Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

Wednesday, March 27, 2019

இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி

“ஒரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில் வெளியாகியிருந்தது. மணிந்தர் தபஸ் என்பவர் எழுதியிருந்தார்.

தேர்தலில் மோடி வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாவதால் டாலர் முதலீடு அதிகரிக்கிறது என்றும் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே புல்வாமாவுக்குப் பிறகு பதற்றம் அதிகரித்திருப்பதாலும் ரூபாய் மதிப்பு அதிகரிக்கிறது என்றும் இணைக்கப்பட்ட புளூம்பெர்க் செய்தியிலிருந்து காப்பி பேஸ்ட் செய்திருந்தார். மோடி ஆட்சியில் இருந்த போதே ரூபாய் மதிப்பு ஏன் வீழ்ந்தது என்று விளக்கவில்லை. புல்வாமா தாக்குதலுக்கும் ரூபாய் மதிப்புக்கும் என்ன தொடர்பு என்றால் இந்தப் போர் பதற்றத்தின் காரணமாக மோடி ஜெயிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறதாம். அதாவது, ஒரே ஒரு காரணம்தான் அவரது கண்டுபிடிப்பு. மோடி தேர்தலில் ஜெயிக்கப் போகிறார், வெளிநாட்டுக் காரர்கள் எல்லாம் புல்லரித்துப் போய் டாலரை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். 5 வருஷமா எங்க போனாங்கன்னு கேட்க வேண்டும்!

இணைக்கப்பட்ட புளூம்பெர்க் செய்தி -  India's Rupee Just Went From Asia's Worst to Best Currency-ல் சில புள்ளிவிபரங்களைக் கொடுத்திருந்தனர். மார்ச் 18 அன்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் $330 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியிருக்கின்றனர். ஒரே நாளில் உள்ள வந்த இந்த டாலர் அளவு அந்த தேதி வரையில் இந்த ஆண்டின் முதல் இரண்டரை மாதங்களில் வந்த டாலர் வரத்தக்கு இணையானது. அன்னிய முதலீட்டாளர்கள் தமது கடன் பத்திரங்களின் கையிருப்பை $140 கோடி டாலர் அளவுக்கு உயர்த்தியிருக்கின்றனர்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், இந்திய ரூபாயின் மதிப்பை குறுகிய காலத்தில் ஏற்றுவதோ, இறக்குவதோ பங்குச் சந்தையிலும், கடன் பத்திரச் சந்தையிலும் அன்னிய நிதி நிறுவனங்களின் வரத்தும் போக்கும்தான்.

கடந்த ஒரு மாதமாக அதிகமாக டாலர் இந்தியச் சந்தைகளுக்குள் வருவதற்கு வேறு என்ன காரணம்?

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி வீதங்களை உயர்த்தப் போவதில்லை என்று அறிவித்திருப்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பங்கு/கடன் சந்தைகளில் டாலர் வரத்தை அதிகரிக்கும் என்று சொல்கிறது எகனாமிக் டைம்ஸ் செய்தி. இது புளூம்பெர்க் குவிண்ட் செய்தியிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தனது கைவசம் இருக்கும் அரசு கடன் பத்திரங்களை விற்பதை செப்டம்பரில் முடித்துக் கொள்வதாகவும் அறிவித்திருக்கிறது. இந்த இரண்டும் சேர்ந்து அமெரிக்க டாலருக்கான வட்டி வீதத்தை குறைத்திருக்கிறது. எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக லாபத்தைத் தேடி பிற நாட்டுச் சந்தைகளில் முதலீடு செய்ய ஆரம்பிப்பார்கள்.

இரண்டாவதாக, இந்திய ரிசர்வ் வங்கியின் டாலர் ஸ்வாப் வசதியை பயன்படுத்துவதற்காக வங்கிகள் டாலரை இங்கு கொண்டு வருகின்றன என்ற செய்தி. இந்த ஸ்வாப் முறையின் கீழ் ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளிடமிருந்து டாலர்களை வாங்கி ரூபாயை விற்க முன் வந்திருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டாலர்களை குறிப்பிட்ட ரூபாய் மதிப்பில் (இப்போதைய மதிப்பை விட அதிகமாக இருக்கும்) வங்கிகளுக்கு திருப்பித் தரும். எவ்வளவு கூடுதல் விலை வங்கிகள் கேட்கின்றன என்பது மார்ச் 26 அன்று ஏலத்தின் மூலம் தீர்மானிக்கப்படும்.

