

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 1
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 2
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 3
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 4
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 5

Tuesday, June 26, 2007

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 5

வரச் சொன்ன நிறுவனத்தைத் தவிர வேறு எங்கும் சாதகமான பதில் கிடைக்கா விட்டாலும், அங்கு உரிமையாளரின் பதில் மிக உற்சாகப்படுத்துப்படும்படியாக இருந்தது.

'இப்படி ஒரு சேவை மூலமாக எங்கள் உற்பத்தி நிலவரங்களை எங்கள் வாடிக்கையாளருக்கு தெரிவிக்க முடிவது மிகத் தேவையான ஒன்று, எம்முடைய வாடிக்கையாளர்கள் இப்படி ஒரு சேவையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்' என்று சொன்னார்.

நடைமுறையில் எப்படி சேவையை வழங்குவது, என்ன விலை வைப்பது, எப்படி செயல்படுத்துவது எல்லாமே இன்னும் புதிராகவே இருந்தது. (திட்டமிடலில் அவ்வளவு சொதப்பல்). இரண்டு வருட ஓட்டத்துக்குப் பிறகு இந்த நிலை. நமது திட்டத்துக்கு எதிர்காலம் இருக்கிறது என்பதில் மட்டும் மேலும் மேலும் உறுதி ஏற்பட்டது.

எனது வகுப்புத் தோழன் ஒருவன் சொந்தமாக தோல் நிறுவனம் நடத்தி வந்தான். அவன்,

'இணையத்தில் இருக்கும் ஒரு கணினியில் விபரங்களைப் போட்டு வைக்க யாரும் தயங்குவார்கள். நானே அதை ஏற்றுக் கொள்ள மனம் இல்லை. இணையத்தில் இணைக்காமல் சரக்கு நிலவரம், ஆர்டர் நிலவரம் போன்றவற்றை பதிந்து கண்காணிக்கும் மென்பொருளாக இருந்தால் நான் பயன்படுத்துவேன்' என்று ஒரு வெளிப்படையான பேச்சில் கூறினான். 'மாதத்துக்கு இத்தனை ரூபாய் என்று என்னிடம் வசூலித்துக் கொள். இதற்கான மென்பொருளைக் கொடு' என்று சொல்லி விட்டான்.

அந்த திசை திருப்பலை ஏற்றுக் கொண்டோம்.
 • கணினி வசதியே இல்லாத, இணைய இணைப்பே இல்லாத நிறுவனங்கள் தமது உற்பத்தி நிலவரங்களை துண்டுச் சீட்டில், குறிப்பேடுகளில் குறித்து வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இணையம் மூலம் தகவல்களைப் பல இடங்களில் பல பங்குதாரர்களுக்கு அறியத் தருவது எப்படிச் சாத்தியமாகும்!
 • முதல் படியாக அவர்கள் உள் பணிகளை கணினியில் சேமித்து பயன்படுத்தும் முறையைச் செயல்படுத்தினால்தான் அடுத்தக் கட்டமான நமது திட்டம் வேலைக்கு ஆகும் என்று முடிவு செய்தோம்.
இனிமேல் வாடிக்கையாளர் என்ன கேட்கிறார்களோ அதைச் செய்து நமது மென்பொருளை வளர்த்துச் செல்வது என்று முடிவு செய்தோம்.
 • தகவலை இணையத்தின் மூலம் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவமும், ஆதாயமும் அவர்களுக்குப் புரியவில்லை, தேவையில்லை.
 • அவர்களுக்கு எது முக்கியமோ எது ஆதாயமோ அதற்கான கணினி மென்பொருள் சேவையைக் கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு அடுத்தக் கட்டத்தில் இந்தப் பயன்பாடு அவர்களுக்குப் புரிய ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பித்தோம்.
அந்த ஆண்டும் வழித்துத் திரட்டி தோல் கண்காட்சியில் பங்கு பெற்றோம். அதன் மூலம் ஒரு வாடிக்கையாளரையும் பிடித்துக் கொண்டோம். அத்தோடு இணைய சேவை என்பதால் ஒதுங்கி நின்றிருந்த பழைய தொடர்புகளையும் புதுப்பித்தோம். கிட்டத்தட்ட எல்லோருமே இடம் கொடுத்தார்கள்.

