Tuesday, September 23, 2008

செலாவணி பரிமாற்ற தெரிவு ஒப்பந்தம்

பணம் வருவது உறுதியாக இருந்தால் முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். பணம் வருவது உறுதியில்லாமல் இருந்தால் என்ன செயவது?

ஒரு ஏற்றுமதியாளர் 3 மாதங்களுக்குள் முந்திரிப்பருப்பு ஏற்றுமதி செய்து அதற்கான பணத்தை (10000 டாலர்) டாலர்களில் பெறுவதாக எதிர்பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஏற்றுமதிக்கான உடன்பாடு இவருக்குக் கிடைப்பது 2 மாதம் கழித்துதான் உறுதியாகும். இன்றைக்கு உடன்பாட்டுக்கான விலையை அனுப்பி வைக்க வேண்டும்.

உள்ளூர் சந்தையில் முந்திரிப் பருப்பை ரூபாய்க்கு வாங்கி டாலருக்கு விற்க வேண்டும். இன்று 1 டாலர் = 46 ரூபாய்கள் செலாவணி வீதம் என்ற கணக்கில் விலை நிர்ணயிக்கிறார். இந்த ஆர்டர் கிடைத்து ஏற்றுமதி செய்து விட்டால் வருமானம் வரும், டாலரை 46 ரூபாய் வீதத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு வேளை ஆர்டர் கிடைக்கா விட்டால், மாற்றுவதற்கு டாலர் இருக்காது.

இந்த நிலையில் Forward ஒப்பந்தம் என்ற முன்பேர ஒப்பந்தம் சரிப்படாது. ஆர்டர் கிடைக்காமல் போய், டாலரின் மதிப்பு ஏறி விட்டால், (1 டாலர் = 50 ரூபாய்) இவர் ஒப்பந்தப்படி 10000 டாலர்களை 1 டாலர் = 46 ரூபாய் என்ற வீதத்தில் விற்றே தீர வேண்டும். அதற்கு சந்தையில் 50 ரூபாய் வீதத்தில் டாலர் வாங்கி 46 ரூபாய்க்கு விற்க வேண்டியிருக்கும்.

Options எனப்படும் தெரிவு ஒப்பந்தத்தில் விருப்பப்பட்டால் விற்கலாம் என்ற தெரிவு இருக்கும். 90 நாட்களுக்குப் பிறகு 1 டாலர் = 46 ரூபாய்கள் என்ற வீதத்தில் 10000 டாலர்களை விற்கும் தெரிவு, ஒப்பந்ததாரருக்குக் கிடைக்கிறது. அவர் விரும்பா விட்டால் விற்காமல் இருந்து விடலாம்.

இந்த தெரிவு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கான கட்டணங்கள் முன்பேர ஒப்பந்தங்களை விட அதிகமாக இருக்கும்.

Monday, September 22, 2008

முன்பேர ஒப்பந்தம்

forward trading என்பதை முன்பேர வணிகம் என்று வளர் தொழில் பத்திரிகையில் கையாளுகிறார்கள். எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம் என்பதை விட முன்பேர ஒப்பந்தம் கைக்கடக்கமாக இருக்கிறது!

இது போன்று முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்வதால் என்ன நடக்கும். ஒரு நடைமுறை உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

மாதா மாதம் 10000 டாலர்கள் வருமானம் பெறும் ஒருவர் மாதம் 5000 டாலர்களை 1 டாலர் = 46 ரூபாய்கள் என்ற வீதத்தில் விற்பதாக முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

1. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர்=46 ரூபாய்
ஒப்பந்தத்துக்கான கட்டணத் தொகை வீணாக வங்கிக்குக் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தமே இல்லாமல் இருந்தாலும் சந்தையில் டாலரை விற்று 46 ரூபாய் பெற்றிருக்கலாம்.

2. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர் = 48 ரூபாய்
ஒப்பந்தம் செய்து கொண்டதால் 46 ரூபாய்க்கே டாலர்களை விற்றுத் தொலைக்க வேண்டிய கட்டாயம். ஒப்பந்தம் செய்யாமல் இருந்திருந்தால் 5000 டாலர்களுக்கு, 10000 ரூபாய்கள் கூடுதலாக கிடைத்திருக்கும்.

3. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர் = 40 ரூபாய்
ஒப்பந்தம் செய்து கொண்டதால் 46 ரூபாய் கிடைத்து விடும். ஒப்பந்தம் இல்லாமல் இருந்திருந்தால் 5000 டாலர்களுக்கு 30000 ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருக்கும்.

முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு
அ. டாலர் வருமானம் வருவது உறுதியாக இருக்க வேண்டும். வருமானத்தின் அளவோ நேரமோ உறுதியின்றி இருந்தால், முன்பேர ஒப்பந்தம் ஒத்து வராது.
ஆ. நாம் எதிர்பாராத திசையில் செலாவணி வீதம் போனால், அதை நினைத்துக் குழப்பிக் கொள்ளாத மனநிலை வேண்டும்.

Friday, September 19, 2008

எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம்

போன வாரம் ஒரு நாள். வெளி நாட்டில் வேலை பார்க்கும், தற்போது விடுமுறையில் வந்திருக்கும் உறவினர் ஒருவர் காலையில் எகனாமிக் டைம்ஸ் நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தார்.

"என்ன! டாலர் 46 ரூபாய் ஆகி விட்டதா." உடனேயே அருகிலிருந்த அவரது மனைவியிடம், "கையிலிருக்கும் டாலரை எல்லாம் இன்னைக்கே ரூபாயா மாத்திரலாம்" என்றார்.

ஒரு டாலருக்கு 43, 44 என்று கபடி ஆடிக் கொண்டிருந்த நாணய மாற்று வீதம் ஒரு வாரத்துக்குள் 5%க்கு மேல் மாறி ஒரு டாலருக்கு 46 ரூபாய், அடுத்த நாளே 46.90 ரூபாய் என்று கூட ஆகி விட்டிருந்தது.

இந்த வரைபடத்தைப் பார்த்தால் டாலர் ரூபாய் வீதத்தின் ஊசலாட்டம் புரியும்.
http://ichart.finance.yahoo.com/1y?usdinr=x

மேலே சொன்ன உரையாடலின் பின்னணி என்ன?

'திடீரென்று டாலரின் மதிப்பு ஏறியிருக்கிறது. இதே நிலையில் இன்னும் பல நாட்கள் தாக்குப் பிடிக்காது. மீண்டும் அதன் மதிப்பு இறங்குவதற்கு முன்னே நம்ம கையில் இருப்பதை ரூபாயாக மாற்றிக் கொள்ளலாம்'. அதாவது வரும் நாட்களில் டாலரின் மதிப்பு குறையும் என்று இவர் நம்புகிறார்.

பொதுவாக, டாலரில் சம்பளம் வாங்குபவர்கள், டாலருக்கு பொருள் ஏற்றுமதி செய்பவர்கள் - வருங்காலத்தில் டாலரில் வருமானம் கிடைக்க இருப்பவர்கள் - இந்தக் கோணத்தில் நினைக்கத் தலைப்படுவார்கள். 'இனி மேல் ஏறா விட்டாலும் பரவாயில்லை. இப்போ இருக்கிற மதிப்பில் இருந்தாலே நமக்கு லாபம்தான்'

இதே செய்தியைப் படிக்கும் இன்னொருவர் வேறு மாதிரி நினைக்கலாம். 'என்னடா, ஒரு டாலருக்கு 46 ரூபாய் ஆகி விட்டது. இப்படியே போனால், இன்னும் ஓரிரு மாதங்களில் ஒரு டாலருக்கு 50 ரூபாய் என்று ஆகி விடலாம்.' அதாவது வரும் நாட்களில் டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏறும் என்று அவர் நம்புகிறார்.

டாலரில் பணம் கொடுக்க வேண்டியிருப்பவர்கள் - இறக்குமதி செய்பவர்கள், வெளி நாட்டிலிருந்து கடன் வாங்கியிருப்பவர்கள் - இப்படி கவலைப்படுவார்கள். வரும் நாட்களில் டாலரின் மதிப்பு இன்னும் ஏறி விட்டால் நமக்கு செலவு அதிகமாகி இழப்பு ஏற்படும். இதே மதிப்பில் நமக்கு டாலர் கிடைத்தால் போதும் என்று நினைப்பார்கள்.

இப்படி டாலர் எதிர்கால வரவு இருப்பவர்கள் ஒரு புறமும் தேவை இருப்பவர்கள் மறுபுறமும் இருப்பவர்களை இணைப்பது எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம்.

ஏற்றமதி செய்பவரைப் பொறுத்தவரை

'1 டாலருக்கு 44 ரூபாய் கணக்கில் விலை நிர்ணயித்து 10,000 டாலர் மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்கிறேன். வாடிக்கையாளரிடமிருந்து டாலர் எனக்கு வந்து சேர 1 மாதம் பிடிக்கலாம்.

அப்போது 1 டாலருக்கு 46 ரூபாய் வீதத்தில் மாற்ற முடிந்தால் 4,60,000 ரூபாய்கள் கிடைக்கும். ஒரு வேளை விலை சரிந்து 42க்கோ, 40க்கோ போனால் பேரிழப்பு (4,.4 லட்சம் ரூபாய் வர வேண்டும் என்ற கணக்கு தவறிப் போய் 4.2 லட்சம் அல்லது 4 லட்சம்தான் கையில் கிடைக்கும்).

பேசாமல், ஒரு மாதம் கழித்து 46 ரூபாய்க்கு 1 டாலர் என்று விற்பதாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்.'

யாரிடம் இவர் ஒப்பந்தம் போடுவார்?

இறக்குமதி செய்பவர்
'10,000 டாலர் மதிப்பிலான பொருளை வாங்க ஆர்டர் கொடுத்திருக்கிறேன். ஒரு மாதம் கழித்து பணம் கொடுக்கும் நேரம் வரும் போது டாலரிம் மதிப்பு 50 ரூபாய் என்று ஆகி விட்டால் 5 லட்சம் கொடுக்க வேண்டி வரும். இதே 46 ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் 4.6 லட்ச ரூபாய்களில் வேலை முடிந்து விடும்.'

இப்படி இரண்டு பேரும் 46 ரூபாய்க்கு ஒரு மாதம் கழித்து டாலர்களை பரிமாறிக் கொள்வதாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். ஆங்கிலத்தில் Forward Contract எனப்படும் எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படை இதுதான்.

நடைமுறையில் ஏற்றுமதியாளரும் இறக்குமதியாளரும் நேரடியாக ஒப்பந்தம் போடுவதில்லை. இடைத் தரகர்களாக வங்கிகள் இருப்பார்கள்.