Saturday, February 23, 2019

வக்கிரமாக்கப்பட்ட உலகமயமாதல்

மூலதனம், சரக்குகள், ஆலை அதிபர்கள், ஏன் ஆலைகள் கூட ஏகாதிபத்திய நாடுகளையும், மூன்றாம் உலக நாடுகளையும் பிரிக்கும் எல்லைகளை தாண்டி சுதந்திரமாக செல்ல முடிகிறது. ஆனால், அந்தச் சரக்குகளை உற்பத்தி செய்த, அந்தத் தொழிற்சாலைகளை கட்டி எழுப்பிய, அந்த மூலதனத்தை உருவாக்கிய உழைப்பாளர்களுக்கு அவ்வாறு கடந்து செல்வதற்கான உரிமை மறுக்கப்படுகிறது.

ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010

6

பொதுவாக'உலகமயமாக்கல்' என்ற சொல், அரசுகள், முதலாளித்துவ கார்ட்டெல்கள், அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள் உருவாக்கும் தடைகளை உடைத்து மூலதனத்தையும், சரக்குகளையும் நாடுகளுக்கிடையே தடையின்றி பரிவர்த்தனை செய்து கொள்வது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இதைப் பற்றிய இன்னும் துல்லியமான, பருண்மையான வரையறையை வந்தடைய இந்த மாற்றங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட முக்கியமான நிகழ்முறைகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, அயல் நாட்டு உற்பத்தியும், ‘நிதிமயமாதல்' என்று சிலரால் அழைக்கப்படும் நிகழ்முறையும் இவற்றில் முக்கியமானவை ஆகும். நிதி மயமாதல் என்பது ஏகாதிபத்திய நாடுகளில் கார்ப்பரேட் லாபத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட் (Fire services) துறைகளின் பங்களிப்பு அதிகரிப்பதையும் அதற்கு இணையாக தொழில்துறை உற்பத்தியின் பங்களிப்பு குறைவதையும் குறிக்கிறது. நிதித்துறை சொத்துக்களை சொந்தமாக வைத்திருப்பவர்களின் மேலாதிக்கத்தை வலுப்படுத்துகிறது. அவர்கள் தமது அதிகாரத்தை செலுத்துவதற்கான நிதித்துறை சந்தைகளின் ஆதிக்கத்தையும் இது பெருமளவு உறுதிப்படுத்துகிறது.

முதலாளித்துவத்தின் தன்மையையும் அது தவிர்க்க இயலாமல் வீழ்ச்சியை நோக்கி போவதையும் பற்றி மேலும் புரிந்து கொள்வதற்கு 1970-களின் நெருக்கடிகளை ஆய்வு செய்ய வேண்டும். அந்த நெருக்கடிகளிலிருந்து அவற்றுக்கு எதிர்வினையாக நிதிமயமாதலும் அயல்நாட்டு உற்பத்தியும் தோன்றின. 1979 இந்த நிகழ்முறையின் உச்சகட்டமாக இருந்தது. அந்த ஆண்டு வோல்க்கர் அதிர்ச்சி கொடுக்கப்பட்ட ஆண்டாகவும், ரொனால்ட் ரீகனும், மார்கரெட் தாட்சரும் ஆட்சிக்கு வந்த ஆண்டாகவும் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் புரட்சிகள் நடந்த ஆண்டாகவும் இருந்தது. அந்த ஆண்டில் ஈரான், கிரெனடா, நிகரகுவா ஆகிய நாடுகளில் மக்கள் திரள் எழுச்சிகள் ஏகாதிபத்திய ஆதரவு ஆட்சியாளர்களை தூக்கி எறிந்தன. இவை எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்தால், ‘புதிய தாராளவாத உலகமயமாக்கல்' என்பதை உள்நாட்டில் தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்தவும், மூன்றாம் உலக நாடுகளில் புரட்சிகளை நசுக்கி, புரட்சிகர அரசியலை முறியடிக்கவும் அமெரிக்க அரசின் பொதுத் தலைமையின் கீழ் நடத்தப்பட்ட உலகளாவிய பொருளாதார, அரசியல், ராணுவ எதிர்ப்புரட்சி தாக்குதலாக பார்க்கலாம். மேலும், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான பகை மோதலை கட்டுப்படுத்தும் வகையில் மூன்றாம் உலக நாடுகளை ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகங்களின் அதீத சுரண்டலுக்கு திறந்து விடுவதாகவும் இதை பார்க்கலாம்.