அதாவது, 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு டாலருக்கு எத்தனை ரூபாய் என்று பந்தயம் கட்ட வேண்டும்.

இந்தத் திட்டத்தின்படி ரிசர்வ் வங்கி சுமார் $500 கோடி வங்கிகளிடமிருந்து வாங்கவிருக்கிறது. அதற்கு பதிலாக ரூ 35,000 கூடுதல் ரூபாய் வங்கிகளிடம் சேரும்.

இந்த டாலர் ஸ்வாப் முறையை ரிசர்வ் வங்கி முதல் முறையாக பயன்படுத்துகிறது.

வங்கித் துறையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கு ரிசர்வ் வங்கி பின்பற்றும் வழக்கமான நடைமுறை, சந்தையில் (வங்கிகளிடமிருந்து) இருந்து அவை கைவசம் வைத்திருக்கும் அரசு கடன் பத்திரங்களை பணம் கொடுத்து வாங்குவது. அதன் மூலம் வங்கிகளின் பணக்கையிருப்பு அதிகரிக்கும்.

அதைச் செய்யாமல் இந்த புதிய உத்தியை ரிசர்வ் வங்கி ஏன் பயன்படுத்துகிறது, என்று கேள்வி.

ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு ஏற்கனவே ரூ 2.9 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களை வங்கிகளிடமிருந்து வாங்கியிருக்கிறது.  இவ்வாறு கடன் பத்திரங்களை வாங்குவதன் மூலம் அவற்றின் வட்டி வீதம் குறைகிறது. எனவே, அரசு புதிய கடன் பத்திரங்களை வெளியிடுவதை அது எளிதாக்குகிறது. இதை ஒரு வரம்புக்குள் வைக்க ரிசர்வ் வங்கி விரும்புவதால் மேலும் கடன் பத்திரங்களை வாங்க விரும்பாமல் இருக்கலாம்.

வங்கிகள் தமது வைப்புத் தொகைகளின் குறிப்பிட்ட சதவீதத்தை அரசுக் கடன் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைகளில் ஒன்று. இப்போது வங்கிகளின் வைப்புத் தொகையில் சராசரி 27.9% அரசு கடன் பத்திரங்களாக அவற்றிடம் உள்ளது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருக்கும்  19.25%-ஐ விடக் கணிசமாக அதிகம்.

மேலும், எதிர்கால தேதியிட்டு பெரும் அளவிலான டாலர்களை விற்க முன்வருவதன் மூலம் எதிர்கால செலாவணியின் பிரீமியத்தை குறைக்க முயற்சிக்கிறது, ரிசர்வ் வங்கி. இதன் விளைவாக கடன் வாங்குபவர்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்த குறை பிரீமியத்தால் ஈர்க்கப்பட்டு அதிக அளவிலான டாலர் இந்தியச் சந்தைக்குள் பாயும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கலாம். இதிலும் வரும் டாலர் ஒரு கட்டத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் போதோ, லாபமாகவோ திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். எனவே, இது ரூபாயின் மதிப்பை நீண்ட கால நோக்கில் அதிகரித்து விடப் போவதில்லை.

மூன்றாவதாக, குறுகிய கால நோக்கில் (மேலே சொன்ன காரணங்களால்) ரூபாய் மதிப்பு அதிகரிப்பதை ரிசர்வ் வங்கி விரும்பவில்லை. இவ்வாறு $500 கோடி மதிப்பிலான டாலரை வாங்குவதன் மூலம் ரூபாய் மதிப்பு அதிகரிப்பை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆதாரங்கள் எதுவும் இல்லாத ஒரு காரணி உள்ளது. இந்தியத் தேர்தலை ஒட்டி வெளிநாடுகளில் தமது கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகளும், அவர்களது பினாமி நிறுவனங்களும் அதைச் செலவழிப்பதற்காக பங்குச் சந்தை வழியாக நாட்டுக்குள் கொண்டு வருவது நடந்து கொண்டிருக்கலாம்.

