Friday, May 22, 2009

களை எடுத்தல்

மென்பொருள் பயன்பாட்டில் வேறு யாரோ உருவாக்கிய நிரலில் பிழை திருத்துவது சிக்கலான வேலை. சரியான ஆவணம் இருந்தால் வேலை எளிதாக இருக்கும்.

ஒரு அனுபவம்.

ஒவ்வொரு செய்கையிலும் என்னென்ன நடக்கிறது, எந்த அட்டவணையில் தரவு உள்ளிடப் படுகிறது, உள்ளிட்டதும் என்ன விபரம் புதிதாக உருவாகிறது (primary key), குறிப்பிட்ட அட்டவணையில் என்னென்ன விபரங்கள் இன்னொரு அட்டவணையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது (foreign key) என்று புரிந்து கொள்ள வேண்டும். மொத்தம் மூன்றே மூன்று நிரல் கோப்புகளில் ஆறு அட்டவணைகளில் தரவு சேமிக்கப்படுகிறது.

இதை என்ன வடிவத்தில் ஆவணப்படுத்துவது என்று உருக்கொடுக்க வேண்டும். முதலில் தாளில் எழுத ஆரம்பித்தேன். அதை எங்கு சேமிப்பது, எப்படி பகிர்ந்து கொள்வது என்று எப்போதும் இருக்கும் சிக்கல். அடுத்தபடியாக ஒரு உரைக்கோப்பில் அட்டவணை விபரங்களை நகல் செய்து ஒட்டிக் கொண்டேன். அதைப் பார்த்தால் விபரம் எதுவும் தெளிவாக தெரிந்து விடப் போவதில்லை

ஒரு விரிதாளில் ஒவ்வொரு அட்டவணைக்கும் ஒரு வரி, அதனுடன் இணையும் அட்டவணைகள், இணைக்கும் விபரம் இவற்றைக் குறிப்பிட்டு க் கொள்ளலாம் என்று ஆரம்பித்தால், கொஞ்சம் தெளிவு ஏற்பட ஆரம்பித்தாலும் புதிதாகப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளும்படி இல்லை. ஒரு கதை படிப்பது போல அமைய வேண்டும். அடுத்த விரிதாளில் நடவடிக்களை, சேமிக்கப்படும் அட்டவணை விபரம், நிரல் கோப்பு, சுட்டியின் பெயர் என்று ஒரு வடிவம் கொடுத்தேன். இரண்டாவது நெடுவரிசையில்தான் முக்கியமான விபரங்கள் எல்லாம் இருக்கும்.

முதல் வரியில் அட்டவணையின் பெயர், இரண்டாவது வரியில் அதில் சேமிக்கப்படும் விபரம் சுருக்கமாக, மூன்றாவது வரியில் அது உருவாக்கும் keyன் பெயர் -> என்ற குறியீட்டுடன், அடுத்தடுத்த வரிகளில் அது இணைத்துக் கொள்ளும் அட்டவணை மற்றும் key பெயர்கள். key பெயர் <- அட்டவணை பெயர் என்ற வடிவம் கொடுத்தேன். மிகவும் நிறைவாக தெளிவாக வந்து விட்டது. கிட்டத்தட்ட மூன்றரை மணி நேர வேலையின் முடிவு அரைப்பக்க அளவில் சுருக்கமாக அமைந்து விடும்.

எதையும் சுருக்கமாகச் சொல்வதற்குத்தான் அதிக முயற்சி தேவைப்படுகிறது. வளவளவென்று நீளமாக எழுதிக் கொண்டே போவதற்கு திட்டமிடலோ, கட்டுப்பாடோ தேவையில்லை. அதன் வெளிப்பாடும் பார்ப்பவர்களுக்கு பலனுள்ளதாக இருக்காது. இன்னொரு நெடுவரிசையில் இந்த நடவடிக்கைகளால் வேறு எந்த அட்டவணையில் தரவு தானாக உள்ளிடப் படுகிறது, அதைச் செய்யும் இயக்கியின் பெயர் என்ன என்ற விபரத்தையும் குறித்துக் கொண்டேன்.

பயனர் கொடுத்த விபரங்களை வைத்து தரவுகளை சரி பார்த்தல். எல்லாமே சரியாகத்தான் இருந்தது. கடைசிக் கட்டத்தில் விபரங்களை எடுத்துக் கணக்கிட்டு காண்பிக்கும் இடத்தில் உதைப்பது போலத் தெரிந்தது. ஒவ்வொன்றாக தரவுத்தள வினாக்கள் எழுதி எழுதி இயக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு முனைகளிலிமிருந்து வினா எழுப்பி வரும் விடைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் சரியாகத்தான் இருந்தது. கணக்கிடுதலின் கூறுகளை தனியாகப் பிரித்துப் பார்த்தால் சரியாக வந்தது. சேர்த்து கணக்குப் போடும் கூட்டுத் தொகையில் தேவையில்லாத தொகுப்புகள் நடக்கின்றன என்று புரிந்தது.

ஒவ்வொரு தரவாக எடுத்து கணக்குப் போடாமல், எல்லாவற்றையும் ஒரே தொகுப்பாக கணக்குப் போடும்படி இயக்கியில் எழுதியிருந்தார்கள். அதை சரிபார்ப்பதற்கு இன்னொரு தம் பிடிக்க வேண்டும். எல்லா சிக்கல்களையும் அவிழ்ப்பதற்கு அடிப்படையிலிருந்து ஆரம்பிப்பது எளிமையான வழி.

