Saturday, February 17, 2007

முதலீடு (economics 44)

பணத்தை நிலத்தில், வீட்டில், நகையில் முடக்குவது உண்மையான முதலீடு கிடையாது. அவை பணச் சேமிப்பு அவ்வளவுதான்.

உண்மையான முதலீடு என்பது அதன் மூலம் வேறு பொருட்களை உற்பத்தி செய்ய உதவும் அசையும் அசையாச் சொத்துக்களை உருவாக்குவதுதான். நாட்டின் வருமானத்தை தீர்மானிக்கும், நுகர்வோர் செலவினங்கள், தொழில் முறை முதலீடு, அரசாங்க செலவுகள், ஏற்றுமதி/இறக்குமதி இவற்றில் இரண்டாவதான முதலீட்டுச் செலவுகள்தான் அதிகமாக ஏறி இறங்கக் கூடியது.

  • இயல்பான காலங்களில், மக்கள் பயன்படுத்த வாங்கும் பொருட்களின் மதிப்பு சிறிதளவே ஏறவோ இறங்கவோ செய்யும்.
  • அரசின் செலவினங்களும் குறித்த வரம்புக்குள்தான் நடக்கும்.
  • ஏற்றுமதி இறக்குமதி, நாட்டின் ஒப்பீட்டு மேன்மை (comparative advantage) பொறுத்துதான் அமைய முடியும்.
  • தொழில் முறை முதலீடு மட்டும்தான் ஒரே ஆண்டுக்குள் பெருமளவு வேறுபடக் கூடியது.
பொதுவாக பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தால் புதிய முயற்சிகளில் முதலீடு செய்பவர்கள் அதிகமாவார்கள். தற்போது இந்திய தொழில் உலகில் தெரியும் நம்பிக்கை கோடிக் கணக்கான ரூபாய்கள் முதலீட்டை மாதம் தோறும் உருவாக்கி வருகிறது. சின்ன நிறுவனங்களில் கூட அலுவலகத்தில் இடவசதியை அதிகமாக்கிக் கொள்கிறார்கள். புதிய கருவிகள் வாங்குகிறார்கள். பெரிய நிறுவனங்கள் ஐரோப்பா அல்லது அமெரிக்கா போய் அந்த ஊர் நிறுவனங்களை வாங்க முதலீடு செய்கிறார்கள்.

இரண்டாவதாக முதலீடு செய்யும் பொருளின் விலையும், அதற்குத் தேவையான பணத்திற்கு கொடுக்க வேண்டிய வட்டியும் முதலீட்டு அளவை தீர்மானிக்கும். மத்திய வங்கி வட்டி வீதத்தை ஏற்றினால் முதலீடு செய்பவர்கள் குறைந்து விடுவார்கள்.

இப்போது ஓரிரு வாரங்களாக செய்தித் தாள்களில் விலைவாசி உயர்வைக் குறித்த விவாதங்கள். இதில் அடிபடும் சொல்கள், விலையேற்றப் புள்ளி (inflation), வங்கி ரொக்க வைப்பு வீதம் (cash reserve ratio), வங்கி வட்டி வீதம்.

விலையேற்ற வீதம் 6.5% ஆக உயர்ந்து விட்டது என்று சொன்னால், கடந்த ஆண்டு இதே நாளில் இருந்த விலைவாசியை விட இன்றைக்கு பொருட்களின் விலை நூற்றுக்கு ஆறு ரூபாய் ஏறி விட்டது என்று பொருள். இதைக் கணக்கிட உணவுப் பொருட்கள், அன்றாட பயன்படு பொருட்கள், நீடித்து உழைக்கும் பொருட்கள், எரிபொருட்கள் என்று வகைப்படுத்தப்பட்ட நுகர்பொருட்களின் தொகுப்பின் விலைகளைக் குறிப்பிட்ட விகிதத்தில் கூட்டி அதன் மாறுபாட்டை கண்காணிக்கிறார்கள்.

விலை ஏன் ஏறுகிறது? பொருட்களின் தேவை அதிகமானால், அல்லது பொருட்கள் கிடைப்பது குறைந்தால். தேவை என்பது நுகர் பொருள், முதலீடு, அரசு செலவினங்கள், ஏற்றுமதி என்று பிரிகிறது.

மத்திய வங்கி வட்டி, பிற வங்கிகளுக்கு தான் அளிக்கும் கடனுக்கான வட்டியை உயர்த்தினால், பொதுவாக கடன் வட்டி வீதம் உயர்ந்து முதலீடு செய்பவர்கள் செலவை தள்ளிப் போடுவார்கள். இதன் மூலம் பொருட்களின்/சேவைகளின் தேவை அளவு குறைந்து விலைவாசி உயர்வை மட்டுப்படுத்தலாம்.

நூறு ரூபாய் வைப்புத் தொகை கிடைத்தால் அதில் ஆறு ரூபாய் கையில் வைத்துக் கொண்டு 94 ரூபாய்தான் கடன் கொடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு கட்டுப்பாடு உண்டு. காசைக் கொடுத்தவர்கள் திரும்பிக் கேட்டால் கொடுக்க வசதியாக இந்த ஆறு ரூபாய். கொடுத்த எல்லோரும் ஒரே நேரத்தில் வர மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் மீதி 94 ரூபாய் கடனாக வெளியே போகிறது.

இந்த வீதம்தான் CRR எனப்படும் ரொக்க வைப்பு வீதம், மத்திய வங்கியால் விதிக்கப்படுகிறது. முதலீட்டுக்குப் போகும் பணத்தின் அளவைக் குறைக்க வேண்டும் என்றால் இந்த வீதத்தை ஆறிலிருந்து ஆறரையாக உயர்த்தி விட்டால் போதும். 94 ரூபாய் கடன் வெளியே கொடுத்திருந்த வங்கி அரை ரூபாய் கடனைக் குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். கோடிக்கணக்கில் பணம் புரளும் போது இது கணிசமான தொகையாகி பல முதலீடுகளுக்கு காசு கிடைக்காமல் போய் விடும். இதனால் தேவை அளவு குறையும்.

No comments: