Tuesday, May 8, 2007

இத்தனை பேர் மெனெக்கெடு (தோலின் கதை - 15)

ஒரு சின்ன வளையம் வந்து சேராததால் உற்பத்தி முழுவதும் நின்று போகும் கதைகளும் உண்டு.
  • நவம்பர், டிசம்பர் மாதம் நியூயார்க் கடைகளில் காலணி விற்பனைக்கு கிடைக்க வேண்டுமென்றால் செப்டம்பர் மாத வாக்கில் இந்தியா/சீனாவிலிருந்து காலணி கப்பலில் கிளம்பி விட வேண்டும்,
  • செப்டம்பரில் உற்பத்தி முடிய வேண்டுமானால் தேவைப்படும் எல்லா பொருட்களும் ஆகஸ்டு வாக்கில் காலணித் தொழிற்சாலைக்குக் கிடைத்திருக்க வேண்டும்.
  • ஆகஸ்டில் தோல் செய்து கொடுக்க வேண்டும் என்றால் ஜூலையிலேயே தோல் தொழிற்சாலைக்கு பச்சைத் தோல் மற்றும் தேவையான வேதிப் பொருட்கள் கைவசம் இருக்க வேண்டும்.
  • அதற்கு மே, ஜூன் மாதங்களிலேயே தோல் தேவை விபரங்கள் வந்து சேர வேண்டும்.
அதனால்தான் 2008 டிசம்பருக்கான காலணிகளின் வடிவமைப்பு வேலைகள் 2007 இறுதியிலேயே தொடங்க வேண்டியிருக்கிறது.

  1. தோல் காலணிகள், உடுப்புகள், விலை உயர்ந்த தோல் பொருட்கள் அதிகமாக விற்பனை ஆவது குளிர் பகுதிகளில்தான். விலையும் அதிகமாக இருப்பதால் வளர்ந்த நாடுகளில்தான் உயர்தர தோலினால் செய்யப்படும் பொருட்கள் விற்பனையாகின்றன.
    தோல் பொருட்களின் தேவை வட அமெரிக்கா, வட ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பெருமளவு இருக்கிறது. இது தவிர எல்லா நாடுகளிலுமே எளிமையான திறந்த காலணிகள் பயன்படுத்தப்படுகின்றன.

  2. இறைச்சி உண்பது எல்லா நாடுகளிலுமே பரவி இருப்பதால் அதன் பக்க விளைவாகக் கிடைக்கும் பச்சைத் தோல்கள் உலகம் எங்கும் கிடைக்கின்றன. ஆனால், தோல் பதனிடும் தொழிலின் மாசு படுத்தும் தன்மையால் வளர்ந்த ஐரோப்பிய, வட அமெரிக்க சமூகங்கள் தோல் பதனிடுதலை வளர்ச்சியடையும் நாடுகளுக்குத் தள்ளி விட்டன. உலகெங்கும் கிடைக்கும் பச்சைத் தோல்கள் பாதி வரை பதப்படுத்தப்பட்டோ, அல்லது பச்சைத் தோல்களாகவோ, இந்தியாவுக்கு, சீனாவுக்கு, பிரேசிலுக்கு வருகின்றன.
    இத்தாலி இந்தத் தொழிலின் நுட்பங்களில் வித்தகர்களாக இருப்பதால் உயர்தரத் தோல் பதனிடும் வேலை இத்தாலியிலும் பெருமளவு நடைபெறுகிறது.

  3. பதனிடப்பட்ட தோலை பொருட்களாகச் செய்யும் தொழிற்சாலைகளில் பெரும்பகுதி சீனாவில் இருக்கின்றன. உலக காலணி உற்பத்தியில் கிட்டத்தட்ட 40% சீனாவில் நடைபெறுவதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. தொழிலாளர்களின் ஊதியம் அதிகமாக இருப்பதால் வளர்ந்த நாடுகளில் இந்த உற்பத்தித் தொழிற்சாலைகளும் பெரிதும் குறைந்து விட்டன.

4 comments:

வடுவூர் குமார் said...

தோல் பதனிடும் தொழிலின் மாசு படுத்தும்..
இத்தாலியில் இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார்கள்?
சீனாவில்.. கேட்கவேண்டாம் நம் மாதிரி தான் இருப்பார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை.

மா சிவகுமார் said...

//சீனாவில்.. கேட்கவேண்டாம் நம் மாதிரி தான் இருப்பார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை.//

:-) ஆமா!

