Wednesday, June 12, 2019

இந்தியா ஜி.டி.பி வளர்ச்சி புள்ளிவிபரத்தில் குளறுபடி - அம்பலப்படுத்தும் அரவிந்த் சுப்பிரமணியன்

இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிபரங்கள் தவறு என்று நிறுவும் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

2001-02ம் ஆண்டு முதல் 2017-18 வரை இந்தியாவின் ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சி வீத புள்ளிவிபரங்கள் பற்றிய ஆய்வு. இந்தப் புள்ளிவிபரங்கள் சரி பார்ப்பதற்கு ஜி.டி.பி புள்ளிவிபரங்களிலிருந்து தனியாக சுயேச்சையாக திரட்டப்படும் 17 பிற கணக்கீடுகளை எடுத்துக் கொள்கிறார்.
  • மின்சார நுகர்வு, 
  • பெட்ரோலியம், 
  • ஸ்டீல், 
  • சிமென்ட், 
  • ஒட்டு மொத்த கடன், 
  • தொழில்துறைக்கு கடன், 
  • ஏற்றுமதி, 
  • இறக்குமதி, 
  • இரு சக்கர வாகன விற்பனை, 
  • வணிக வாகனங்கள் விற்பனை, 
  • கார் விற்பனை, 
  • டிராக்டர் விற்பனை, 
  • விமான பயணிகள் போக்குவரத்து, 
  • வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை, 
  • ரயில்வே சரக்கு போக்குவரத்து, 
  • தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் (நுகர்வு சாதனங்கள், உற்பத்தி சாதனங்கள்), போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார். 
2001 முதல் 2011 வரையில் ஜி.டி.பி வளர்ச்சி தொடர்பான புள்ளிவிபரங்களும், இந்த பொருளாதார செயல்பாடுகள் பற்றிய இந்த 17 கணக்கீடுகளும் ஒத்திசைவாக உள்ளன. அதாவது, ஜி.டி.பி வளர்ச்சி அதிகமாக இருந்த ஆண்டுகளில் மின்சார நுகர்வு, கார் விற்பனை, டூவீலர் விற்பனை முதலானவையும் அதிகமாக இருந்திருக்கின்றன. ஜி.டி.பி வளர்ச்சி குறைந்த ஆண்டுகளில் இந்தக் குறியீடுகள் வீழ்ச்சியடைந்திருக்கின்றன.

ஆனால், 2011-12 முதல் 2016-17 வரையிலான கால கட்டத்தில் ஜி.டி.பி புள்ளிவிபரங்களுக்கும் பிற வளர்ச்சி தொடர்பான குறியீட்டு எண்களுக்கும் இடையேயான ஒத்திசைவு குலைந்து போயிருக்கிறது. ஜி.டி.பி வளர்ச்சி அதிகரிப்பதாக காட்டும் போது, மற்ற கணக்கீடுகள் எல்லாம் வீழ்ச்சியடைந்திருக்கின்றன.

2011-க்கு முன்பு ஜி.டி.பி-ல் சேர்க்கப்படும் உற்பத்தித் துறை மதிப்புக் கூடுதல், தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண்ணுடனும், உற்பத்தித் துறை ஏற்றுமதியுடனும் ஒத்திசைந்திருந்தது. 2011-க்குப் பிறகு இந்த உறவு எதிரெதிர் திசையில் சென்றிருக்கிறது.

  • சராசரி ஏற்றுமதி வளர்ச்சி வீதம் 2001-2011 வரை 14.5% ஆக இருந்தது, 2011-க்குப் பிறகு வெறும் 3.4% ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது. 
  • இறக்குமதி வளர்ச்சி வீதம் 2011-க்கு முன்பு ஆண்டுக்கு 15.6% ஆக இருந்தது அதற்குப் பிறகு 2.5% ஆகக் குறைந்திருக்கிறது.
     
  • வணிக வாகன உற்பத்தி 2011-க்கு முன்பு ஆண்டுக்கு 19.11% அதிகரித்திருக்கிறது, 2011-க்குப் பிறகோ 0.1% குறைந்திருக்கிறது. 
  •  
மின்சார நுகர்வும், பெட்ரோல் நுகர்வும் தவிர வேறு ஒவ்வொரு கணக்கீடுகளிலும் இவ்வாறு ஜி.டி.பி வளர்ச்சி எண்ணுக்கு அடிப்படையான இந்த கணக்கீடுகள், ஜி.டி.பி வளர்ச்சிக்கு பொருத்தமான வளர்ச்சி பெறாமல் தேய்ந்து போயிருக்கின்றன.

இது முதல் பார்வையில் இந்தியாவின் ஜி.டி.பி கணக்கீடுகளில் பிரச்சனை இருப்பதைத் தெரிவிக்கிறது என்று சொல்லும் அந்த ஆய்வறிக்கை, பின்னர் இந்தியாவைப் போன்ற வேறு சில நாடுகளின் ஜி.டி.பி வளர்ச்சிக்கும் இந்திய ஜி.டி.பி வளர்ச்சிக்கும் இடையேயான உறவை பரிசீலிக்கிறது. இதற்கு கடன், ஏற்றுமதி, இறக்குமதி, மின் நுகர்வு ஆகிய அளவீடுகளை எடுத்துக் கொள்கிறது.

2001-2011 ஆண்டு காலகட்டத்தில் இந்த ஜி.டி.பி வளர்ச்சி வீதங்கள் ஒத்திசைந்து இருக்கின்றன. இந்திய வளர்ச்சி வேறு எந்த வகையிலும் தனிச்சிறப்பானதாக இல்லை. ஆனால், 2011-க்கு பிறகு இந்திய வளர்ச்சி வீதம் பிற பொருளாதாரங்களின் வளர்ச்சி வீதங்களிலிருந்து பெருமளவு விலகிச் சென்றிருக்கிறது.

2011-ல் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பெரிய அளவு மாற்றம் ஜி.டி.பி கணக்கிடும் முறையில் செய்த மாற்றம் மட்டுமே. மற்றபடி அடிப்படையான எந்த பெரு வீத மாற்றமும் நடக்கவில்லை. உதாரணமாக, 1991ல் தொடங்கி வைக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் போலவோ, 2016-ல் நிகழ்ந்த பண மதிப்பு நீக்கம், அல்லது 2017-ல் ஜி.எஸ்.டி போலவோ பொருளாதாரத்தின் கட்டமைப்பை புரட்சிகரமாக மாற்றியமைப்பதாக வேறு எதுவும் நடக்கவில்லை.

எனவே, 2011-லிருந்து 2016 வரையிலான இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி வீதம் ஆண்டுக்கு சுமார் 2.5% மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்று இந்த ஆய்வறிக்கை முடிவு செய்கிறது. இந்தியாவின் வளர்ச்சி வீதம் 4.5% (3.5% முதல் 5.5% வரை) ஆக இருந்திருக்க வேண்டுமே தவிர, அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் சொல்லும் 7% இல்லை என்கிறது.

2011-ல் மதிப்புக் கூடுதலை கணக்கிடுவதற்கு அளவு அடிப்படையில் இல்லாமல் நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களில் இருந்து மதிப்பு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது ஒரு முக்கியமான செயல்முறை மாற்றமாக இருக்கிறது. இதன் விளைவாகத்தான் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் மிகையாக கணக்கிடப்பட்டிருக்கிறது என்கிறார்.

இது தொடர்பாக ஆய்வு செய்ய இந்திய அதிகாரிகள், சர்வதேச நிபுணர்கள், இந்திய நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அரவிந்த் சுப்ரமணியன் வலியுறுத்துகிறார்.

Wednesday, March 27, 2019

இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி

“ஒரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில் வெளியாகியிருந்தது. மணிந்தர் தபஸ் என்பவர் எழுதியிருந்தார்.

தேர்தலில் மோடி வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாவதால் டாலர் முதலீடு அதிகரிக்கிறது என்றும் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே புல்வாமாவுக்குப் பிறகு பதற்றம் அதிகரித்திருப்பதாலும் ரூபாய் மதிப்பு அதிகரிக்கிறது என்றும் இணைக்கப்பட்ட புளூம்பெர்க் செய்தியிலிருந்து காப்பி பேஸ்ட் செய்திருந்தார். மோடி ஆட்சியில் இருந்த போதே ரூபாய் மதிப்பு ஏன் வீழ்ந்தது என்று விளக்கவில்லை. புல்வாமா தாக்குதலுக்கும் ரூபாய் மதிப்புக்கும் என்ன தொடர்பு என்றால் இந்தப் போர் பதற்றத்தின் காரணமாக மோடி ஜெயிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறதாம். அதாவது, ஒரே ஒரு காரணம்தான் அவரது கண்டுபிடிப்பு. மோடி தேர்தலில் ஜெயிக்கப் போகிறார், வெளிநாட்டுக் காரர்கள் எல்லாம் புல்லரித்துப் போய் டாலரை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். 5 வருஷமா எங்க போனாங்கன்னு கேட்க வேண்டும்!

