Tuesday, June 26, 2007

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 5

வரச் சொன்ன நிறுவனத்தைத் தவிர வேறு எங்கும் சாதகமான பதில் கிடைக்கா விட்டாலும், அங்கு உரிமையாளரின் பதில் மிக உற்சாகப்படுத்துப்படும்படியாக இருந்தது.

'இப்படி ஒரு சேவை மூலமாக எங்கள் உற்பத்தி நிலவரங்களை எங்கள் வாடிக்கையாளருக்கு தெரிவிக்க முடிவது மிகத் தேவையான ஒன்று, எம்முடைய வாடிக்கையாளர்கள் இப்படி ஒரு சேவையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்' என்று சொன்னார்.

நடைமுறையில் எப்படி சேவையை வழங்குவது, என்ன விலை வைப்பது, எப்படி செயல்படுத்துவது எல்லாமே இன்னும் புதிராகவே இருந்தது. (திட்டமிடலில் அவ்வளவு சொதப்பல்). இரண்டு வருட ஓட்டத்துக்குப் பிறகு இந்த நிலை. நமது திட்டத்துக்கு எதிர்காலம் இருக்கிறது என்பதில் மட்டும் மேலும் மேலும் உறுதி ஏற்பட்டது.

எனது வகுப்புத் தோழன் ஒருவன் சொந்தமாக தோல் நிறுவனம் நடத்தி வந்தான். அவன்,

'இணையத்தில் இருக்கும் ஒரு கணினியில் விபரங்களைப் போட்டு வைக்க யாரும் தயங்குவார்கள். நானே அதை ஏற்றுக் கொள்ள மனம் இல்லை. இணையத்தில் இணைக்காமல் சரக்கு நிலவரம், ஆர்டர் நிலவரம் போன்றவற்றை பதிந்து கண்காணிக்கும் மென்பொருளாக இருந்தால் நான் பயன்படுத்துவேன்' என்று ஒரு வெளிப்படையான பேச்சில் கூறினான். 'மாதத்துக்கு இத்தனை ரூபாய் என்று என்னிடம் வசூலித்துக் கொள். இதற்கான மென்பொருளைக் கொடு' என்று சொல்லி விட்டான்.

அந்த திசை திருப்பலை ஏற்றுக் கொண்டோம்.
  • கணினி வசதியே இல்லாத, இணைய இணைப்பே இல்லாத நிறுவனங்கள் தமது உற்பத்தி நிலவரங்களை துண்டுச் சீட்டில், குறிப்பேடுகளில் குறித்து வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இணையம் மூலம் தகவல்களைப் பல இடங்களில் பல பங்குதாரர்களுக்கு அறியத் தருவது எப்படிச் சாத்தியமாகும்!
  • முதல் படியாக அவர்கள் உள் பணிகளை கணினியில் சேமித்து பயன்படுத்தும் முறையைச் செயல்படுத்தினால்தான் அடுத்தக் கட்டமான நமது திட்டம் வேலைக்கு ஆகும் என்று முடிவு செய்தோம்.
இனிமேல் வாடிக்கையாளர் என்ன கேட்கிறார்களோ அதைச் செய்து நமது மென்பொருளை வளர்த்துச் செல்வது என்று முடிவு செய்தோம்.
  • தகவலை இணையத்தின் மூலம் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவமும், ஆதாயமும் அவர்களுக்குப் புரியவில்லை, தேவையில்லை.
  • அவர்களுக்கு எது முக்கியமோ எது ஆதாயமோ அதற்கான கணினி மென்பொருள் சேவையைக் கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு அடுத்தக் கட்டத்தில் இந்தப் பயன்பாடு அவர்களுக்குப் புரிய ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பித்தோம்.
அந்த ஆண்டும் வழித்துத் திரட்டி தோல் கண்காட்சியில் பங்கு பெற்றோம். அதன் மூலம் ஒரு வாடிக்கையாளரையும் பிடித்துக் கொண்டோம். அத்தோடு இணைய சேவை என்பதால் ஒதுங்கி நின்றிருந்த பழைய தொடர்புகளையும் புதுப்பித்தோம். கிட்டத்தட்ட எல்லோருமே இடம் கொடுத்தார்கள்.

