Sunday, February 8, 2009

பணசாட்சியும் மனசாட்சியும்

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேல் உழைத்த பிறகு பணத்தைக் கேட்டால், 'வேலை எதுவுமே செய்யவில்லை, எங்களுக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை, இதுவரை கொடுத்த பணத்தைக் கூட ஒருபகுதி திரும்பிக் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். எங்களது பெயரை உங்கள் வாடிக்கையாளர் பட்டியலிலிருந்து நீக்கி விட்டு, சட்டப்படி தீர்வு செய்யுங்கள்' என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.

கோபமும் ஆத்திரமும் பொங்கி வந்தாலும் அதை எல்லாம் உள்ளுக்குள் திட்டித் தீர்த்து விட்டு, பொறுமையாக பணிவாக நமது நிலைமையை விளக்கி பதில் போட்டிருந்தோம். ஆரம்பத்திலிருந்த நடந்த தகவல் பரிமாற்றங்கள், மென்பொருள் உருவாக்கப் பணிகள், அவர்கள் நிறுவனத்துக்குப் போய் செய்த பணிகள் போன்ற விபரங்களை நமது தகவல் பயன்பாட்டிலிருந்தும், மின்னஞ்சல்களிலிருந்தும் தொகுத்து அனுப்பி விட்டிருந்தோம்.

'அதே பணத்துக்கு அதிக வேலை வாங்க முயற்சிக்கிறார்களா அல்லது மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறார்களா' என்று பல குழப்பங்கள். 'எல்லா விபரங்களையும் திரட்டி விட்டோம். அவர்களுக்கு நமது கட்சியை எடுத்துச் சொல்வோம்.' என்று ஒரு உத்தேசமான கருத்தொற்றுமை உருவாக்கியிருந்தோம்.

இந்த நிறுவனத்துக்கான பணி ஆரம்பித்த போது, அது வரை மென்பொருளில் பார்த்த குறைகளை எல்லாம் ஒரு மூச்சாக நிவர்த்தி செய்து விடுவோம் என்று அடிப்படை வடிவமைப்பில் நான்கைந்து பெரிய மாற்றங்களை செய்து முடித்திருந்தோம். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களை விட இவர்களுக்கு மிக உறுதியான அடிப்படையிலான பயன்பாடு கொடுத்திருந்தோம். நம்மைப் பொறுத்த வரை நமது பயன்பாட்டில் ஏற்பட்ட மேம்பாடு அவர்கள் கொடுத்த வாய்ப்பினால் கிடைத்தது. ஒரு ஆண்டு உழைத்ததற்கு பணம் கிடைக்கா விட்டாலும் கூட, இந்த மேம்பாட்டைப் பயன்படுத்து நிறைய ஈட்டிக் கொள்ளலாம்.

நாம் ஒரு ஆண்டு உழைத்தும் அவர்களுக்கு எதிர்பார்த்த, தேவையான பலன்கள் கிடைக்கவில்லை என்றால் அவர்களைப் பொறுத்த வரை நாம் அவர்களுக்காக செய்த வேலை வீண்தான். அதற்கு பணம் வாங்கியது, இன்னும் பணம் கேட்பது என்பது நியாயமாகாது. கொடுத்த பணத்தில் ஒரு பகுதி என்று இல்லாமல், மொத்தத்தையும் திருப்பிக் கொடுத்து விடுவோம். திருப்புவதற்கான காலக்கெடுவை மட்டும் வாங்கிக் கொள்வோம்.

'ஆரம்பத்தில் எந்த சுணக்கமும் இல்லாமல் கொடுத்து வந்த நீங்கள் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பிறகு பணம் கொடுப்பதில் தயக்கம் காட்டும் போது நாங்கள் அதன் காரணத்தைப் புரிந்து கொண்டு உங்களிடம் பேசி திருத்திக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு வழி தேடியிருக்க வேண்டும். அதைச் செய்ய நாங்கள் தவறி விட்டோம்.'

'இப்போது, இது வரை கொடுத்த பணத்துக்கான பலன் உங்களுக்கு வந்து சேரவில்லை என்று நீங்கள் சொல்லி விட்டீர்கள். வாடிக்கையாளரிடமிருந்து வாங்கிய தொகையை விட ஒரு ரூபாயாவது ஆதாயம் ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.'

'எங்கள் பக்கம் பேசிய தொகைக்கு நாங்கள் பணி செய்து விட்டதாக நாங்கள் நினைத்தாலும், அந்தப் பணிக்கான பலன்கள் உங்களை வந்து சேரவில்லை என்னும் போது அந்தப் பணத்தை நாங்கள் திருப்பிக் கொடுத்து விடுவதுதான் முறையானது என்று நீங்கள் சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.'

'நிறுவனத்தை நடத்தும் நாங்கள் யாருமே அதீத லாபம் ஈட்டி வாழ வேண்டும் என்ற குறிக்கோளில் பணி புரியவில்லை. தோல் துறை நிறுவனங்களுக்கு தகவல் தொழில் நுட்ப கருவிகள் குறைவான செலவில், நிறைவான பலனில் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், பணிபுரியும் எல்லோருக்கும் அளவான வாழ்க்கை நடத்தத் தேவையான பொருள் மட்டும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.'

'நாங்கள் உழைத்த நாட்கள், செய்த பணிகளின் செலவு எங்கள் பக்க நிலவரம். அந்தப் பணியின் பலன் தொடவில்லை என்பது உங்கள் பக்க உண்மை. இந்த நிலையில் நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுகிறோம்'

1. 'உங்களுக்கு பல முறை உணர்த்தியும் எங்களுக்கு வேலை நடக்கவில்லை. கொடுத்த பணம் முழுவதையும் திருப்பி விடுங்கள்.' என்று நீங்கள் தீர்ப்பு சொன்னால், மிகவும் வருத்தத்துடன், நாங்கள் ஒரு ஆண்டுகளுக்கு மேல் செய்த முயற்சிகளுக்கும், நீங்களும் உங்கள் ஊழியர்களும் உழைத்த மணிகளுக்கும் பலனில்லை என்ற வருத்தத்துடன், பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் முயற்சியில் இறங்குவோம்.

உடனடியாக முழுப் பணத்தையும் திருப்பி விடும் செழிப்பு இல்லாத எங்கள் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒரு ஆண்டு அவகாசம் கொடுத்து அதற்குள் திருப்பி விடும்படி அனுமதியுங்கள். அதற்கிடையில் இந்தப் பணியையோ, வேறு பணிகளையோ எங்களுக்குக் கொடுத்து ஆதரித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

2. 'எங்கள் பக்கமும் தவறுகள் சில இருக்கின்றன. உங்கள் பக்கமும் பல தவறுகள் இருக்கின்றன. இது வரை போனது போகட்டும், நீங்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து விடுகிறேன். இனிமேல் செய்யும் வேலைக்கும் இன்ன தொகையை ஒதுக்கி விடுகிறேன். மார்ச்சு 31க்குள் முடித்துக் கொடுத்து விடுங்கள்' என்று தீர்ப்பளித்தால் என்றென்றும் மறக்காத நன்றிக் கடனோடு உங்கள் சேவையில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம்.

இப்படி ஒரு மனத் தயாரிப்பு வந்து விட்டது. இல்லை பேரம் பேசுவதற்காகத்தான் கூப்பிடுகிறார்கள் என்றால் இது வரை செய்த வேலைக்கான தொகையைத் தந்து விட்டு இனிமேல் செய்வதற்கான கட்டணத்தையும் தருவதற்கு ஒத்துக் கொண்டால் தொடர்வோம். இரண்டுக்கும் நடுவில் இதே பணத்துக்கு இன்னும் வேலை செய்யுங்கள் என்பது மட்டும் வேண்டாம்.

வாசற் காவலரிடம் பேரைச் சொல்லி வந்த வேலையைச் சொன்னேன். உள்ளே நிறுவனத் தலைவரின் நேரடி உதவியாளரிடம் பேசினார். வழக்கமாக அவரே உள்ளே விடச் சொல்லி விடுவார். இப்போது இன்னொரு முறை உள்பேசியைச் சுழற்றி வரவேற்பறை மேலாளரிடம் பேசினார்.

வரவேற்பறைக்குப் போனால் உடனேயே மேலே போகச் சொல்லி விட்டார். அதற்குள் பேசி முடிவு செய்து விட்டார்கள். 'பயன்படுத்துவதை நிறுத்தி விட்டோம்' என்று நிறுவனத் தலைவர் சொன்னதைச் சரிபார்க்கும் விதமாக கணினித் திரைகளை எட்டிப் பார்க்க முயற்சிக்கவில்லை. அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வோம். நிறுவனத் தலைவர் அறையில் விளக்கு எரியவில்லை. இன்னும் வந்திருக்கவில்லை.

நேரடி உதவியாளர் வரவேற்று உள் அறையில் உட்கார வைத்துப் பேசிக் கொண்டிருந்தார். பேச வேண்டியதை முன்கூட்டியே வெளியில் சிதற விட்டு விடக் கூடாது என்று நானும் பொதுவான மற்ற செய்திகளையே பேசிக் கொண்டிருந்தேன். தோல் கண்காட்சியில் நாங்கள் பங்கேற்றது, தோல் துறையின் நிலைமை, உலகப் பொருளாதாரச் சுணக்கம். நமது நிறுவனச் செய்திகள் என்று வளர்ந்து கொண்டே போனது. அவர் ஒரு கட்டத்தில் விட்டுச் சென்றதும் கணினியை இயக்கி எழுத ஆரம்பித்தேன். காத்திருந்து மனதைக் கனக்கச் செய்து கொள்ள வேண்டாம்.

நிறுவனத் தலைவர் 11 மணிக்கெல்லாம் வந்து விட்டார். உள்ளே போய் பேசி விட்டு வந்த உதவியாளர், முன்னதாக நான் அனுப்பியிருந்த மின்னஞ்சல் நகல்களை எடுத்துக் கொண்டு வந்து, 'இதற்கு விளக்கம் கேட்கிறார். நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டுக் கொள்ளச் சொன்னார். அதன் பிறகு அவரைப் பார்க்கலாம்'

அப்போ சரி என்று ஆரம்பித்தேன். நினைத்து வைத்திருந்த முடிவை விளக்கினேன். 'எங்களுக்கு பண நெருக்கடி நிறைய உண்டு. கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் இருப்பது கொடும்பாவம் என்று கூட நான் வசை கேட்கிறேன். அந்த பாவங்களுடன் எங்கள் மென்பொருளைப் பயன்படுத்த முடியாத வாடிக்கையாளரிடம் பணம் வாங்கினேன் என்ற பாவமும் சேர வேண்டாம். நீங்கள் வர்த்தக நிறுவனமோ தரகு நிறுவனமோ கிடையாது. ஒவ்வொரு ரூபாயும் தொழிலாளர்களின் உழைப்பின் பலன். அதைச் செலவழிப்பதில் சரியாக காரண கற்பிதம் இல்லா விட்டால், உங்கள் நிறுவனத் தலைவரின் முடிவு இப்படித்தான் இருக்கும்' என்றேன்.

அவரது பதில் எதிர்நிலையாக இருந்தது. 'இனிமேல் செய்ய வேண்டிய வேலைக்கு இவ்வளவு பணம் கேட்கிறீர்களே, அதை மட்டும் மறுபரிசீலனை செய்து கொள்ளச் சொன்னார்' என்று சொல்ல ஆரம்பித்தார். கணினித் துறை மேலாளர், 'நாங்களும் உங்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டோம் சார், எப்படி ஒரு பொருளை விளக்குவது, எழுதி அனுப்புவது என்றெல்லாம் நிறைய தெரிந்து கொண்டேன்' என்று உணர்ச்சி பூர்வமாகவே சொன்னார்.

இந்த நேரத்தில் தோல் கண்காட்சிக்காக உருவாக்கியிருந்த காட்சிப்பட விளக்கங்களை காண்பிக்க ஆரம்பித்தேன். நமது நிறுவனச் செயல்பாட்டு முறை பற்றிய காட்சி முதலில். அதைத் தொடர்ந்து உலகளாவிய நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் அளவு, போக்கு பற்றிய விபரங்கள். பொறுமையாகப் பார்த்தார்கள். இதன் நகல் அனுப்பி வையுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார் கணினித் துறை மேலாளர்.

இதை எல்லாம் பேசி முடித்தவுடன், 'போய்ப் பார்க்கலாம்' என்று உள்ளே அழைத்தார் உதவியாளர். கதவைத் திறந்து வணக்கம் சொன்னதும், 'வாங்க சிவா' என்று அன்பாக வரவேற்றார் நிறுவனத் தலைவர்.

வழக்கம் போல, 'சொல்லுங்க' என்று நிறுத்தினார். வருபவர்களை பேச விட்டு அவர்கள் எப்படி வருகிறார்கள் என்று பார்த்து விட்டு தமது சீட்டுகளை இறக்குவது பல வெற்றிகரமான நிறுவனத் தலைவர்களிடம் பார்த்திருக்கிறேன். நினைத்து வைத்திருந்த கருத்துக்களைச் சொன்னேன். 'எங்களைப் பொறுத்த வரை வேலை செய்து விட்டோம் என்று நினைத்தாலும், நீங்கள் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லும் போது, உங்கள் முடிவு எதுவானாலும் அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். நீங்கள் கொடுத்த வாய்ப்பின் மூலம் எங்கள் மென்பொருளை பல நிலைகள் மேம்படுத்திக் கொள்ள முடிந்ததே எங்களுக்கு பெரிய ஆதாயம்தான்'

'பணியைத் தொடருவதற்கு உங்களுக்கு விருப்பமே இல்லாதது போல எனக்குப்படுகிறது. அவ்வளவு தொகை எல்லாம் என்னால் கூடுதல் கொடுக்க முடியாது. எங்களது குழுமத் தலைவரிடம் போய் இது போல கூடுதல் கேட்கிறார்கள் என்று சொன்னால் வேலையை முழுமையாக நிறுத்தி விடத்தான் சொல்வார். அவரிடம் போவதற்குப் பதிலாக நானே நிறுத்தி விடுகிறேன். உங்களுக்கு பணம் கொடுத்திருக்கிறோம். அதை இழப்பாக வைத்துக் கொள்கிறோம்.'

'நிச்சயமாக நாங்கள் அப்படி இல்லை. உங்கள் நிறுவனத்துடன் பணி செய்வது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்று எனக்குத் தெரியும். கல்லூரியில் படிக்கும் போதே உங்கள் நிறுவனத்தைப் பார்த்து மதிப்பு கொண்டவன் நான். எங்களது சின்னக் குழுவை நடத்திச் செல்வதற்கு குறைந்த பட்ச பண ஆதரவை மட்டும் நீங்கள் கொடுத்தால் நிச்சயமாக நாங்கள் ஆகச் சிறந்த சேவையை உங்களுக்குத் தொடர்ந்து கொடுப்போம்'

'நீங்கள் கேட்கும் அளவுக்கு என்னால் தர முடியாது' என்று ஒரு தொகையேச் சொல்லி, 'இந்தத் தொகைக்கு உங்களால் செய்ய முடியும் என்றால் என் உதவியாளரிடம் விவாதித்து, திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள். ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக எல்லா பணிகளையும் முடித்திருக்க வேண்டும். மீண்டும் இது போல உட்கார்ந்து பேசுவதற்கு நான் தயாராக இல்லை. தற்போது உங்களுக்குத் தர வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை பத்து நாட்களுக்குள் தரச் சொல்கிறேன்'

'அப்படியே செய்கிறேன்' என்று வெளியில் வந்தேன். வாராக்கடனாக பெருந்தொகையை இழந்து, இது வரை செய்த பணிகளின் பலனையும் முற்றிலும் இழந்து தவிப்போமோ என்று கலங்கிக் கொண்டிருந்தது, சுமுகமாக முடிந்து மேல் பணிகளுக்கும் வழி ஏற்பட்டு விட்டது. வெளியில் உதவியாளரிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டேன். 'உங்கள் குழுவினரிடமும் பேசி விட்டுத் திட்டம் அனுப்புங்கள்' என்று சொல்லி விடை கொடுத்தார்.

4 comments:

MSATHIA said...

சிவா,
1) சின்ன நிறுவனங்களுக்கு சுமையாய் இருப்பினும் மூன்று மாதத்துக்கொருமுறை நிறுவனத்தலைவர்கள் அல்லது பணித்திட்டத்திற்கான மேனிலை மேலாளர்கள் மட்டுமே பங்குபெரும் ஒரு சிறிய status சந்திப்பு இதுபோன்ற பெரிய புகைச்சலை அடக்க உதவும். குறிப்பாக நீண்ட காலத்திட்டங்களில்.
2) இது போன்ற பிரச்சனைகளை இப்போது பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் செய்கின்றன. பணத்தட்டுப்பாட்டினால் கைகழுவியதாக முடித்துவிட முயல்கிறார்கள். ஆடும் மாட்டை ஆடியும் பாடும் மாட்டை பாடியுமே கறக்கவேண்டி இருக்கிறது.

மா சிவகுமார் said...

உண்மை சத்யா,

வாடிக்கையாளர்களுடன் பல வழிகளில் தகவல் பரிமாற்றம் தொடர்ந்து கொண்டே இருப்பது நல்ல உறவுக்கு அவசியமான ஒன்று என்பதை உணர்கிறேன்.

வாடிக்கையாளருடனான உறவு மட்டுமா அப்படி? எந்த உறவுக்குமே தகவல் கருத்து பரிமாற்றம்தான் அடிப்படையாக இருக்கிறது.

அன்புடன்,
மா சிவகுமார்

வடுவூர் குமார் said...

முதல் பாதி படிக்கும் போது கோபமாகவும் அதை எதிர்கொண்டு ஓரளவு வெற்றி பெற்ற போது சந்தோஷமாகவும் இருக்கு.
இதே நிலை மேலும் எங்கும் தொடராமல் எல்லாம் சுமூக நடைபெற வாழ்த்துக்கள்.

மா சிவகுமார் said...

நன்றி வடுவூர் குமார்.

தொழில் செய்வதில் இப்படியும் நடக்கிறது என்பது புரிந்து விட்ட பிறகு அதிகம் மனவலி இருக்காது. நம்மைப் பொறுத்த வரை, 'தன்னெஞ்சறிய பொய்யாமல்' இருந்தால் மற்றவை நடக்கும்படி நடக்கும் :-)

அன்புடன்,
மா சிவகுமார்