இணைக்கப்பட்ட புளூம்பெர்க் செய்தி -  India's Rupee Just Went From Asia's Worst to Best Currency-ல் சில புள்ளிவிபரங்களைக் கொடுத்திருந்தனர். மார்ச் 18 அன்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் $330 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியிருக்கின்றனர். ஒரே நாளில் உள்ள வந்த இந்த டாலர் அளவு அந்த தேதி வரையில் இந்த ஆண்டின் முதல் இரண்டரை மாதங்களில் வந்த டாலர் வரத்தக்கு இணையானது. அன்னிய முதலீட்டாளர்கள் தமது கடன் பத்திரங்களின் கையிருப்பை $140 கோடி டாலர் அளவுக்கு உயர்த்தியிருக்கின்றனர்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், இந்திய ரூபாயின் மதிப்பை குறுகிய காலத்தில் ஏற்றுவதோ, இறக்குவதோ பங்குச் சந்தையிலும், கடன் பத்திரச் சந்தையிலும் அன்னிய நிதி நிறுவனங்களின் வரத்தும் போக்கும்தான்.

கடந்த ஒரு மாதமாக அதிகமாக டாலர் இந்தியச் சந்தைகளுக்குள் வருவதற்கு வேறு என்ன காரணம்?

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி வீதங்களை உயர்த்தப் போவதில்லை என்று அறிவித்திருப்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பங்கு/கடன் சந்தைகளில் டாலர் வரத்தை அதிகரிக்கும் என்று சொல்கிறது எகனாமிக் டைம்ஸ் செய்தி. இது புளூம்பெர்க் குவிண்ட் செய்தியிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தனது கைவசம் இருக்கும் அரசு கடன் பத்திரங்களை விற்பதை செப்டம்பரில் முடித்துக் கொள்வதாகவும் அறிவித்திருக்கிறது. இந்த இரண்டும் சேர்ந்து அமெரிக்க டாலருக்கான வட்டி வீதத்தை குறைத்திருக்கிறது. எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக லாபத்தைத் தேடி பிற நாட்டுச் சந்தைகளில் முதலீடு செய்ய ஆரம்பிப்பார்கள்.

இரண்டாவதாக, இந்திய ரிசர்வ் வங்கியின் டாலர் ஸ்வாப் வசதியை பயன்படுத்துவதற்காக வங்கிகள் டாலரை இங்கு கொண்டு வருகின்றன என்ற செய்தி. இந்த ஸ்வாப் முறையின் கீழ் ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளிடமிருந்து டாலர்களை வாங்கி ரூபாயை விற்க முன் வந்திருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டாலர்களை குறிப்பிட்ட ரூபாய் மதிப்பில் (இப்போதைய மதிப்பை விட அதிகமாக இருக்கும்) வங்கிகளுக்கு திருப்பித் தரும். எவ்வளவு கூடுதல் விலை வங்கிகள் கேட்கின்றன என்பது மார்ச் 26 அன்று ஏலத்தின் மூலம் தீர்மானிக்கப்படும்.

அதாவது, 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு டாலருக்கு எத்தனை ரூபாய் என்று பந்தயம் கட்ட வேண்டும்.

இந்தத் திட்டத்தின்படி ரிசர்வ் வங்கி சுமார் $500 கோடி வங்கிகளிடமிருந்து வாங்கவிருக்கிறது. அதற்கு பதிலாக ரூ 35,000 கூடுதல் ரூபாய் வங்கிகளிடம் சேரும்.

இந்த டாலர் ஸ்வாப் முறையை ரிசர்வ் வங்கி முதல் முறையாக பயன்படுத்துகிறது.

வங்கித் துறையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கு ரிசர்வ் வங்கி பின்பற்றும் வழக்கமான நடைமுறை, சந்தையில் (வங்கிகளிடமிருந்து) இருந்து அவை கைவசம் வைத்திருக்கும் அரசு கடன் பத்திரங்களை பணம் கொடுத்து வாங்குவது. அதன் மூலம் வங்கிகளின் பணக்கையிருப்பு அதிகரிக்கும்.

அதைச் செய்யாமல் இந்த புதிய உத்தியை ரிசர்வ் வங்கி ஏன் பயன்படுத்துகிறது, என்று கேள்வி.

ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு ஏற்கனவே ரூ 2.9 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களை வங்கிகளிடமிருந்து வாங்கியிருக்கிறது.  இவ்வாறு கடன் பத்திரங்களை வாங்குவதன் மூலம் அவற்றின் வட்டி வீதம் குறைகிறது. எனவே, அரசு புதிய கடன் பத்திரங்களை வெளியிடுவதை அது எளிதாக்குகிறது. இதை ஒரு வரம்புக்குள் வைக்க ரிசர்வ் வங்கி விரும்புவதால் மேலும் கடன் பத்திரங்களை வாங்க விரும்பாமல் இருக்கலாம்.

வங்கிகள் தமது வைப்புத் தொகைகளின் குறிப்பிட்ட சதவீதத்தை அரசுக் கடன் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைகளில் ஒன்று. இப்போது வங்கிகளின் வைப்புத் தொகையில் சராசரி 27.9% அரசு கடன் பத்திரங்களாக அவற்றிடம் உள்ளது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருக்கும்  19.25%-ஐ விடக் கணிசமாக அதிகம்.

மேலும், எதிர்கால தேதியிட்டு பெரும் அளவிலான டாலர்களை விற்க முன்வருவதன் மூலம் எதிர்கால செலாவணியின் பிரீமியத்தை குறைக்க முயற்சிக்கிறது, ரிசர்வ் வங்கி. இதன் விளைவாக கடன் வாங்குபவர்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்த குறை பிரீமியத்தால் ஈர்க்கப்பட்டு அதிக அளவிலான டாலர் இந்தியச் சந்தைக்குள் பாயும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கலாம். இதிலும் வரும் டாலர் ஒரு கட்டத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் போதோ, லாபமாகவோ திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். எனவே, இது ரூபாயின் மதிப்பை நீண்ட கால நோக்கில் அதிகரித்து விடப் போவதில்லை.

மூன்றாவதாக, குறுகிய கால நோக்கில் (மேலே சொன்ன காரணங்களால்) ரூபாய் மதிப்பு அதிகரிப்பதை ரிசர்வ் வங்கி விரும்பவில்லை. இவ்வாறு $500 கோடி மதிப்பிலான டாலரை வாங்குவதன் மூலம் ரூபாய் மதிப்பு அதிகரிப்பை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆதாரங்கள் எதுவும் இல்லாத ஒரு காரணி உள்ளது. இந்தியத் தேர்தலை ஒட்டி வெளிநாடுகளில் தமது கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகளும், அவர்களது பினாமி நிறுவனங்களும் அதைச் செலவழிப்பதற்காக பங்குச் சந்தை வழியாக நாட்டுக்குள் கொண்டு வருவது நடந்து கொண்டிருக்கலாம்.

உண்மையில் நமது நாட்டுப் பணத்தின் மதிப்பு உயர வேண்டுமானால், நாம் அதிக மதிப்பிலான பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்ய வேண்டும். அது சர்வதேச அளவில் நமது வர்த்தக வலிமையை அதிகரிக்க வேண்டும்.

அது வரை, இது போல கடன் வாங்கி கல்யாணம் செய்வது போல, மேலும் மேலும் கடன் சுழலில் சிக்கி தவிக்க வேண்டியதுதான்.

Tuesday, March 26, 2019

இந்திய ரூபாய் சர்வதேச நாணயம் ஆக எப்போது மாறும்?

ரு காகிதம் அல்லது உலோகத் துண்டு எப்போது பணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது?
  • கட்டிடத் தொழிலாளி ஒருவர் வார இறுதியில் தனது ஒருவார உழைப்புக்குக் கூலியாக ரூபாய் நோட்டுகளை ஏன் வாங்கிக் கொள்ள சம்மதிக்கிறார்?
  • தனது ஒரு மாத உழைப்புக்கு ஊதியமாக மாத இறுதியில் வங்கிக் கணக்கில் ரூபாய் வரவு வைக்கப்படுவதை ஒரு ஐ.டி ஊழியர் ஏன் ஏற்றுக் கொள்கிறார். 
அவர்கள் தமக்குக் கிடைக்கும் ரூபாயை எப்படி பயன்படுத்துகின்றனர்? அந்தப் பணத்தை பயன்படுத்தி அவர்கள் தமக்குத் தேவையான பொருட்களையும், சேவைகளையும் வாங்க வேண்டும்; சக குடிமக்களும், நிறுவனங்களும் தாம் உற்பத்தி செய்த பொருட்களையும், சேவைகளையும் (கூலியாக/சம்பளமாக ஈட்டிய) ரூபாயை பெற்றுக் கொண்டு விற்பதற்கு  தயாராக இருப்பார்கள் என்ற நம்பிக்கைதான் அவர்களை ரூபாயை பணமாக ஏற்றுக் கொள்ள வைக்கிறது.

இந்த நம்பிக்கை நாடு தழுவிய அளவில் செயல்படுவதற்கு நாட்டு அரசின் அங்கீகாரமும், அரசின் நம்பகத்தன்மையும், வலிமையும் அவசியம். போலி ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படாமல் தடுப்பதற்கான போலீஸ் வலிமை, தேவைக்கு அதிகமாக நோட்டுகளை வெளியிட்டு விடாத பொறுப்பு இவை அரசுக்கு இருக்க வேண்டும்.

அது இல்லாமல் போகும் போது ஜிம்பாப்வேயில் 2000-2009 வரையிலும், சீனாவில் 1940-களிலும், ஜெர்மனியில் 1920களிலும், இப்போது சமீபத்தில் வெனிசுலாவிலும் நிகழ்ந்தது போல நாட்டின் பணம் மதிப்பை இழந்து விடும். இறுதியில் அந்தப் பழைய பணத்தை கைவிட்டு புதிய பணத்தை நாட்டு அரசு வெளியிடுவதாகவோ, அல்லது முற்றிலும் வெளிநாட்டு நாணயம் ஒன்றை பயன்படுத்த ஆரம்பிப்பதாகவோ முடிகிறது.