அவர்களுக்கு சில்லறைத் தொகை என்று படும் சில பத்தாயிரம் ரூபாய் விலையில் சேவை கொடுக்க ஆரம்பித்தோம். செய்துதான் பார்ப்போமே என்று முதலில் தொடர்பு கொண்ட சென்னை நிறுவனம், ராணிப்பேட்டையில் ஒரு நிறுவனம், பாண்டிச் சேரியில் ஒரு நிறுவனம், கண்காட்சியில் சந்தித்த நிறுவனம் என்று சொல்லிக் கொள்ளும்படியாக வாடிக்கையாளர் பட்டியல் கிடைத்தது.

ஒவ்வொரு மாதமும் சம்பளம் கொடுத்து வீட்டுச் செலவுகளையும் செய்வது இழுபறியாகப் போய்க் கொண்டிருந்து. அதுவரை தொடர்பு கொள்ளாத ஒரு நண்பன் பெருந்தொகை ஒன்றைக் கொடுக்க வெளியில் வணிக முறையில் வாங்கியிருந்த கடனைத் திருப்பி விட்டு தலைக்கு மேல் தொங்கிய கத்தியை தவிர்த்துக் கொண்டோம்.

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 1
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 2
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 3
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 4

Saturday, June 23, 2007

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 4

சென்னையில் இருக்கும் நிறுவனங்கள்தான் ஒரே வழி. கல்லூரியில் நான்கு வருடம் மூத்தவரான ஒரு நிறுவன உரிமையாளர் பயன்படுத்திப் பார்க்க ஒத்துக் கொண்டார். அவரது ஆதரவில் மெதுவாக பயன்பாடு வளர ஆரம்பித்தது.

ஓரிரு பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்களைச் சந்தித்த போது அவர்கள் இந்தப் பயன்பாட்டில் ஆர்வம் காட்டினாலும் நடைமுறையில் இணையத்தின் மூலம் தமது வேலைகளைச் செய்வதில் யாருக்கும் வசதியாக இருக்கவில்லை.

குறைந்த சம்பளத்தில் அப்போதுதான் கல்லூரி முடித்திருந்த பட்டதாரிகள் இரண்டு பேரை வேலைக்கு அமர்த்திக் கொண்டோம். இந்த நேரத்தில் நிறுவனச் செலவுகளுக்கும், வீட்டுச் செலவுகளுக்கும் கையில் இருந்த சேமிப்பு கரைந்து கொண்டிருந்தது. முதல் ஆண்டின் (2002) கடைசியில் கைக்காசு முழுவதும் கரைந்திருந்தது. எனக்கு அறிவுரையாளராக இருந்த நண்பனின் உந்துதலில் நண்பர்களையும், உறவினர்களையும் பணம் கடன் கேட்டு அணுகினேன்.

சந்தைப் படுத்தும் முயற்சியாக
 • பல வண்ண கையட்டை (brochure), பெயர் அட்டை (colour visiting card) உருவாக்கினோம்.
 • ஜனவரி (2003) இறுதியில் நடைபெறும் சென்னை - இந்திய பன்னாட்டு தோல் கண்காட்சியில் ஒரு கடை எடுத்துக் கொண்டோம்.
 • கணினியிலிருந்து பெரிய திரையில் காட்சி வைத்து வருபவர்களுக்கு எல்லாம் மென்பொருளின் அருமை பெருமைகளை விளக்கிக் கொண்டிருந்தோம்.
அதனால் புதிய வாடிக்கையாளர் யாரும் கிடைக்காவிட்டாலும், அத்தகைய கண்காட்சியில் பங்கேற்றது நிறுவனத்திலும் வெளியிலும் மதிப்பை ஏற்றி விட்டிருந்தது.

கடன் கொடுக்கக் கூடிய உறவினர்கள், நண்பர்களின் பட்டியலும் கடைசிக்கு வந்து விட்டிருந்தது. 'எங்கிருந்தாவது பணம் திரட்ட வேண்டும், இப்படியே சேவையை விளம்பரப்படுத்தி விற்பனையில் தீவிரம் செலுத்தினால் காசு வர ஆரம்பித்து விடும்' என்று நம்பிக்கையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இந்து வரிவிளம்பரங்களில் வந்த ஒரு தொழில் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள அவர்களைத் தொடர்பு கொண்டு பணம் முதலீடு செய்ய தொழில் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்த ஒரு நண்பருடன் இணைத்து விட்டார்கள்.