கிரிக்கெட்டில் ஓடி வரும் பந்தைப் பிடிக்க ஒற்றைக் காலை மடக்கி பந்தை நோக்கி இருக்குமாறு ஒற்றைக்காலில் மண்டியிட்டு அந்தக் காலுக்கு முன்பு கையை வைத்து எதிர் கொள்ள வேண்டும். இரண்டு கால்களுக்கு நடுவில் குனிந்து கைகளை குவித்து நின்றால் கை தவறினால், கையைத் தாண்டிக் கொண்டு போனால், திரும்பி ஓட வேண்டியிருக்கும். முதல் முறையில் கை தவறினால் காலில் பட்டு நின்று விடும். முதல் முறையில் முதுகெலும்புக்கும் அழுத்தம் குறைவாக இருக்கும். எழுந்து ஓடுவதற்கும் சரியான கோணத்தில் இருப்போம்.

அந்த அடிப்படைகளை மறந்து மேல் நிலைகளில் யோசித்துக் கொண்டே இருந்தால் சிக்கல் அவிழாது. மின் கருவிகளில் பழுது, கணினியில் சிக்கல் என்று பார்க்கப் போகும் போது முதலில் மின்சார இணைப்பு சரியாக இருக்கிறதா என்பதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். சுவிட்சு போடப் பட்டிருக்கிறதா என்று பார்ப்பது அதில் முதல் படி.

இணைய இணைப்பு இயங்கவில்லை என்றால், முதலில் நமது கணினியில் வலையமைப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு அருகில் இருக்கும் கணினியுடன் தொடர்பு கொள்ள முடிகிறதா என்று தட்டிப் (ping செய்து) பார்க்க வேண்டும். அது சரி என்றால் நமது கணினி வலையமைப்பு சரியாக இயங்குகிறது.

அடுத்ததாக உள்ளுறை வலையமைப்பிலேயே இன்னொரு தொகுப்பில் இருக்கும் ஒரு கணினியைத் தட்டிப் பார்க்க வேண்டும். நமது பகுதிக்கும் மற்ற தொகுப்புகளுக்கும் இணைப்பு சரியாக இருக்கிறது. மூன்றாவதாக இணைய இணைப்பைத் தரும் கருவியை தட்டிப் பார்க்க வேண்டும். அது ஒரு வேளை இயங்காமல் அல்லது இணைப்பில் இல்லாமல் போயிருக்கலாம்.

அதுவும் சரியாக இருந்தால், இணையத்தில் இருக்கும் ஒரு இணைய எண்முகவரியை (IP address) தட்டிப் பார்க்க வேண்டும். ஒரு வேளை கணினி பெயர்களை இணைக்கும் வழங்கியில் குறை இருந்தால் பெயர் முகவரி இயங்காமல் இருக்கலாம். அதுவும் சரியாக இருந்தால், இணையத்தில் பிரபலமான பெரிய நிறுவனத் தளம் ஒன்றை முயற்சிக்க வேண்டும் (google.com). அதுவும் இணைகிறது என்றால் நாம் போக வேண்டிய தளத்தை தட்டிப் பார்க்கலாம்.

இப்படி ஒவ்வொன்றாக சரி செய்து கொண்டே வந்தால்தான் தீர்வு கிடைக்கும். ஆரம்பத்திலேயே நாம் போகும் தளத்தில் கணினி கோளாறு, அந்தத் தளம் இயங்கவில்லை என்று முடிவு செய்து விட்டால் சிக்கல் தீராது. விண்டோசு இயங்குதளத்தில் பல சிக்கல்களுக்கு கணினியை அணைத்து விட்டு மீண்டும் இயக்குவது என்று முயற்சிப்பார்கள். சிக்கல் சரியாகி விட்டால் மகிழ்ச்சி. என்ன சிக்கல், எப்படி சரியானது என்று புரியாமலேயே இருந்து விடும். அடுத்த தடவை இது மாதிரி பிரச்சனை ஏற்பட்டால் அணைத்து விட்டு இயக்கிக் கொள்ளலாம் என்று மட்டும் கற்றுக் கொள்வோம்.

Saturday, May 16, 2009

நிறுவனத் தொழில் முனைவு

(Intrepreneurship)

பொதுவாக ஒரு தொழில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர், அல்லது உரிமையாளர் கடவுளாகப் பார்க்கப்படுகிறார். மற்றவர்கள் எல்லோரும் அவர் சொல்வதை சிரம் மேல் ஏற்று செயல்படுவார்கள். அவர் எல்லா முடிவுகளையும் எடுப்பார், மற்றவர்கள் அவர் சொல்வதைப் பின்பற்றி நடந்தால் போதும்.

பெரிய நிறுவனங்களில் இது போன்ற வழிபாட்டு முறைகள் குறைவு என்றாலும், கணிசமான அளவில் இருக்கத்தான் செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் போதும் சரி, லெதர்லிங்க் ஆரம்பித்த பிறகும் சரி, உயர் பதவி இருப்பவர்களை வழிபட வேண்டும் என்று நினைத்ததில்லை. அவர்களுக்கு நம்மை விட அனுபவர் அதிகம், வயதில் மூத்தவர்கள் அதனால் மதிப்பு உண்டு. ஆனால் அவர்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளும் பழக்கம் எப்போதும் இருந்ததில்லை.

அப்படி நடந்து கொள்பவர்களைப் பார்த்தால் எனக்கு இரக்கம்தான் வரும். அப்படி மனிதர்களை சிறுமைப்படுத்தும் முறை என்னால் புரிந்து கொள்ள முடியாமல்தான் இருக்கிறது. லெதர்லிங்கில் முதலிலிருந்தே என்னால் அப்படி ஒரு பாகுபாடு இருக்கும் என்று நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. இனிமேலும் இருக்கக் கூடாது.

நிறுவனத்தில் சேரும் ஒவ்வொருவரும் மேலாளர்தான். தனக்குத் தாமே திட்டம் வகுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். குறிப்பிட்ட அனுபவம், திறமை வளர்ந்த பிறகு பெரிய பெரிய பெயர்களில் பதவிகளைக் கூட வகுத்துக் கொண்டோம். அதைப்பார்த்து கேள்விகள் கேட்டவர்களும் உண்டு. ஒவ்வொருவரும் முனைப்புடன் தனது பணிகளில் ஈடுபட வேண்டும்.