உண்மையில் நமது நாட்டுப் பணத்தின் மதிப்பு உயர வேண்டுமானால், நாம் அதிக மதிப்பிலான பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்ய வேண்டும். அது சர்வதேச அளவில் நமது வர்த்தக வலிமையை அதிகரிக்க வேண்டும்.

அது வரை, இது போல கடன் வாங்கி கல்யாணம் செய்வது போல, மேலும் மேலும் கடன் சுழலில் சிக்கி தவிக்க வேண்டியதுதான்.

Tuesday, March 26, 2019

இந்திய ரூபாய் சர்வதேச நாணயம் ஆக எப்போது மாறும்?

ரு காகிதம் அல்லது உலோகத் துண்டு எப்போது பணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது?
  • கட்டிடத் தொழிலாளி ஒருவர் வார இறுதியில் தனது ஒருவார உழைப்புக்குக் கூலியாக ரூபாய் நோட்டுகளை ஏன் வாங்கிக் கொள்ள சம்மதிக்கிறார்?
  • தனது ஒரு மாத உழைப்புக்கு ஊதியமாக மாத இறுதியில் வங்கிக் கணக்கில் ரூபாய் வரவு வைக்கப்படுவதை ஒரு ஐ.டி ஊழியர் ஏன் ஏற்றுக் கொள்கிறார். 
அவர்கள் தமக்குக் கிடைக்கும் ரூபாயை எப்படி பயன்படுத்துகின்றனர்? அந்தப் பணத்தை பயன்படுத்தி அவர்கள் தமக்குத் தேவையான பொருட்களையும், சேவைகளையும் வாங்க வேண்டும்; சக குடிமக்களும், நிறுவனங்களும் தாம் உற்பத்தி செய்த பொருட்களையும், சேவைகளையும் (கூலியாக/சம்பளமாக ஈட்டிய) ரூபாயை பெற்றுக் கொண்டு விற்பதற்கு  தயாராக இருப்பார்கள் என்ற நம்பிக்கைதான் அவர்களை ரூபாயை பணமாக ஏற்றுக் கொள்ள வைக்கிறது.

இந்த நம்பிக்கை நாடு தழுவிய அளவில் செயல்படுவதற்கு நாட்டு அரசின் அங்கீகாரமும், அரசின் நம்பகத்தன்மையும், வலிமையும் அவசியம். போலி ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படாமல் தடுப்பதற்கான போலீஸ் வலிமை, தேவைக்கு அதிகமாக நோட்டுகளை வெளியிட்டு விடாத பொறுப்பு இவை அரசுக்கு இருக்க வேண்டும்.

அது இல்லாமல் போகும் போது ஜிம்பாப்வேயில் 2000-2009 வரையிலும், சீனாவில் 1940-களிலும், ஜெர்மனியில் 1920களிலும், இப்போது சமீபத்தில் வெனிசுலாவிலும் நிகழ்ந்தது போல நாட்டின் பணம் மதிப்பை இழந்து விடும். இறுதியில் அந்தப் பழைய பணத்தை கைவிட்டு புதிய பணத்தை நாட்டு அரசு வெளியிடுவதாகவோ, அல்லது முற்றிலும் வெளிநாட்டு நாணயம் ஒன்றை பயன்படுத்த ஆரம்பிப்பதாகவோ முடிகிறது.

இந்தப் பின்னணியில் ஒரு நாட்டின் நாணயம் சர்வதேச நாணயமாக எப்படி ஆக முடியும் என்று பார்க்கலாம்.

ஒன்று, அந்தப் பணத்தை வைத்து தம் நாட்டுக்குத் தேவையான பொருட்களையும், சேவைகளையும் பிற நாடுகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று எல்லா நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்வதற்கு நாணயம் வெளியிடும் நாட்டின் பொருளாதார வலிமை அடிப்படையாக இருக்கிறது.