//இத்தாலியில் இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார்கள்?//

பொதுவாக இறுதி நிலை finishing பணி மட்டும் செய்கிறார்கள். மாசு படுத்தும் பணிகளை முடித்த நிலையில் பிற நாடுகளிலிருந்து வாங்கிக் கொள்கிறார்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

உண்மைத்தமிழன் said...

தோல் சம்பந்தப்பட்டத் தொழில்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது இருக்கட்டும். இந்த ஆலைகளால் வெளியேற்றப்படும் கழிவு நீரால் கொங்கு மண்டலத்தில் நிலத்தடி நீரே மாசுபட்டுப் போய்விட்டது. ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்கள் இனிமேல் எந்தவித சாகுபடிக்கும் ஏற்றதாக இல்லை. அனைத்து மண்களும் கெட்டுப் போய் விட்டன என்கிறார்கள். எனது ஊரான திண்டுக்கல்லில் பேகம்பூர் என்ற பகுதியில்தான் இது மாதிரி தோல் தொழிற்சாலைகள் நிறைய இருக்கின்றன. அந்தப் பகுதிக்குள் பேருந்து நுழைந்தாலே போதும்.. வரும் வாசனையால் நமக்குக் குமட்டிக் கொண்டு வரும். ஒரு நிமிடம் சுவாசிக்கின்ற நமக்கே இன்னொரு முறை பேகம்பூருக்குள் நுழையவே கூடாது என்று தோன்றும்.. ஆனால் க்கம்பக்கம் வசிப்பவர்களுக்கு.. இந்த இடத்தில் பள்ளிக்கூடங்கள் வேறு இருக்கின்றன. அரசுகள் என்ன செய்கின்றன என்று யாருக்கும் தெரியவில்லை. இப்போது வருகின்ற வேலை வாய்ப்புகள் பெரிதா? மக்களுடைய சுகாதாரம் பெரியதா என்று பட்டிமன்றம் போட வேண்டிய கட்டாயம் இந்தக் கெட்டுப்போகும் சுற்றுப்புறச் சூழலினால் எழுகிறது என்பது உண்மை..

ஆமா மா.சி. ஸார்.." இத்தனை பேர் மெனக்கெடு" என்று எழுதியிருக்கிறீர்களே தலைப்பில்... "இத்தனை பேர் மெனக்கெட்டு.." என்றுதானே இருக்க வேண்டும்.. எது தமிழ்.. எது சரி.. எது தவறு..?))))))))))))))

ஹி..ஹி.. காலைல இருந்து யாரையும் வம்பிழுக்க முடியல அண்ணா.. அதான்..

மா சிவகுமார் said...

உண்மைத் தமிழன்,

இந்த மாசுபடுத்தல் குறித்தும் எழுதுகிறேன்.

நாற்றம் அடிக்கும் மாசுகளை விட தண்ணீரில் வெளிவரும் வேதிப் பொருள்கள்தான் நிலங்களை பாழ்படுத்துகின்றன. இறைச்சி எடுத்த பிறகு மிஞ்சியிருக்கும் தோலைப் பதனிடாமல் விட்டு விட்டாலும் அழுகி நாற்றம் அடிக்கத்தான் செய்ய்யும். அதனால் பெரிய கெடுதல் இல்லை.

தோல் பதப்படுத்தும் போது வெளி வரும் வேதிப் பொருட்கள் கலந்த நீரை ஊர்களுக்குள், ஆறுகளுக்குள் விட்டுக் கொண்டிருந்தவர்களை கடந்த பத்து ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பால் சுத்தப்படுத்த வைத்திருக்கிறார்கள். இன்னும் பிரச்சனை முழுதாக தீர்ந்து விடவில்லைதான்.

//"இத்தனை பேர் மெனக்கெட்டு.." என்றுதானே இருக்க வேண்டும்.//

மெனக்கெட்டு என்ற வினைச்சொல்லுக்கு மெனக்கெடு என்று பெயர்ச்சொல் உருவாக்கி எழுதியிருக்கிறேன் :-)

//ஹி..ஹி.. காலைல இருந்து யாரையும் வம்பிழுக்க முடியல அண்ணா.. அதான்..//

அதான் போலி பின்னூட்டம் எல்லாம் போட்டு உங்களை வம்பிழுக்கிறாங்களே :-)

அன்புடன்,

மா சிவகுமார்