ஒருவர் பணி ஒன்றைச் செய்யும் போது மேலாளர் சொல்லி விட்டார் என்பதற்காகச் செய்யக் கூடாது. இதைச் செய்தால் வாடிக்கையாளருக்கு உண்மையான பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்து செய்ய வேண்டும். 'எனக்கு எதுவும் தெரியாது, தினமும் காலையில் வந்தால் எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்வேன், மாதா மாதம் சம்பளம் வந்தால் போதும்' என்று இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படிப்பட்ட பொறுப்பை யாரும் எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

அரசு ஊழியர்களாக வேலை பார்ப்பவர்களுக்கு மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்ட கடமைகள், ஊதிய விகிதங்கள் இருக்கும். அவர்கள் என்ன சம்பள உயர்வு கிடைக்கும், எப்பொழுது ஊதியக் குழு அமைக்கப்படும், சேமிப்பிலிருந்து எவ்வளவு முன்பணம் பெறலாம் என்றுதான் திட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். அதாவது வரவைப் பற்றி மட்டும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். வேலையைப் பற்றி யோசிப்பதற்குத் தேவையே இல்லை. அது அட்டவணைப்படி நடந்து கொண்டிருக்கும்.

அதிலும் சிலர் முனைப்பெடுத்து பெரிய பதவிகளுக்கு உயர்வதை குறிக்கோளாக வைத்து செயல்படுவார்கள். ஒரே நேரத்தில் ஆசிரியராகச் சேர்ந்தவர்களில் ஒருவர் பள்ளிப் பணியிலேயே ஓய்வு பெற்று விடுவார். இன்னொருவர் கல்வித்துறையில் உயர் பதவிகளுக்குப் போய்ச் சேருவார்.

தலை சிறந்த மருத்துவர், தட்டச்சு செய்பவரை வேலைக்கு வைத்திருக்கலாம். 'அவர் முதலாளி, எனக்கு படி அளப்பவர் என்று அவர் சொல்வதை எல்லாம் தட்டச்சு செய்வது என் கடமை' ஒரு பாணி. 'நோயாளிகளுக்குச் சிறந்த சேவை அளிப்பது நமது கூட்டுக் குறிக்கோள். அவர் மருத்து நிபுணர், மருத்துவம் தொடர்பான எல்லாவற்றுக்கும் அவர் பொறுப்பு. ஆவணப்படுத்துவது எல்லாம் நம்முடைய பொறுப்பு' என்ற நோக்குடன் செயல்பட்டால் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்போசிஸ் நிறுவனத்தைப் பாருங்கள். நாராயண மூர்த்தி தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருக்குப் பிறகு நந்தன் நீலகேணி பொறுப்பேற்றார். அவரும் ஓய்வு பெற்று இப்போது கோபாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டார். வேலைகளை பகிர்ந்து கொண்டு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கிரிக்கெட் அணி அல்லது அமைச்சரவை இயங்கும் முறை அதை அடிப்படையாகக் கொண்டதுதான். அணித் தலைவர் அல்லது முதல் அமைச்சர் என்பவர் சமமான திறமை, பொறுப்பு இருக்கும் குழுவில் முதலில் இருப்பவர் (First among equals). ஒவ்வொருவரும் தமது பணித் துறையில் முழுமையாக செயல்படுவதுதான் நடைமுறை சாத்தியம், ஆரோக்கிய வளர்ச்சிக்குத் தேவை.

'நான் இது வரைதான் செய்வேன் அதற்குப் பிறகு எனக்குப் பொறுப்பு இல்லை' என்று சொல்வது சரிப்படாது

Friday, May 15, 2009

விற்பனை உத்திகள்

ஜோயல் ஆன் சாஃப்ட் வேர் ஜோயல் ஏதோ தொழில்நுட்பக் கருத்தரங்கு அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடத்தப் போகிறாராம். அதில் கலந்து கொள்ள கட்டணம் $99 டாலர்கள் தலைக்கு. எல்லா நகரங்களிலும் பேசப் போகிறவர் ஜோயல். அவர் பேசப் போவது அவர்கள் நிறுவனம் தயாரித்து விற்கும் FogBugz என்ற மென்பொருள் பயன்படுத்துவதைக் குறித்து. அதைத் தவிர மற்ற பேச்சாளர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களைக் குறித்துப் பேசுவார்கள்.

http://joelonsoftware.com/items/2009/05/12.html

10 ஆண்டுகளாக வலைப்பதிவில் எழுதிய புகழை வைத்துக் கொண்டு அரித்துக் கொட்டுகிறார். அவரது மென்பொருளைப் பற்றிக் கேட்பதற்கு கட்டணம் கட்டி வரும்படி மற்றவர்களை தூண்டும் அளவுக்கு செல்வாக்கு ஈட்டியிருக்கிறார். இவர் எழுதுவது எல்லாம் பலனுள்ள தகவல்களை தரும். இவர் பேசும் போது அவரது நிறுவன மென்பொருளை அடிப்படையாக வைத்திருந்தாலும், அதிலிருந்து உருப்படியாக பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறார். அதனால்தான் $99 டாலர் கட்டி அவர்களது கருத்தரங்குக்கு வரும்படி மக்களை வரவேற்கிறார்.

அதுவும் எப்படி, முதலில் கருத்தரங்கு எந்த மாதிரி இருக்கும். எப்படிப்பட்ட பேச்சுக்கள் இருக்கும். எந்த மாதிரி பேச்சாளர்கள் வருவார்கள் என்று சொல்லி விட்டு, அதை ஏற்பாடு செய்ய எவ்வளவு செலவாகும் என்று ஒரு கணக்கு. ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டணம் என்றால் இந்தப் பொருளாதாரச் சுணக்கத்தில் யாரும் வரப் போவதில்லை. அதனால் உங்களுக்காக $99 டாலரில் இதை ஏற்பாடு செய்கிறோம்.

