Saturday, June 23, 2007

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 2

குதிரையில் போய், வாளைக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்த காலத்தில் வெடிமருந்தும் பீரங்கிகளும் பயன்படுத்த ஆரம்பித்த குழுவினருக்கு இருந்த ஆதாயம், இன்றைக்கு தகவல் தொழில் நுட்பத்தை சரிவரப் பயன்படுத்த ஆரம்பிக்கும் நிறுவனங்களுக்கு இருக்கிறது.

நான் முதன் முதலில் லெதர்லிங்க் என்ற தோல் இணையம் நிறுவனத்தைக் குறித்து சிந்தித்த போது அதற்கான தூண்டுதல் இணையம்தான்.

நாடு, மொழி, தூரம் போன்ற தடைகளைத் தாண்டி, நிறுவனங்களும் பணி புரியும் வல்லுநர்களும், பயன் பெறும் நுகர்வோரும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் சாத்தியங்கள் எறும்புகள் என்று குழுவின் மூலமாக இணையத் தமிழ் சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும் போது புலப்பட்டது.

தோல் துறையில் இந்தியாவில் தமிழ்நாட்டிலும், சீனாவிலும் நான் பணி புரிந்த போது உணர்ந்து கொண்ட நிலவரங்கள் இந்தத் திட்டத்துக்கு உரம் சேர்த்தன.

சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின்
  • தோல் பதனிடும் தொழிற்சாலை ராணிப்பேட்டையிலும்,
  • பச்சைத் தோல் வாங்கி வெட்புளூ எனப்படும் ஈரநீலத் தோல் செய்யும் மையம் ஈரோட்டிலும்,
  • தோலைப் பயன்படுத்தி காலணி செய்யும் தொழிற்சாலைகள் பல்லாவரத்தில் இரண்டு, பூந்தமல்லியில் இரண்டு, திருப்பெரும்புதூரில் ஒன்று இருக்கின்றன.
அதாவது, மொத்தம் 8 இடங்களில் ஒரே நிறுவனத்தின் பணிகள் நடைபெறுகின்றன.

தென்சீனாவை எடுத்துக் கொண்டால், குறிப்பிட்ட நிறுவனத்தின்
  • உரிமையாளர் தாய்வானைச் சேர்ந்தவர், அவரது தலைமை நிறுவனம் தாய்வானில் பதிவு செய்யப்பட்ட தாய்பேயில் அலுவலகத்தைக் கொண்டிருக்கும்,
  • தோல் செய்யும் நிறுவனம் ஒன்று தாய்வானின் தாய்சொங் நகருக்கு அருகில் ஒன்றும், தென்சீனாவின் தொங்குவானில் ஒன்றும் இருக்கின்றன.
  • காலணி செய்யும் நிறுவனம் தாய்வானின் தாய்நானில் ஒன்றும் தொங்குவானில் ஒன்றும் இருக்கின்றன.

  • காலணி நிறுவனங்களுக்குத் தேவையான கூடுதல் தோல்களை இறக்குமதி செய்ய, பிற பொருட்களை வாங்க, காலணியை ஏற்றுமதி செய்ய அலுவலகம் ஆங்காங் நகரில் இருக்கிறது.
மேலே சொன்ன இரண்டு எடுத்துக் காட்டுகளிலுமே தூரங்கள் ஐநூறு கிலோமீட்டருக்குள் இருக்கின்றன. பல நிர்வாக மற்றும் பொருளாதாரக் காரணங்களால் பணிகள் பிரிந்து இருக்கின்றன.

இதற்கு மேல்,

இந்திய நிறுவனத்தின்
  • காலணிகளுக்கான வாடிக்கையாளர் செருமனியிலும்,
  • தோலுக்கான வாடிக்கையாளர் ஆங்காங் மூலம் செயல்படும் சீன தொழிற்சாலையாகவும் இருப்பார்.
சீன நிறுவனத்தின் காலணிகளை வாங்கும் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 1

5 comments:

Anonymous said...

அண்புள்ள மா.சி.
இரண்டு வருடங்களாக உங்கள் பதிவுகள் படித்து வருகிறேன். பல விஷயங்களில் ஆச்சரியப்பட வைக்கிறீர்கள். தமிழ் இணையம்/ சுய தொழில்/ சமூக அக்கறை/ வாழ்க்கை முறை என்று உங்களிடம் கற்றுக் கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் நிறைய உள்ளது. பல விஷயங்களில் என் கருத்தும், எண்ணமும் உங்களை போலவே இருக்கிறது.
தட்டச்சுவதுதான் பெரிய குறைபாடாக உள்ளது.என் தட்டச்சு வேகத்தை மேம்படுத்தி, அதிகம் தொடர்பில் இருக்க விரும்புகிறேன்.
வந்தனம்! நன்றி!
--விபின், கோவை.

ILA (a) இளா said...

இது கூட சாத்தியமா, வியக்க வைக்கும் பதிவு

வடுவூர் குமார் said...

அனுபவங்களை சுவையாக கொடுத்துள்ளீர்கள்.தொடருங்கள்.

மா சிவகுமார் said...

வாங்க விபின்,

பின்னூட்டம் பார்த்து மிக மகிழ்ச்சி.

//தட்டச்சுவதுதான் பெரிய குறைபாடாக உள்ளது.என் தட்டச்சு வேகத்தை மேம்படுத்தி, அதிகம் தொடர்பில் இருக்க விரும்புகிறேன்.//

சித்திரமும் கைப்பழக்கம்தானே! எழுத எழுத வேகம் வந்து விடும். உங்கள் பதிவுகளை விரைவில் எதிர்பார்க்கிறேன்!

இப்போதுதான் தமிழ் தட்டச்சிட ஆரம்பிக்கிறீர்கள் என்றால், தமிழ் விசை 99 பழகிக் கொள்ளுங்கள். அறிவியல் பூர்வமான தமிழ் தட்டச்சு முறை.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் said...

நன்றி இளா, குமார்.

அன்புடன்,

மா சிவகுமார்