அவரிடமிருந்து கணிசமான தொகையை கடனாகப் பெற்ற பிறகு வீட்டிலேயே ஒரு அறையில் இயங்கிக் கொண்டிருந்த அலுவலகத்தை தனி இடத்துக்கு மாற்றினோம். அகலப்பட்டை இணைய இணைப்பு, குளிரூட்டப்பட்ட அலுவலக அறை என்று காசு வேகமாகக் கரைந்து கொண்டிருந்தது. கைவசம் இருந்த காசு கொடுக்கும் வாடிக்கையாளர் ஒரே ஒருவர்தான். அவரது ஆதரவில் ஊக்கம் இழக்காமல் முயன்று கொண்டிருந்தோம்.

காசு முற்றிலும் கரையும் முன்னர் சீனாவுக்குப் போய் ஒரு முயற்சி செய்து பார்த்து விடுவோம் என்று அங்கு வேலை பார்த்த போது ஏற்பட்ட தொடர்புகளில் சிலருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ஓரிருவர் எதுவும் தேவையில்லை என்று சொல்ல ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளர் வந்து பார்க்கும் படி சொன்னார். அதனால் ஊக்கமடைந்து காசை முடக்கி சீட்டு எடுத்து இன்னொரு நண்பனுடன் சீனாவுக்குப் பயணமானோம்.

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 1
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 2
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 3

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 3

நிறுவனத்தின் தலைவர் வேண்டிய விபரங்களை எல்லா இடங்களிலும் திரட்டி சரியான முடிவுகளை எடுக்கப் பயன்படுத்துவது பெரும் பணியாக இருக்கிறது. பொருட்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போவதற்கான ஆவணங்களைத் தயாரிப்பது, அதே தரவுகளை சேமித்துக் கொள்வது என்று பல நுணுக்கங்கள் இருக்கின்றன.

இருந்த இடத்திலிருந்தே நிறுவனத்தின் உரிமையாளரும், உயர்நிலை மேலாளர்களும் தமக்குத் தேவையான விபரங்களைப் பெற முடிந்தால் பணம் மிச்சமடைவதுடன் புதிய வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.

இதை மனதில் கொண்டு
 • தோல் விற்பவர்கள் அது தொடர்பான விபரங்களை இணையத்தில் இணைக்கப்பட்ட கணினி ஒன்றில் போட்டு வைக்க வேண்டும்.
 • வாடிக்கையாளர் தனது இடத்திலிருந்து தனக்கு அளிக்கப்பட்ட அனுமதிக் கணக்கின் மூலம் தனக்கு அனுமதிக்கப்பட்ட விபரங்களை மட்டும் அணுக முடியும்.
 • நிறுவனத்தின் வெவ்வேறு பகுதியில் இருக்கும் ஊழியர்கள் தமது கையில் உருவாகும் விபரங்களை உள்ளிட்டு விட்டால் உரிமையாளர் தலைமை அலுவலகத்திலிருந்த படியே அறிக்கைகளைப் பார்த்துக் கொள்ளலாம்.
என்று திட்டம் தீட்டினேன்.

இந்தத் திட்டத்துடன் சென்னைக்கு வந்து ஒரு மென்பொருள் நிறுவனத்தில் இதற்குத் தேவையான மென்பொருளை உருவாக்கித் தரும்படிக் கேட்டேன். நிறுவனத்தின் பெயர், சின்னம் எல்லாம் முடிவு செய்தோம்.

இணையத்தில் சேவை அளிக்கும் ஒரு நிறுவனத்தின் இணைய வழங்கியில் சிறிது இடம் வாடகைக்கு எடுத்து (ஆண்டுக்கு 5000 ரூபாய்) இந்த பயன்பாட்டைப் போட்டு வைத்தோம்.