கொஞ்சம் கீழே சாப்பாடு குறித்து சொல்கிறார். இந்த $99 டாலரில் சாப்பாடும், பானங்களும் அடங்கும். படிப்பவரின் மனதத்துவத்தை நன்கு புரிந்து கொண்டு எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் அவர் சம்பாதித்து வைத்திருக்கும் நல்லெண்ணத்தை அடிப்படையாக தொடங்கி, முதலில் பலன்கள். அதன் பிறகு அதற்கு ஆகக் கூடிய செலவுகள் என்று ஒரு பெரிய தொகை, அதைத் தொடர்ந்து குறைந்த செலவிலேயே எப்படி கலந்து கொள்ளலாம் என்று குறிப்பு, தொடர்ந்து அந்த கட்டணத்துக்கே இன்னும் என்ன கிடைக்கிறது என்ற விபரங்கள். இறுதியாக 300 பேருக்கான இடங்கள் சீக்கிரம் நிரம்பி விடும். முந்துங்கள் என்று சொல்லும் வாக்கியங்கள்.

ஒரு விற்பனை ஆவணம் இப்படித்தான் இருக்க வேண்டும். நமது தகுதியை முதலில் குறிப்பிட வேண்டும். நாம் சொல்வதை ஏன் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நிறுவி விட்டு, என்னென்ன ஆதாயங்கள் கிடைக்கும் என்று சொல்ல வேண்டும். அந்த ஆதாயத்தைப் பெறுவதற்கு பொதுவாக என்னென்ன செலவாகும் என்று சொல்ல வேண்டும். நாம் அதே பணிகளை அந்த செலவில் நான்கில் ஒரு பங்கில் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். அதைத் தொடர்ந்து நமது சேவையில் கூடுதல் என்னென்ன நன்மைகள். இறுதியாக கொஞ்சம் பிகு செய்து கொள்ள வேண்டும். படிப்பவர் இதை வாங்கா விட்டால் நாம் எதையோ தவற விட்டு விடுவோம் என்று நினைக்கும் படி இருக்க வேண்டும்.

Saturday, April 18, 2009

குளோவியூ

நாங்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக தோல் துறைக்குத் தேவையான மென்பொருட்களை உருவாக்கி வழங்கி வருகிறோம். இந்த குளோவியூ இது வரை நாங்கள் அளித்து வரும் மென்பொருட்களை விட தனிச் சிறப்பு வாய்ந்தது. அது என்ன என்று பார்ப்பதற்கு ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

2000ம் ஆண்டில் நான் இங்கிலாந்தின் பிஎல்சி தோல் தொழில்நுட்ப மையத்தின் ஷாங்காய் கிளையில் பணி புரிந்து கொண்டிருந்தேன். அப்போது தாய்வானில் இருந்த ஒரு தோல் நிறுவனத்துக்குப் போயிருந்தேன். அந்த நிறுவனம் அமெரிக்காவின் முன்னணி தோல் பதனிடும் நிறுவனம் மற்றும் தாய்வானின் காலணி உருவாக்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பாக உருவானது.

அவர்களது தலைமை அலுவலகம் தாய்வானின் வடக்கு நகரமான தாய்பெயில் இருந்தது. தோல் பதனிடும் தொழிற்சாலையின் மைய தொழிற்சாலை தாய்வானின் மத்திய நகரமான தாய்சுங்கில் இருந்தது. நிறுவனத்தில் தலைமை மேலாளர் மற்றும் அவரது உதவியாளர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது புதிய பெரிய தோல் தொழிற்சாலை சீனாவில் இருந்தது. சீன தோல் தொழிற்சாலையில் இங்கிலாந்து, தாய்வான் மற்றும் உள்ளூர் மேலாளர்களும், பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களும் வேலை செய்து வந்தார்கள்.

ஹாங்காங் நகரத்தில் அவர்களுக்கு ஒரு வணிக அலுவலகம் செயல்பட்டது. அதன் மூலம் ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளை கையாண்டு வந்தார்கள்.

நிறுவனம் பதப்படுத்தப் போகும் தோல்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அமெரிக்க கூட்டாளியின் முதன்மை நோக்கம் அவர்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யும் இடைநிலை தோல்கள் விற்பது. தோல்களை பதப்படுத்தி வரும் இறுதித் தோல் சீனா மற்றும் தாய்வானில் இருக்கும் காலணித் தொழிற்சாலைகளுக்கு விற்கப்பட்டது. செய்யப்பட்ட காலணி அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையில் நேரடி விமானப் போக்குவரத்து கிடையாது. தாய்வானிலிருந்து சீனா வருபவர்கள் ஹாங்காங் போய்த்தான் வர வேண்டும்.

தலைமை அலுவலகம், இரண்டு தோல் பதனிடும் தொழிற்சாலைகள், காலணி வாங்கும் நிறுவனங்கள், ஹாங்காங் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம், காலணித் தொழிற்சாலை இவர்களுக்கிடையே தினமும் தொலைபேசி மூலம், துரித அஞ்சல் சேவை மூலம், மின்னஞ்சல் மூலம், நேரடி சந்திப்புகள் மூலம் தொடர்புகள் இருந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான தகவல் பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும்.

ஒவ்வொரு தகவலும் அடுத்தவருக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான் அவர் அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும். கால தாமதங்கள் பெரிய இழப்புகளை கொடுத்து விடும்.

2000ம் ஆண்டில் அதை பார்த்த எனக்கு மலைப்பாக இருந்தது. இவ்வளவையும் எப்படி சமாளித்து செல்கிறார்கள்! தகவல் சேகரிப்பு, அறிக்கை தயாரிப்பு, தகவல் பரிமாற்றம் மூன்றையும் ஒருமுகப்படுத்த முடியுமா என்று சிந்தனைகள் ஓட ஆரம்பித்தன.

