Saturday, June 23, 2007

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 4

சென்னையில் இருக்கும் நிறுவனங்கள்தான் ஒரே வழி. கல்லூரியில் நான்கு வருடம் மூத்தவரான ஒரு நிறுவன உரிமையாளர் பயன்படுத்திப் பார்க்க ஒத்துக் கொண்டார். அவரது ஆதரவில் மெதுவாக பயன்பாடு வளர ஆரம்பித்தது.

ஓரிரு பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்களைச் சந்தித்த போது அவர்கள் இந்தப் பயன்பாட்டில் ஆர்வம் காட்டினாலும் நடைமுறையில் இணையத்தின் மூலம் தமது வேலைகளைச் செய்வதில் யாருக்கும் வசதியாக இருக்கவில்லை.

குறைந்த சம்பளத்தில் அப்போதுதான் கல்லூரி முடித்திருந்த பட்டதாரிகள் இரண்டு பேரை வேலைக்கு அமர்த்திக் கொண்டோம். இந்த நேரத்தில் நிறுவனச் செலவுகளுக்கும், வீட்டுச் செலவுகளுக்கும் கையில் இருந்த சேமிப்பு கரைந்து கொண்டிருந்தது. முதல் ஆண்டின் (2002) கடைசியில் கைக்காசு முழுவதும் கரைந்திருந்தது. எனக்கு அறிவுரையாளராக இருந்த நண்பனின் உந்துதலில் நண்பர்களையும், உறவினர்களையும் பணம் கடன் கேட்டு அணுகினேன்.

சந்தைப் படுத்தும் முயற்சியாக
  • பல வண்ண கையட்டை (brochure), பெயர் அட்டை (colour visiting card) உருவாக்கினோம்.
  • ஜனவரி (2003) இறுதியில் நடைபெறும் சென்னை - இந்திய பன்னாட்டு தோல் கண்காட்சியில் ஒரு கடை எடுத்துக் கொண்டோம்.
  • கணினியிலிருந்து பெரிய திரையில் காட்சி வைத்து வருபவர்களுக்கு எல்லாம் மென்பொருளின் அருமை பெருமைகளை விளக்கிக் கொண்டிருந்தோம்.
அதனால் புதிய வாடிக்கையாளர் யாரும் கிடைக்காவிட்டாலும், அத்தகைய கண்காட்சியில் பங்கேற்றது நிறுவனத்திலும் வெளியிலும் மதிப்பை ஏற்றி விட்டிருந்தது.

கடன் கொடுக்கக் கூடிய உறவினர்கள், நண்பர்களின் பட்டியலும் கடைசிக்கு வந்து விட்டிருந்தது. 'எங்கிருந்தாவது பணம் திரட்ட வேண்டும், இப்படியே சேவையை விளம்பரப்படுத்தி விற்பனையில் தீவிரம் செலுத்தினால் காசு வர ஆரம்பித்து விடும்' என்று நம்பிக்கையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இந்து வரிவிளம்பரங்களில் வந்த ஒரு தொழில் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள அவர்களைத் தொடர்பு கொண்டு பணம் முதலீடு செய்ய தொழில் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்த ஒரு நண்பருடன் இணைத்து விட்டார்கள்.

அவரிடமிருந்து கணிசமான தொகையை கடனாகப் பெற்ற பிறகு வீட்டிலேயே ஒரு அறையில் இயங்கிக் கொண்டிருந்த அலுவலகத்தை தனி இடத்துக்கு மாற்றினோம். அகலப்பட்டை இணைய இணைப்பு, குளிரூட்டப்பட்ட அலுவலக அறை என்று காசு வேகமாகக் கரைந்து கொண்டிருந்தது. கைவசம் இருந்த காசு கொடுக்கும் வாடிக்கையாளர் ஒரே ஒருவர்தான். அவரது ஆதரவில் ஊக்கம் இழக்காமல் முயன்று கொண்டிருந்தோம்.

காசு முற்றிலும் கரையும் முன்னர் சீனாவுக்குப் போய் ஒரு முயற்சி செய்து பார்த்து விடுவோம் என்று அங்கு வேலை பார்த்த போது ஏற்பட்ட தொடர்புகளில் சிலருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ஓரிருவர் எதுவும் தேவையில்லை என்று சொல்ல ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளர் வந்து பார்க்கும் படி சொன்னார். அதனால் ஊக்கமடைந்து காசை முடக்கி சீட்டு எடுத்து இன்னொரு நண்பனுடன் சீனாவுக்குப் பயணமானோம்.

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 1
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 2
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 3

4 comments:

Anonymous said...

மிகவும் பயனுள்ள தொடர். அருமையாக எழுதிவருகிறீர்கள். தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.

http://www.desipundit.com/2007/06/25/thozhil/

மா சிவகுமார் said...

நன்றி டுபுக்கு,

அன்புடன்,

மா சிவகுமார்

வடுவூர் குமார் said...

"தோல்" என்பதால் இப்பக்கம் யாரும் வர மாட்டேன் என்கிறார்களா?
யார் கொடுப்பார்? இந்த மாதிரி அனுபவங்களை?
நல்ல முயற்சி மா சிவக்குமார்.

மா சிவகுமார் said...

வணக்கம் வடுவூர் குமார்,

நீங்கள் தொழில் தொடங்கும் கட்டத்தில் இருப்பதால் அருமையைப் புரிந்து கொள்ள முடிகிறதோ! :-)

அன்புடன்,

மா சிவகுமார்