Sunday, February 8, 2009

பணசாட்சியும் மனசாட்சியும்

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேல் உழைத்த பிறகு பணத்தைக் கேட்டால், 'வேலை எதுவுமே செய்யவில்லை, எங்களுக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை, இதுவரை கொடுத்த பணத்தைக் கூட ஒருபகுதி திரும்பிக் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். எங்களது பெயரை உங்கள் வாடிக்கையாளர் பட்டியலிலிருந்து நீக்கி விட்டு, சட்டப்படி தீர்வு செய்யுங்கள்' என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.

கோபமும் ஆத்திரமும் பொங்கி வந்தாலும் அதை எல்லாம் உள்ளுக்குள் திட்டித் தீர்த்து விட்டு, பொறுமையாக பணிவாக நமது நிலைமையை விளக்கி பதில் போட்டிருந்தோம். ஆரம்பத்திலிருந்த நடந்த தகவல் பரிமாற்றங்கள், மென்பொருள் உருவாக்கப் பணிகள், அவர்கள் நிறுவனத்துக்குப் போய் செய்த பணிகள் போன்ற விபரங்களை நமது தகவல் பயன்பாட்டிலிருந்தும், மின்னஞ்சல்களிலிருந்தும் தொகுத்து அனுப்பி விட்டிருந்தோம்.

'அதே பணத்துக்கு அதிக வேலை வாங்க முயற்சிக்கிறார்களா அல்லது மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறார்களா' என்று பல குழப்பங்கள். 'எல்லா விபரங்களையும் திரட்டி விட்டோம். அவர்களுக்கு நமது கட்சியை எடுத்துச் சொல்வோம்.' என்று ஒரு உத்தேசமான கருத்தொற்றுமை உருவாக்கியிருந்தோம்.

இந்த நிறுவனத்துக்கான பணி ஆரம்பித்த போது, அது வரை மென்பொருளில் பார்த்த குறைகளை எல்லாம் ஒரு மூச்சாக நிவர்த்தி செய்து விடுவோம் என்று அடிப்படை வடிவமைப்பில் நான்கைந்து பெரிய மாற்றங்களை செய்து முடித்திருந்தோம். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களை விட இவர்களுக்கு மிக உறுதியான அடிப்படையிலான பயன்பாடு கொடுத்திருந்தோம். நம்மைப் பொறுத்த வரை நமது பயன்பாட்டில் ஏற்பட்ட மேம்பாடு அவர்கள் கொடுத்த வாய்ப்பினால் கிடைத்தது. ஒரு ஆண்டு உழைத்ததற்கு பணம் கிடைக்கா விட்டாலும் கூட, இந்த மேம்பாட்டைப் பயன்படுத்து நிறைய ஈட்டிக் கொள்ளலாம்.

நாம் ஒரு ஆண்டு உழைத்தும் அவர்களுக்கு எதிர்பார்த்த, தேவையான பலன்கள் கிடைக்கவில்லை என்றால் அவர்களைப் பொறுத்த வரை நாம் அவர்களுக்காக செய்த வேலை வீண்தான். அதற்கு பணம் வாங்கியது, இன்னும் பணம் கேட்பது என்பது நியாயமாகாது. கொடுத்த பணத்தில் ஒரு பகுதி என்று இல்லாமல், மொத்தத்தையும் திருப்பிக் கொடுத்து விடுவோம். திருப்புவதற்கான காலக்கெடுவை மட்டும் வாங்கிக் கொள்வோம்.

'ஆரம்பத்தில் எந்த சுணக்கமும் இல்லாமல் கொடுத்து வந்த நீங்கள் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பிறகு பணம் கொடுப்பதில் தயக்கம் காட்டும் போது நாங்கள் அதன் காரணத்தைப் புரிந்து கொண்டு உங்களிடம் பேசி திருத்திக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு வழி தேடியிருக்க வேண்டும். அதைச் செய்ய நாங்கள் தவறி விட்டோம்.'

'இப்போது, இது வரை கொடுத்த பணத்துக்கான பலன் உங்களுக்கு வந்து சேரவில்லை என்று நீங்கள் சொல்லி விட்டீர்கள். வாடிக்கையாளரிடமிருந்து வாங்கிய தொகையை விட ஒரு ரூபாயாவது ஆதாயம் ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.'

'எங்கள் பக்கம் பேசிய தொகைக்கு நாங்கள் பணி செய்து விட்டதாக நாங்கள் நினைத்தாலும், அந்தப் பணிக்கான பலன்கள் உங்களை வந்து சேரவில்லை என்னும் போது அந்தப் பணத்தை நாங்கள் திருப்பிக் கொடுத்து விடுவதுதான் முறையானது என்று நீங்கள் சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.'