அந்த நேரத்தில் டாட்காம் பூம் உச்சத்தில் இருந்த நேரம். எனது மற்ற தொடர்புகள் மூலம் இணையத்தையும் அதன் பயன்பாடுகளையும் உணர்ந்து கொண்டிருந்தேன். அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் தோல் துறையில் இருக்கும் எல்லா நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் மென்பொருள் பயன்பாடு ஒன்று உருவாக்கி சேவை வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று முடிவு செய்தேன்.

சிறிய, நடுத்தர, அல்லது பெரிய நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் மேலே சொன்ன பல நாட்டு வாடிக்கையாளர்கள், பல நாட்டு இடுபொருட்கள் வாங்கித்தான் தோல் துறையில் தொழில் நடத்துகிறோம். தரவு சேகரித்தலும், அதை தகவலாக மாற்றுவதும், மாற்றியதை பகிர்ந்து கொள்வதும் தொழிலின் அடிப்படைத் தேவைகள்.

எந்த ஒரு வேலையை செய்தாலும் அதன் விபரங்களை பதிவு செய்து வைத்து கொள்கிறோம். நிறுவனத்துக்கு வேதிப் பொருட்கள் வந்தால் அதை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்கிறோம். தோல் வாடிக்கையாளருக்குப் போகும் போது அதற்காக ஒரு சீட்டு தயாரித்து அனுப்புவதோடு குறிப்பேட்டிலும் குறித்துக் கொள்கிறோம்.

தேவையான பொழுது குறிக்கப்பட்ட தரவுகளிலிருந்து அறிக்கைகளை தயாரித்துக் கொள்கிறோம். விற்பனை அறிக்கை, சரக்கு கையிருப்பு, பணம் கொடுக்க வேண்டிய விபரங்கள், வாங்கிய அறிக்கை என்று கைவசம் இருக்கும் தகவல்களை வைத்து தயாரித்துக் கொள்ளலாம்.

பல நேரங்களில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு அல்லது விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். 'இன்ன தேதியில் இன்ன பொருள் அனுப்பி வைத்திருக்கிறோம். அதற்கான விற்பனை ஆவணம் இதோ' என்று அனுப்பினால்தான் வாடிக்கையாளரிடம் பணம் பெற முடியும். மாதிரி பொருட்கள் குறித்த வாடிக்கையாளரின் கேள்விக்கு பதில் அளிக்கிறோம்.

தகவல் கையாளுவதைப் பொறுத்த வரை

  • தகவலை சரிவர சேகரித்தல்
  • சேகரித்த தகவலை பாதுகாப்பாக பதிவு செய்தல்
  • பதிவு செய்த தகவலிருந்து அறிக்கைகள் தயாரித்தல்,
  • தகவல்களை பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்

    இந்த நான்குமே அடிப்படையான காரணிகள்.
இந்த நான்கையும் திட்டமிட்டு வடிவமைத்து ஒவ்வொரு நிலையிலும் கட்டுப்பாடுகளை புகுத்தி நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவது, எளிதாக அறிக்கைகள் தயாரிப்பது, சுலபமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்வது, தேவையான கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நிலைகளை புகுத்துவது என்று பல படிகளில் செயல்படுவது நிறுவன மேலாண்மை மென்பொருட்கள். பல கோடி ரூபாய் செலவு பிடிக்கும் எஸ்ஏபி முதல் சில லட்சத்துக்குக் குறையாத சேவைகள் வரை பல நிலைகளில் அவை கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, நிறுவனத்தில் செயல்படுத்தினால் மேலே சொன்ன பல பயன்கள் கிடைத்து நிறுவனம் முதலீட்டில் பல மடங்கு ஆதாயம் ஈட்டிக் கொள்ளலாம்.

பொதுவாக அவ்வளவு பெரிய முதலீடு செய்வதற்கு பெரிய நிறுவனங்களுக்கு சாத்தியமிருக்கிறது. நடுத்தர நிறுவனங்களுக்கு அந்த அளவு பணம் போட்டு நிறுவனம் முழுவதும் மாற்றங்களை புகுத்தி நிறுவன மேலாண்மை மென்பொருள் ஒன்றை அமல்படுத்துவதற்கு நிறைய தயக்கம் இருக்கிறது.

ஆரம்பத்தில் நாங்கள் விற்ற மென்பொருளின் விலை மற்றும் சேவை முறை சில ஆயிரங்களுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொண்டோம். எங்களது அடிப்படை நோக்கம் அறிக்கை உருவாக்கம் மற்றும் தகவல் பரிமாற்றம். தகவலை பதிவு செய்தல், கட்டுப்பாடு நடவடிக்கைகள் இவற்றில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.

50 பேருக்கு உட்பட்ட அளவில் பணியாளர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் தகவலை பதிவு செய்வதும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் நிறுவன உரிமையாளரின் நேரடிக் கண்காணிப்பில் நடந்து விடும். பதிவு செய்த தகவல்களிலிருந்து அறிக்கை எடுப்பதும் தகவல் பரிமாற்றம் செய்வதும் சிக்கலான வேலையாக இருக்கும்.

படிப்படியாக பெரிய நிறுவனங்களுக்குத் தேவையான தகவல் பதிவு செய்தல், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துதல் என்ற நிறுவன மேலாண்மை மென்பொருட்களை தயாரித்தாலும், அவற்றுடன் கூடவே தேவைப்படும் பல அறிக்கைகள் உருவாக்குதல், தகவல் பரிமாறிக் கொள்ளுதல் போன்ற கூறுகளை உறுதியாக தயாரித்துக் கொண்டிருந்தோம்.