அவர்களுக்கு சில்லறைத் தொகை என்று படும் சில பத்தாயிரம் ரூபாய் விலையில் சேவை கொடுக்க ஆரம்பித்தோம். செய்துதான் பார்ப்போமே என்று முதலில் தொடர்பு கொண்ட சென்னை நிறுவனம், ராணிப்பேட்டையில் ஒரு நிறுவனம், பாண்டிச் சேரியில் ஒரு நிறுவனம், கண்காட்சியில் சந்தித்த நிறுவனம் என்று சொல்லிக் கொள்ளும்படியாக வாடிக்கையாளர் பட்டியல் கிடைத்தது.

ஒவ்வொரு மாதமும் சம்பளம் கொடுத்து வீட்டுச் செலவுகளையும் செய்வது இழுபறியாகப் போய்க் கொண்டிருந்து. அதுவரை தொடர்பு கொள்ளாத ஒரு நண்பன் பெருந்தொகை ஒன்றைக் கொடுக்க வெளியில் வணிக முறையில் வாங்கியிருந்த கடனைத் திருப்பி விட்டு தலைக்கு மேல் தொங்கிய கத்தியை தவிர்த்துக் கொண்டோம்.

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 1
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 2
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 3
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 4

7 comments:

வடுவூர் குமார் said...

தலைக்கு மேல் கத்தி இருந்தால் அதை பார்க்கிறதா? வேலையை பார்க்கிறதா?
கஷ்டம் தான்.

மா சிவகுமார் said...

//வேலையை பார்க்கிறதா? கஷ்டம் தான்.//

சொல்லப் போனால் எனக்கு அடிப்படை புரியவே பல நாள் பிடித்தது. இன்னும் பல குழப்பங்கள் உண்டு :-)

அன்புடன்,

மா சிவகுமார்

Anonymous said...

//வேலையை பார்க்கிறதா? கஷ்டம் தான்.//

//சொல்லப் போனால் எனக்கு அடிப்படை புரியவே பல நாள் பிடித்தது. இன்னும் பல குழப்பங்கள் உண்டு :-)//

பெரும்பாலான சுயதொழில் தொடங்குபவர்களுக்கு இதை சமாளிப்பதுதான் மிகப்பெரிய தலைவலி. பணப் பற்றாக்குறை வேலை செய்வதை/அடுத்த கட்டத்துக்கு நகர்வதை பாதிக்காமல் இருக்க கற்றுக்கொண்டாலே மிகப்பெரிய முன்னேற்றம்தான். இல்லையா மா.சி?

-விபின்

மா சிவகுமார் said...

ஆமாம் விபின்,

எந்தத் தொழிலுக்குமே பண வரத்துதான் உயிர் நாடி. மாதா மாதாம் தவறாமல் எதிர் நோக்க வேண்டிய செலவுகளுக்குப் பணம் கைவசம் இல்லாமல் போனால் அவ்வளவுதான்!

அன்புடன்,

மா சிவகுமார்

We The People said...

மா.சி சீனாவுக்கு போய் ஆர்டர் கிடைத்ததா? என்ன ஆயிற்று என்று சொல்லவே இல்லை??!!

We The People said...

அருமையான பயனுள்ள அனுபங்கள் இன்னும் வளரும் என்று நினைக்கிறேன்

நன்றிகள் பதிவுகளுக்கு!

நன்றி,

நா ஜெயசங்கர்

மா சிவகுமார் said...

ஜெய்,

சீன வாடிக்கையாளரைப் பிடித்து அமுக்கிக் கொள்ளும் அளவுக்குத் திட்டமிடல் இல்லாமல் போயிருந்தோம். ஆர்டர் கிடைக்கவில்லை,

//இன்னும் வளரும் என்று நினைக்கிறேன்//

தொழில் தொடரும் வரை வளர்த்துக் கொண்டே போகலாம் :-). இப்போதைக்கு எழுதி வைத்தது தீர்ந்தாச்சு. இனி தொடர முயல்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்