'நிறுவனத்தை நடத்தும் நாங்கள் யாருமே அதீத லாபம் ஈட்டி வாழ வேண்டும் என்ற குறிக்கோளில் பணி புரியவில்லை. தோல் துறை நிறுவனங்களுக்கு தகவல் தொழில் நுட்ப கருவிகள் குறைவான செலவில், நிறைவான பலனில் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், பணிபுரியும் எல்லோருக்கும் அளவான வாழ்க்கை நடத்தத் தேவையான பொருள் மட்டும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.'

'நாங்கள் உழைத்த நாட்கள், செய்த பணிகளின் செலவு எங்கள் பக்க நிலவரம். அந்தப் பணியின் பலன் தொடவில்லை என்பது உங்கள் பக்க உண்மை. இந்த நிலையில் நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுகிறோம்'

1. 'உங்களுக்கு பல முறை உணர்த்தியும் எங்களுக்கு வேலை நடக்கவில்லை. கொடுத்த பணம் முழுவதையும் திருப்பி விடுங்கள்.' என்று நீங்கள் தீர்ப்பு சொன்னால், மிகவும் வருத்தத்துடன், நாங்கள் ஒரு ஆண்டுகளுக்கு மேல் செய்த முயற்சிகளுக்கும், நீங்களும் உங்கள் ஊழியர்களும் உழைத்த மணிகளுக்கும் பலனில்லை என்ற வருத்தத்துடன், பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் முயற்சியில் இறங்குவோம்.

உடனடியாக முழுப் பணத்தையும் திருப்பி விடும் செழிப்பு இல்லாத எங்கள் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒரு ஆண்டு அவகாசம் கொடுத்து அதற்குள் திருப்பி விடும்படி அனுமதியுங்கள். அதற்கிடையில் இந்தப் பணியையோ, வேறு பணிகளையோ எங்களுக்குக் கொடுத்து ஆதரித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

2. 'எங்கள் பக்கமும் தவறுகள் சில இருக்கின்றன. உங்கள் பக்கமும் பல தவறுகள் இருக்கின்றன. இது வரை போனது போகட்டும், நீங்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து விடுகிறேன். இனிமேல் செய்யும் வேலைக்கும் இன்ன தொகையை ஒதுக்கி விடுகிறேன். மார்ச்சு 31க்குள் முடித்துக் கொடுத்து விடுங்கள்' என்று தீர்ப்பளித்தால் என்றென்றும் மறக்காத நன்றிக் கடனோடு உங்கள் சேவையில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம்.

இப்படி ஒரு மனத் தயாரிப்பு வந்து விட்டது. இல்லை பேரம் பேசுவதற்காகத்தான் கூப்பிடுகிறார்கள் என்றால் இது வரை செய்த வேலைக்கான தொகையைத் தந்து விட்டு இனிமேல் செய்வதற்கான கட்டணத்தையும் தருவதற்கு ஒத்துக் கொண்டால் தொடர்வோம். இரண்டுக்கும் நடுவில் இதே பணத்துக்கு இன்னும் வேலை செய்யுங்கள் என்பது மட்டும் வேண்டாம்.

வாசற் காவலரிடம் பேரைச் சொல்லி வந்த வேலையைச் சொன்னேன். உள்ளே நிறுவனத் தலைவரின் நேரடி உதவியாளரிடம் பேசினார். வழக்கமாக அவரே உள்ளே விடச் சொல்லி விடுவார். இப்போது இன்னொரு முறை உள்பேசியைச் சுழற்றி வரவேற்பறை மேலாளரிடம் பேசினார்.

வரவேற்பறைக்குப் போனால் உடனேயே மேலே போகச் சொல்லி விட்டார். அதற்குள் பேசி முடிவு செய்து விட்டார்கள். 'பயன்படுத்துவதை நிறுத்தி விட்டோம்' என்று நிறுவனத் தலைவர் சொன்னதைச் சரிபார்க்கும் விதமாக கணினித் திரைகளை எட்டிப் பார்க்க முயற்சிக்கவில்லை. அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வோம். நிறுவனத் தலைவர் அறையில் விளக்கு எரியவில்லை. இன்னும் வந்திருக்கவில்லை.

நேரடி உதவியாளர் வரவேற்று உள் அறையில் உட்கார வைத்துப் பேசிக் கொண்டிருந்தார். பேச வேண்டியதை முன்கூட்டியே வெளியில் சிதற விட்டு விடக் கூடாது என்று நானும் பொதுவான மற்ற செய்திகளையே பேசிக் கொண்டிருந்தேன். தோல் கண்காட்சியில் நாங்கள் பங்கேற்றது, தோல் துறையின் நிலைமை, உலகப் பொருளாதாரச் சுணக்கம். நமது நிறுவனச் செய்திகள் என்று வளர்ந்து கொண்டே போனது. அவர் ஒரு கட்டத்தில் விட்டுச் சென்றதும் கணினியை இயக்கி எழுத ஆரம்பித்தேன். காத்திருந்து மனதைக் கனக்கச் செய்து கொள்ள வேண்டாம்.

நிறுவனத் தலைவர் 11 மணிக்கெல்லாம் வந்து விட்டார். உள்ளே போய் பேசி விட்டு வந்த உதவியாளர், முன்னதாக நான் அனுப்பியிருந்த மின்னஞ்சல் நகல்களை எடுத்துக் கொண்டு வந்து, 'இதற்கு விளக்கம் கேட்கிறார். நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டுக் கொள்ளச் சொன்னார். அதன் பிறகு அவரைப் பார்க்கலாம்'

அப்போ சரி என்று ஆரம்பித்தேன். நினைத்து வைத்திருந்த முடிவை விளக்கினேன். 'எங்களுக்கு பண நெருக்கடி நிறைய உண்டு. கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் இருப்பது கொடும்பாவம் என்று கூட நான் வசை கேட்கிறேன். அந்த பாவங்களுடன் எங்கள் மென்பொருளைப் பயன்படுத்த முடியாத வாடிக்கையாளரிடம் பணம் வாங்கினேன் என்ற பாவமும் சேர வேண்டாம். நீங்கள் வர்த்தக நிறுவனமோ தரகு நிறுவனமோ கிடையாது. ஒவ்வொரு ரூபாயும் தொழிலாளர்களின் உழைப்பின் பலன். அதைச் செலவழிப்பதில் சரியாக காரண கற்பிதம் இல்லா விட்டால், உங்கள் நிறுவனத் தலைவரின் முடிவு இப்படித்தான் இருக்கும்' என்றேன்.

அவரது பதில் எதிர்நிலையாக இருந்தது. 'இனிமேல் செய்ய வேண்டிய வேலைக்கு இவ்வளவு பணம் கேட்கிறீர்களே, அதை மட்டும் மறுபரிசீலனை செய்து கொள்ளச் சொன்னார்' என்று சொல்ல ஆரம்பித்தார். கணினித் துறை மேலாளர், 'நாங்களும் உங்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டோம் சார், எப்படி ஒரு பொருளை விளக்குவது, எழுதி அனுப்புவது என்றெல்லாம் நிறைய தெரிந்து கொண்டேன்' என்று உணர்ச்சி பூர்வமாகவே சொன்னார்.

இந்த நேரத்தில் தோல் கண்காட்சிக்காக உருவாக்கியிருந்த காட்சிப்பட விளக்கங்களை காண்பிக்க ஆரம்பித்தேன். நமது நிறுவனச் செயல்பாட்டு முறை பற்றிய காட்சி முதலில். அதைத் தொடர்ந்து உலகளாவிய நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் அளவு, போக்கு பற்றிய விபரங்கள். பொறுமையாகப் பார்த்தார்கள். இதன் நகல் அனுப்பி வையுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார் கணினித் துறை மேலாளர்.

இதை எல்லாம் பேசி முடித்தவுடன், 'போய்ப் பார்க்கலாம்' என்று உள்ளே அழைத்தார் உதவியாளர். கதவைத் திறந்து வணக்கம் சொன்னதும், 'வாங்க சிவா' என்று அன்பாக வரவேற்றார் நிறுவனத் தலைவர்.

வழக்கம் போல, 'சொல்லுங்க' என்று நிறுத்தினார். வருபவர்களை பேச விட்டு அவர்கள் எப்படி வருகிறார்கள் என்று பார்த்து விட்டு தமது சீட்டுகளை இறக்குவது பல வெற்றிகரமான நிறுவனத் தலைவர்களிடம் பார்த்திருக்கிறேன். நினைத்து வைத்திருந்த கருத்துக்களைச் சொன்னேன். 'எங்களைப் பொறுத்த வரை வேலை செய்து விட்டோம் என்று நினைத்தாலும், நீங்கள் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லும் போது, உங்கள் முடிவு எதுவானாலும் அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். நீங்கள் கொடுத்த வாய்ப்பின் மூலம் எங்கள் மென்பொருளை பல நிலைகள் மேம்படுத்திக் கொள்ள முடிந்ததே எங்களுக்கு பெரிய ஆதாயம்தான்'

'பணியைத் தொடருவதற்கு உங்களுக்கு விருப்பமே இல்லாதது போல எனக்குப்படுகிறது. அவ்வளவு தொகை எல்லாம் என்னால் கூடுதல் கொடுக்க முடியாது. எங்களது குழுமத் தலைவரிடம் போய் இது போல கூடுதல் கேட்கிறார்கள் என்று சொன்னால் வேலையை முழுமையாக நிறுத்தி விடத்தான் சொல்வார். அவரிடம் போவதற்குப் பதிலாக நானே நிறுத்தி விடுகிறேன். உங்களுக்கு பணம் கொடுத்திருக்கிறோம். அதை இழப்பாக வைத்துக் கொள்கிறோம்.'

'நிச்சயமாக நாங்கள் அப்படி இல்லை. உங்கள் நிறுவனத்துடன் பணி செய்வது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்று எனக்குத் தெரியும். கல்லூரியில் படிக்கும் போதே உங்கள் நிறுவனத்தைப் பார்த்து மதிப்பு கொண்டவன் நான். எங்களது சின்னக் குழுவை நடத்திச் செல்வதற்கு குறைந்த பட்ச பண ஆதரவை மட்டும் நீங்கள் கொடுத்தால் நிச்சயமாக நாங்கள் ஆகச் சிறந்த சேவையை உங்களுக்குத் தொடர்ந்து கொடுப்போம்'

'நீங்கள் கேட்கும் அளவுக்கு என்னால் தர முடியாது' என்று ஒரு தொகையேச் சொல்லி, 'இந்தத் தொகைக்கு உங்களால் செய்ய முடியும் என்றால் என் உதவியாளரிடம் விவாதித்து, திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள். ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக எல்லா பணிகளையும் முடித்திருக்க வேண்டும். மீண்டும் இது போல உட்கார்ந்து பேசுவதற்கு நான் தயாராக இல்லை. தற்போது உங்களுக்குத் தர வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை பத்து நாட்களுக்குள் தரச் சொல்கிறேன்'

'அப்படியே செய்கிறேன்' என்று வெளியில் வந்தேன். வாராக்கடனாக பெருந்தொகையை இழந்து, இது வரை செய்த பணிகளின் பலனையும் முற்றிலும் இழந்து தவிப்போமோ என்று கலங்கிக் கொண்டிருந்தது, சுமுகமாக முடிந்து மேல் பணிகளுக்கும் வழி ஏற்பட்டு விட்டது. வெளியில் உதவியாளரிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டேன். 'உங்கள் குழுவினரிடமும் பேசி விட்டுத் திட்டம் அனுப்புங்கள்' என்று சொல்லி விடை கொடுத்தார்.

கடமையும் தருமமும்

'தவறாமல் முதல் தேதி சம்பளம் கொடுத்து விட வேண்டும், எப்படியாவது கொடுத்து விட வேண்டும்'

3. அதற்கு இறுதிப் பொறுப்பு நிறுவனத் தலைவர்தான் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
2. மூத்த பொறுப்பில் இருப்பவர்களுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வர கொண்டு வர வேண்டிய கடமை இருக்கிறது.
1. நிறுவனத்துக்கு வரும் பணத்தை சம்பளம் கொடுப்பதற்குத்தான் முதல் உரிமை தருகிறோம்.

'சம்பளம் கூட்டிக் கொடுப்பது குறித்துப் பேசிய போது ஏற்கனவே இருக்கும் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றும் முறைகளை வகுத்துக் கொள்ளச் சொன்னேன். நீ கேட்க வில்லை'

'நீ மட்டும் அதைச் சொல்லவில்லை. அதனால் ஆதாயம் அடைபவர்கள் கூட அதை குழப்பத்தோடுதான் பார்த்தார்கள். 10000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் இன்றைக்கு 25,000 சம்பளத்தில் இருக்கிறார். அதே நிறுவனத்தில் அவருக்கு 15000 என்று உயர்வு கிடைத்திருந்தால் கூட ஆண்டு முழுமைக்கும் 1.8 லட்சம் கிடைத்திருக்கும்.'

'குறைந்த சம்பளத்திலேயே இயங்கிக் கொண்டிருந்தால், திறமை படைத்தவர்கள் வேலை கற்றுத் தேர்ந்தவர்கள் ஆறு மாதங்களுக்கு இரண்டு பேர் என்று விலகிப் போய் விடுகிறார்கள். அப்புறம் நாம் ஆரம்பத்திலிருந்து புதியவர்களுக்குக் கற்றுக் கொடுத்து எழுந்து நிற்க வேண்டியிருக்கிறது.'

'தொடக்கத்திலேயே பெரு முதலீடு கொண்டு வந்து திறமையானவர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு உயர் சம்பளம் கொடுத்து வைத்திருக்கும் முறையில் செயல்படும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படி வரவுக்கு மேல் சம்பளம் கொடுப்பதும் ஒரு முதலீடு போலத்தான். நேரடியாக பணம் போட்டவர்கள், தமது உழைப்பை தந்தவர்கள் என்று பலரும் இதில் முதலீடு செய்திருக்கிறோம்.'

'வளர்ச்சிக்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஏணி மாதிரி அல்லது மாடிப்படி மாதிரி. ஏணி மாதிரியில் வளர்ச்சி ஒரே சாய்வுடன் தொடர்ந்து கொண்டே இருக்கும். வேகமாக வளரலாம், எப்போதும் அழுத்தத்துடனேயே இருக்க வேண்டி வரும், கீழே விழுந்தால் ஒரே அடியாக தரையில்தால் விழ வேண்டியிருக்கும்'

'மாடிப்படி முறைமையில் ஒரு படியில் ஏறியதும் கொஞ்ச தூரம் அதே தளத்தில் நடந்து விட்டு அடுத்த படியில் ஏற முயற்சிக்க வேண்டும். கிட்டத்தட்ட மலையேறும் படி போல் என்று வைத்துக் கொள்ளலாம். இதில் ஏறும் வீதம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், ஒரு படியில் ஏற முயற்சிக்கும் போது தவறி விட்டால் ஏணியிலிருந்து விழுவதைப் போல தரைக்கு வந்து விடாமல், கீழ்ப் படியில்தான் போய் விழுவோம். இன்னொரு முறை முயற்சித்து ஏறிக் கொள்ளலாம்'

'நாம் மலைப்படி முறையைப் பின்பற்றாமல் ஏணி முறைமையில் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த நிறுவனங்களுக்கு நிவதி செய்து கொடுத்து சம்பாதிப்பது என்பது நமது குறிக்கோள் கிடையாது. நிறுவனங்களை இணைக்கும் மென்பொருள் சேவைதான் நமது நீண்ட கால குறிக்கோள். மலைப்படி முறையைப் பின்பற்ற ஆரம்பித்தால் படியிலேயே இளைப்பாற ஆரம்பித்து விடும் அபாயம் இருக்கிறது. நாம் ஏறிக் கொண்டேதான் இருக்க வேண்டும்'

'நிறுவனத் தலைவரின் வழிகாட்டலில்தான் பணிகள் நடக்கின்றன. ஒவ்வொருவரும் தமது நேரத்தைத் திறமையை தலைவரின் வழிகாட்டலில் செலவிடுகிறார்கள். அந்த வழிகாட்டல் சரியான திசையில் இருக்க வேண்டும், அதிலிருந்து சரியான பணபலன்கள் கிடைக்க வேண்டும் என்ற பொறுப்பு நிறுவனத் தலைவருக்குத்தான்.'

'நிறுவனத்தின் வருமானத்தை எடுத்துக் கொண்டு போய் பிற இடங்களில் சேமித்து வைத்திருப்பது இங்கு நடக்கவில்லை'

'பிற வழிகளில் சம்பாதித்து சேமித்து வைத்ததை எல்லாம் முதலீடாகப் போட்டிருக்கிறோம். நண்பர்களிடமிருந்து பணம் வாங்கி கடனாகவும், முதலீடாகவும் போட்டிருக்கிறோம். கடனட்டையில் கடன் வாங்கிக் கூட செலவழித்திருக்கிறோம்'

'எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதித்து விட வேண்டும், எப்படியானாலும் ஆதாயம் அதிகப்படுத்தி விட வேண்டும் என்று சத்யமின் ராமலிங்க ராஜூ தனக்குத் தெரிந்த வழிகளில் தகிடுதத்தங்கள் செய்து கொண்டிருந்தார். எச் சி எல்லின் சிவ்நாடார் பணம் வாங்கி வர வேண்டிய விற்பனையாளர்கள் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவாராம், போட்டியாளர்களை விட தான் குறைந்து விடக் கூடாது என்று கொடுக்க வேண்டிய பணத்தை தாமதப்படுத்துகிறார்.'

'அதுதான் நமது தொழில் செய்யும் சூழல். அவர்களுடன் ஒப்பிட்டு அவர்கள் பின்பற்றும் அதே வழிகளில் நாமும் பணம் ஈட்டுவது குறித்து நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.'

'தர வேண்டிய பணத்தைக் கொடுத்து விடும் விவாதம் வந்த போது நினைவுப் பிறளல் அல்லது வேறு ஏதோ காரணத்தினால், அதிகமான பணத்தைக் கொடுத்து விட இருந்தார். அதை சரி செய்ய வேண்டுமா என்று ஒரு கணம் தயங்கி குறைந்த பணம்தான் தர வேண்டும் என்று சொல்லி விட்டேன். அந்தக் கணத்தில் என்ன செய்திருக்க வேண்டும்?'

'நான் அவரது தடுமாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் உடனடியாகவோ, ஓரிரு நாட்களிலோ உண்மை வெளியில் வந்து உறவு பின்னப்பட்டிருக்கும் என்ற நடைமுறை ஒரு புறம் இருக்க, நம்முடைய தர்மப்படி எதிராளியின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது, உண்மையை பேச வேண்டும் என்பது நடைமுறை சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டதுதானே!'

'பெரிய குழுமம், காலணி தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலை, கோடிக் கணக்கில் வருமானம், சொத்துக்கள், ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் என்ற நிறுவனங்களை விட 20 பேர் வேலை செய்யும் நமது நிறுவனத்தின் கடை கலகலப்பாக, வருபவர்களும் உள்ளிருப்பவர்களும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதாக இருந்தது'

'பொருள் ஈட்டுதல் என்றால் பணத்தை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பரிமாறுவது மட்டும் இல்லை. உண்மையான வளத்தை உருவாக்குதல் என்ற பொருளில் பார்த்தால் நமது குழுவினருக்கு வாழ்வில் உண்மையான வளத்தை உருவாக்குகிறோம்.'

பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிகிறார். மாதம் பெரும் தொகை சம்பளம் வாங்குகிறார். போன தடவை சென்னைக்கு வந்திருந்த போது 'நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்கிறார்கள். என் அருகில் வேலை பார்ப்பவருக்கு வேலை இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். ஒரு நாள் காலையில் அவருக்கு சொன்னார்கள். மதியத்துக்குள் கணக்கு எல்லாம் முடக்கப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்'

'வேறு இடத்தில் வேலை கிடைக்காது என்று இல்லை, ஆனால் இது போல பேக்கேஜ் கிடைக்காது'

'இதைச் சொன்ன போது அவரது கண்ணில் தெரிந்த பயம், முகத்தில் தெரிந்த உணர்ச்சிகள் எந்த மனிதருக்கும் வரக்கூடாத ஒன்று. மாதம் பெரும் தொகை வாங்கிச் செலவழிக்கும் நிலையை இழந்து விடுவோமோ என்ற பயம் மனிதரை இழிந்து போகச் செய்யும் பயம். முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அவலம் இது. அந்த அவலத்துக்குள் நாங்களும் போக மாட்டோம். '

அகில உலக தோல் கண்காட்சி

ஞாயிற்றுக் கிழமை கண்காட்சிக்குப் போக வேண்டும். 8 மணி வாக்கில் அலுவலகம். இட்லி சாப்பிட்டு விட்டு கண்காட்சியில் செய்ய வேண்டிய பணி விபரங்களைத் திட்டமிட்டு விட்டுப் புறப்பட்டோம்.

மூன்று நாட்களும் அலுவலகத்திலிருந்து கண்காட்சிக்குப் போய் வருவதற்காக வண்டி ஏற்பாடு செய்திருந்தார்கள். சரியாக ஒன்பது மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். நுழைவாயிலில் ஆயுதங்கள் சோதனை செய்யும் ஆட்களும் கருவிகளும் வைத்திருந்தார்கள். நீண்ட காத்திருப்போர் வரிசை. அதிகம் நேரம் தாழ்த்தாமல் உள்ளே போய் விட்டோம்.

நமது அரங்கில் சுவரில் ஒட்டும் வண்டக் காட்சிகள் செய்து முடித்திருந்தார்கள். விளக்கக் காட்சிப் படம் காண்பிப்பதற்கான திரை கொண்டு வந்து பொருத்திக் கொண்டிருந்தார்கள். மேசைகளை மாற்றி அமைத்து இருக்கும் ஒன்பது சதுர மீட்டர் இடத்தில் எப்படி நாற்காலிகளையும், மேசைகளையும் பொருத்துவது என்று அமைத்து முடித்தோம். எனது மடிக்கணினியை இணைத்து இயக்கினால் திரையில் கணினி பணிமேசை தெரிய ஆரம்பித்து விட்டது.

வருபவர்களின் பெயர் மற்றும் தொடர்பு விபரங்களை பதிவு செய்ய இன்னொரு மடிக்கணினியை அமைத்துக் கொண்டிருந்தார்கள். அரங்க வரவேற்புப் பணியை ஒப்படைக்கத் திட்டமிட்டு செய்து கொண்டிருந்தார். போக்குவரத்து, உணவு ஏற்பாடு, அரங்க நிர்வாகம் என்று ஏற்றுக் கொண்டிருந்தார். காட்சிப் படங்களுக்கான கோப்புகள், நேரங்கள், பார்வையாளர்களை வர வைப்பது என்று பொறுப்பு ஏற்றிருந்தார். குளோவியூ, வணிக வாய்ப்புகள்.

காலையிலேயே வந்து அலுவலகத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். 11.30க்கு முதல் காட்சிப்படம் என்று ஏற்பாடு செய்திருந்தோம். நமது நல்ல நேரமும் முயற்சிகளும் சேர்ந்து முக்கியமான இடத்தில் கடைக்கு நேரெதிரில் நமக்கு வாய்த்திருந்தது. இதே பகுதியில் பெரிய நிறுவனங்களின் கடைகளும் அமைந்திருந்தன. எதிர் கடைக்கு வந்ததும், அவரை அழைத்து 11.30க்கு காட்சிப்படத்துக்கு உட்கார வைத்தோம்.

காலையில் போய் அழைப்பிதழ்கள் கொடுத்து வந்தவர்களும் சில நிமிடங்களுக்குப் பிறகு சேர்ந்து கொண்டார்கள்.

மென்பொருள் உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்கள், வாடிக்கையாளரின் தேவையை சரியாகப் புரிந்து கொண்டு செயல்படும் முறை, அதில் இருக்கும் நுணுக்கங்கள், தொடர்ச்சியான முதலீட்டுத் தேவை என்று சொன்ன கருத்துக்கள் நன்கு ஈர்த்தன. குறிப்பாக படங்களும், சித்திர துணுக்குகளும் அவரது கவனத்தை கவர்ந்தன. அவருக்குக் காட்டும் அறிக்கைகளிலும் அப்படி விபரங்களைப் புகுத்த வேண்டும்.

அடுத்த நாள் சொன்னது போல அவர் மங்களகரமாக ஆரம்பித்து வைத்த நிகழ்வுகள் நன்கு போக ஆரம்பித்தன. கணினித் துறை மேலாளர் என்று ஒருவர் வந்தார். அவருக்கு நம்மிடம் இருக்கும் மென்பொருள் வசதிகளைக் காட்டி விட்டு காட்சிப்படத்தையும் விளக்க ஆரம்பித்தோம். அந்த நேரத்தில் நாங்கள் சாப்பிட்டு விட்டுத் திரும்பி விட்டோம். அது வரை உட்கார்ந்திருந்து எல்லா விபரங்களையும் தெரிந்து கொண்டு போனார்.

மதியத்துக்கு மேல் இன்னொரு நிறுவனத்திலிருந்து ஏற்கனவே தொடர்பு கொண்டிருந்த மேலாளர்கள் வந்தார்கள். அவர்களுக்கு நான் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தேன். மதிய காட்சி விளக்கத்துக்கு இன்னொரு வாடிக்கையாளரை அழைத்து வந்தேன். அதைத் தொடர்ந்து கடைக்குப் போய் அழைத்து வந்தேன். பார்த்து கைகுலுக்கி விட்டு வந்தேன். அவருடன் இருக்கும் பிணக்கைக் குறித்துப் பேச முடியாமல் விட்டு விட்டேன். அப்போது பேசியிருந்தால் நல்ல பலனளித்திருக்கும்.

நிறைய நண்பர்களும் வந்தார்கள். நமது கடை எப்போதுமே கலகலவென்று ஆட்கள் கூட்டம் கூடியவாறு காட்சியளித்தது. எதிர் கடையில் உட்கார்ந்திருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்திருக்கும். இரண்டாவது நாள் வந்தவர், மூன்றாவது நாள் வந்தவர், இரண்டாவது நாள் எட்டிப் பார்த்தவர் என்று எல்லோருக்குமே நம்மைப் பற்றிய மதிப்பீடு அதிகரித்திருக்கும். இரண்டாவது நாள் மதியம் நான் யாருக்கோ விளக்கிக் கொண்டு உள்ளே உட்கார்ந்திருக்கும் போது கடந்து போனாள். ஆர்வம் பொங்கும் கண்களால் கடையைத் துளாவி விட்டுப் போனாள்.

முதல் நாள் மாலையில் கடையை மூடி அலுவலகம் திரும்பும் போது நிறைவாக இருந்தது. சூட்டோடு சூட்டாக முதல் நாள் நிகழ்வுகளைக் குறித்து மின்னஞ்சல் ஒன்று அனுப்பி விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.

இரண்டாவது நாள் திங்கள் கிழமை. அலுவலகத்துக்குப் போய் என்னென்ன வாடிக்கையாளரை எப்படி அணுகலாம் என்று பேசிக் கொண்டிருந்தேன். நான் சொன்னது போல மின்னஞ்சல்களை அனுப்பி விட்டுப் போயிருந்திருக்கலாம். அந்த வாய்ப்பைத் தவற விட்டோம். மற்ற நிறுவனங்களை அவர்களது கடைக்குப் போய்ப் பார்க்கலாம் என்று போய் யாரையும் உருப்படியாகச் சந்திக்க முடியவில்லை. 11.30க்கு நம்ம ஆட்களுக்கே ஆரம்பித்தோம்.

என்னுடைய விளக்கப்படத்தில் பெயர் போட்ட திரைக்காட்சி இருந்தது. காலையில் அதை மாற்றியிருந்தது சரியாக சேமிக்கப்படாமல் சொதப்பியிருந்தேன். அதிலேயே எனக்குப் பாதி உயிர் போய் விட்டது.

அதற்குள் மதிய உணவு வேளை வந்து விட்டது. சாப்பிட்டு விட்டு வந்த பிறகு மேலும் நிறைய பேர் வர ஆரம்பித்தார்கள். காலையில் அழைத்து வந்து காட்டியிருந்ததைத் தொடர்ந்து அவரது நிறுவனத்தின் ஒரு இளம்பெண் வந்தார். அவருக்கும் வேதிப் பொருள் வாங்கி விற்பது குறித்த மென்பொருள் காண்பித்தோம்.

மூத்த துறை வல்லுனர் ஒருவர் வந்து பார்த்து விட்டு விற்பனையில் தேவையான உதவிகளைச் செய்வதாக வாக்களித்து விட்டுப் போனார்.

மூன்றாவது நாள் அலுவலகத்துக்கு நடந்து போய்ச் சேரும் போது எட்டரை மணி. யாராவது ஒருவர் போனால் போதுமா என்று கேட்டால் மறுத்து இரண்டு பேரும் போக வேண்டும் என்று சொன்னார். நல்லதாகத்தான் போனது. அலுவலகத்தில் எல்லாவற்றையும் பணி இயல்புக்கு கொண்டு வந்து விட்டார். 10 மணிக்கு மேல் போய்ச் சேர்ந்தோம். பார்வையாளர்கள் யாருமே வரவில்லை. காலையில் நண்பன் வந்தான். அவனை அதட்டி மிரட்டி உதவி கேட்டேன். அவனா செய்வான்!

சாப்பிடப் போயிருக்கும் போது வந்திருந்தவரைப் பிடித்து காட்சிப் படத்தைக் காண்பித்தேன். அப்போதும் அதன் பிறகும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். முதல் நாளில் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒருவர் தோல் பொருட்கள் தொழில் செய்பவர் வந்தது போல, கிண்டியில் தோல் பொருட்கள் செய்யும் தொழில் செய்பவர் வந்து விசாரித்துக் கொண்டிருந்தார். முகவர் வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில் கலைஞர் தொலைக்காட்சியினர் வரவும் அவர்களுக்கு பேசினேன். அத்தோடு கிட்டத்தட்ட நிகழ்ச்சிகள் முடிந்து போயின.

பக்கத்து கடைகளில் பொருட்களை நீக்கி பொதிந்து கொண்டிருந்தார்கள். ஆணி அடிக்கும் சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது. நாங்களும் கடையை ஒதுக்கி விட்டுப் புறப்பட்டோம். நான் முன்னிருக்கையில் உட்கார்ந்து அலுவலகம் வந்து சேர்ந்தோம்.

இப்போதைய வாடிக்கையாளர்களுக்கு 'இரண்டு மூன்று பேர் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடும் வேலை இல்லை. பெரிய குழுவாக, நிறுவனமாக செயல்படுகிறார்கள்' என்பதைத் தெரிய வைத்தது. விட்டுச் சென்று விட்டவர்களுக்கும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. பொதுவான துறை நண்பர்களுக்கு நாம் இருப்பதை உரக்க அறிய வைத்தது. 60க்கும் மேற்பட்ட வருகையாளர்களில் 20 வரை திடமான வாய்ப்புகளுக்கான கதவு திறந்திருக்கிறது.

அடுத்த 10 நாட்களில் எல்லா வாய்ப்புகளையும் பின்தொடர்ந்து போய் திட்டப் பணிகளாக உருவாக்க வேண்டும்.