‘உலகமயமாதல்' என்பதும் 'புதியதாராளவாத உலகமயமாதல்' என்பதும் வெவ்வேறு பொருள் உடையவை. ‘உலகமயமாதல்' பற்றிய பருண்மையான பொதுவான வரையறை என்ன? மக்களிடையே பொருளாதார, அரசியல், சமூக, கலாச்சார பரிவர்த்தனைகளை அனைத்து வகையான எல்லைகளையும் தாண்டி விரிவுபடுத்துவதும், ஆழப்படுத்துவதும் ஆகும். இது மனித சமூகத்தின் முன் நோக்கிய பரிணாம வளர்ச்சியை குறிக்கிறது. இந்த நீண்ட காலப் போக்கின் ஒரு பண்பு ரீதியான பாய்ச்சலுக்கான புறநிலை அவசியம் 20-ம் நூற்றாண்டு முழுவதும் மேலும் மேலும் அதிகமாக அதிகரித்தது. முதலாளித்துவத்தில் உள்ளார்ந்து இருக்கும் பகைரீதியான தேசிய பிரிவினைகளால் இன்னும் மோசமாக்கப்பட்ட சிக்கலான பிரச்சனைகளும், நெருக்கடிகளும் குவிந்தன. அவற்றை உலக அளவில்தான் தீர்த்து வைக்க முடியும். 1970-களில் ஏகாதிபத்திய நாடுகளில் தேக்க வீக்கமும், அதிகரித்து வந்த தொழிலாளர் போராட்டங்களும் ஒரு புறம், மூன்றாம் உலக நாடுகளில் அதிகரித்து வந்த புரட்சிகர இயக்கங்கள் மறுபுறம். இந்தப் போக்கு எழுப்பிய கேள்வி  என்னவென்றால் இந்த உலகமயமாக்கல் நிகழ்முறையை எந்த வர்க்கம் வழி நடத்தி செல்லப் போகிறது என்பதுதான். எந்த வர்க்கத்தின் வடிவத்தில் எந்த வர்க்கத்துடைய நலன்களுக்காக உலகளாவிய ஐக்கியத்துக்கான தடைகள் உடைத்தெறியப்படும்? அது 'ஏகாதிபத்திய உலகமயமாதல்' (ஜெயதி கோஷ் 20) ஆகத்தான் இருக்க வேண்டும் என்பது எந்த விதத்திலும் கட்டாயமானது இல்லை. ஏகாதிபத்திய நாடுகளின் தொழிற்சங்கங்களும் அவற்றின் தலைவர்களும் ஈரான் முதல் சிலி வரை சர்வாதிகாரிகள் ஆட்சியில் அமர்த்தப்பட்டதை எதிர்த்தும், வியட்னாமில் நடத்தப்பட்ட போரை எதிர்த்தும், நிகரகுவாவை எதிர்த்து நடந்த பயங்கரவாத காண்ட்ரா போரை எதிர்த்தும், ஏகாதிபத்திய நாடுகள் இஸ்ரேலுடனும் இனவாத தென் ஆப்பிரிக்காவுடனும் ஏற்படுத்திக் கொண்ட உறவுகளை எதிர்த்தும் (இவை இத்தகைய ஒரு நீளமான பட்டியலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சில உதாரணங்கள் மட்டுமே) தமது அரசாங்கங்களுக்கு எதிராக எதிர்ப்பை அணிதிரட்டத் தவறின. அதன் விளைவாக உலகமயமாதலை முன் எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பை மிக தொழிலாளர் விரோத, மிக ஏகாதிபத்தியவாத முதலாளித்துவ பிரிவினரிடம் விட்டுக் கொடுப்பதாக அமைந்தது. கியூபாவில் மிகப் பிரபலமான  ஜோஸ் மார்டியின் மேற்கோள் "இன்னொரு மக்களின் பாதுகாப்புக்காக போராட முன் வராத ஒரு மக்கள் தம்மை ஒரு போதும் பாதுகாத்துக் கொள்ள முடியாது". அந்த மேற்கோளை ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளர் இயக்கத்தின் தோல்வி உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக தோன்றிய புதிய தாராளவாத உலகமயமாதல் உண்மையில் வக்கிரமான உலகமயமாதல் ஆகும்.21

கருத்துக்களை கோட்பாடு ரீதியாக வளர்த்தெடுத்தல்: புதிய தாராளவாத     உலகமயமாதல் - முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சியில் ஒரு புதிய கட்டம்

மூலதனம், சரக்குகள், ஆலை அதிபர்கள், ஏன் ஆலைகள் கூட ஏகாதிபத்திய நாடுகளையும், மூன்றாம் உலக நாடுகளையும் பிரிக்கும் எல்லைகளை தாண்டி சுதந்திரமாக செல்ல முடிகிறது. ஆனால், அந்தச் சரக்குகளை உற்பத்தி செய்த, அந்தத் தொழிற்சாலைகளை கட்டி எழுப்பிய, அந்த மூலதனத்தை உருவாக்கிய உழைப்பாளர்களுக்கு அவ்வாறு கடந்து செல்வதற்கான உரிமை மறுக்கப்படுகிறது. இந்த ஆய்வறிக்கை இந்த நிதர்சனத்தை மிக முக்கியமானதாக எடுத்துக் கொள்கிறது. எனவே, இந்த ஆய்வறிக்கை தனது வழிகாட்டும் கோட்பாட்டு உலகக் கண்ணோட்டமாக எடுத்துக் கொண்டது ‘உலகமயமாதல் எதிர்ப்பு' என்பதற்கு நேர் எதிர்மாறானது. உண்மையான உலகமயமாதலுக்கான, எல்லைகள் இல்லாத உலகத்துக்கான, முதன்மையான தடையாக முதலாளித்துவம் நிற்கிறது என்று முதலாளித்துவத்தை இந்த ஆய்வறிக்கை கண்டனம் செய்கிறது.

வரலாற்றில் ஏகாதிபத்தியம் ஒதுக்கித் தள்ளப்பட்டு வருகிறது என்று இந்த ஆய்வறிக்கை வாதிடவில்லை. மாறாக, கடந்த 30 ஆண்டுகளில் 'புதிய தாராளவாத உலகமயமாக்கல்' என்ற பதாகையின் கீழ் நடத்தி முடிக்கப்பட்ட உருமாற்றங்கள் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை முழு பரிணாம வளர்ச்சியடைய வைத்திருக்கின்றன. முதலாளித்துவத்தின் முதிர்ச்சியடைந்த, முழு பரிணாம வளர்ச்சியடைந்த வடிவம் (இங்கிலாந்தில் தொழில்துறை முதலாளித்துவத்தின் வளர்ச்சி) தோன்றுவதற்கு முன்பு கார்ல் மார்க்ஸ் மூலதனம் நூலை எழுதியிருக்க முடியாது. அதே போல ஏகாதிபத்தியம் தோன்றிய காலகட்டத்தில் எழுதப்பட்ட லெனினின் படைப்புகளிலும், அதே காலத்திய மற்றவர்களின் ஆய்வறிக்கைகளிலும் ஏகாதிபத்தியத்தின் முழு பரிணாம வளர்ச்சி அடைந்த வடிவத்தை விளக்கும் விதமான ஒரு முழுமையான கோட்பாட்டை எதிர்பார்க்க முடியாது. இது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் ஒரு அடிப்படையான விதியை உறுதி செய்கிறது. முழு அளவில் பருண்மையாகவும் வளர்ச்சியடைந்ததாகவும் இல்லாத உற்பத்தி உறவுகள் பற்றிய பருண்மையான கருதுகோள் ஒன்றை உருவாக்குவது சாத்தியம் இல்லை.22

இங்கிலாந்தில் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு காலனி ஆதிக்கமும் கொள்ளையும் முன்நிபந்தனையாக இருந்தது. ஆனால், அதன் பிறகு முதலாளித்துவ வளர்ச்சியின் முழு பாதையையும் கடந்த பிறகுதான் உலக நாடுகள் ஏகாதிபத்திய அடிப்படையில் பிரிக்கப்படுவது உள்ளார்ந்து, மூலதன உறவின் ஒரு தன்மையாக மாற முடிந்திருக்கிறது. அதாவது இது உலகம் முழுவதும் உள்ள "ஒட்டு மொத்த சமூக மூலதனத்துக்கும்" அனைத்து நாடுகளின் தொழிலாளர்களுக்கும் இடையேயான உறவாக இப்போதுதான் மாறியிருக்கிறது.23 “ஏறக்குறைய அனைத்தும் தழுவிய முதலாளித்துவ உற்பத்தி முறையினால் ஆன உலகம் மிகச் சமீபத்தில் தோன்றியதுதான்" (எலன் வுட்).24

தான் வந்தடைந்த இந்த முக்கியமான முடிவை எலன் வுட் எவ்வளவு தூரம் வளர்த்துச் செல்கிறார் என்பதை இந்த அத்தியாயத்தின் பிற்பகுதியில் பார்க்கலாம். நாம் எடுத்துக் கொண்ட நோக்கத்தைப் பொறுத்தவரை, அதன் மிக முக்கியமான பொருள் என்னவென்றால், இப்போது ஏகாதிபத்திய நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான உறவாடல் முதலாளித்துவத்துக்கும் முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறைகளுக்கும் இடையேயானதாக இல்லை; இப்போது அது மூலதன உறவுகளுக்கு உட்பட்டதாக உள்ளது. அது ஏகாதிபத்திய மூலதனத்துக்கும் மூன்றாம் உலக நாட்டு தொழிலாளர்களுக்கும் இடையேயான உலகளாவிய உறவாக மாறியுள்ளது. இது முன்பு எப்போதையும் விட பண்பு ரீதியான மாற்றம் ஆகும்.