விற்பனை தகவல்கள் இருந்தால் அதிலிருந்து ஆயிரக்கணக்கான வெவ்வேறு அறிக்கைகளை தயாரிக்க முடியும். தகவல்களை யாருக்கு எந்த வடிவத்தில் வேண்டுமோ அப்படி வடிவமைத்து, யாருடன் எந்த அளவில் எந்த வழியில் பகிர்ந்து கொள்ள வேண்டுமோ அதற்கான வசதிகளையும் செய்து கொடுக்கிறோம்.

நிறுவன மேலாண்மை மென்பொருளைப் பயன்படுத்தும் நிறுவனம் தமது இன்வாய்சுகளை அஞ்சலிலோ மின்னஞ்சலிலோ அனுப்பத் தேவையில்லை. விபரங்களை மென்பொருளில் உள்ளிட்டு விட்டால், வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்க ஒரு இணைப்பு அனுப்பப்பட்டு விடும். அதிலிருந்து அவர் அச்செடுத்துக் கொள்ளலாம். விற்பனை விபரங்களிலிருந்து அந்த மாதத்துக்கான விற்பனை அறிக்கை கூடுதல் முயற்சி இல்லாமலேயே கிடைத்து விடும். வாடிக்கையாளரிடமிருந்து பணம் வர வேண்டியிருக்கிறது என்ற அறிக்கையும் உடனடியாக கிடைக்கும். பொருளுடன் அனுப்புவதற்காக ஆவணங்கள் அச்சு வடிவில் கிடைத்து விடும். சரக்கு கையிருப்பில் பொருட்களின் அளவு குறைந்து விடும்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இப்போது டேலி போன்ற கணக்கியல் மென்பொருட்கள் அல்லது எக்செல் போன்ற விரிதாள் மென்பொருட்களில் தகவலை பதிந்து கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. அப்படி பதியப்பட்ட தகவல்களிலிருந்து நூற்றுக்கணக்கான அறிக்கைகள் தயாரிக்கவும், தேவைப்படும் நேரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டிய விபரங்களை மட்டும் பகிர்ந்து கொள்வதற்கும் தேவையான மென்பொருள் ஒன்றை நிறுவன மேலாண்மை மென்பொருளிலிருந்து பிரித்து எடுத்து தனியாக வழங்குகிறோம். அதுதான் குளோவியூ.

தகவலை மின்னஞ்சல் அல்லது அச்சுப் பிரதி அல்லது கையால் எழுதி அனுப்பினால் அனுப்புபவர் அதை தயாரிப்பதற்கு ஒரு முறை பெறுபவர் விபரங்களை தனது பக்கத்தில் பதிவு செய்து கொள்வதற்கு கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். பதிவு செய்யப்பட்ட தகவல்களிலிருந்து அறிக்கைகள் தயாரிப்பதற்கு மணிக்கணக்கில் வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்த முறையில் தகவலை மின்னணு வடிவில் பொதிந்து அனுப்பிக் கொள்ளலாம்.

Tuesday, April 14, 2009

உலகப் பொருளாதார நெருக்கடி - 1

இப்போது நாமெல்லாம் சிக்கிக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியின் பின்னணி என்ன?

கதையை ஆரம்பத்திலிருந்தே படித்தால்தான் தெரியும்.

பணம் என்பது எப்படி ஆரம்பித்தது?

பண்ட மாற்று முறையில் 'நான் உழைத்து செய்த பொருளை உனக்குத் தருகிறேன், நீ உழைத்து செய்த பொருளை எனக்குத் தா' என்று பரிமாறிக் கொண்டார்கள்.

நான் நெசவு செய்து துணி வைத்திருக்கிறேன். நாளைய சாப்பாட்டுக்கு நெல் வாங்கி வர வேண்டும். விவசாயம் செய்யும் நண்பரின் வீட்டுக்குப் போய் துணியைக் கொடுத்து விட்டு தேவையான நெல்லை வாங்கிக் கொண்டு வர வேண்டும்.

அவருக்கு இப்போது துணி தேவையில்லை என்றால் எனக்கு நெல் கிடைக்காது. இந்த சிக்கலைத் தீர்க்கக் கண்டுபிடித்ததுதான் பணம். துணி விற்று செலாவணியாக பொதுவில் ஏற்றுக் கொள்ளப்படும் பொருளை திரட்டிக் கொள்வேன். நெல் வாங்குவதற்கு அதைக் கொடுத்தால் போதும்.

பண்ட மாற்றும் பரிமாற்றங்களுக்காக பணம் பயன்படுதலும்

தங்கம் பணமாக புழங்க ஆரம்பிக்கிறது. தேவைக்கு மேல் தங்கம் வீட்டில் இருக்கிறது. அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் கொண்டு வைப்பது போல, ஊரின் பொற்கொல்லரிடம் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஏற்பாடுகள் இருக்கின்றன. அவரிடம் கொண்டு தங்கத்தைக் கொடுத்து ஒரு சீட்டை வாங்கிக் கொள்கிறார்கள். அவர் நாணயமானவர். எந்த நேரத்தில் போய் சீட்டைக் காட்டிக் கேட்டாலும் தங்கத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறார். அப்படி பாதுகாப்பாக பணத்தை வைத்திருப்பதற்கு கட்டணத்தை மட்டும் வசூலித்துக் கொள்கிறார்.

தங்க நகையாக இல்லாமல் நாணயமாக வரும் தங்கத்தை தனித்தனியாக வைத்திருக்கத் தேவையில்லை. எல்லா பணத்தையும் சேர்த்து வைத்து கணக்கை மட்டும் இன்னாருக்கு இவ்வளவு தர வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டால் போதும்.

இது வரை எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. பொற்கொல்லர் கொஞ்ச நாள் போக ஒன்றை கவனிக்கிறார்.

வங்கித் தொழிலின் அடிப்படை

நாட்டில் பணப் புழக்கம் அதிகரிப்பதற்கு அச்சடித்து வெளியிடும் நோட்டுகள் மட்டும் காரணம் இல்லை. பெரும்பாலான பண உருவாக்கம் வர்த்தக வங்கிகள் வைப்புத் தொகை சேகரித்து கடன் கொடுப்பதால் உருவாகிறது.

வங்கிகள் இப்படித்தான் பணப் புழக்கத்தை அதிகரிக்கின்றன.

இந்தியாவில் ரிசர்வ் வங்கி இருப்பது போல அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் எனப்படும் மத்திய வங்கி. அங்கும் வைப்புத் தொகையில் ஒரு பகுதியை பாதுகாப்பான அரசாங்க பத்திரங்கள் வாங்கி வைக்க பயன்படுத்த வேண்டும். மீதிப் பகுதியை கடன் கொடுக்க பயன்படுத்தலாம். கடனட்டைகள் மூலமாக வழங்கப்படும் கடன்களும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் வந்து விடும்.

இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் கண்கட்டி விட்டு தமது ஆதாயத்தை உயர்த்த முற்படுபவர்கள் அதற்கான வழிகளை கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

விளையாட்டுப் பார்வை அரங்கில் எல்லோரும் உட்கார்ந்திருந்தால் வசதியாக மறைக்காமல் ஆட்டத்தைப் பார்க்கலாம். ஒரே ஒருவர் எழுந்து நின்றார் அவருக்கு மட்டும் ஆதாயம். விளையாட்டு நன்றாக தெரியும். அவரைப் பார்த்து மற்றவர்களும் எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டால், கடைசியில் எல்லோரும் நின்று கொண்டே பார்த்தும் எல்லோரும் இருந்து பார்க்கும் அளவுக்குத்தான் விளையாட்டுத் தெரியும். கூடவே கால் வலிதான் மிஞ்சும்.

அது போல கண்காணிப்பு நிறுவனங்களின் நெறிமுறைகளை ஒரு வங்கி தவிர்க்க முயன்று வெற்றி பெற்று விட்டால் அந்த வங்கியின் ஆதாய வீதம் மளமளவென்று ஏறும். அதில் வேலை பார்க்கும் மேலாளர்களுக்கு கோடிக் கணக்கான டாலர்கள் ஊக்கத்தொகையாக கிடைக்கும். அவர்களுடன் போட்டி போட்டு ஒவ்வொருவராக அந்த வழிகளை கண்டு கொண்டு தாமும் சுற்றிப் போக ஆரம்பிப்பார்கள். கடைசியில் மொத்த அமைப்பும் குலைந்து போவதுதான் நடக்கும்.

Sunday, April 12, 2009

கூட்டுறவும் முதலாளித்துவமும்

ஒரு நிறுவனத்தில் விற்பனை மதிப்பிலிருந்து எல்லா இடுபொருட்களின் விலையை கழித்தால் கிடைப்பது நிறுவனம் கூட்டிய மதிப்பு. அந்த மதிப்பில் ஒரு பகுதி வேலை செய்தவர்களுக்கு ஊதியமாகவும், ஒரு பகுதி அரசாங்கம் செய்து கொடுத்த வசதிகளுக்கு வரியாகவும், கடைசி பகுதி முதலீடு செய்தவர்களுக்கு ஆதாயமாகவும் போக வேண்டும்.

ஒரு வகை நிறுவனம்
10 லட்ச ரூபாய் மதிப்பு கூடுதல் கிடைத்தால் பத்தாயிரம் (1%) ரூபாய் சம்பள செலவு, மீதியில் அரசு நிர்ணயித்த வீதத்தில் வரி கட்டி கிட்டத்தட்ட 6 முதல் 7 லட்ச ரூபாய் ஆதாயமாக எடுத்துப் போவது முதலாளித்துவ நடைமுறை. மதிப்பு கூடுதல் பாதியாக குறைந்து 5 லட்சம் ஆகி விட்டாலும் சம்பளம் கொடுக்கப்படும், அரசுக்கு வரி தொகை குறையும், முதலாளியின் ஆதாயமும் குறையும். இப்படி குறைந்து போகும் மதிப்பு கூடுதலை சரிகட்ட எதிர்பார்த்த அளவு செயல்படாத ஊழியர்களை பணி நிறுத்தம் செய்து விடுவார்கள். சம்பளச் செலவு 7000 முதல் 8000 ஆக குறைந்து போகலாம்.

கூடுதல் மதிப்பு 3 லட்சம் அல்லது 2 லட்சம் என்று ஆகி விடும் நிலைமை வருவதற்கு முன்னால் நிறுவனமே இழுத்து மூடப்பட்டு விடும்.

இப்படி இருக்கும் நிறுவனம் எப்படி இருக்கும்?

  1. முதலாளி கடவுளாக மதிக்கப்படுவார். அவர் சொல்வதுதான் வேத வாக்கு. அவரது ஒரு சொல்லின் மூலம் பணி புரியும் ஊழியரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடலாம்.
  2. 'உன்னிடம் சொன்ன வேலையை செய், கேள்விகள் கேட்பதை மறந்து விடு. மாதா மாதம் சம்பளம் கிடைக்கிறது அல்லவா. முதலாளிக்குத் தெரியும் என்ன நடக்கிறது என்று'. வேலை செய்பவர்களின் மனத் திறமையில் பெரும்பகுதி அடைபட்டுப் போய் விடும்.
  3. ஒன்றாம் தேதி ஆனால் சம்பளப் பணம் கையில் வந்து விட வேண்டும்.
  4. 'விருப்பம் இருக்கும் வரை வேலை செய். இன்னொரு நிறுவனத்தில் 10 ரூபாய் கூடுதல் ஊதியம் தருகிறார்கள் என்றால் விட்டு விட்டுப் போய் விடு'.
இன்னொரு வகை நிறுவனம்

10 லட்ச ரூபாய் மதிப்பு கூடுதல் கிடைத்தால் ஒன்பதரை லட்ச ரூபாய் (95%) சம்பளம், அரசுக்கு வரி கட்டுவதற்கு எதுவும் மிஞ்சாமல், முதலீட்டுக்கு ஆதாயமும் கிடைக்காமல் போகிறது.