இந்தப் பின்னணியில் ஒரு நாட்டின் நாணயம் சர்வதேச நாணயமாக எப்படி ஆக முடியும் என்று பார்க்கலாம்.

ஒன்று, அந்தப் பணத்தை வைத்து தம் நாட்டுக்குத் தேவையான பொருட்களையும், சேவைகளையும் பிற நாடுகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று எல்லா நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்வதற்கு நாணயம் வெளியிடும் நாட்டின் பொருளாதார வலிமை அடிப்படையாக இருக்கிறது.

பொருளாதார ரீதியாக உலகம் முழுவதும் காலனிய அதிகாரமாக கால் பதித்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பவுண்ட் ஸ்டெர்லிங் 19/20-ம் நூற்றாண்டுகளிலும், அதே போல உலகின் மீது ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க டாலர் 20/21-ம் நூற்றாண்டிலும் உலகப் பொதுப்பணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

உலகப் பொதுப்பணத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாட்டு அரசுக்கு அதன் மூலம் பல ஆதாயங்கள் கிடைக்கின்றன. ஆனால் அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கான பொறுப்பும் அந்த நாட்டுக்கு இருக்கிறது.
  • போலி டாலர்கள் அச்சிடப்படாமல் தடுக்க வேண்டும்.
  • வங்கித் துறையை நம்பகமானதாக கட்டிக் காக்க வேண்டும்.
  • டாலரின் முதன்மை இடத்தைத் தக்க வைப்பதற்கு ஏற்ற பொருளாதார நடவடிக்கைகளை உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் எடுக்க வேண்டும்.
  • அது மட்டும் போதாது, சர்வதேச நாணயமாக தக்க வைத்துக் கொள்வதற்கான சர்வதேச அரசியல் ராணுவ நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதற்கேற்ற அரசியல், ராணுவ வலிமை இருக்க வேண்டும்.
ஆனால், இறுதிக் கணக்கில் தீர்மானகரமானதாக அமைவது அந்த நாட்டுக்குள் நடக்கும் பொருளாதார உற்பத்தி, மதிப்பு சேர்க்கும் நடவடிக்கைதான்.

அதனால்தான் சுமார் 40 ஆண்டுகள் உலகின் உற்பத்திக் களமாக செயல்பட்ட சீனாவின் யுவான் இப்போது பல நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படும் சர்வதேச நாணயமாக உருவெடுத்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு சவால் விட முயற்சிக்கிறது.

இது போல இந்திய ரூபாய் சர்வதேச அரங்கில் ஏற்றுக் கொள்ளப்படுவதாக மாற வேண்டுமானால், இந்தியாவின் பொருளாதாரம் மனித சக்தி ரீதியாகவும் சரி, தொழில்நுட்ப ரீதியாகவும் சரி, இயற்கை வளங்களை பயன்படுத்துவதிலும் சரி சுயேச்சையாக செயல்பட வேண்டும். நமது பொருளாதார செயல்பாடு நம் உள்நாட்டு பொருளாதாரத்தை வளப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.

மாறாக, வெளிநாட்டு முதலீடு, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி என்ற சார்பு நிலை முதன்மையாக இருந்தால் இந்திய நாணயம் பிற நாட்டு நாணயங்களுக்குக் கீழ்ப்பட்ட இரண்டாம் நிலையிலேயே இருந்து வரும்.

ஆங்கிலத்தில் இந்தக் கேள்விக்கு விடை

Sunday, March 24, 2019

ஜி.டி.பி என்றால் என்ன? எப்படி கணக்கிடப்படுகிறது?

ந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எப்படி கணக்கிடப்படுகிறது என்று ஒரு கேள்வி.

மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டில் சந்தையில் நிகழும் பொருளாதார பரிவர்த்தனைகளின் மதிப்பை கணக்கிடுவது. அதன் மூலம் அந்த நாட்டில் குறிப்பிட்ட ஆண்டில் புதிதாக சேர்க்கப்பட்ட மதிப்பு எவ்வளவு என்பதை கண்டறிவது. இதன் மூலம் நாடு முன்னேறுகிறதா, தேங்குகிறதா, பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நாட்டின் பொருளாதார வாழ்வு எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

இது எப்படி கணக்கிடப்படுகிறது?

கூலி, சம்பளம், லாபம், வாடகை என்று பல வகைகளில் வருமானம் பெறும் தனிநபர்கள் அவற்றை பயன்படுத்தி தமக்குத் தேவையான பொருட்களையும், சேவைகளையும் சந்தையில் வாங்குவது ஒரு புறம், இன்னொரு புறம் தானாக உழைத்தோ, வேலைக்கு ஆட்களை வைத்து கூலி கொடுத்தோ அந்த பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்து சந்தையில் விற்கும் வணிக நிறுவனங்கள்/தனிவணிகர்கள்.

இந்த இரண்டும் பரிவர்த்தனையின் இரண்டு பக்கங்கள். இந்தப்பக்கம் கூலி வாங்கி அந்தப் பக்கம் பொருட்களை வாங்க செலவிடுகின்றனர். அந்தப் பக்கம் பொருட்களை விற்றுக் கிடைக்கும் பணத்தை கூலியாக கொடுக்கின்றன வணிக நிறுவனங்கள். இது அடிப்படையானது.

இதற்கு மேல்

2. நிறுவனங்கள் புதிய முதலீட்டுக்காக தங்களுக்குள் வாங்கி/விற்கும் பொருட்கள்/சேவைகள் 3. அரசு வரி விதிப்பது, சம்பளம் கொடுப்பது, சேவைகளை வழங்குவது
4. ஏற்றுமதி/இறக்குமதி

இவற்றையும் சேர்த்து கணக்கிட்டால் நாட்டில் ஒரு ஆண்டில் நிகழ்ந்த மொத்த பொருளாதார செயல்பாடுகளையும் தொகுத்துக் கொள்ள முடியும்.
இதை கணக்கிடுவதற்கு வருவாய் முறை (கூலி, சம்பளம், வட்டி, லாபம், வாடகை என்று அனைத்து வருமானங்களையும் கணக்கெடுப்பது), உற்பத்தி முறை (உற்பத்தி ஆகும் பொருட்களின் மதிப்பை அவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுத்தும் உள்ளீட்டுப் பொருட்களின் மதிப்பிலிருந்து கழித்து உற்பத்தியில் நிகழ்ந்த மதிப்புக் கூடுதலை கணக்கிடுதல்), செலவுகள் முறை (அனைத்து செலவினங்களையும் கணக்கெடுப்பு எடுத்த கூட்டுவது), என்று மூன்று முறைகளை பின்பற்றுகின்றனர். இந்த மூன்று வழிகளிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரே அளவினதாகக் கிடைக்க வேண்டும். இந்தத் தரவுகளை திரட்டுவதிலும், கணக்கிடுவதிலும் பல விடுபடுதல்கள், கூடுதல் குறைகள் இருக்க இவற்றை சரிக்கட்டி கணக்கிடுவது அரசின் முக்கியமான வேலையாக இருக்கிறது.

இதில் சொந்த பயன்பாட்டுக்காக செய்யப்படும் வேலைகளான சொந்த குடும்பத்துக்கான சமையல், வீட்டு பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவை, வீட்டுத் தோட்டத்தில் பயிரிடுதல் போன்றவை சேர்க்கப்படுவதில்லை.

சந்தை பொருளாதார நடவடிக்கைகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் அழிவு, கல்வி, மருத்துவம் மறுக்கப்படுவது போன்றவற்றின் எதிர்மறை விளைவுகளையும் இது கணக்கிடுவதில்லை.

இன்னொரு புறம் நமது உற்பத்திப் பொருட்களை அவற்றின் மதிப்பை விடக் குறைந்த விலைக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கிச் சென்று, நாம் அவர்களது உற்பத்திப் பொருட்களை மதிப்பை விட அதிக விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தால், நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதன் உண்மை மதிப்பை விடக் குறைவாக தோன்றும்.


இது பற்றி ஜான் ஸ்மித் எழுதிய ஜி.டி.பி மாயை என்ற கட்டுரையை படிக்கலாம்.
ஆங்கில மூலம் GDP Illusion

இந்தப் பதிவின் ஆங்கில வடிவம் What is GDP? How is the GDP of India calculated?

Thursday, March 21, 2019

மைண்ட்-ட்ரீ மீது காதலாம், தூக்கிப் போகத் துடிக்கும் எல்&டி

மைண்ட்-ட்ரீ என்ற ஐ.டி சேவை நிறுவனத்தின் மீது கண் வைத்திருக்கிறது எல்&டி. ஏற்கனவே, ஒரு ஐ.டி சேவை நிறுவனத்தை நடத்திவரும் எல்&டிக்கு, இதையும் வாங்கிப் போடலாம் என்று நப்பாசை.  கைநிறைய பணம் இருக்கிறது, ஐ.டி சேவைத் துறையில் நல்ல லாபம் கிடைக்கிறது என்று கிடைக்கும் வாய்ப்பை தட்டிச் செல்லப் பார்க்கிறது.

முன்னாள் விப்ரோ துணை சேர்மன் அசோக் சூடா தலைமையில் ஐ.டி துறையில் வேலை அனுபவம் கொண்ட 10 ஊழியர்கள் 1990-களின் இறுதியில் மைண்ட்-ட்ரீ என்ற ஐ.டி சேவை நிறுவனத்தை ஆரம்பித்தனர். அதில் கபே காபி டே-வை தொடங்கியவரான சித்தார்த்தா 6.5% பங்குகளை பெற்றுக் கொண்டார், மைண்ட்-ட்ரீக்கு அலுவலக வசதியை செய்து கொடுத்தார்.

2007-ம் ஆண்டில் மைண்ட்-ட்ரீ $70 கோடி (சுமார் ரூ 3500 கோடி) விற்பனை வருவாயை எட்டியதும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2012-க்குள் $100 கோடி விற்பனையை எட்ட வேண்டும் என்று 2006-ல் இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்தது. காலக்கெடுவை இரண்டு முறை நீட்டித்தும் இந்த ஆண்டு வரை அந்த இலக்கு எட்டப்படவில்லை. 2019 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் விற்பனையில் பாதியை டிஜிட்டல் சேவை வணிகத்தில் துறையில் ஈட்டியிருக்கிறது. நிறுவனத்தின் பங்கு விலை ஜனவரி 2018-க்குப் பிறகு 52% உயர்ந்திருக்கிறது.

இந்நிலையில்தான் சித்தார்த்தா தன் கைவசம் இருக்கும் மைண்ட்-ட்ரீ நிறுவனத்தின் 20% பங்குகளை விற்பதற்கு விரும்புகிறார். சென்ற ஆண்டே மைண்ட்-ட்ரீ இயக்குனர் குழுவில் இருந்து விலகி விட்டு, தான் பங்குகளை யாரிடமாவது விற்கப் போவதாக மைண்ட்-ட்ரீ உரிமையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் பங்குகளை விற்கப் போவதாக பொதுவில் அறிவித்திருக்கிறார். சித்தார்த்தாவின் கபே காபி டே இயக்குனர் குழு இந்தப் பங்கு விற்பனைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. ஸ்டேண்டர்ட் சார்ட்டட் வங்கியிலிருந்து ரூ 3,000 கோடி கடன் பெற்று அந்தப் பங்குகளை அடகு வைத்திருந்த நிறுவனங்களிடமிருந்து அவற்றை மீட்டு விற்பதற்கு வசதியாக ஒரு எஸ்க்ரோ கணக்கில் போட்டு விட்டார், சித்தார்த்தா.

இப்போது எல்&டி நிறுவனம் சித்தார்த்தாவின் 20.3% பங்குகளை ரூ 3,269 கோடிக்கு வாங்கப் போவதாகவும் இன்னும் ரூ 7,464 கோடி வரை செலவழித்து சுமார் 46% (31%) பங்குகளை பிற பங்குதாரர்களிடமிருந்து வாங்க முன்வருவதாகவும் மார்ச் 18-ம் தேதி அறிவித்திருக்கிறது. இவ்வாறு மைண்ட்-ட்ரீயில் தனது பங்கு கையிருப்பை 66.32% ஆக உயர்த்துவதற்கு எல்&டி ரூ 11,000 கோடி செலவளிக்க திட்டமிட்டிருக்கிறது.

இடது புறம் எல்&டி தரப்பு, வலது புறம் மைண்ட்-ட்ரீ போராளிகள் (படம் : நன்றி எகனாமிக் டைம்ஸ்)

இரண்டு நிறுவனங்களும் இணையும்போது ஒன்றையொன்று வலுப்படுத்துவதாக அமையும் என்கிறது எல்&டி. ஆனால், மைண்ட்-ட்ரீயின் உரிமையாளர்கள் கிருஷ்ணகுமார் நடராஜன், என்.எஸ் பார்த்தசாரதி, ரோஸ்தோவ் ராவணன், சுப்ரதோ பாக்சி அதை எல்&டியிடம் விற்க விரும்பவில்லை. எல்.&டியின் இந்தத் தாக்குதலை எதிர் கொள்ள ஒடிசா பணித்திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக இருந்த பாக்சி பதவியை ராஜினாமா செய்து விட்டு பெங்களூருவுக்கு திரும்பி மைண்ட்-ட்ரீயில் மீண்டும் சேர்ந்திருக்கிறார்.

இந்த இரண்டு நிறுவனங்களின் நிதி நிலை எப்படி இருக்கிறது?

எல்&டி குழுமத்தின் மொத்த விற்பனையில் 75% பொறியியல், 5% உற்பத்தி, 15% ஐ.டி முதலாள சேவைத் துறையில் கிடைக்கிறது. ஐ.டி உள்ளிட்ட சேவைத் துறையில் கிடைக்கும் நிகர லாபம் 15-16% மற்ற துறைகளை விட அதிகம். எனவே, ஆண்டு தோறும் குவிக்கும் லாபத்தை புதிதாக முதலீடு செய்ய இந்தத் துறையில் வாய்ப்புகளை தேடுகிறது.

2019 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் (ஏப்ரல் 2018 முதல் டிசம்பர் 2018 வரை)

விற்பனை நிகர லாபம் பணக் கையிருப்பு
எல்&டி ஐ.டி 6,959.80 1,136.90 2,032.80
எல்&டி குழுமம் 95,323.20 4,878.80 23,900.00
மைண்ட்-ட்ரீ 5,182.10 555.70 973.60

மைண்ட்-ட்ரீ எல்&டி குழுமத்தின் முன்பு ஒரு சின்ன ஆளாக உள்ளது. தனது ரூ 23,900 கோடி பணக்கையிருப்பை எங்கு போட்டு லாபம் ஈட்டுவது என்று தேடி அலைகிறது. மைண்ட்-ட்ரீ பங்குகளை வாங்கி அதன் நிர்வாகத்தை கைப்பற்றி விட்டால் கணிசமாக லாபம் ஈட்ட முடியும் என்று நினைக்கிறது.

ஆனால், மைண்ட்-ட்ரீ முதலாளிகள் எல்&டியிடம் போய்ச் சிக்க விரும்பவில்லை. அவர்கள் சித்தார்த்தா தனது பங்குகளை ஏதாவது நிதி மூலதன நிறுவனத்திடம் விற்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால்,  KKR, பேரிங் போன்ற தனியார் முதலீட்டு நிறுவனங்களை அணுகிய போது, அவை தங்களுக்கு "இயக்குனர் குழுவில் இடம் வேண்டும், மாதாந்திர அறிக்கைகள் வர வேண்டும், உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள் வேண்டும், செயலூக்கமான பங்களிப்பு வேண்டும்" என்று நிர்வாகத்தில் தலையிடும் வகையில் நிபந்தனை விதித்திருக்கின்றனர். அவர்கள் சித்தார்த்தாவை போல பணத்தை கொடுத்து விட்டு ஒதுங்கி இருக்க மாட்டார்கள். நிர்வாகத்துக்குள் நுழைந்து கையை முறுக்கத்தான் முயற்சிப்பார்கள்.

மைண்ட்-ட்ரீ அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பங்குகளை பங்குச் சந்தையிலோ அல்லது இயக்குனர் குழுவில் சேர வேண்டும் என்று நிபந்தனை விதிக்காத தனியார் முதலீட்டு நிறுவனங்களிடமோ விற்கும்படி சித்தார்த்தாவிடம் சொல்லியிருக்கிறார்கள். சந்தையில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பங்குகள் விற்கப்பட்டால் பங்கு விலை கணிசமாக சரியும், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களோ கடும் நிபந்தனைகளை விதிக்கின்றன.

சித்தார்த்தாவின் பங்குகளை வாங்கும்படி கேட்டு ஜனவரி மாதம் வங்கிகள், தனியார் முதலீட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகளை அணுகினர். குடும்ப முதலீட்டு நிறுவனங்களான பிரேம்ஜி முதலீட்டு நிறுவனம், பட்னி ஆகியவையும் அணுகப்பட்டன. அவர்கள் அனைவரும் பேரிங் பங்குகளை வாங்க விரும்பும் போது அதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கின்றனர்.

எல்&டி ஆரம்பத்தில் மைண்ட்-ட்ரீ நிர்வாகத்தின் ஒப்புதலுடன்தான் சித்தார்த்தாவின் பங்குகளை வாங்க விரும்ப நினைத்திருக்கிறது. ஆனால், எல்&டியிடம் நிர்வாகக் கட்டுப்பாடு போய் விட்டால் தங்களது நிறுவன கலாச்சாரம் மாறி விடும் என்று சந்தேகக் கண்ணுடன் பார்க்கின்றனர் மைண்ட்-ட்ரீ முதலாளிகள். இறுதியில் எல்&டி அவர்களது சம்மதம் இல்லாமலேயே மைண்ட்-ட்ரீயை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி விட்டது.

பெண்ணின் அப்பாவின் சம்மதத்தோடு பெண் கேட்டு பார்த்து, அவர் மறுத்து விட்ட பிறகு இப்போது தனது பணபலம், படை பலம், ஆள் பலத்தை ஏவி தூக்கிக் கொண்டு வர ஏற்பாடு செய்கிறது எல்&டி.

சிறிய நிறுவனங்கள் பெரிய ஐ.டி நிறுவனங்களோடு இணைக்கப்படும் போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் தங்கள் நிறுவனம் எல்&டியோடு இணைக்கப்பட்டால் அது வணிக மதிப்பை குறைப்பதாகவும், நிர்வாக அறம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வழி வகுப்பதாகவும் இருக்கும் என்று மைண்ட்-ட்ரீ முதலாளிகள் கருதுகின்றனர்.

