Thursday, June 28, 2007

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 6

மென்பொருள் உருவாக்கம் முடிவே இல்லாமல் இழுத்துக் கொண்டிருந்தது. வருமானத்துக்காக சீன மொழி கற்பிப்பது, சீன மொழி பெயர்ப்பு சேவை என்று பக்க வேலைகளும் செய்து கொண்டிருந்தேன். அதன் மூலம் கிடைத்த வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் விற்க முயற்சித்தேன்.

அப்படி சீன மொழி கற்பிப்பது ஆரம்பித்து ஒரிரண்டு வாடிக்கையாளர்களைப் பிடித்தோம்.

'எங்கள் மென்பொருளை எப்படியாவது வாங்கிக் கொள்ளுங்கள்' என்று குறைந்த தொகைக்கு மென்பொருள், அதைத் தனிப்பயனாக்கும் பணி, பயனருக்கு பயிற்சி அளிப்பது, நடைமுறைப்படுத்துவதில் உதவி என்று முடிவில்லா புதைகுழிக்குள் மாட்டிக் கொண்டிருந்தோம், ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும்.

கறுப்பு நாட்களாக ஓடினாலும் அப்போது அவற்றின் வலி அவ்வளவாகத் தெரியவில்லை. ஏதோ எதிர்கால சாதனையை செய்து காட்டப் போகிறோம் என்ற நம்பிக்கை ஒவ்வொரு நாளும் செயல்பட வைத்தது. ஆனால் வருமானம் குறைவாக, செலவுகள் குறைய வழியில்லாமல் பல அழுத்தங்களும் பிரச்சனைகளும் சமாளிக்க வேண்டியிருந்தது.

காலையில் எட்டு மணியிலிருந்து மாலை எட்டு மணி வரை, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட வெளியே சுற்றிக் கொண்டிருப்பேன். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க மாலையில் கதை சொல்லித் தூங்க வைத்து, காலையில் எழுப்பிப் பள்ளிக்கு அனுப்புவதோடு திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று.

இதுவரை தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கே பணி செய்து கொண்டிருக்க, 2005ன் ஆரம்பத்தில் தோல் காலணி செய்யும் நிறுவனம் ஒன்றில் அவர்களுக்கான மென்பொருளைச் செய்ய வாய்ப்பு கொடுத்தார்கள். 2004 டிசம்பரில் ஆரம்பித்து மார்ச்சுக்குள் நான்கைந்து நிறுவனங்கள் வாடிக்கையாளராகக் கிடைத்தனர். மே மாதம் ஐஐஎம்மில் மேலாண்மை பயின்ற நண்பர் ஒருவர் இணைந்து கொண்டார்.

அவருடன் இணைந்து பல ஆர்டர்களைப் பிடித்தோம். ஆனாலும் மென்பொருளை ஒரு செய்பொருளாக (product) விற்கும் மனப்பாங்கால் செய்யும் வேலைக்கும், கிடைக்கும் பலனுக்கும், ஈட்டும் பணத்துக்கும் தொடர்பு இல்லாமல் இன்னும் பணப்புழக்கம் தள்ளாட்டத்திலேயே இருந்து வந்தது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இருபதை தாண்டி விட்டிருந்தாலும், பண வரத்து குறைவாகவே இருந்தது.

நண்பரின் முயற்சியால் நிறுவனத்தில் பங்குதாரராக முதலீடு செய்ய அவருடன் கூடப் படித்தவரும், கனடாவில் ஒரு நிறுவனத்தின் மூத்த பொறுப்பில் இருக்கும் அவரது சகோதரரும் முன்வந்தார்கள். பணத்தை முதலீடு செய்தவர்கள் சில காட்டமான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள்.

மென்பொருளை செய்பொருளாக விற்காமல், சேவையாக வழங்க வேண்டும் என்று நிறுவன நலனில் அக்கறை கொண்ட இன்னொரு இயக்குனர் புரிய வைத்தார்.

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 1
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 2
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 3
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 4
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 5

4 comments:

nayanan said...

பயனுள்ள தொடர் - சிறுமுதலீட்டுச் சொவ்வறைப் பொதினச் சுற்றின் படிகளையும் சரவல்களையும் இயல்பாகக்
காணமுடிகிறது.

தொடருக்குப் பாராட்டுகள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

மா சிவகுமார் said...

வணக்கம்,

இளங்கோவன் ஐயா. பாராட்டுக்கு நன்றி.

நீங்களும் தொழில் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள முயற்சியுங்களேன். உங்கள் அரசியல், மொழியியல் தொடர்பான இடுகைகள் என்னை கவர்ந்தவை.

அன்புடன்,

மா சிவகுமார்

வடுவூர் குமார் said...

மா சிவக்குமார்
உங்கள் அனுபவங்களை இப்படி போட்டு உடைத்தாலும் பெரும்பாலும் புது தொழில் செய்பவர்கள் பலரும் கையை கடித்துக்கொள்வது எதனால்?
இழந்தால் தான் எங்கு பிடிக்க முடியும் என்பது தெரிவதால்?
ஏன் நீங்களே கூட உங்கள் தொழிலை ஆரம்பிக்கும் போது பல புத்தகங்கள் மற்றும் வழி முறைகளை நன்கு ஆராய்திருப்பீர்கள் அல்லவா?

மா சிவகுமார் said...

//நீங்களே கூட உங்கள் தொழிலை ஆரம்பிக்கும் போது பல புத்தகங்கள் மற்றும் வழி முறைகளை நன்கு ஆராய்திருப்பீர்கள் அல்லவா?//

ஏட்டுச் சுரைக்காய் :-)

எத்தனை புத்தகங்களைப் படித்தாலும் நீச்சல் கற்றுக் கொள்ள தண்ணீரில் இறங்கி, தடுமாறி, தவறு செய்துதானே கற்றுக் கொள்ள முடியும். அதற்காக நீச்சலே வேண்டாம் என்று இருந்து விட்டால் நீச்சலின் அனுபவங்கள் கிடைக்காமலே போய் விடும்!

அன்புடன்,

மா சிவகுமார்