Friday, June 15, 2007

நாடும் எல்லைகளும்

பழைய காலங்களில் மன்னர்கள் தமது ஆட்சியை நிலை நாட்டிக் கொண்டு, குடிமக்களுக்கு நல்லது செய்து, வாய்ப்புக் கிடைத்தால் அண்டை நாடுகளின் மீது போர் தொடுத்து தமது ஆட்சி எல்லையை விரிவாக்கிக் கொண்டார்கள்.

இப்போது அரசாங்கங்களுக்குப் போட்டியாக இயங்குபவை வணிக நிறுவனங்கள். ஒவ்வொரு நாட்டிலும் அரசுகள் தமது எல்லைக்குள் இயங்கும் தொழில் நிறுவனங்களை ஒழுங்கு படுத்தும் சட்டதிட்டங்களைத் தீட்டினாலும் பல நாடுகளில் பரவி இருக்கும் ஒரு நிறுவனத்தை கட்டுப்படுத்துவது யார்?

கடந்து இருபத்தைந்து ஆண்டுகளில் இணையம் வேரூன்றிய பிறகு பழைய எல்லை சார்ந்த அரசு வலிமைகள் இன்னும் குறைந்து விட்டன. இன்றைக்கு அமெரிக்காவில் இருந்து வழங்கப்படும், ஆஸ்திரேலியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட படைப்பை நான் அணுக முடியும். அரசுகள் இந்த உரிமையைத் தடுக்க முயற்சி செய்தாலும், பெருமளவு இது கட்டுப்படுத்தப்படாத கானகமாகத்தான் இருக்கிறது.

அமெரிக்காவின் ஜிஈ அல்லது ஐபிஎம், ஜப்பானின் பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவின் இன்ஃபோசிஸ் ஒவ்வொன்றின் தலைவர்களும் தமது நிறுவன ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், தமது நிறுவனம் செயல்படும் சமூகம், நாட்டு அரசுகள் என்று ஒவ்வொன்றையும் தமது திட்டப்படி உருவாக்க வழிநடத்த முயல்கிறார்கள். உலகில் விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வர, புகழ் நீண்டு நிலைத்திருக்க ஒரு வழி தொழில் நிறுவனங்கள்.

ஒரு தொழில் நிறுவனத்தின் அடிப்படைக் குறிக்கோள் என்ன? உருப்படியான பணி செய்து அதனால் விளையும் பொருள் அல்லது சேவையை வாங்க விரும்புபவர்களிடமிருந்து பணம் ஈட்ட வேண்டும். பணி செய்ய ஊழியர்களைத் திரட்டி அவர்களது திறமைகளை சரியாக ஒருங்கிணைத்து பொருள் அல்லது சேவையின் தரம் உயர்ந்ததாகவும் விலை ஆகக் குறைந்ததாகவும் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

என்ன பணி செய்ய வேண்டும்? யாருக்குப் பயன்படும் பணி செய்ய வேண்டும்? என்ன பொருள் அல்லது சேவை உருவாக்க வேண்டும் என்று பல கேள்விகள். செலவாகும் மதிப்பை விட ஈட்டும் செல்வத்தின் அளவு அதிகமாக இருக்க வேண்டும் என்பது உயிர் வாழ சுவாசிக்க வேண்டும் அல்லது சாப்பிட வேண்டும் என்பது போல அடிப்படைத் தேவைகள்.

2 comments:

வவ்வால் said...

வணக்கம் மா.சி

எல்லைகளைப்பற்றி பேச எல்லைகளே இல்லை விரிவா பிறகு அலசுகிறேன்

மா சிவகுமார் said...

வவ்வால்,

உங்கள் அலசலை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்