Tuesday, April 10, 2012

ஒளிரும் இந்தியா - 3

மத்திய அரசின் கையில் நிதிக் குவிப்பு

நாடு முழுவதையும் ஒற்றை சந்தையாக மாற்றுவது வர்த்தகர்களுக்கு, கார்பொரேட் சந்தை வளர்ச்சிக்கு தேவையான ஒன்று. அதனால் உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசுகள் கையில் இருக்கும் வரி விதிக்கும் அதிகாரங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு மத்திய அரசுக்கு மாற்றப்படுகிறது. இப்போது வருமான வரி, சேவை வரி, சுங்க வரி, கலால் வரி ஆகியவை மத்திய அரசால் வசூலிக்கப்பட்டு திரட்டப்படுகிறது. அதிலிருந்து மாநிலங்களுக்கு ஏதோ பிச்சை போடுவது போல நிதி ஒதுக்குவார்கள்.

மத்திய அரசின் மொத்த வரி வருவாய் 2012-13 நிதி ஆண்டில் ரூ 10,77,612 கோடி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.4%) ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து மாநில அரசுகளுக்கு - ரூ 3,65,216 கோடி ஒதுக்கப்படுகிறது. அதாவது சுமார் 70%க்கு மேல் மத்திய அரசே நேரடியாக செலவிடுகிறது.

அதில் பெரும்பகுதி இராணுவத்துக்கு செலவாகிறது. ராணுவத்துக்கு ரூ 1,93,407 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இந்த செலவினங்கள் நாட்டு பாதுகாப்பு என்ற தலைப்பில் கேள்வி கேட்கப்படாமல் செலவிடப்படுகின்றன. மத்திய அரசின் வருவாயில் சுமார் 19% இராணுவத்துக்கு செலவாகிறது. சுமார் 50 லட்சம் பாதுகாப்பு படையினருக்கு தலைக்கு சுமார் சுமார் 5 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. ஒப்பீட்டளவில் சுமார் 60 கோடி விவசாயிகளுக்கு தலைக்கு சுமார் 350 ரூபாய் (திட்ட ஒதுக்கீடு) செலவிடப்படுகிறது.

இப்போதைய விற்பனை வரி (மாநிலங்களால் திரட்டப்படுவது) சேவை வரியுடன் இணைக்கப்பட்டு ஜிஎஸ்டி என்று பொருட்கள் சேவைகள் வரி அமலுக்கு வந்து விட்டால் மாநில அரசின் நிதி ஆதாரங்கள் அனைத்தும் மத்திய அரசின் கையில் போய் விடும்.

உலக மயம், தனியார் மயம், தாராள மயம்

இந்தியா பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு தடைசெய்யப்பட்டது. யார் தடை செய்தார்கள்? 'ஐரோப்பிய கடன் நெருக்கடி, மத்திய கிழக்கின் அரசியல் நிலைமை, எண்ணெய் விலை உயர்வு, ஜப்பானில் நிலநடுக்கம்' இவைதான் இந்திய பொருளாதார பிரச்சனைகளுக்கு காரணம் என்கிறார் நிதி அமைச்சர்.

இதற்கு என்ன செய்ய வேண்டும். உலகச் சந்தையை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்.

"இந்திய பண வீக்கத்துக்கான முக்கிய காரணங்கள் -  விவசாயத் துறையில் தட்டுப்பாடுகள் தொடர்வதும், உலக சந்தையில் விலைகள் அதிகரிப்பதும்தான்"

 என்கிறார் நிதி அமைச்சர்.

இதற்கு என்ன செய்ய வேண்டும். விவசாயத் துறையை ஊக்குவிக்க வேண்டும், உலகச் சந்தையை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்.

12வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் ஆண்டு.