எல்&டி "புல்டோசர்கள், கிரேன்கள் சகிதம் சொத்தை அள்ளிப் போவதற்கு வாசலில் வந்து நிற்கிறது" என்று பதறுகின்றனர். "இப்படி எல்லாம் நடந்தால் ஐ.டி துறையி்ல யாரும் புதிய நிறுவனம் தொடங்க மாட்டார்கள், நாடு முன்னேறாது" என்று தேசபக்த வேடம் பூண்டு பயமுறுத்துகின்றனர்.

"நாங்கள் மைண்ட்-ட்ரீயை காதலுடன் அணுகுகிறோம், எங்கள் உள்ளத்திலிருந்து இந்த உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்" என்று அன்பாக பேசுகிறது எல்&டி. "முதலீட்டாளர்களாகத்தான் வருகிறோம், மைண்ட்-ட்ரீயை தனி நிறுவனமாக பராமரிப்போம்" என்கிறது. "எங்களிடம் புல்டோசர்களும், கிரேன்களும் மட்டும் இல்லை. நாங்கள் நாட்டுக்காக நீர்மூழ்கிக் கப்பல்கள், ராக்கெட்டுகள், ஏவுகணைகள், துப்பாக்கிகள் உற்பத்தி செய்கிறோம். எங்களது ரேஞ்சே வேற. நாங்கள் நிர்வாக ஒழுங்கிலும், கொள்கைகளிலும் உயர் தரத்தை பின்பற்றுகிறோம்" என்று தன் பங்குக்கு தேச பக்த சான்றுகளை காட்டுகிறது

பங்குதாரர்களிடமிருந்து பங்குகளை வாங்க முன்வருவதாக சொல்லியிருக்கும் எல்&டியின் அறிவிப்பு பற்றி மைண்ட்-ட்ரீ இயக்குனர்கள் குழு பங்குதாரர்களுக்கு தங்கள் பரிந்துரையைச் சொல்ல வேண்டும். எல்&டியிடம் பங்குகளை விற்பது நல்லதா இல்லையா என்று அறிவிக்க வேண்டும். இதற்காக சுயேச்சையான இயக்குனர்கள் ஒரு கமிட்டி அமைத்து பரிசீலிக்க வேண்டும்.

இதில் எல்.ஐ.சி முதலான நிதி நிறுவனங்களின் முடிவு தீர்மானகரமானதாக அமையும். அவர்களது ஆதரவு தங்களுக்கு இருப்பதாக மைண்ட்-ட்ரீ நிர்வாக இயக்குனர்கள் சொல்கின்றனர்.  எல்&டியோ அவர்கள் எல்லாம் ஏற்கனவே எல்&டியில் பங்கு வைத்திருப்பவர்கள், எங்களுக்கு நல்ல தோஸ்துகள்தான் என்று நம்பிக்கையுடன் சொல்கிறது.

டுவிட்டரில் ஊழியர்கள் மைண்ட்-ட்ரீ நிர்வாகத்துக்கு ஆதரவாக பெருமளவு ட்வீட் செய்திருப்பதை போய்ப் பார்க்கும்படி மைண்ட்-ட்ரீ தரப்பு பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்கிறது. பொதுவாக ஊழியர்கள் மைண்ட்-ட்ரீயில் வேலை செய்வதை விரும்புகிறார்கள் என்கிறார் எகனாமிக் டைம்ஸ் நிருபர்.



இதற்கிடையில் மைண்ட்-ட்ரீ பெங்களூரு அலுவலகத்தில் ஊழியர்கள் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பு ஏன் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள சிலர் ஆர்வம் காட்டுகிறார்கள். வேலை வழக்கம் போல நடக்கிறது. எங்கு போனாலும் மாடாக உழைக்க வேண்டும், தேவை இல்லாத போது தூக்கி எறியப்படுவோம் என்பதுதான் விதியாக இருக்கும் என்ற போது யார் கம்பெனியை கைப்பற்றப் போகிறார்கள் என்பதில் அவர்களுக்கு பெரிய அக்கறை இருக்காதுதான்.

இதற்கிடையில் இந்திய பத்திரிகைகளுக்கு செல்லமான இன்னொரு நிறுவனம் கவிழும் நிலையில் இருக்கிறது. ஆம், நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் விமானத்துக்கு வாடகை கொடுக்க முடியாமல், விமானிகளுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல், டிக்கெட் கேன்சல் செய்தவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் திணறி நிற்கிறது. முன்னதாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம், விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ், நீரவ் மோடியின் வைர வியாபாரம், சகாரா குழுமத்தின் சீட்டுத் தொழில் சரிவு என்று திவால் வரிசையில் நிற்கின்றனர் இந்தியாவின் தொழில்துறை தலைவர்கள்.

பல ஆயிரம் கோடிகளை குவித்து வைத்துக் கொண்டு இந்த முதலாளிகள் நடத்தும் சூதாட்டச் சண்டைகளால் யாருக்கு என்ன பலன்?

Wednesday, February 27, 2019

இன்றைய பிரச்சனைகளை புரிந்து கொள்ள உலகம் ஏன் மார்க்சியத்தை நாடுகிறது?

ஒரு கோட்பாடு மூலதனம் நூலில் முன் வைக்கப்படும் மார்க்சின் மதிப்பு பற்றிய கோட்பாட்டுக்கும் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய கோட்பாட்டுக்கும் இடையே உள்ள வரலாற்று ரீதியில் தவிர்க்க இயலாத இடைவெளியை நிரப்ப வேண்டும்.
ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010
 

7

ந்த ஆய்வறிக்கை மூன்றாம் உலக தொழிலாளர்கள் மீது தனது கவனத்தை செலுத்துகிறது. ‘உலகளாவிய உழைப்பு ஆதாயம்' ஏகாதிபத்திய நாட்டு தொழிலாளர்கள் மீது செலுத்தும் சிக்கலான, ஒன்றுக்கொன்று முரணான தாக்கங்கள் இந்த ஆய்வறிக்கையில் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. மாறாக, ஏகாதிபத்திய நாட்டு பொருளாதாரங்களில் ஏற்படும் சிக்கலான தாக்கங்களை துலக்கமாக வெளிப்படுத்தும் இரண்டு முக்கியமான பரிமாணங்கள் அடுத்த அத்தியாயத்தில் சுருக்கமாக மட்டும் பரிசீலிக்கப்படுகின்றன.

  • முதலாவதாக, பெருவீத அயலக பணி முறை ஏகாதிபத்திய நாட்டு முதலாளிகள் லாபத்தை அதிகரிப்பதற்கு உள்நாட்டு தொழிலாளர்களின் நிஜக் கூலியை நேரடியாக குறைப்பதற்கு மாற்றாக உள்ளதால், ஏகாதிபத்திய நாடுகளில் வர்க்கப் போராட்டத்தின் தீவிரத்தை அது மட்டுப்படுத்துகிறது. நுகர்வு பொருட்களின் விலை மலிவாக்கப்பட்டு வாங்கும் திறன் அதிகமாவதன் மூலமாகவும் முதலாளிகளின் லாபத்தின் மீது அயலகப் பணி செலுத்தும் நேர்மறை தாக்கத்தினாலும் இது நிகழ்கிறது. முதலாளிகள் ஈட்டும் கூடுதல் லாபம் 'சமூக ஒப்பந்தத்துக்கு' அடிப்படையாக விளங்கும் அதிக செலவு பிடிக்கும் சலுகைகளுக்கு நிதி ஒதுக்குவதை சாத்தியமாக்குகிறது. இவற்றில் அடிப்படை மருத்துவம், கல்வி ஆகியவற்றை பெறுவதற்கான உரிமை, அடிப்படை சமூக பாதுகாப்பு (வேலையின்மை உதவித் தொகை முதலியன) ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்குவதும் அடங்கும்.
  • இரண்டாவதாக, அயலக பணி முறை ஏகாதிபத்திய நாட்டு தொழிலாளர்களுக்கும், மூன்றாம் உலகத் தொழிலாளர்களுக்கும் இடையே மேலும் மேலும் அதிகரித்த அளவில் நேரடி போட்டியை உருவாக்குகிறது. அதே நேரம் உலகளாவிய உற்பத்தி நிகழ்முறைகளுக்குள் அவர்களுக்கிடையேயான பரஸ்பர சார்பு நிலையை அதிகரிக்கிறது. 
உலக அளவில் தொழிலாளர்களுக்கிடையேயான பரஸ்பர சார்புநிலை அதிகரித்து வருவது, தொழிலாளர்களின் கல்வி அறிவும் கலாச்சார வாய்ப்புகளும் அதிகரிப்பது, பெண்கள் பெருமளவில் கூலி உழைப்புக்குள் சேர்க்கப்படுவது, ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மேலும் அதிக அளவில் ஏகாதிபத்திய நாடுகளின் உள்நாட்டு தொழிலாளர் படையில் இணைவது ஆகியவை தொழிலாளி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான புறநிலை மாற்றங்கள். அவை உலக வங்கித் துறை நெருக்கடியைத் தொடர்ந்து வரவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்களில் தொழிலாளி வர்க்கம் வெற்றியடைவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கின்றன.

ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளி வர்க்கம் சர்வதேச தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்ற வகையில் அது புரட்சிகர சக்தியாக உள்ளது. சமூக ஜனநாயக தலைவர்கள் முன் வைக்கும் ‘பிரிட்டிஷ் வேலை வாய்ப்புகள் பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கே' என்பன போன்ற தேசியவாத தீர்வுகளும், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளின் தொழிலாளர் தலைவர்கள் முன் வைக்கும் தேசியவாத, காப்புவாத கருத்துக்களும் மேலும் மேலும் நம்பகத்தன்மை இழந்து வருகின்றன. தொழிலாளி வர்க்க இயக்கத்தை முடக்கி விடவும், இனவெறியை நியாயப்படுத்தவும், பாசிசத்தின் வளர்ச்சியை தூண்டி விடவும் மட்டும்தான் அவை பயன்படுகின்றன. அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் தொழிலாளர்கள் அவர்களது சக மெக்சிகன் அல்லது சீன தொழிலாளர்களுடன் போட்டி போட விரும்பா விட்டால் அவர்களுடன் ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் இணைந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆய்வறிக்கையின் நோக்கமும் ஆய்வு திட்டமும்

“மார்க்சின் படைப்புகளின் சிறப்புத் தன்மையும், சிரமும் இரண்டுமே என்னவென்றால், ஒவ்வொன்றும் மற்ற எல்லாவற்றோடும் இணைந்துள்ளது என்பதுதான். கோட்பாட்டின் அனைத்து பிற அம்சங்களையும் ஒரே நேரத்தில் ஆய்வு செய்யாமல் ஒரு 'வெற்றிடத்தில்' மட்டும் ஆய்வு செய்வது சாத்தியமற்றதாக உள்ளது”32 என்கிறார் டேவிட் ஹார்வி. இந்தக் கருத்தில் பெருமளவு உண்மை இருக்கிறது. ஆனால், இந்தக் கருத்து சொல்லப்பட்டிருக்கும் விதம் சமூக யதார்த்தத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்ட ஆய்வுக்கான முறையியலை வரையறுத்துக் கொள்வதற்கு உதவியாக இல்லை . முழுமையான கட்டமைவு பற்றிய ஒரு கோட்பாட்டு கருதுகோளின் அடிப்படையில் அதன் குறிப்பிட்ட பரிமாணங்கள் அல்லது வெளிப்பாடுகளில் ஏதாவது ஒன்றை ஆய்வு செய்ய முடியும் என்று அவரது கருத்தை புரிந்து கொள்ளலாம். மேலும், அத்தகைய ஒரு ஆய்வின் முடிவுகள் முழுமையான கட்டமைவு பற்றிய கோட்பாட்டில் இணைக்கப்பட்டு அதை மேலும் செழுமைப்படுத்தும் என்பதையும் சொல்ல வேண்டும். இது மார்க்சிய இயக்கவியலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளுக்கு மட்டுமின்றி அனைத்து ஆய்வுகளுக்கும் பொருந்துகிறது.

தான் முன் முடிவுகள் இல்லாமல் திறந்த மனதுடன் தொடங்குவதாக நேர்மறைவாத சமூக அறிவியலாளர் எவ்வளவுதான் நம்பிக் கொண்டிருந்தாலும், ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் நிகழ்வு பற்றிய ஆரம்ப புரிதல்கள், ஆய்வு செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட முறையியல் அணுகுமுறை, ஏன் மற்ற பிரச்சனைகளிலிருந்து இந்த பிரச்சனையை ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தோம் என்பது அனைத்தும் ஆய்வாளரின் மனதில் உணர்வுரீதியாகவோ உள்உணர்வு ரீதியாகவோ ஏற்கனவே உருவாகியிருக்கும் கோட்பாட்டு கருத்துக்களால் தீர்மானிக்கப்படுகின்றன.33 மார்க்சிய அணுகுமுறை பிற அணுகுமுறைகளிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்றால, பகுதிக்கும் முழுமைக்கும் இடையேயான இந்த தவிர்க்க இயலாத இணைப்பை மார்க்சியம் உணர்வு ரீதியாகவும் வெளிப்படையாகவும் அங்கீகரிக்கிறது.

இந்த வகையில் டேவிட் ஹார்வியின் கருத்தை விட இவால்ட் இல்யன்கோவின் அறிவுரை உதவியாக உள்ளது. “எடுத்துக் கொண்ட பருண்மையான விஷயம் [இங்கு, புதிய தாராளவாத உலகமயமாக்கல்][...] மிகவும் சிக்கலான, உள் இணைப்புகள் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான வளர்ச்சி நிகழ்முறைகளை கொண்டுள்ளது. அவை பரஸ்பரம் உறவாடி, தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் வடிவங்களை மாற்றிக் கொண்டே இருக்கின்றன.. நடைமுறையில் நம் முன் இருக்கும் ஒட்டு மொத்த வரலாற்று நிகழ்முறையில் இந்தக் […] குறிப்பிட்ட பருண்மையான உறவாடல் கட்டமைவு வளர்ந்து செல்வதில் அடங்கியிருக்கும்  மிக முக்கியமான அம்சங்களை அடையாளம் காண்பதில்தான் ஒட்டு மொத்த சிக்கலும் அடங்கியுள்ளது.” என்று அவர் கூறுகிறார். ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள பிரச்சனையுடன் தற்செயலான உறவு கொண்டவையாக இல்லாமல் பிரச்சனையின் சாராம்சத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கும் அம்சங்களை அடையாளம் காண வேண்டும்.

இந்த ஆய்வுரை தனது வழிகாட்டியாக எடுத்துக் கொண்டிருக்கும் கோட்பாட்டின்படி புதிய தாராளவாத உலகமயமாக்கல் முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சியின் ஒரு உயர் கட்டமாக உள்ளது. இது தொடர்பான தற்செயல் நிகழ்வுகளையும், இரண்டாம் நிலை அம்சங்களையும் ஒதுக்கி விட்டு எடுத்துக் கொண்ட பிரச்சனைக்கு சாராம்சமானதை தேர்ந்தெடுக்க வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டிய பணி ஆகும். ஏகாதிபத்திய முதலாளிகள் ஒடுக்கப்படும் நாடுகளின் உழைப்பை அதீத சுரண்டலுக்கு உட்படுத்துவதை பெரும் அளவில் அதிகரிப்பதற்கான முயற்சிதான் இந்த சாராம்சமான விஷயம் என்று இந்த ஆய்வறிக்கை முன் வைக்கிறது.

எடுத்துக் கொண்ட பிரச்சனையின் சாராம்சமான விஷயங்களை அடையாளம் கண்டு அவற்றின் மீது கவனத்தை குவிப்பது எந்த ஒரு அறிவியல் ஆய்வுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். எந்த அம்சத்தை சிறப்பு கவனம் கொடுக்க வேண்டிய ஒன்றாக தேர்ந்தெடுப்பது என்பதற்கு இன்னொரு நிபந்தனையும் உள்ளது. ஏற்கனவே உள்ள கருத்துக்கள் பருண்மையான யதார்த்தத்தை பிரதிபலிக்க தவறும் இடம் எது என்பதை பார்க்க வேண்டும். இன்றைய உலகப் பொருளாதாரம் பற்றிய இப்போதைய கருத்தாக்கங்களில், ஏகாதிபத்தியம் என்பது இருப்பதையும், அதன் முக்கியத்துவத்தையும், குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை சுரண்டுவதையும் மறுக்கப்படுவதாக உள்ளது. இதுதான் அதன் மிகப்பெரிய குறைபாடு. எனவே, ஒரு எளிமையான, இன்னும் வரையறுக்கப்பட்ட ஒரு விஷயத்திலிருந்து தொடங்குவதை விட சிக்கலானதாக இருந்தாலும், இந்த மையப் புள்ளியில் இருந்து தொடங்கி ஆய்வை நடத்துவது என்று முடிவு செய்தேன்.

இல்யன்கோவ் தான் சுட்டிக் காட்டும் “வளர்ச்சிப் போக்கின் மையமான அம்சங்களை கண்டறிவதில்” இருக்கும் சிக்கல்களை கையாள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார். நடைமுறை உண்மைகளையும், நிகழ்முறைகளையும் முந்தைய கோட்பாட்டு அடிப்படையில் ஆய்வு செய்வதன் மூலம் அவற்றை கண்டறியலாம். “கம்யூனிசம் என்பது ஒரு வறட்டு கோட்பாடு இல்லை, அது ஒரு இயக்கம்; அதன் ஆய்வுகள் முன்பே வரையறுக்கப்பட்ட கொள்கை நிலைப்பாடுகளிலிருந்து இல்லாமல் நடைமுறை யதார்த்தங்களில் உண்மைகளிலிருந்து தொடங்க வேண்டும்" என்று மார்க்சியம் பற்றி எங்கெல்ஸ் சொன்னதை இங்கு நினைவு கூரலாம்.35

இந்த நடைமுறை யதார்த்தத்தை பரிசீலித்ததன் விளைவாக, புதிய தாராளவாத உலகமயமாக்கலின் 'வளர்ச்சிப் பாதையின் முக்கியமான புள்ளிகள்' மூன்றாம் உலக நாடுகளின் உழைப்பாளர்களை விரிவாக 'பயன்படுத்துவதற்காக' ஏகாதிபத்திய முதலாளிகளின் அமல்படுத்தி வரும் உற்பத்தி உலமயமாதலும், முன்னணி ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆலை பொருட்களை உற்பத்தி செய்யும் மூன்றாம் உலக தொழில்துறை பாட்டாளிகளின் எண்ணிக்கை பெருமளவு விரிவடைவதும் என்ற முடிவுக்கு வருகிறோம்.36 எனவே, இந்த ஆய்வறிக்கை மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையேயான உறவு உலகமயமாவதன் புதிய கட்டத்தின் மீது தனது கவனத்தை குவிக்கிறது.