பயன்படுத்த வேண்டிய மென்பொருட்கள் திறமூல/பரிநிரல் மென்பொருட்களாக (Free Software) இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.
 • இணையத்தில் சேர்க்கப்பட்டிருப்பதால் லினக்சு போன்ற இயங்குதளங்களின் உறுதியான பாதுகாப்பு நடைமுறைகளும், நச்சு நிரல்களை அனுமதிக்காத தீச்சுவர் வசதிகளும் முக்கியமாகப் பட்டன.
 • இணைய பயன்பாடாக இருந்ததால் எந்த ஒரு இணைய உலாவி மூலமும் பயன்படும் வண்ணம், போஸ்ட்கிரஸ் என்ற தரவுத் தளத்தை அடிப்படையாகக் கொண்டு, பிஎச்பி என்று கணினி மொழியைப் பயன்படுத்தி உருவாக்கியிருந்தோம்.
திட்டம் தயார், அதன் பலன்களும் (நமக்குத்) தெளிவாகத் தெரிகின்றன. யார் பயன்படுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மெதுவாக எனக்குத் தெரிந்தவர்கள், கல்லூரியில் கூடப் படித்தவர்கள், மூத்தவர்கள் என்று தோல்துறையில் ஒவ்வொருவராக அணுகினோம்.

ராணிப்பேட்டை போன்ற இடங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இணைய இணைப்பு படுமோசமாக இருந்தது. அங்கிருந்து இணைத்து சோதனை ஓட்டத்தைக் காண்பிப்பது கூட சோதனையாக இருந்தது.

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 1
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 2

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 2

குதிரையில் போய், வாளைக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்த காலத்தில் வெடிமருந்தும் பீரங்கிகளும் பயன்படுத்த ஆரம்பித்த குழுவினருக்கு இருந்த ஆதாயம், இன்றைக்கு தகவல் தொழில் நுட்பத்தை சரிவரப் பயன்படுத்த ஆரம்பிக்கும் நிறுவனங்களுக்கு இருக்கிறது.

நான் முதன் முதலில் லெதர்லிங்க் என்ற தோல் இணையம் நிறுவனத்தைக் குறித்து சிந்தித்த போது அதற்கான தூண்டுதல் இணையம்தான்.

நாடு, மொழி, தூரம் போன்ற தடைகளைத் தாண்டி, நிறுவனங்களும் பணி புரியும் வல்லுநர்களும், பயன் பெறும் நுகர்வோரும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் சாத்தியங்கள் எறும்புகள் என்று குழுவின் மூலமாக இணையத் தமிழ் சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும் போது புலப்பட்டது.

தோல் துறையில் இந்தியாவில் தமிழ்நாட்டிலும், சீனாவிலும் நான் பணி புரிந்த போது உணர்ந்து கொண்ட நிலவரங்கள் இந்தத் திட்டத்துக்கு உரம் சேர்த்தன.

சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின்
 • தோல் பதனிடும் தொழிற்சாலை ராணிப்பேட்டையிலும்,
 • பச்சைத் தோல் வாங்கி வெட்புளூ எனப்படும் ஈரநீலத் தோல் செய்யும் மையம் ஈரோட்டிலும்,
 • தோலைப் பயன்படுத்தி காலணி செய்யும் தொழிற்சாலைகள் பல்லாவரத்தில் இரண்டு, பூந்தமல்லியில் இரண்டு, திருப்பெரும்புதூரில் ஒன்று இருக்கின்றன.
அதாவது, மொத்தம் 8 இடங்களில் ஒரே நிறுவனத்தின் பணிகள் நடைபெறுகின்றன.

தென்சீனாவை எடுத்துக் கொண்டால், குறிப்பிட்ட நிறுவனத்தின்
 • உரிமையாளர் தாய்வானைச் சேர்ந்தவர், அவரது தலைமை நிறுவனம் தாய்வானில் பதிவு செய்யப்பட்ட தாய்பேயில் அலுவலகத்தைக் கொண்டிருக்கும்,
 • தோல் செய்யும் நிறுவனம் ஒன்று தாய்வானின் தாய்சொங் நகருக்கு அருகில் ஒன்றும், தென்சீனாவின் தொங்குவானில் ஒன்றும் இருக்கின்றன.
 • காலணி செய்யும் நிறுவனம் தாய்வானின் தாய்நானில் ஒன்றும் தொங்குவானில் ஒன்றும் இருக்கின்றன.