 • உள்நாட்டு தேவை அடிப்படையிலான வளர்ச்சி
 • தனியார் முதலீடு வளர்வதற்கான சூழலை உருவாக்குதல்
 • விவசாயம், எரிசக்தி, போக்குவரத்து துறைகளில் (நிலக்கரி, மின்சாரம், தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே, விமான போக்குவரத்து) தட்டுப்பாடுகளை நீக்குவது
 • அதிக சுமை சுமக்கும் 200 மாவட்டங்களில் குறிப்பாக, ஊட்டச் சத்து குறைவு பிரச்சனையை சரி செய்ய கவனம் செலுத்துதல்
 • அரசு சேவைகளை வழங்குவது, நிர்வாகம், வெளிப்படைத் தன்மை இவற்றை மேம்படுத்துவது, கருப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழிப்பது

என்பவற்றை இலக்குகளாக முன் வைக்கிறார் நிதி அமைச்சர்.

அதே நேரம், இவற்றுக்கு முற்றும் மாறான

"இந்தியாவுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலகளாவிய பொறுப்புகள் இருக்கின்றன. உலகின் பொருளாதார கொள்கை உருவாக்குனர்களின் உயர் மேசையில் நமக்கும் இடம் கிடைத்திருப்பது நிறைவு தரக்கூடிய ஒன்று. ஆனால், அது நமது தோளில் புதிய பொறுப்புகளையும் ஏற்றியிருக்கிறது. இந்தியா தனது பொருளாதார வலிமைகளை தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தால் அது உலக பொருளாதாரத்து திடத்தை கொடுப்பதாகவும், நிலையில்லாமல் அலை பாயும் பன்னாட்டு மூலதனத்துக்கு ஒரு இலக்காகவும் அமையும்"

என்று அரசின் உண்மை கொள்கையை தெளிவு படுத்தி விடுகிறார்.

யார் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். அலைந்து கொண்டிருக்கும் பன்னாட்டு மூலதனத்துக்கு பாதுகாப்பான இலக்காக ஏன் இந்தியா தயாரிக்கப்பட வேண்டும்?

ஏப்ரல் 2011 முதல் ஜனவரி 2012 வரையிலான 9 மாதங்களில் இந்தியாவின் வர்த்தக் பற்றாக்குறை $ 148 பில்லியன் (சுமார் ரூ 7 லட்சம் கோடி).  ஏற்றுமதி - $ 243 பில்லியன், இறக்குமதி - $ 391 பில்லியன், பற்றாக்குறை - $ 148 பில்லியன். இந்த வர்த்தக பற்றாக்குறை வெளிநாட்டு இந்தியர்கள் அனுப்பும் பணம் போன்ற வருமானங்களின் மூலம் ஈடு செய்யப்பட்ட பிறகான நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6% ஆக (சுமார் ரூ 4 லட்சம் கோடி) இருக்கிறது. இந்த பற்றாக்குறைக்கு ஈடாக அன்னிய முதலீடு வர வேண்டும். வரா விட்டால் இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்.

இதற்கான பாதை வகுக்கும் கொள்கை முடிவுகளில் சில
 • மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் அரசு பங்குகளை விற்கும் கொள்கை தொடரும். 51% பங்குகளும் நிர்வாக கட்டுப்பாடும் அரசு கையில் இருக்கும். (இதை எதிர்கால ஒரு புதிய அரசாங்கம் எந்த நேரத்திலும் மாற்றிக் கொள்ளலாம்)
 • ஒற்றை பிராண்ட் சில்லறை வணிகத்தில் 100% அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 51% முதலீட்டை சில்லறை வணிகத்தில் அனுமதிக்கும் முடிவு தள்ளி (மட்டும்தான்) வைக்கப்பட்டிருக்கிறது.
 • இந்திய கார்பொரேட் கடன் பத்திர சந்தையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களை அனுமதிப்பது
 • ஓய்வூதியத் தொகை ஒழுங்குபடுத்தல் மற்றும் வளர்ச்சி மசோதா, வங்கி சட்ட திருத்த மசோதா, காப்பீட்டு சட்ட திருத்த மசோதா போன்றவை நிறைவேற்றப்பட இருப்பது
 • பொதுத்துறை வங்கிகளுக்குத் தேவையான மூலதனத்தை திரட்டும் ஒரு ஏஜென்சி நிறுவனத்தை உருவாக்குவது

இந்தியாவும் வளர்ச்சியும்

சிறுபான்மையான பெரு நிறுவனங்களின் கையில் செல்வ குவிப்பை ஊக்குவிப்பதுதான் நம்மை ஆளும் ஆட்சியாளர்களின் நோக்கம் என்பது இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலும் தெளிவாக தெரிகிறது.