புதிய தாராளவாத உலகமயமாக்கலால் ஏற்படுத்தப்பட்ட மிக முக்கியமான மாற்றம் மூன்றாம் உலக நாடுகளில் தொழிலாளி வர்க்கம் மிகப்பெரிய அளவில் விரிவடைந்ததாகும். மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர்களின் உயிருள்ள உழைப்பு 'முன்னணி [கார்ப்பரேட்] நிறுவனங்களுக்கும்' மூன்றாம் உலக நாடுகளின் முதலாளிகளுக்கும்  இடையே பகிர்ந்து கொள்ளப்படும் மதிப்பில் பெரும்பகுதியை பங்களிப்பு செய்கிறது. இந்த மதிப்புச் சங்கிலி குறைகூலி பொருளாதாரங்களை மேற்கத்திய நுகர்வுச் சந்தையுடன் இணைக்கிறது.

இது ‘உலகளாவிய கூலி ஆதாயத்தினால்' செலுத்தப்பட்ட உற்பத்தி நிகழ்முறை உலகயமாதலின் முதன்மை ஆகும். இதில் குறை-கூலி நாடுகளில் உள்ள மலிவான, நெகிழ்வுத் தன்மையுடைய [முறைசாரா எனவே முதலாளிகளுக்கு சாதகமான வேலை நிலைமைகள் கொண்ட] உயிருள்ள உழைப்பு, ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள ஒப்பீட்டளவில் விலை அதிகமான [அமைப்பாக்கப்பட்ட, எனவே திட்டமான வேலை நிலைமைகள் கொண்ட] உயிருள்ள உழைப்பின் இடத்தைப் பிடிக்கிறது. இது மூலதனம்-உழைப்பு உறவுகள் உலகமயமாவதில் ஒரு புதிய, பண்புரீதியான கட்டத்தை குறிக்கிறது. அதன் ஒரு விளைவாக ஏகாதிபத்திய நாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளின் உயிருள்ள உழைப்பை அதீதமாக சுரண்டுவதை சார்ந்திருப்பது பெருமளவு அதிகரித்துள்ளது. இதன் இன்னொரு விளைவு உலகத் தொழிலாளி வர்க்கத்தின் இயைபு உருமாற்றம் அடைந்திருப்பது ஆகும். மூன்றாம் உலக நாடுகளின் தொழில்துறை தொழிலாளர்களின் எண்ணிக்கை 'தொழில்மயமான' நாடுகளில் உள்ள அவர்களது சகோதர, சகோதரிகளின் எண்ணிக்கையை முந்துவதற்கு வெறும் 25 ஆண்டுகள் மட்டுமே பிடித்தன. இப்போது மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர்கள் மொத்த உலகத் தொழிலாளர்களில் 80% ஆக உள்ளனர்.

புதிய தாராளவாத உலகமயமாக்கல் ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள தொழிலாளர்களையும், மூன்றாம் உலக நாடுகளில் உள்ள தொழிலாளர்களையும் ஒன்றாக இணைத்திருக்கிறது. அவர்கள் ஒருவரோடொருவர் போட்டியிடும் அதே நேரம், உலகமயமான உற்பத்தி நிகழ்முறைகளால் இணைக்கப்பட்டு பரஸ்பர சார்பையும் கொண்டிருக்கின்றனர். அவர்களது உழைப்பு சக்தியை ஒரே வங்கிகளும், தேசங்கடந்த தொழிற்கழகங்களும் சுரண்டுகின்றன. மூலதனம்/உழைப்பு உறவின் பரிணாம வளர்ச்சியில் இந்த புதிய, பண்புரீதியான கட்டம் ஒரு குறிப்பான தன்மையை கொண்டிருக்கிறது. உலகமயமாக்கலை அது அமல்படுத்திய விதத்தில், அவ்வாறு அமல்படுத்தப்பட்ட பிறகு உலகத்தின் நிலையில், மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையேயான உறவு அதற்கு முன்பு நிலவிய ஏகாதிபத்திய அடிப்படையில் நிலவிய  உலக நாடுகளுக்கிடையேயான பிரிவினையை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் பிரிவினை ஏகாதிபத்தியம் தோன்றுவதற்கும் வளர்வதற்கும் தேவையான நிபந்தனையாக இருந்தது. அது இப்போது இனரீதியாகவும், தேசிய ரீதியாகவும் ஒரு படிநிலை வடிவத்தில் தொடர்வது 'உலக உழைப்பு சந்தை'யாக உள்ளது.25

(தொடரும்)

  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

  2. ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்

  3. பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் - உலகம் எப்படி உள்ளது?

  4. நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு உள்ளதா? அது மட்டும்தான் உள்ளதா?

  5. முதலாளித்துவம் : கொள்ளை, படுகொலை, அடிமைத்தனம் - தொடக்கமும், தொடர்ச்சியும்

No comments: