Sunday, May 6, 2007

காலணி உருவாகிறது (தோலின் கதை - 13)

முதலில் குறிப்பிட்ட பருவத்தில் எத்தகைய பாணியில் காலணி விற்பனையாகும் என்று தீர்மானிக்க வேண்டும். 2008 கிருத்துமஸ் விடுமுறைகளின் போது விற்பனையாகக் கூடிய காலணிகள் இப்போது உற்பத்தியாக ஆரம்பித்திருக்க வேண்டும். பெரு எண்ணிக்கையில் உற்பத்தி ஆக ஆரம்பிக்கும் முன்னர், மாதிரி செய்து பார்க்க வேண்டும்.

கிட்டத்தட்ட ஒரு ஆண்டு முன்பே, ஐரோப்பாவின் தலை சிறந்து ஆடை வடிவமைப்பாளர்கள் குறிப்பிட்ட பருவத்துக்கான தமது படைப்புகளை ஓவியங்களாக வரைவார்கள். காலணியின் வடிவம், நிறம், என்ன பொருள் என்று முடிவு செய்த பிறகு, அந்த எண்ணத்தை மாதிரியாக உருவாக்கச் சொல்லி அனுப்புவார்கள்.

காலணித் தொழிற்சாலை, கையில் கிடைத்த ஓவியங்களில் என்னென்ன பகுதிகள் இருக்கின்றன என்று பிரித்து அட்டை வார்ப்புருக்களை செய்வார்கள். துணி எடுத்து தையல் காரரிடம் கொடுத்து சட்டை தைக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். சட்டையின் முன் வெட்டுப் பகுதி, பின் வெட்டுப் பகுதி, கழுத்தின் முன்,பின் புறங்கள், கழுத்துப் பட்டை, கைகளில் நீளும் பகுதி என்று துணியைத் துண்டுகளாக வெட்ட வேண்டியிருக்கும்.

அதே போல தோலையும் தேவைப்படும் துண்டுகளாக வெட்டி பிறகு தையல் இயந்திரங்களால் வெவ்வேறு பகுதிகளை இணைப்பார்கள். பொதுவாக காலணியின் மேல் புறத்தில், விரல்கள் நுழையும் பகுதி, பாதத்தைச் சுற்றி மூடும் பகுதி, குதிகாலை மூடும் பகுதி இவற்றை ஒரு வகையான தோலில் வெட்டி இணைத்துக் கொள்வார்கள்.

காலணியின் அடிப்புறம் தனியாக இணைக்கப்படும். முன்பெல்லாம் தோலால் செய்த காலணி அடிப் பாகங்கள் பயன்பட்டு வந்தாலும் சமீப காலங்களில் பெருமளவு செயற்கை பிளாஸ்டிக் பொருட்களே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மேல் காலணியைத் தைத்த பிறகு, உள்ளே ஒரு அடுக்காக துணி அல்லது மென்மையான தோல் பொருளை இணைத்தால்தான் பாதத்துக்கு இதமாக இருக்கும். இந்த மேல் பகுதிக்கு கால் பாதத்தின் வடிவம் இருக்காது, அது தட்டையாகத்தான் இருக்கும். பாதத்தின் வடிவத்தில் மரக்கட்டையில் அல்லது செயற்கை பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தி மாதிரி செய்து வைத்திருப்பார்கள்.

மேல் காலணியை மாதிரியின் மீது இழுத்துப் பொருத்தி சிறு சிறு ஆணிகளால் நிலைப்படுத்துவார்கள். இதன் அடியில் காலணி அடிப்பாகத்தை ஒட்டும் பொருட்களாக இணைத்து, இயந்திரங்களின் மூலம் இறுக்கமாகப் பொருந்த வைப்பார்கள். இந்த இணைப்பு சரியாக செய்யப்படா விட்டால், புதிதாக காலணி வாங்கிய பிறகு சில சமயம் அடிப்பாகம் பிய்ந்து கொண்டு வந்து விடும்.

மாதிரியை விட்டுப் பிரித்த பிறகு காலணியின் வடிவம் மாறாமல் நிலைத்திருக்க அதிக சூடான காற்றை அடிப்பது போன்ற வனைவு வேலைகள் முடிந்த பிறகு, காலணியைப் பிரித்து எடுத்து பெட்டியில் போட்டு அனுப்பி விடுவார்கள்.

2 comments:

வடுவூர் குமார் said...

புதிதாக காலணி வாங்கிய பிறகு சில சமயம் அடிப்பாகம் பிய்ந்து கொண்டு வந்து விடும்.
இது பெண்கள் காலணிகளில் ஏற்படும் பொதுவான குறைப்பாடு.
இது, பல நேரங்களில் தெரிந்தே விடப்படும் குறைப்பாடாகத்தான் தெரிகிறது.
வியபார உக்தி??

மா சிவகுமார் said...

தெரிந்தே விடப்படுவது என்று சொல்ல முடியாது. அடிப்பாகத்தைப் பொருத்தும் பணி சரிவரச் செய்யா விட்டால் அப்படி ஆகி விடும்.

குறிப்பாக பெண்களின் காலணிகளில் மேல்பகுதியில் நகாசு வேலைகள் அதிகமாக இருப்பதால் சரிவரப் பொருந்தாமல் போய் விடலாம் (ஒரு ஊகம்தான்)

அன்புடன்,

மா சிவகுமார்