பொருளாதார ரீதியாக உலகம் முழுவதும் காலனிய அதிகாரமாக கால் பதித்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பவுண்ட் ஸ்டெர்லிங் 19/20-ம் நூற்றாண்டுகளிலும், அதே போல உலகின் மீது ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க டாலர் 20/21-ம் நூற்றாண்டிலும் உலகப் பொதுப்பணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

உலகப் பொதுப்பணத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாட்டு அரசுக்கு அதன் மூலம் பல ஆதாயங்கள் கிடைக்கின்றன. ஆனால் அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கான பொறுப்பும் அந்த நாட்டுக்கு இருக்கிறது.
  • போலி டாலர்கள் அச்சிடப்படாமல் தடுக்க வேண்டும்.
  • வங்கித் துறையை நம்பகமானதாக கட்டிக் காக்க வேண்டும்.
  • டாலரின் முதன்மை இடத்தைத் தக்க வைப்பதற்கு ஏற்ற பொருளாதார நடவடிக்கைகளை உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் எடுக்க வேண்டும்.
  • அது மட்டும் போதாது, சர்வதேச நாணயமாக தக்க வைத்துக் கொள்வதற்கான சர்வதேச அரசியல் ராணுவ நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதற்கேற்ற அரசியல், ராணுவ வலிமை இருக்க வேண்டும்.
ஆனால், இறுதிக் கணக்கில் தீர்மானகரமானதாக அமைவது அந்த நாட்டுக்குள் நடக்கும் பொருளாதார உற்பத்தி, மதிப்பு சேர்க்கும் நடவடிக்கைதான்.

அதனால்தான் சுமார் 40 ஆண்டுகள் உலகின் உற்பத்திக் களமாக செயல்பட்ட சீனாவின் யுவான் இப்போது பல நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படும் சர்வதேச நாணயமாக உருவெடுத்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு சவால் விட முயற்சிக்கிறது.

இது போல இந்திய ரூபாய் சர்வதேச அரங்கில் ஏற்றுக் கொள்ளப்படுவதாக மாற வேண்டுமானால், இந்தியாவின் பொருளாதாரம் மனித சக்தி ரீதியாகவும் சரி, தொழில்நுட்ப ரீதியாகவும் சரி, இயற்கை வளங்களை பயன்படுத்துவதிலும் சரி சுயேச்சையாக செயல்பட வேண்டும். நமது பொருளாதார செயல்பாடு நம் உள்நாட்டு பொருளாதாரத்தை வளப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.

மாறாக, வெளிநாட்டு முதலீடு, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி என்ற சார்பு நிலை முதன்மையாக இருந்தால் இந்திய நாணயம் பிற நாட்டு நாணயங்களுக்குக் கீழ்ப்பட்ட இரண்டாம் நிலையிலேயே இருந்து வரும்.

ஆங்கிலத்தில் இந்தக் கேள்விக்கு விடை

Tuesday, June 29, 2010

பணம் என்பது திறமையின் வெளிப்பாடா?

தமிழ்நாட்டில் நீண்ட தூர பேருந்துகளில் கட்டண வீதம் ஒரு கிலோமீட்டருக்கு 28 பைசா.
  • 28 ரூபாய் இருந்தால் 100 கிலோமீட்டர் போகலாம். (100 கிலோமீட்டர் x 28 பைசா = 28 ரூபாய்).

  • 5 ரூபாய் இருந்தால் 15 கிலோமீட்டர் போகலாம் (500 பைசா / 28 பைசா = 17.8). 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊருக்கு போக முடியாது. (விரைவுப் பேருந்துகள் சிறப்புப் பேருந்துகள் என்று பல தடங்களில் கட்டணம் கூடுதலாக இருக்கும்.)
கணக்கை எளிமைப் படுத்த ஒரு ரூபாய்க்கு எத்தனை கிலோமீட்டர் போகலாம் என்று குத்துமதிப்பான எண்ணை வைத்துக் கொண்டு பார்க்கலாம். 100/28 = 3.5 கிலோமீட்டர்கள்.

இரண்டு ரூபாய் கொடுத்து நாளிதழ் வாங்குகிறோம் என்றால் 7 கிலோமீட்டர் (2x3.5) நடப்பதில் அல்லது ஓடுவதில் செலவாகும் உழைப்பை அந்த நாளிதழுக்காக தருகிறோம் என்பது பொருள். அப்படிப் பார்க்கும் போது 2 ரூபாய்க்கு மதிப்பு இன்னும் தெளிவாகப் புரிகிறது.

ஒரு வேலைக்கு பத்தாயிரம் ரூபாய் கேட்கிறோம் என்றால் கிட்டத்தட்ட 35,000 கிலோமீட்டர் (10,000x3.5=35,000) நடப்பதற்கான உழைப்பை நாம் அளிக்கிறோம் என்று பொருள். அந்த உழைப்பில் இப்போது செலவளிக்கும் நேரம் ஆற்றலுடன் கூடவே அந்த வேலையைச் செய்யத் தேவையான திறமையைப் பெற மேற்கொண்ட கல்வி, விபரங்களைத் திரட்ட செலவழித்த நாட்கள் இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு உழைப்பு அதில் இருக்கிறதா?

1 லட்சம் ரூபாய் மென்பொருளை விற்கிறோம் என்றால் கிட்டத்தட் (1,00,000x3.5=3,00,000) 3.5 லட்சம் கிலோமீட்டர் தொலைவு பயணிக்கும் முயற்சியும் பலனும் அளிக்க வேண்டும். அப்படி அளிக்கிறோமா?

இதுதான் கணக்கு.

  • பொருளாதார உலகில் எல்லாமே மனித உழைப்புதான். மற்றவை எல்லாம் இயற்கையில் கிடைப்பவை.
  • நிலம், தாதுப் பொருட்கள், விளைபொருட்கள் இவை இயற்கையிலேயே உருவாகியிருக்கின்றன.
  • நிலத்தைப் பண்படுத்த, தாதுப் பொருட்களை அகழ்ந்து தூய்மைப்படுத்த, விளைபொருட்களை பெருக்க, புதிய பொருட்களை உற்பத்தி செய்ய மனித உழைப்பு தேவைப்படுகிறது.
  • இந்த உழைப்பு நேரடியாகவோ அல்லது ஒரு இயந்திரம் மூலமாகவோ நடக்கலாம். இயந்திரம் செய்யவும் மனித உழைப்புதானே தேவைப்படுகிறது.

இந்த மனித உழைப்புக்கு மட்டும்தான் பொருளாதார பரிமாற்றத்தில் மதிப்பு. உழைப்பின் விளைவை பணமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

நமது உழைப்பினால் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து கொள்ள முயற்சிக்காமல், தேவைகளில் பலவற்றை மற்றவர்களின் உழைப்பின் மூலம் சாதித்துக் கொள்ள முடிகிறது. நமது உழைப்பின் பலனை அவர்களின் தேவைகளுக்குக் கொடுப்பது மூலம் அந்தப் பரிமாற்றத்தை நடத்திக் கொள்கிறோம்.

அப்படிப்பட்ட பரிமாற்றத்தின் செலாவணிதான் பணம். நான் உழைத்ததற்கு பணம் கிடைக்கிறது, அதைக் கொண்டு அடுத்தவரின் உழைப்பை வாங்கிக் கொள்கிறேன். ஒரு நாளின் 24 மணிநேரமும் ஒரு வாழ்நாளும்தான் ஒவ்வொரு மனிதரின் இயற்கையான சொத்து. அவற்றைப் பயன்படுத்தி உருவாக்கும் மதிப்பை விற்று பணம் ஈட்டி மற்ற தேவைகளை நிறைவேற்ற அடுத்தவரின் உழைப்பை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த உழைப்பு நேரடியான உடல் உழைப்பாக மட்டும் இன்றி, முந்தைய ஆண்டுகளில் குறிப்பிட்ட வேலையை செய்ய உழைத்த முயற்சிகளையும் உள்ளடக்கும். ஒரு துறையில் பட்டம் வாங்க உழைத்திருக்கிறோம், அந்த அறிவைக் கொண்டு குறிப்பிட்ட செயலை சிறப்பாக செய்ய முடிகிறது (அதிக மதிப்பு உண்டாக்க முடிகிறது), அதற்கு ஏற்ற பணம் விற்பனையில் கிடைக்கும்.

இந்த உழைப்பில் பணியை செய்வதற்குத் தேவையான கருவிகளை வாங்கிய பணமும் அடங்கும். கருவிகள் மூலம் உழைப்பு அதிக மதிப்பைத் தருகிறது. அந்தக் கருவிகளை வாங்குவதற்கு முந்தைய உழைப்பின் பலனைப் பயன்படுத்தியிருக்கிறோம். அந்த உழைப்பும் நமக்குக் கிடைக்கும் விலையில் அடங்க வேண்டும்.