மதிப்பு கூடுதல் 15 லட்சமாக அதிகரிக்கும் போது சம்பளம் கொடுப்பதும் 14 லட்சமாக அதிகரிக்கிறது. இப்படியே அதிகரித்து மதிப்பு கூடுதல் 1.5 கோடி ரூபாய் ஆகும் போது சம்பளம் 1.3 கோடி கொடுத்து மீதி இருப்பதில் வரியும் ஆதாயமும் பார்த்துக் கொள்ளலாம் என்று நிறுவனம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இங்கு நிலவரம் எப்படி இருக்கும்?
  1. முதலாளி மனிதராக மதிக்கப்படுவார். அவரை போல நல்லவர் கிடையாதுங்க. எல்லோருக்கும் எவ்வளவு வாய்ப்புகள் கொடுக்கிறார். உடன் பணி புரிபவர்களை இயந்திரங்கள் போல நடத்தாமல் அவர்களையும் தொழிலை புரிந்து அதில் தமது பணியை செய்ய ஊக்குவிக்கிறார்.
  2. 'நிறுவனத்தில் என்ன வருமானம் வருகிறது, என்ன செலவாகிறது என்று உனக்குத் தெரியும். வருமானம் வருவது குறைந்தால் நம் எல்லோருக்கும் பாதிப்பு உண்டு வருமானம் வருவது அதிகமானால் எல்லோருக்கும் நல்லது'. வேலை செய்பவர்களின் மனத் திறமைக்கு சவால்.
  3. சம்பளம் கிடைப்பது நிறுவனத்தின் மாதாந்திர வெற்றி தோல்வியைப் பொறுத்தது. எல்லோரும் நிறை குறைகளை விவாதித்து குறைகளை களைந்து சரியான வழி வகுத்து நிறுவனம் முன்னேற முயற்சிப்பார்கள்.
  4. ஒவ்வொரு ஊழியரும் ஒரு தொழில் முனைவராக செயல்பட்டு நிறுவனத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்துவார்கள். கூடுதல் வருமானம் தேவைப்பட்டால் நிறுவனத்தின் வருமானத்தை இப்படி பெருக்கினால் நான் அதில் X சதவீதத்தை ஊதியமாக கேட்டுப் பெறலாம். எதற்கு வேறு இடத்தைப் பார்க்கப் போக வேண்டும்.
இவ்வகை நிறுவனம் செயல்பட சாத்தியங்கள் உண்டா?

தொழில் முனைவு

எங்கள் கல்லூரி வகுப்புத் தோழன் படித்து முடித்ததும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தோல் பிரிவில் வேலைக்கு சேர்ந்தான். அவனது அப்பா ஒரு தொழிலதிபர். கட்டிடத் துறையில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

ஓரிரு ஆண்டுகள் வேலை செய்த பிறகு, 'எதுக்கு இன்னொருத்தருக்காக நாம இவ்வளவு உழைக்கணும். நாமே சொந்தமா தொழில் செய்யலாம்' என்று நண்பனுக்குத் தோன்றி விட்டது.

தோல் துறையில் பட்டம் பெற்ற எல்லோருக்குமே, 'ஒரு இடத்தில் ஆர்டர் வாங்கி, அதை வைத்து மூலப் பொருட்களை கடனுக்கு வாங்கி, தோல் செய்து கொடுத்து, வரும் பணத்திலிருந்து வாங்கியவற்றுக்குப் பணத்தை அடைத்து மீதியை நமது ஆதாயமாக வைத்துக் கொள்ளலாம்' என்ற அடிப்படையிலான ஜாப்வொர்க் எனப்படும் முறையின் மீது ஒரு நப்பாசை உண்டு.

அதற்கு பெரிய அளவில் முதலீடு எதுவும் தேவையில்லை.

  • என்ன மாதிரியான தோல் செய்ய வேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும் என்ற அறிவு தேவை. அது இருக்கிறது.
  • 'எங்கு உள்ளீடு தோல் வாங்க வேண்டும், எங்கு வேதிப் பொருட்கள் வாங்க வேண்டும் எப்படி கடனுக்கு வாங்க வேண்டும்' என் அனுபவம் தேவை. அது ஓரிரு ஆண்டுகள் பணி புரிந்ததில் தெரிந்து போயிருக்கும்.
'அப்பா இவ்வளவு பணக்காரராக இருக்கும் போது நாம் எதற்கு அந்த வழியில் கஷ்டப்பட வேண்டும்' என்று நினைத்து பணித் திட்டம் ஒன்று தயாரித்து இத்தனை கோடி முதலீடு வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டானாம்.

'இப்போ உனக்கு மாசச் சம்பளம் எவ்வளவு?'

'மாசம் 15,000 ரூபாய்'

'கையில் சேமிப்பு எவ்வளவு இருக்கு? இரண்டு வருஷம் சம்பளம் வாங்கியிருக்கிறாய் அல்லவா!'

'ஐம்பதாயிரம் ரூபாய்'

'அப்படியா!!!. சரி அதற்குக் கூட நான் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் தருகிறேன். அந்த 1 லட்ச ரூபாய் முதலீட்டை வைத்துக் கொண்டு மாதா மாதம் 15,000 ரூபாய் ஆதாயம் சம்பாதித்துக் காட்டு. அதன் பிறகு கோடிக் கணக்கான முதலீட்டைப் பற்றி யோசிக்கலாம்'.

அப்படி ஆரம்பித்தது அவனது தொழில் முனைவு. இன்றைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனங்களை நடத்தி வருகிறான். அப்பாவின் காலத்துக்குப் பிறகும் அவர் கற்றுக் கொடுத்த ஆரம்ப பாடங்களை பின்பற்றி வளர்ந்து கொண்டிருக்கிறான்.