Monday, February 11, 2019

நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

ன்றைய உலகின் நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகள் பற்றிய அறிவியல் ரீதியான முக்கியமான ஆய்வுகளில் ஒன்று ஜான் ஸ்மித்-ன் "ஏகாதிபத்தியமும் உற்பத்தி உலகமயமாதலும்" என்ற முனைவர் பட்ட ஆய்வறிக்கை. 2010-ல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுரையைத் தொடர்ந்து ஜான் ஸ்மித் இதே விஷயத்தைப் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 21-ம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் பதிப்பித்துள்ளார்.

பொருளாதார விஷயங்களில் ஆய்வுள்ள தமிழ் இளைஞர்களின் தேவைக்காக அந்த ஆய்வறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து இங்கு வெளியிடுகிறேன். மொத்தம் 300 பக்கங்களைக் கொண்ட இந்த ஆய்வறிக்கையை சிறு சிறு பதிவுகளாக வெளியிட்டால் சுமார் 100 பதிவுகள் வரை நீளலாம். இதை இறுதியில் ஒரு மின் நூல் ஆக தொகுக்கலாம் என்று திட்டம்.

ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010

“நியாயமான வேலை நாளுக்கு நியாயமான கூலி' என்ற பழமைவாத குறிக்கோளுக்கு மாறாக, “கூலி முறையை ஒழித்துக் கட்டுவது” என்பதுதான் புரட்சிகர இலட்சியம் - கார்ல் மார்க்ஸ், 1865, மதிப்பு, விலை, லாபம்
 

1. சாராம்ச உரை
புதிய தாராளவாத உலகமயமாக்கல் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான இடைவெளியை குறைப்பதற்கு பதிலாக, ஏகாபத்திய முக்கூட்டுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான உறவின் சுரண்டல் தன்மையையும், ஒட்டுண்ணித்தன்மையையும் அதன் மூலம் அதன் ஏகாதிபத்திய தன்மையையும் பெருமளவு ஊதிப் பெருக்கியிருக்கிறது.
 

இந்த ஆய்வறிக்கையின் மிகக் கடுமையான, எனவே மிகப் பொருத்தமான சோதனை, புதிய தாராளவாத உலகமயமாக்கலின் மிகப் புதிய, பெருமளவு மாறுதல்களை கொண்டு வந்த ஒரு அம்சத்தை எடுத்துக் கொண்டு அது ஏகாதிபத்திய-மூன்றாம் உலக பிளவை பலவீனப்படுத்தியிருக்கிறதா அல்லது வலுப்படுத்தியிருக்கிறதா என்று கேட்பது ஆகும். 
உற்பத்தி செயல்முறைகள் உலகமயமாதல்தான் இந்த அம்சம் என்று இந்த ஆய்வறிக்கை முன் வைக்கிறது. மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையேயான உறவின் உலகளாவிய வளர்ச்சியின் பண்பு ரீதியான புதிய கட்டமான இந்த அம்சம், தொழில்துறை உற்பத்தி குறை கூலி நாடுகளுக்கு மாற்றப்படுவதாக வெளிப்படுகிறது.

இந்த உருமாற்றத்தை இயக்கும் பிரதான சக்தி ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகங்கள் அதிக கூலியிலான உள்நாட்டு உழைப்பின் இடத்தில், குறை கூலி மூன்றாம் உலக உழைப்பை பதிலீடு செய்வதுதான்; அதன் மூலம் அவை செலவைக் குறைத்து, லாபத்தை அதிகரிக்க முயற்சிக்கின்றன என்று பகுப்பாய்வு தெரிவிக்கிறது. இதன் விளைவாக தேசங்கடந்த தொழிற்கழகங்கள் இந்த அதீத சுரண்டலை மேலும் மேலும் சார்ந்திருக்கின்றன. இந்த சுரண்டல் தொடர்பான விபரங்களில் ஒரு சிறு பகுதி மட்டுமே நிதி பரிவர்த்தனை தொடர்பான புள்ளிவிபரங்களில் பதிவு செய்யப்படுகிறது.

இந்த ஆய்வறிக்கை உலகளாவிய தொழிலாளர் வர்க்கத்தின் மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த பிரிவுக்கு மைய இடத்தை வழங்குகிறது. மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் புதிதாக உருவாகி, வேகமாக வளர்ந்து வருகிறது; இந்த ஆய்வறிக்கை அதன் சமூக நிலை, உலக பொருளாதாரத்தில் அது இணைக்கப்பட்டுள்ள விதம், மூன்றாம் உலக நாடுகளின் கூலி வகைகள் மற்றும் போக்குகள் பற்றி ஆய்வு செய்கிறது. மூன்றாம் உலக நாடுகளின் உயிருள்ள உழைப்பு உலக வளத்துக்கு அளிக்கும் பங்கு பெருமளவு குறைத்து மதிப்பிடப்படுகிறது. 'உலக முதலாளித்துவம்' அல்லது 'புதிய ஏகாதிபத்தியம்' குறித்து தற்போது செல்வாக்கு பெற்றுள்ள மார்க்சிய ஆய்வுரைகளிலும் இதே நிலைதான்.

இந்த ஆய்வறிக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொ.உ.உ), வர்த்தகம் ஆகியவை மூலமாக வெளிப்படும் உற்பத்தி உலகமயமாதல் பற்றி பகுப்பாய்வு செய்வதை தனது வாதத்துக்கு  அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த புள்ளிவிபரங்கள் எதை மறைக்கின்றன என்ற கேள்வியை எழுப்பி, பொதுவாக பருண்மையான புள்ளிவிபரங்கள் என்று கருதப்படுபவை தவறாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்தத் தரவுகளுக்கு அடிப்படையாக இருக்கும் புதியசெவ்வியல் கருதுகோள்கள் மீதான விமர்சனத்தை உருவாக்குகிறது. ஜி.டி.பி அளப்பது ஒரு நாடு எவ்வளவு உற்பத்தி செய்கிறது என்பதை அல்ல அது சந்தையில் எவ்வளவை கைப்பற்றுகிறது என்பதைத்தான் என்ற முடிவுக்கு இந்த ஆய்வுரை வந்தடைகிறது. மூலதனம் உழைப்பைச் சுரண்டுவதை மறைப்பது போலவே, ஏகாதிபத்திய மூலதனம் மூன்றாம் உலக நாடுகளின் உழைப்பை சுரண்டுவதையும் ஜி.டி.பி கணக்குகள் மறைக்கின்றன.

2 comments: