எழுத்தில் தெரிந்தோ தெரியாமலோ பல விஷயங்களை சுஜாதாவிடமிருந்துதான் பெற்றிருக்கிறோம். இப்போது அவரது புகழ் பெற்ற தலைப்புகளில் ஒன்றை கொஞ்சம் இரவலாக வாங்கிக் கொள்வோம். (இந்த இடுகைக்கு மட்டும்)
1. 'நான் படிச்ச ஸ்கூலில் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். நிறுவனத்தில் எப்படி வேலைகளை கண்காணிக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். எங்க ஸ்கூல் முதல்வர் ஒவ்வொரு வாரமும் பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களின் குறிப்பேட்டில் கையெழுத்து போடுவார். குறிப்பேட்டின் முதல் பக்கத்தில் பொருளடக்க அட்டவணை இருக்கும். வரிசை எண், பாடத்தின் பெயர், ஆசிரியர் கையொப்பம், கடைசி நெடுவரியாக முதல்வர் கையெழுத்து போடும் இடம் இருக்கும்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் குறிப்பேட்டை பார்த்து கையெழுத்து போடுவாங்க அவங்க!'
இது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் மாணவர்கள் மீது. முதல்வர் அம்மா எல்லா பாடங்களையும் படிக்கிறாரோ இல்லையோ, நமது குறிப்பேட்டை அவர் ஒவ்வொரு வாரமும் புரட்டுகிறார் என்ற எண்ணமே மாணவர்களுக்கும் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பெரியதொரு விழிப்புணர்வைக் கொடுத்திருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறிப்பேடுகளில் சில பத்துகளை படித்துப் பார்த்து குறிப்பிட்ட மாணவர், ஆசிரியரிடம் அதைப்பற்றி கேள்வி கேட்கவும் செய்து விட்டால் இது இன்னும் சக்தி வாய்ந்ததாகி இருக்கும்.
நிறுவனத்தை நடத்தும் போது எல்லா இடங்களிலும் தலைமையின் பார்வை விழுந்து கொண்டே இருக்க வேண்டும். என்னதான் வேலையை பகிர்ந்து கொடுத்தாலும் தொடர்ந்த கண்காணிப்பு இருந்தால்தான் விழிப்புணர்வு உருவாகும்.
2. 'ஒரு நிறுவனத்தில் ஒவ்வொருவரும் குறைந்தது 40% திறனுடன் வேலை பார்த்தால் நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைத்து விடும். அப்படி கிடைக்கவில்லை என்றார் 40% திறன் கூட வெளியாகவில்லை என்று பொருள்'
புகழ் பெற்ற நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் குழுமத்தின் நிறுவனம் ஒன்றுக்குப் போய் விட்டு வந்தோம். அங்கு பணி புரிபவர்கள் தமது வேலைகளை செய்து வருகிறார்கள். அலுவலகத்துக்குக் கிளம்பி வருவது, காபி குடிப்பது, மதியம் சாப்பிடுவது, மாலையில் வேலை முடித்து வீட்டுக்கு ஓடுவது என்று வேலையைத் தவிர்த்து புற உணர்வுகள் அவர்களில் நிரம்பி இருக்கின்றன.
வேலை வேலை என்று 24 மணி நேரமும் ஜெபித்துக் கொண்டிருக்கும் சிறு நிறுவனங்கள் திணறிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து கொண்டே இருக்கிறது. புதிய புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறது. நிறைய பணம் சம்பாதித்துக் கொடுக்கிறது. எப்படி நடக்கிறது?
அமைப்பு முறைகள்தான். தனிநபர்களின் திறமைகள் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். அது எல்லா இடங்களிலும் நடப்பதுதான். வெற்றிகரமான நிறுவனங்களில் நன்கு சிந்தித்துத் திட்டமிடப்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன.
ஒவ்வொரு செயலையும் எப்படி செய்ய வேண்டும் என்று வகுத்திருக்கிறார்கள். அதை அப்படி செய்வதற்கு போதிய பயிற்சி அளிக்கிறார்கள். அவை அப்படித்தான் நடைபெறுகின்றனவா என்று சரிபார்ப்பதற்கும் மேலாளர்களுக்கு பொறுப்பு. அதை மாதா மாதம் கண்காணிப்பதற்கு உள்ளுறை தணிக்கைக் குழு. ஆண்டு தோறும் பரிசீலிப்பதற்கு வெளியிலிருந்து வரும் தணிக்கைக் குழு.
இது இப்படியே ஓடிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. நமது வழிமுறைகள் வகுக்கப்பட்ட காலமும் புறச்சூழல்களும் மாறும் போது வழிமுறைகள் மறு வடிவமைக்கப்பட வேண்டும். அதற்காக புதிது புதிதான முன்முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
ஐஎஸ்ஓ தரக்கட்டுப்பாட்டு முறை செயல்படுத்த ஆரம்பிப்பார்கள். அதை சாதித்தவுடன் அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்று வடிவமைத்த தர மேம்பாட்டு முறை ஒன்றை பின்பற்ற முடிவு செய்வார்கள். இன்னொரு கட்டத்தில் புதிய கணினி வழி செயல்படும் முறையில் முதலீடு செய்வார்கள்.
தனி வாழ்க்கையிலும் சரி, நிறுவனத்திலும் சரி - எதுவுமே இரண்டு முறை உருவாக்கப்பட்டு நடக்க வேண்டும். வீடு கட்ட வேண்டுமானால் முதலில் தாளில் வடிவமைப்பை வரைந்து, திட்டம் போட்ட பிறகுதான் அடிக்கல் நாட்ட வேண்டும். கட்ட கட்ட யோசித்துக் கொள்ளலாம் என்று நினைப்பது மனச் சோம்பலுக்கு அடையாளம்.
செய்ய வேண்டியதைக் குறித்து முழுமையாக சிந்தித்து முடித்து விடுவது எல்லோராலும் செய்ய முடிவது. ஆனால் பலரால் செய்யப்படாதது. அப்படி செய்பவர்களுக்கும் செய்யாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான் வெற்றியும் தோல்வியும்.
4 comments:
//செய்ய வேண்டியதைக் குறித்து முழுமையாக சிந்தித்து முடித்து விடுவது எல்லோராலும் செய்ய முடிவது. ஆனால் பலரால் செய்யப்படாதது. அப்படி செய்பவர்களுக்கும் செய்யாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான் வெற்றியும் தோல்வியும்.
//
கலக்கல் மா.சி.
//ஒவ்வொரு செயலையும் எப்படி செய்ய வேண்டும் என்று வகுத்திருக்கிறார்கள். அதை அப்படி செய்வதற்கு போதிய பயிற்சி அளிக்கிறார்கள். அவை அப்படித்தான் நடைபெறுகின்றனவா என்று சரிபார்ப்பதற்கும் மேலாளர்களுக்கு பொறுப்பு. அதை மாதா மாதம் கண்காணிப்பதற்கு உள்ளுறை தணிக்கைக் குழு. ஆண்டு தோறும் பரிசீலிப்பதற்கு வெளியிலிருந்து வரும் தணிக்கைக் குழு.//
நல்ல விசயம் தான்.ஆனா இது எல்லாருக்கும் சாத்தியப்படாது.பெரிய நிறுவனங்கலுக்கு மட்டுமே ஒத்துவரும்.
தொழில் சார்ந்த தொடர்களில் நான் விரும்பி படித்தது கோல் எனும் தொடர் அதுக்கு பிறகு உங்க எழுத்துக்கலத்தான் விரும்பிபடிப்பேன்.தொடர்ந்து எழுதுங்க.
//நமது வழிமுறைகள் வகுக்கப்பட்ட காலமும் புறச்சூழல்களும் மாறும் போது வழிமுறைகள் மறு வடிவமைக்கப்பட வேண்டும். //
பரவலாக நாட்டில் அறியப்பட்டாலும்!
பெரும்பாலான நிறுவனங்கள் தோல்வியுற இங்கே தான் தவறு செய்கிறார்கள்! இருக்கும் போட்டி உலகில் தினம் ஒரு யுக்தி தேவைப்படுகிறது!
நான் கடைபிடிக்கும் முறை எனது வாடிக்கையாளர்களிடன் தினம் ஒருமுறையாவது உரையாடுவது!
வாங்க சென்ஷி, நன்றி.
கார்த்திக்,
//இது எல்லாருக்கும் சாத்தியப்படாது.பெரிய நிறுவனங்கலுக்கு மட்டுமே ஒத்துவரும்.//
எனக்கு என்ன தோணுதுண்ணா, பெரிய நிறுவனங்களுக்கும் சரி, தனிப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் சரி வெற்றிகரமான செயல்பாட்டுக்கு இதுதான் வழி.
வால்பையன்,
//நான் கடைபிடிக்கும் முறை எனது வாடிக்கையாளர்களிடன் தினம் ஒருமுறையாவது உரையாடுவது!//
நல்ல ஒரு கொள்கை. தினமும் ஏதாவது ஒரு முறையில் (மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு, நேரடி சந்திப்பு) நம்மை நினைவூட்டி விடுவது அவசியமான ஒன்று.
அன்புடன்,
மா சிவகுமார்
Post a Comment