 • காலணி நிறுவனங்களுக்குத் தேவையான கூடுதல் தோல்களை இறக்குமதி செய்ய, பிற பொருட்களை வாங்க, காலணியை ஏற்றுமதி செய்ய அலுவலகம் ஆங்காங் நகரில் இருக்கிறது.
மேலே சொன்ன இரண்டு எடுத்துக் காட்டுகளிலுமே தூரங்கள் ஐநூறு கிலோமீட்டருக்குள் இருக்கின்றன. பல நிர்வாக மற்றும் பொருளாதாரக் காரணங்களால் பணிகள் பிரிந்து இருக்கின்றன.

இதற்கு மேல்,

இந்திய நிறுவனத்தின்
 • காலணிகளுக்கான வாடிக்கையாளர் செருமனியிலும்,
 • தோலுக்கான வாடிக்கையாளர் ஆங்காங் மூலம் செயல்படும் சீன தொழிற்சாலையாகவும் இருப்பார்.
சீன நிறுவனத்தின் காலணிகளை வாங்கும் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 1

Friday, June 15, 2007

நாடும் எல்லைகளும்

பழைய காலங்களில் மன்னர்கள் தமது ஆட்சியை நிலை நாட்டிக் கொண்டு, குடிமக்களுக்கு நல்லது செய்து, வாய்ப்புக் கிடைத்தால் அண்டை நாடுகளின் மீது போர் தொடுத்து தமது ஆட்சி எல்லையை விரிவாக்கிக் கொண்டார்கள்.

இப்போது அரசாங்கங்களுக்குப் போட்டியாக இயங்குபவை வணிக நிறுவனங்கள். ஒவ்வொரு நாட்டிலும் அரசுகள் தமது எல்லைக்குள் இயங்கும் தொழில் நிறுவனங்களை ஒழுங்கு படுத்தும் சட்டதிட்டங்களைத் தீட்டினாலும் பல நாடுகளில் பரவி இருக்கும் ஒரு நிறுவனத்தை கட்டுப்படுத்துவது யார்?

கடந்து இருபத்தைந்து ஆண்டுகளில் இணையம் வேரூன்றிய பிறகு பழைய எல்லை சார்ந்த அரசு வலிமைகள் இன்னும் குறைந்து விட்டன. இன்றைக்கு அமெரிக்காவில் இருந்து வழங்கப்படும், ஆஸ்திரேலியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட படைப்பை நான் அணுக முடியும். அரசுகள் இந்த உரிமையைத் தடுக்க முயற்சி செய்தாலும், பெருமளவு இது கட்டுப்படுத்தப்படாத கானகமாகத்தான் இருக்கிறது.

அமெரிக்காவின் ஜிஈ அல்லது ஐபிஎம், ஜப்பானின் பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவின் இன்ஃபோசிஸ் ஒவ்வொன்றின் தலைவர்களும் தமது நிறுவன ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், தமது நிறுவனம் செயல்படும் சமூகம், நாட்டு அரசுகள் என்று ஒவ்வொன்றையும் தமது திட்டப்படி உருவாக்க வழிநடத்த முயல்கிறார்கள். உலகில் விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வர, புகழ் நீண்டு நிலைத்திருக்க ஒரு வழி தொழில் நிறுவனங்கள்.

ஒரு தொழில் நிறுவனத்தின் அடிப்படைக் குறிக்கோள் என்ன? உருப்படியான பணி செய்து அதனால் விளையும் பொருள் அல்லது சேவையை வாங்க விரும்புபவர்களிடமிருந்து பணம் ஈட்ட வேண்டும். பணி செய்ய ஊழியர்களைத் திரட்டி அவர்களது திறமைகளை சரியாக ஒருங்கிணைத்து பொருள் அல்லது சேவையின் தரம் உயர்ந்ததாகவும் விலை ஆகக் குறைந்ததாகவும் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

என்ன பணி செய்ய வேண்டும்? யாருக்குப் பயன்படும் பணி செய்ய வேண்டும்? என்ன பொருள் அல்லது சேவை உருவாக்க வேண்டும் என்று பல கேள்விகள். செலவாகும் மதிப்பை விட ஈட்டும் செல்வத்தின் அளவு அதிகமாக இருக்க வேண்டும் என்பது உயிர் வாழ சுவாசிக்க வேண்டும் அல்லது சாப்பிட வேண்டும் என்பது போல அடிப்படைத் தேவைகள்.

Monday, June 4, 2007

Saturday, June 2, 2007