இந்த ஆய்வறிக்கையின் நோக்கம், மூலதன உறவுகளின் ஏகாதிபத்திய வடிவம் பற்றிய முழுமையான கோட்பாட்டுக்கு அடித்தளம் இடுவதற்கான ஒரு பகுதியை பங்களிப்பு செய்வதாகும். இதில் சர்வதேச பாட்டாளி வர்க்கத்துக்கிடையே சமத்துவம் இல்லாமல் இருப்பதும், வெவ்வேறு நாடுகளில் சுரண்டல் வீதம் பெருமளவு வேறுபடுவதும் அடங்கும். அத்தகைய ஒரு கோட்பாடு மூலதனம் நூலில் முன் வைக்கப்படும் மார்க்சின் மதிப்பு பற்றிய கோட்பாட்டுக்கும் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய கோட்பாட்டுக்கும் இடையே உள்ள வரலாற்று ரீதியில் தவிர்க்க இயலாத இடைவெளியை நிரப்ப வேண்டும். இந்த இடைவெளி வரலாற்று ரீதியில் ஏன் தவிர்க்க இயலாதது என்றால், மேலே சொன்னது போல உற்பத்தி உலகமயமாதலுக்குப் பிறகுதான் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் ஒடுக்கப்படும் நாடுகளுக்கும் இடையேயான உறவு மதிப்பு உறவின் வரம்புக்குள் உட்பட்டதாக மாறியுள்ளது.

இந்த மிகப்பெரிய கோட்பாட்டு இடைவெளியை முழுமையாக நிரப்புவதற்கு இந்த ஆய்வறிக்கை முயற்சிக்கவில்லை. அந்த பணி பல ஆய்வாளர்களின் கூட்டு முயற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.

(தொடரும்)
  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

  2. ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்

  3. பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் - உலகம் எப்படி உள்ளது?

  4. நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு உள்ளதா? அது மட்டும்தான் உள்ளதா?

  5. முதலாளித்துவம் : கொள்ளை, படுகொலை, அடிமைத்தனம் - தொடக்கமும், தொடர்ச்சியும் 

  6. வக்கிரமாக்கப்பட்ட உலகமயமாதல்

  7. சீனா, இந்தியா, வங்கதேச தொழிலாளர்கள் இல்லாமல் உலக முதலாளித்துவம் இல்லை

Sunday, February 24, 2019

சீனா, இந்தியா, வங்கதேச தொழிலாளர்கள் இல்லாமல் உலக முதலாளித்துவம் இல்லை

சர்வதேச ரீதியில் உழைப்பாளர்கள் சுதந்திரமாக இடம் பெயர்ந்து செல்வதை தடுத்து நிறுத்துவது இனவாதம், தேசிய ஒடுக்குமுறை, கலாச்சார ரீதியான இழிவுபடுத்துதல்கள், இராணுவவாதம், அரச வன்முறை இவற்றை உள்ளடங்கிய ஒரு பரந்து விரிந்த கட்டமைவின் முக்கியமான அடிப்படையாக உள்ளது

ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010
 

7

தன் விளைவாக, முதலாளித்துவ வளர்ச்சியின் சமீபத்திய கட்டம் மூன்றாம் உலக நாடுகள் ‘முன்னேறிய’ நாடுகளின் நிலையை எட்டிப் பிடிப்பதாகவும், ஏகாதிபத்தியங்களுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஏற்றத் தாழ்வை குறைப்பதாகவும் இல்லை. மாறாக ஏகாதிபத்திய நிறுவனங்களின் அதீத சுரண்டலுக்கு உள்ளாகும் உழைப்பாளர் சேமப் படைகளாக மூன்றாம் உலக நாடுகள் மாற்றப்பட்டுள்ளன. இதன் விளைவாக நாடுகளுக்கிடையே ஒரு உலகளாவிய பிரிவினை உருவாகியுள்ளது.

சர்வதேச ரீதியில் உழைப்பாளர்கள் சுதந்திரமாக இடம் பெயர்ந்து செல்வதை தடுத்து நிறுத்துவது  இனவாதம், தேசிய ஒடுக்குமுறை, கலாச்சார ரீதியான இழிவுபடுத்துதல்கள், இராணுவவாதம், அரச வன்முறை இவற்றை உள்ளடங்கிய ஒரு பரந்து விரிந்த கட்டமைவின் முக்கியமான அடிப்படையாக உள்ளது. ஏகாதிபத்தியம் இந்த ஒடுக்குமுறை கட்டமைவை பாட்டாளி மயமாக்கப்பட்ட உலக மக்கள் மீது சுமத்துகிறது. இது வர்க்கப் போர் தொடுப்பதற்கான ஒரு ஆயுதம். இதை பயன்படுத்தி ஆக சாத்தியமான உயர் வீத சுரண்டலை உறுதி செய்வதோடு மட்டுமின்றி அரசியல் ரீதியான எதிர்ப்புரட்சிகளையும், பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் கட்டவிழ்த்து விட்டு சர்வதேச தொழிலாளர் வர்க்கம் ஒரு சுயேச்சையான அரசியல் சக்தியாக மாறி தனது சொந்த மேலாதிக்கத்தை நிறுவுவதை ஏகாதிபத்திய நிறுவனங்கள் தடுத்து நிறுத்துகின்றன

இது முற்றிலும் முதலாளித்துவ அடிப்படையிலான ஏகாதிபத்தியம். ஏகாதிபத்தியத்தின் மிக முன்னேறிய வளர்ச்சி கட்டத்தில், ஒட்டு மொத்த உலகமும் காலனிய அடிப்படையில் பிரிக்கப்பட்டிருப்பதை முதலாளித்துவமும் மதிப்பு விதியும் தமக்குள் முழுமையாக உள்வாங்கிக் கொண்டுள்ளன. முதலாளித்துவம் அதன் நோக்கத்துக்கு விரோதமான அனைத்தையும் உதளி விட்டு, தனது ஆதிக்கத்தை தொடருவதற்கு பலனளிப்பதாக இருப்பவை அனைத்தையும் பாதுகாத்து தன்னுடையதாக மாற்றிக் கொண்டுள்ளது. எனவே, இந்த மாற்றங்களோடு தொடர்புடையதாக கிடைக்கும் நடைமுறை தரவுகளின் பெரும் தொகுப்பை நாம் பகுத்தாய வேண்டியுள்ளது. உண்மைகளை கோட்பாட்டு ரீதியாக விமர்சித்தும், கோட்பாடுகளை உண்மைகளின் ஒளியில் விமர்சித்தும் முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சி கட்டத்தின் சாராம்சம் பண்புரீதியான பரிணாம மாற்றத்தை அடைந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மதிப்பு உறவின் ஏகாதிபத்திய வடிவம் பற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்குவது இன்றைய அவசிய தேவையாக உள்ளது.

இன்றைய புதிய தாராளவாத உலகமயமாக்கலில் ஏகாதிபத்திய நாட்டு அரசுகளின் பொதுநலன் அடங்கியுள்ளது. மூன்றாம் உலக நாடுகளை புதிய தாராளவாத உலகமயமாக்கல் பாதையில் செலுத்துவதற்கு ஏகாதிபத்திய நாடுகள் கூட்டாக செயல்பட்டன. கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வரும் ‘ஏற்றுமதி சார் தொழில் மயமாக்க' வளர்ச்சி பாணியின் முறையின் விளைவாக மூன்றாம் உலக தொழிலாளர்களின் எண்ணிக்கையும் சிறு உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்துள்ளன. அது மட்டுமில்லை, இந்த வளர்ச்சி பாணி ஏகாதிபத்திய நாடுகளில் கார்ப்பரேட் லாபத்தையும், தொழில் வளத்தையும், சமூக அமைதியையும் பாதுகாப்பதற்கு மேலும் மேலும் முக்கியமான ஆதாரமாக மாறியுள்ளது. எனவே, இன்றைய முதலாளித்துவ உலகமயமாதலைப் பற்றி விளக்குவதற்கு பரவலாக பயன்படுத்தப்படும் 'மைய நாடுகள்', ‘விளிம்பு நாடுகள்' என்ற கருத்தாக்கம் தவறான பொருள் தருபவதாக உள்ளது. ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகளுக்கு 'மைய' முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது மூன்றாம் உலக குறை-கூலி தொழிலாளர்கள் மீதான அதீத சுரண்டல்.

எனவே, 'அதீத சுரண்டல்’ பற்றிய பருண்மையான ஒரு கோட்பாட்டை வளர்த்தெடுப்பது இந்த ஆய்வறிக்கை முழுவதும் ஊடாடி நிற்கும் ஒரு மையமான பணியாகும். இது பற்றிய ஒரு பொதுவான வரையறை இந்த அத்தியாயத்தின் அடுத்த பிரிவில் தரப்படுகிறது. இப்போதைக்கு சுரண்டல் என்பதை எளிமையாக வரையறுக்கலாம். ஒரு வேலை நாளில் தொழிலாளி தான் உயிர் வாழ்வதற்கு தேவையானபொருட்களின் மதிப்புக்கு சமமான மதிப்பை படைக்கும் அவசிய உழைப்பு நேரம், முதலாளிக்கு உபரி மதிப்பை உற்பத்தி செய்வதற்காக உழைக்கும் உபரி உழைப்பு நேரம் என இரண்டு பகுதிகள் உள்ளன. இவற்றுக்கிடையேயான விகிதம் சுரண்டல் வீதமாகும்.

அதீத சுரண்டல் என்பது ஏகாதிபத்திய நாடுகளில் நிலவும் சராசரி சுரண்டல் வீதத்தை விட அதிக சுரண்டல் வீதத்தை குறிக்கிறது. நாடுகளுக்கிடையேயான கூலி ஏற்றத் தாழ்வுகள், சர்வதேச ரீதியில் சுரண்டல் வீதத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள் பற்றிய ஒரு உருத்திரிந்த சித்திரத்தை தருகின்றன என்று இந்த ஆய்வறிக்கையில் பேசப்படுகிறது. இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படாத முறைகளை பயன்படுத்தி சராசரியை விட அதிக சுரண்டல் வீதத்தை கொண்ட, அதாவது உயிருள்ள உழைப்பை அதீத சுரண்டலுக்கு உட்படுத்தக் கூடிய நாடுகளுக்கு உற்பத்தியை மாற்றுவதன் மூலம் ஏகாதிபத்திய நிறுவனங்கள் தமது லாபத்தை அதிகரிக்க முடிவது பற்றி இந்த ஆய்வறிக்கை பரிசீலிக்கிறது.

எனவே, இந்த ஒட்டு மொத்த ஆய்வறிக்கையும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு கேள்விகளுக்கு விடை காண முயற்சிக்கிறது : அதீத சுரண்டல் என்பதை பருண்மையாக எப்படி பொருள் கொள்கிறோம்? ஏகாதிபத்தியம் என்பதை பருண்மையாக எப்படி பொருள் கொள்கிறோம்? நடைமுறையில் நிலவும் சமூக உறவுகள் பற்றிய பருண்மையான கருதுகோள்களை கோட்பாடுகளிலிருந்து மட்டுமோ, தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் மட்டுமோ உருவாக்க முடியாது. இரண்டையும் சேர்த்து செய்ய வேண்டும்.27

ஏகாதிபத்திய நிறுவனங்கள் மூன்றாம் உலக குறைகூலி தொழிலாளர்களை அதீத சுரண்டலுக்கு உட்படுத்துவதன் மூலம் கிடைக்கும் வருவாயை சார்ந்திருப்பது மேலும் மேலும் அதிகரித்து வருவதை இந்த ஆய்வறிக்கையின் மையமான வாதம் சுட்டிக் காட்டுகிறது. இதை 'உலக உழைப்பு ஆதாயம்' என்று குறிப்பிடலாம். இதன்படி, தம் நாட்டில் ஒப்பீட்டளவில் அதிக கூலி பெறும் தொழிலாளர்களுக்கு பதிலாக மூன்றாம் உலக குறை கூலி தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றன.28 இது உற்பத்தியையே குறைகூலி நாடுகளுக்கு மாற்றுவதன் மூலமோ, குறை கூலி நாடுகளிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்து அவர்களை தம்நாட்டில் தீவிரமான சுரண்டலுக்கு உட்படுத்துவதன் மூலமோ நிறைவேற்றப்படுகிறது.29 உற்பத்தியையே மூன்றாம் உலக நாடுகளுக்கு இடம் மாற்றம் செய்வது மேலும் மேலும் "அதிக முக்கியத்துவம் வாய்ந்ததும் வேகமாக விரிடைவதுமான வழிமுறையாக உள்ளது என்கிறது ஐ.எம்.எஃப். அதீத சுரண்டலுக்கான இன்னொரு வழிமுறையான மூன்றாம் உலக நாட்டு தொழிலாளர்களை இறக்குமதி செய்வதற்கு தொழிலாளர்கள் குடியேறுவதற்கு பல நாடுகளில் உள்ள கட்டுப்பாடுகள் தடையாக உள்ளன".30

வெளிநாட்டில் அயலக பணி முறையில் உற்பத்தி செய்வதற்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை உள்நாட்டில் பயன்படுத்தி உற்பத்தி செய்வதற்கும் இடையேயான உறவை காரல் மார்க்ஸ் 1867-லேயே குறிப்பிட்டிருக்கிறார்.  சர்வதேச தொழிலாளர் கழகத்தின் பொதுக்குழுவின் சார்பாக லசான்யே காங்கிரசுக்கு அவர் எழுதிய ஒரு உரையில் அதற்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருக்கிறது: “இங்கிலாந்து தொழிலாளி வர்க்கம் நடத்திய போராட்டங்களை ஆய்வு செய்யும் போது, தொழிலாளர்களை முறியடிப்பதற்காக முதலாளிகள் வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை கொண்டு வருகிறார்கள் அல்லது உற்பத்தியை மலிவான தொழிலாளர் உள்ள நாடுகளுக்கு மாற்றி விடுகிறார்கள் என்பது தெரிய வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்கும் போது வெற்றிக்கு சிறிதளவாவது வாய்ப்பு இருக்கும் வகையில் தனது போராட்டத்தை தொழிலாளி வர்க்கம் தொடர வேண்டுமானால், தேசிய சங்கங்கள் சர்வதேச சங்கமாக மாற வேண்டும்."31

நமது சம காலத்தில்தான் ஆதிக்கம் செலுத்துவதாகவும் உலகை மாற்றியமைப்பதாகவும் உருவெடுத்திருக்கும் ஒரு போக்கின் ஆரம்ப வடிவம் பற்றிய சித்திரத்தை மார்க்ஸ் இங்கு தருகிறார். இந்த மேற்கோளில் இருந்து முதலாளித்துவம் குறை கூலி தொழிலாளர்களை அதீத சுரண்டலுக்கு உட்படுத்துவதும் அது பாட்டாளி வர்க்க இயக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் மார்க்ஸ் தெளிவாக உணர்ந்திருந்தார் என்பது தெரிகிறது. ஆனால், பருண்மையான யதார்த்தத்தின் இந்த அம்சத்தை மார்க்ஸ் மூலதனம் நூலின் 3 பாகங்களில் 'பொதுவான மூலதனம்' பற்றிய பகுப்பாய்வில் சேர்த்துக் கொள்ளவில்லை. இது பற்றி இந்த அத்தியாயத்தின் பிற் பகுதியில் இதே விஷயங்களை நாம் மறுபடியும் பரிசீலிக்கும் போது நாம் பார்க்கப் போகிறோம்.

மார்க்சுக்குப் பிறகு இந்த பொருளாதாரவியல் ஆய்வாளர்களால் இந்த அம்சம் பெருமளவு புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது. எனவே, இந்த ஆய்வறிக்கை அயலகப் பணி அல்லது "உற்பத்தியை மலிவான உழைப்பு சக்தி உடைய நாடுகளுக்கு இடம் மாற்றுவது" என்று மார்க்ஸ் குறிப்பிடுவதன் மீது கவனம் செலுத்துகிறது. ‘உலக கூலி ஆதாயத்தின்' இன்னொரு வடிவமான குறை கூலி உழைப்பாளர்களை இறக்குமதி செய்வது தேவைப்படும் இடத்தில், தேவைப்படும் அளவில் மட்டுமே (அத்தியாயங்கள் 2&3) கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மார்க்ஸ் லசான்யே காங்கிரசில் இந்த நடைமுறை பற்றி பேசிய 100 ஆண்டுகளுக்குப் பிறகு, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், உலகெங்கிலும் சரக்கு போக்குவரத்தின் வேகம் பெருமளவு அதிகரித்திருப்பதும், அயலகப் பணியை அனைத்து வழிகளிலும் பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்கியுள்ளன. இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏகாதிபத்திய முதலாளிகள் குறை கூலி தொழிலாளர்களை பயன்படுத்துவதை அதிகரிப்பதை சாத்தியமாக்கின. ஆனால், ஏகாதிபத்திய நாடுகளில் நிலவிய வர்க்க போராட்டங்கள்தான் இதை செய்தே தீர வேண்டிய அவசியத்தை ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு ஏற்படுத்தின என்பது இறுதி பகுப்பாய்வில் தெரிய வருகிறது. தம் நாடுகளில் லாபவீதம் குறைந்து செல்லும் போக்கை தடுத்து நிறுத்தி லாப வீதத்தை உயர்த்துவதற்கு செய்ய வேண்டியிருந்த காட்டுமிராண்டித்தனமான செலவு குறைப்பு நடவடிக்கைகள் அந்த நாடுகளின் 'சொந்த' தொழிலாளர்கள் மீதே சுமத்தப்பட்டிருந்தால் அது ஏகாதிபத்திய நாடுகளில் மிகப்பெரிய சமூக, அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். உலகின் பிற பகுதி மக்களுக்கு எதிராக ஏகாதிபத்திய நாட்டு தொழிலாளர்களையும் அவர்களது ஆட்சியாளர்களையும் பிணைக்கும் 'சமூக ஒப்பந்தம்' உடைக்கப்பட்டிருக்கும்.
  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

  2. ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்

  3. பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் - உலகம் எப்படி உள்ளது?

  4. நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு உள்ளதா? அது மட்டும்தான் உள்ளதா?

  5. முதலாளித்துவம் : கொள்ளை, படுகொலை, அடிமைத்தனம் - தொடக்கமும், தொடர்ச்சியும் 

  6. வக்கிரமாக்கப்பட்ட உலகமயமாதல்