உற்பத்தியின் காரணிகளாக நிலம், மனித உழைப்பு, மூலதனம் என்று எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பரிமாற்றத்தின் காரணிகளாக மனித உழைப்பு மட்டுமே இருக்க வேண்டும். நிலத்தைப் பண்படுத்திய உழைப்பு, மூலதனத்தை உருவாக்கிய உழைப்பு இரண்டையும் நேரடி உழைப்புடன் சேர்த்து உற்பத்தியின் மதிப்பை கணக்கிடலாம்.

Saturday, June 19, 2010

ஒரு வங்கியின் கதை

1993ல் வங்கியாக தொடங்கப்பட்ட ஐசிஐசிஐ நிறுவனம் அடுத்த 15 ஆண்டுகளில் போட்ட ஆட்டம், மேற்கத்திய நிதி நிறுவனங்கள் கண்டு பிடித்த புதிது புதிதான உத்திகளின் மூலம் மக்களின் உழைப்பை (பணத்தை) சுரண்டி, அந்த நிறுவனங்களின் மேலாளர்களும் பங்குதாரர்களும் பெரும் பணம் எடுத்துக் கொண்ட கதையின் ஒரு சிறு வடிவம்.

இந்திய ஒழுங்கு முறை சட்டங்களுக்குள் பெரிய அளவில் தில்லுமுல்லு செய்ய முடியாமல் தப்பித்து விட்டார்கள்.

பொருளாதார சீட்டு அடுக்கு சரிந்த பிறகான சென்ற ஒன்றரை ஆண்டில் ஐசிஐசிஐ வங்கியில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கி ஜூன் 27 தேதியிட்ட பிஸினஸ் இந்தியா ஆங்கில இதழில் அட்டைப்படக் கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.

அந்தக் கட்டுரையிலிருந்து சில விபரங்கள்:
  • வட்டி வழியாக சம்பாதித்தது, வட்டி அல்லாத வருமானம் இரண்டும் 2009-10ல், 2008-09ஐ விடக் குறைந்து விட்டன.

  • நேரடி விற்பனையாளர்களுக்கு (அதுதான் தெருவெல்லாம் வழி மறித்து கார்டு வித்தாங்களே) செலவழித்த தொகை 2009-10ல் முந்தைய ஆண்டை விட நான்கில் ஒரு பகுதியாகக் குறைக்கப்பட்டது.

  • கடன் கொடுத்த தொகை கிட்டத்தட்ட 15% குறைக்கப்பட்டது. வைப்புத் தொகை 7% குறைந்தது.

  • வாரக்கடன்களின் சதவீதம் கடன் தொகையில் 2.09%லிருந்து 2.12 உயர்ந்தது.
கடனட்டை வியாபாரத்தைப் பற்றி:

ஒரு காலத்தில் குறைந்தது அரை டஜன் கடனட்டை விற்பனையாளர்கள் துரத்தாமல் ஒரு கடைத்தெருவுக்குப் போய் வர முடியாத நிலைமை இருந்தது. உங்களிடம் ஒரு செல்பேசி இருந்தால் கடனட்டை வாங்கும் தகுதி இருப்பதாக எடுத்துக் கொண்டார்கள்.

'இன்றைக்கு மாதத்துக்கு கிட்டத்தட்ட 1000 கடனட்டைகள் வழங்குகிறோம். ஒரு கட்டத்தில் மாதத்துக்கு 2,00,000 அட்டைகள் கூட கொடுத்துக் கொண்டிருந்தோம்.'

சில்லறைக் கடன் (கடனட்டை, தனிநபர் கடன்) கொடுப்பதை கிட்டத்தட்ட நிறுத்தி விட்டார்கள். மொத்த கடன் தொகையில் 49% ஆக இருந்த சில்லறைக் கடன்களை இப்போது 43.6% ஆக குறைத்திருக்கிறார்கள்.

விற்பனைப் பொருளை மையமாகக் கொண்ட அணுகுமுறையை மாற்றி வாடிக்கையாளரை மையமாக வைத்து சேவை வழங்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

'முன்பெல்லாம் எப்படியாவது புதிய வாடிக்கையாளரைக் கொண்டு வந்து விட வேண்டும் என்பதுதான் மந்திரமாக இருந்தது. இப்போது வாடிக்கையாளர் சேவையில் கவனம் செலுத்துகிறோம்.'