120 கோடி மக்கள் வாழும் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் ஒரு கோடி கோடி. அதாவது அலைக்கற்றை ஊழலினால் ஏற்பட்ட இழப்பை விட சுமார் 50 மடங்குதான் அதிகம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உண்மையான பொருள் நாட்டு மக்கள் உழைத்து உருவாக்கும் மதிப்பு என்று இருக்க வேண்டும். ஆனால் இன்றைய கணக்கீடுகளில், நாட்டு மக்கள் வாங்கும் பொருட்களின் மதிப்பு அல்லது சம்பாதிக்கும் பணத்தின் மதிப்பு என்றுதான் அளவிடப்படுகிறது. ஒருவர் தனது தோட்டத்தில் பயிரிட்டு கத்தரிக்காய் சாப்பிட்டால் அது உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டில் சேராது. அதையே சந்தையில் வாங்கி வந்தால் சேரும்.

இதுதான் தனியார் மய, தாராள மய, உலக மயமாக்கலுக்குப் பிறகான வேகமான வளர்ச்சியின் ரகசியம். எல்லாவற்றையும் சந்தைக்கு இழுத்து வந்து விட்டால், குடிதண்ணீருக்கு தனியார் நிறுவனத்துக்கு விலை கொடுத்து, பள்ளிக் கல்விக்கு தனியார் பள்ளியில் கட்டணம் கட்டி, எஞ்சினியரிங் படிக்க தனியார் கல்லூரியில் பணம் இறைத்து, மக்கள் உழைத்து சேர்க்கும் பணத்தை சந்தையில் அழுவதன் மூலமும் தொலை தொடர்பு துறையில் அலைக்கற்றை ஊழல், சுரங்கத் துறையில் ஊழல் என்று நாட்டின் சொத்துக்களை கொள்ளை கொடுப்பதன் மூலமும்தான் வளர்ச்சி சாதிக்கப்படுகிறது.

அத்தகைய வளர்ச்சியின் மூலம் முகேஷ் அம்பானி போன்ற தொழிலதிபர்களின் பைகளில் நிரம்பி வழியும் பணம் அவர்கள் ஆன்டிலா போன்ற மாளிகைகள் கட்டும் போது ஒழுகி ஓடுவதன் மூலம் இந்தியாவில் வறுமை ஒழிந்து விடும் என்பதுதான் பொருளாதாரக் கொள்கை.

இந்த கொள்கைகளை செயல்படுத்தவே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐந்தாண்டு திட்டங்கள் போடப்படுகின்றன. ஆண்டு தோறும் வரவு செலவு திட்டம் போடப்படுகிறது. ரிசர்வ் வங்கி மூலம் பணத்தை நெறிப்படுத்துகிறார்கள். ஏப்ரல் 1ம் தேதி தொடங்கும் (எவ்வளவு பொருத்தமான தேதி!) நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை பிப்ரவரி கடைசி வாரத்தில் அல்லது மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

ஒளிரும் இந்தியா - 1
ஒளிரும் இந்தியா - 2

Monday, April 9, 2012

ஒளிரும் இந்தியா - 2

திட்டமிட்டு அழிக்கப்படும் விவசாயம், திட்டமிடாமல் அலைக்கழிக்கப்படும் மக்கள்

அம்பானிகளும், டாடாக்களும், 'இன்போசிஸ்களும் இந்த ஆண்டு என்ன வருமானம் வர வேண்டும், எப்படி செலவழிக்க வேண்டும்
 என்று திட்டமிட்டுக் கொள்ள முடிகிறது. கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு அப்படி எந்த திட்டமிடலும் இல்லாமல் சந்தையில் நடக்கும் சூறாவளிகளில் சிக்குண்டு அலைக்கழிக்கப்படுவதே வாழ்க்கையாக மாறியிருக்கிறது.

ஆனால், விவசாய வளர்ச்சியைப் பற்றி ஒவ்வொரு நிதி அமைச்சரும் கவலைப்படுவார். 'பருவ மழை பொய்த்து போனால் விவசாய வளர்ச்சி குறைந்து விடுமே' என்று பதட்டமடைவார்கள் பொருளாதாரத்தின் மேலாளர்கள்.

விவசாய வளர்ச்சி எதற்கு தேவை? 'கிராமப் புற மக்களிடம் பணம் சேர்ந்தால் நுகர்வு பொருட்களை அவர்கள் அதிகம் வாங்குவார்கள், அதன் மூலம் பெரு நிறுவனங்களின் சந்தை விரிவடையும்' என்ற ஒரே நோக்கத்தில்தான் விவசாய வளர்ச்சி பார்க்கப்படுகிறது.
'விவசாயம் பொய்த்து போனால், விவசாயிகள் கையில் பணம் குறைந்து கிராம புறங்களில் சொகுசு பொருட்களின் (தொலைக்காட்சி, ரெப்ரிஜிரேட்டர் போன்றவை) விற்பனை குறைந்து விடுமே' என்பதுதான் கவலையின் அடிப்படை.

ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் விவசாயத்துக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்வார் அன்றைய நிதி அமைச்சர்.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வருமான வரி குறைப்பு, கார்பொரேட் வரிச் சலுகைகள் மூலம் அரசுக்கு ஏற்படும் இழப்பு ரூ 4,500 கோடி. அதில் பங்குச் சந்தை பரிமாற்ற வரிக் குறைப்பும் அடங்கும். அதாவது சுமார் 4,500 கோடி ரூபாய் கூடுதல் வரிச்சலுகை அரசாங்கம் கார்பொரேட்டுகளுக்கும் நடுத்தர வர்க்கத்துக்கும் வழங்கியிருக்கிறது.

இந்த ஆண்டு திட்டத்தில் விவசாயத்துக்கு அளிக்கப்படும் நிதி அதிகரிப்பு 3,100 கோடி ரூபாய் மட்டும்தான். அதாவது விவசாய கட்டுமானங்களுக்கு அரசாங்கம் 3,100 கோடி ரூபாய் அதிகம் செலவிடும் அதே நேரத்தில், கார்பொரேட்டுகள் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு 4,500 கோடி ரூபாய் அதிக நிதி ஒதுக்குகிறது.

எவ்வளவு அடித்தாலும் தாங்கும் மக்களும், மோப்பக் குழையும் முதலாளிகளும்

"2011-12ல் வரி வருமானம் குறைந்திருக்கிறது, மானியங்கள் அதிகரித்திருக்கின்றன. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை $90 டாலர் என்று எடுத்துக் கொண்டிருந்ததற்கு மாறாக $115 ஆக இருக்கிறது. அதனால் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்து விட்டது."

இதைச் சரி செய்ய வரி விகிதத்தை அதிகரிப்பது, மானியங்களை குறைப்பது என்று இரண்டு இலக்குகளை அடையாளம் காண்கிறார் நிதி அமைச்சர்.

முதலில் வரி வருமான அதிகரிப்பு எப்படி செய்யப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். மேலே பார்த்தது போல கார்பொரேட் மற்றும் தனிநபர் வருமான வரிகளில் புதிய சலுகைகளால் அரசுக்கு 4,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படப் போகிறது. 'மானியங்களால் அரசாங்கத்தின் நிதி நிலைமை சீர்குலைகிறதே' என்று கூக்குரலிடும் எந்த முதலாளித்துவ பத்திரிகையும் இந்த வள்ளல் தனத்தை கண்டு கொள்ளப் போவதில்லை.

வரி எங்கிருந்து அதிகமாக வரப் போகிறது? நேரடியாக மக்களின் பைகளிலிருந்து எடுக்கும் வகையில்தான்!

மறைமுக வரிகள் என்பவை (கலால் வரி, சுங்க வரி, விற்பனை வரி, சேவை வரி), பொருளின் மொத்த விலையில் விதிக்கப்படுபவை. நிறுவனங்களின் லாபத்தை பாதிக்காமல் மக்களிடமிருந்து வாங்கி அரசாங்கத்துக்கு செலுத்தப்படுபவை.

மறைமுக வரிகள் குறைந்த வருமானம் உடையவர்கள் மீதும் நேர்முக வரிகள் அதிக வருமானம் உடையவர்கள் மீதும் அதிகம் சுமத்தப்படுகின்றன என்பது பொருளாதார விதி. ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.

முடி வெட்டுவது மீது 12% சேவை வரி விதித்தால், மாதம் 5000 ரூபாய் சம்பாதிக்கும் தொழிலாளி ஒரு முடி வெட்டுக்கு 6 ரூபாய் வரி கட்டுவார், மாதம் 5 லட்சம் சம்பாதிக்கும் வங்கி ஊழியரும் அதே 6 ரூபாய்தான் வரி கட்டுவார். தொழிலாளி கட்டும் வரி அவரது வருமானத்தில் 0.1%, வங்கி ஊழியர் கட்டுவது அவரது வருமானத்தில் 0.001%. அதாவது வரியின் தாக்கம் தொழிலாளியின் மீது 100 மடங்கு அதிகம்.

இப்போது வரி வருமானத்தை அதிகமாக்க என்ன செய்திருக்கிறார்கள்?

இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் சேவை வரி பெருமளவு விரிவு படுத்தப்படுகிறது. 'எந்தெந்த சேவைகளுக்கு வரி விதிப்பு' என்ற பட்டியலை கைவிட்டு, 'எந்தெந்த சேவைகளுக்கு வரி விதிப்பு இல்லை' என்று வரையறுக்கும் பட்டியலின் அடிப்படையில் அந்த பட்டியலில் இல்லாத எல்லா சேவைகளுக்கும் வரி விதிக்கும் முறை அமலுக்கு வருகிறது. கூடவே சேவை வரி வீதத்தை 10%லிருந்து 12% ஆக உயர்த்தியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கைகள் மூலம் சுமார் 18,660 கோடி ரூபாய் அதிக வருமானம் ஈட்டப் போகிறது, அதில் பெரும்பகுதி உழைக்கும் மக்களிடமிருந்து எடுக்கப்படப் போகிறது என்பது தெளிவு. விவசாயிகளுக்கு கொடுக்கும் 3,200 கோடி முழுக்க முழுக்கவும் இப்படி அரசாங்கம் திரும்ப எடுத்துக் கொள்வதாகி விடும்.

மறைமுக வரிகள் மூலம் ரூ 45,940 கோடி அதிக வருமானம் வரப் போகிறது.

ஏன் இப்படி? கடுமையான நிதி பற்றாக்குறை காலத்திலும் தனியார் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை, பணக்காரர்களுக்கு வரிக் குறைப்பு, பரந்து பட்ட மக்கள் மடியில் கை வைப்பு என்று அரசாங்கம் செயல்படுவது ஏன்?

ரிலையன்ஸ் செல்பேசி சேவை பயன்படுத்தும் ஒருவருக்கு 1000 ரூபாய் பில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் ரிலையன்சுக்கு 300 ரூபாய் லாபம் என்றால் ரிலையன்ஸ் கட்ட வேண்டிய வரித் தொகை 30% என்ற வருமான வரி வீதத்தில் அதிகபட்சம் 90 ரூபாய். அதே பில்லுக்கு சேவை வரி 10% விதிக்கப்பட்டால் வாடிக்கையாளர் கட்ட வேண்டிய கூடுதல் தொகை மூலம் அரசுக்கு வருமானமாக வருவது 100 ரூபாய்.

சேவை வரி 12% ஆக உயர்த்தப்பட்டால் வாடிக்கையாளர் 120 ரூபாய் வரி கட்ட வேண்டியிருக்கும் (20 ரூபாய் அதிகம்). ரிலையன்சின் லாபத்திலிருந்து 30 ரூபாய் கூடுதல் வரி வசூலிக்க வேண்டுமானால் வருமான வரி வீதத்தை 40%ஆக உயர்த்த வேண்டும். அப்போதுதான் 120 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

சேவை வரி உயர்த்தப்பட்டு 30 ரூபாய் அதிகம் செலவு ஆனாலும் தொழிலாளி தொலைபேசி பயன்படுத்துவதை நிறுத்தி விடப் போவதில்லை. 500 ரூபாய் கூலி பெறும் ஒருவர் சாப்பிடும் பொருட்கள் வாங்க வேண்டும், குழந்தைகளுக்கு துணி எடுக்க வேண்டும், கூலி வேலைக்கு கூப்பிடுபவர்களுடன் தொடர்பை பேண செல்பேசி வைத்திருக்க வேண்டும்.  அந்த செலவுகளின் மீது வரி கூட்டப்பட்டாலும் அவர் செலவு செய்வதை குறைத்துக் கொள்ளப் போவதில்லை. அதனால் அரசாங்கத்துக்கு வருமானம் அதிகமாவது தவறப் போவதில்லை.

ஆனால், வருமான வரியை உயர்த்தினால் 'இந்தியாவில் வரி வீதம் அதிகம், அதனால் தொழில் முனைவுக்கு ஊக்கம் இல்லை' என்று அதியமான் போன்ற பொருளியலாளர்கள் கூக்குரலிடுவார்கள், அம்பானியும், தான் குவித்து வைத்திருக்கும் மூலதனத்தை டிம்பக்டூவுக்கு கொண்டு போய் விடுவார்.

எனவே, தனியார் முதலாளிகள் முதலீடு செய்வதற்கு சாதகமான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இல்லை என்றால் அவர்கள் பணத்தை சுவிஸ் வங்கிக்கு மாற்றி விட்டு உலகச் சுற்றுலா போய் விடுவார்கள். இதைத்தான் இப்படி சொல்கிறார் நிதி அமைச்சர்,

"சென்ற ஆண்டின் வளர்ச்சி குறைவுக்கு முக்கிய காரணம் தனியார் முதலீட்டில் ஏற்பட்ட சுணக்கம்தான். கடன் வாங்குவதற்கான வட்டி அதிகரிப்பு, உள்நாட்டு தொழில் முனைவோர் உணர்வு பலவீனமாக இருப்பது இதற்கு காரணமாக இருந்தன."

அப்படிப்பட்டவர்களை தாஜா செய்து முதலீடு செய்ய வைப்பதற்காக வருமான வரி குறைப்பு, வரிச் சலுகைகள், குறைந்த விலையில் நிலம் என்று ஐஸ் வைக்க வேண்டியிருக்கிறது. நாட்டின் கனிம வளங்களை, தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி சேர்த்த பணத்தை முதலீடு செய்ய வைப்பதற்கு, முதலாளிகளுக்கு கேரட் காட்டி ஊக்குவிக்க வேண்டும். உழைத்து உழைத்து தேய்வதற்கு மக்களை கம்பால் குத்தி விரட்ட வேண்டும்.

இதுதான் இன்றைய 'ஜனநாயக' அரசின் கொள்கை.

கட்டுமானத்துறை பணிகளில் பொதுத்துறை-தனியார் துறை கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கும்படி சாத்தியப்பாடு குறைபாடு நிதிஉதவி - Viability Gap Funding (VGF) திட்டம் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டம் இனிமேல் பாசனத் துறை (அணைகள், கால்வாய்கள், தடுப்பணைகள்), விவசாய சந்தைகளில் பொது வசதிகள், மண் பரிசோதனை ஆய்வுக் கூடங்கள், உரத் துறையில் முதலீடு போன்றவற்றுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

அதாவது இந்த துறைகளில் தனியார் துறையினர் 'வேண்டா வெறுப்பாக' முதலீடு செய்வதற்கு அரசாங்கம் நிதி (20% முதல் 40% வரை) உதவி செய்யுமாம். அந்த நிதி உதவியை பெற்று வங்கிகளில் கடன் வாங்கி தனியார் நிறுவனங்கள் திட்டங்களில் ஈடுபடுவார்களாம். வரும் லாபத்தை தமது சாதனையாக ஒதுக்கிக் கொள்வார்களாம்.


ஒளிரும் இந்தியா - 1

Sunday, April 8, 2012

ஒளிரும் இந்தியா - 1

ஆண்டு தோறும் மத்திய அரசும் மாநில அரசுகளும் அறிவிக்கும் திட்டங்களையும், விளம்பரப்படுத்தும் சாதனைகளையும் மட்டும் வைத்துப் பார்த்தால், இந்திய மக்கள் அனைவரும் வேலை செய்யாமல் வீட்டில் தூங்கிக் கொண்டே வாழலாம் என்று தோன்றும்.
 • ரேஷனில் இலவச அரிசி, 
 • பொழுபோக்குக்கு கலைஞர் தொலைக்காட்சி, 
 • அரைப்பதற்கு மிக்சி, கிரைண்டர், 
 • புழுங்கினால் போட்டுக் கொள்ள மின்விசிறி, 
 • அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு இலவசச் சத்துணவு, இலவச சீருடை, இலவச புத்தகங்கள், 
 • மேல்நிலை பள்ளிக்கு வந்து விட்டால் மிதி வண்டி, 
 • மடிக்கணினி
யாருக்கும் எந்த கஷ்டமும் கிடையாது.

இவை அனைத்தும் மக்களின் உழைப்பை உறிஞ்சும் வலி தெரியாமல் இருக்க கொடுக்கப்படும் போதை மருந்துகள் என்று சொல்லாமல் சொல்கிறது 2012-13ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்.

1991ல் ஆரம்பித்த தனியார் மயம், தாராள மயம், உலக மயமாக்கலுக்குப் பிறகு நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் வந்து குவிந்து, இந்திய தொழிலதிபர்கள் புதிய தொழில்களை ஆரம்பித்து இந்திய பொருளாதாரம் தலை தெறிக்கும் வேகத்தில் வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தால், இந்தியாவில் தேனாறும் பாலாறும் ஓடுவதாகத்தான் தோன்றும்.

"உலக பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கவும், நிலை கொள்ள  முடியாமல் அலையும் பன்னாட்டு மூலதனத்துக்கு ஒரு போக்கிடமாக இந்தியாவை உருவாக்கத்தான் இந்த கொள்கைகள்" 

என்று தனது பட்ஜெட் உரையில் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்  2012-13ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

பட்ஜெட் ஆவணங்கள் மற்றும் இந்திய பொருளாதார சர்வே ஆவணங்களிலிருந்து சில தகவல்களை தெரிந்து கொள்வோம்.

1. விவசாயம், தொழில் துறை, சேவைத் துறை

இந்தியா இன்னமும் ஒரு விவசாய நாடாகவே இருக்கிறது. பெரும்பான்மை மக்கள் (50%க்கும் மேல்) விவசாயத்தை சார்ந்தே வாழ்கிறார்கள். ஆனால் நாட்டின் மொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 1950கள் முதல் தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. 1950-51ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 53 சதவீதமாக இருந்த விவசாயத் துறை 2011-12ல் 13.9% ஆக தேய்ந்திருக்கிறது.

கிராமப்புறங்களில் வேலை செய்பவர்களில் 67.9% பேர் விவசாயத் துறையில் வேலை செய்கிறார்கள்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் துறை வாரியான பங்கீடு
ஆண்டு விவசாயம் தொழில் சேவை
1950-51 53.1 16.6 30.3
1960-61 48.7 20.5 30.8
1970-71 42.3 24.0 33.8
1980-81 36.1 25.9 38.0
1990-91 29.6 27.7 42.7
2000-01 22.3 27.3 50.4
2010-11 QE 14.5 27.8 57.7
2011-12 AE 13.9 27.0 59.0

இதன் பொருள் என்ன என்று பார்ப்போம்.

ஒரு பொருளாதார அமைப்பு என்ற வட்டத்தில் உற்பத்தி ஒரு பாதி, நுகர்வு என்ற இன்னொரு பாதி அதை முழுமை செய்கிறது. இன்றைய அமைப்பில் இந்த இரண்டையும் இணைப்பது சந்தை மற்றும் பணம். 50% மக்களின் உழைப்பில் உருவாகும் உற்பத்திக்கு 13.9% பணம் மட்டுமே சந்தையில் கிடைக்கிறது.

சுமார் 22% மக்கள் பங்கு பெறும் சேவைத்துறையில் 59% பணம் புழங்குகிறது.  சேவைத் துறை என்றால் எந்தெந்த துறைகள்?

 1. வர்த்தகம், ஹோட்டல்கள், உணவு விடுதிகள் - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.9%
 2. நிதி மேலாண்மை, காப்பீடு, ரியல் எஸ்டேட், தொழில் துறை சேவைகள் - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.4%

ஒவ்வொரு விவசாயியும் சந்தையில் ஒரு பொருளை வாங்கப் போகும் போது கையில் இருக்கும் பணத்தின் அளவு சுமார் 70 காசுகள் (14/50), சேவைத் துறையில் வேலை செய்யும் ஒருவர் கையில் இருக்கும் பணம் சுமார் 3 ரூபாய்கள். விவசாயி ஏழையாகத்தான் வாழ முடியும் என்பது தெளிவு.

இந்தப் போக்கு 1950களில் ஆரம்பித்து கழுத்தை இறுக்கும் கயிறு போல  பெரும்பான்மை மக்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வாக முதலாளித்துவ அறிஞர்கள் சொல்லும், விவசாயத்தில் ஈடுபடும் மக்களை வேறு துறைகளுக்கு திருப்பி விட வேண்டும் என்ற திட்டமும் இந்தியாவில் செயல்படுத்தப்படவில்லை.

விவசாயத் துறையில் தேய்வு ஏற்படும் பகுதிகளில், உள்ளூர் தொழில்கள் வளர்ந்தால் விவசாய தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் வேலைக்கு போக முடியும். அவர்கள் யூனியனாக ஒன்று சேர்ந்து உறுதியாக வேலை செய்ய முடியும் தொழில் துறையில் வேலை வாய்ப்புகள் பெருமளவு குறைந்திருக்கின்றன.

1990-91க்குப் பிறகு தொழில் துறையின் பங்கு வளரவேயில்லை. தமக்கு வாழ்வாதாரத்தை அழித்து வந்த நிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு சந்தையின் சுனாமி போன்ற விசைகளால் தூக்கி எறியப்படும் ஆயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் நகரங்களுக்கு படை எடுக்க வைக்கப்பட்டு உதிரி பாட்டாளிகளாக மாற்றப்பட்டுள்ளார்கள்.

விவசாயத்திலிருந்து எந்த திட்டமிடலும் இல்லாமல், சுனாமியில் தூக்கி எறியப்படுபவர்கள் போல நகரங்களுக்கு நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ வந்து சேருபவர்கள், சேரிகளிலும், சாலை ஓரங்களிலும் வசிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஆண்டுக்கு சில மாதங்கள் மட்டும் ஊருக்குப் போய் விவசாய வேலைகளில் ஈடுபட்டு மற்ற நேரங்களில் நகரங்களை சார்ந்து இருக்கும் விவசாயிகள் இந்தியாவில் கோடிக்கணக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு விவசாயி என்ற முறையிலான வாழ்வாதாரமும் இல்லை, தொழிலாளி என்ற முறையிலான பாதுகாப்பும் இல்லை.

பீகார், உத்தர பிரதேசம், ஒரிசா, வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வந்து சென்னையில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளிகள்தான் வளரும் இந்தியாவின் சின்னங்கள்.