Tuesday, May 1, 2007

பதப்படுத்தலுக்குத் தயாரிப்பு (தோலின் கதை - 5)

சின்ன வயதில் இழுத்துப் பிடித்து விண்ணென்று இருக்கும் தோல் வயது ஏற ஏற தளர்ந்து சுருங்கி விடுகிறது. இது எல்லாமே மனிதனுக்கும் பொருந்தும், மாடுகளுக்கும் பொருந்தும்.

இறந்து விலங்குகளின் தோலைப் பொருட்களாகச் செய்யும் போது, தோல் வலைப்பின்னலின் இயற்கையான உறுதி, வெப்ப நிலையைப் பாதுகாக்கும் தன்மை, வசதி போன்றவற்றைத்தான் விரும்புகிறோம்.

சுண்ணாம்பில் ஊற வைக்கும் போது வலைப்பின்னலைத் தவிர்த்த பிற புரதங்கள், சர்க்கரைப் பொருட்கள், வேர் பிடித்து நிற்கும் முடிகள் உதிர்ந்து விடுகின்றன. கறுப்பு, பழுப்பு, மஞ்சள் என்று நிறமளிக்கும் நிறமிகளும் கரைந்து போய் விடும்.

வலைப்பின்னலின் வேதி மூலக் கூறுகளினுள் நீர் புகுந்து தோல் உப்பி விடுகிறது. இந்த நிலையில் தோலை வேதி முறையில் நிலைப்படுத்தும் வேலை நடக்கும். இதற்கு அமிலவேதிச் சமநிலையை மாற்ற வேண்டும்.

சுண்ணாம்பு காரம், ஊறுகாய் அமிலம் என்றும் நமக்குத் தெரியும். சாப்பிட்ட பிறகு சுண்ணாம்பு தடவி வெற்றிலை போடுவது மூலம் வயிற்றில் எதிர்த்து வரும் அமில சக்தியை சமப்படுத்துகிறோமோ என்னவோ!

சுண்ணாம்பில் ஊற வைத்த தோலில் காரச்சத்து நிரம்பி இருக்கும், இதைக் குறைத்து அமிலத்தில் ஊற வைத்தால்தான் தோலைப் பதப்படுத்தும் அமில உப்புக்கள் உள்ளே நுழைய முடியும்.

கொதிக்கும் தண்ணீரில் போட்டு கொழுக்கட்டை செய்வார்கள் எங்கள் ஊரில். அரிசியை ஊற வைத்து கெட்டியாக அரைத்து உப்பும் தேங்காயும் சேர்த்து, உருண்டை பிடித்து போட வேண்டும். இந்த உருண்டையை தண்ணீர் நன்கு கொதித்த பிறகுதான் போட வேண்டும். ஆறிய நீரில் போட்டு விட்டால் அரிசி மாவு கரைந்து விடும். கொதிக்கும் நீரில் போட்டதும், உருண்டையில் மேற்பரப்பு உடனேயே வெந்து விட கரைதல் தடுக்கப்பட்டு உள் பகுதிகளும் வேகும் வரை கொதிக்க வைக்கலாம்.

அதே தத்துவம்தான் தோலை வேதி வினைக்கு உட்படுத்துவதிலும். கார நிலையில் அமில உப்பைச் சேர்த்தால் மேற்பரப்பிலேயே எல்லா வினையும் நடந்து விடும். தோலையும் அமில நிலைக்கு மாற்றி அதன் பிறகு அமில உப்பைப் போட்டால் உப்புக் கரைசல் ஊடுருவிச் சென்று வலைப்பின்னலின் ஒவ்வொரு மூலக்கூறின் அருகில் போய் நின்று கொள்ளும். இது அனைத்துமே சமையல் போல தண்ணீருக்குள் நடைபெறுவதுதான்.

நல்ல சமையல் தெரிந்தவர்கள்தான் நல்ல தோல் செய்ய முடியும் என்று சொல்வார்கள்.

சுண்ணாம்புத் தோலை அமில நிலைக்கு முதலில் சுண்ணாம்பை சம நிலைப்படுத்தி விட்டு, அமிலத்தை ஊற்றுவார்கள். அமிலத்தை நேரடியாக ஊற்றினால் தோலைக் கெடுத்து விடும் என்பதால் உப்புக்கரைசலில் ஊற வைத்து அதன் பின் அமிலக் கரைசலை சேர்ப்பார்கள். எலுமிச்சம்பழத்தின் அமிலத்தோடு உப்பு சேர்த்து ஊற வைப்பதால்தான் ஊறுகாய் உருவாகிறது. பழத்தை நுண்ணுயிரிகள் தாக்காமல் பாதுகாக்கிறது. மேலே சொன்ன உப்பும், அமிலமும் சேர்ந்த கரைசலில் ஊறிய தோலுக்கு ஊறுகாய் போட்ட தோல் என்றுதான் பேர்.

12 comments:

தென்றல் said...

சிவக்குமார்,

நம்ம ஊருல எங்கலாம் இந்த மாதிரி தொழில்சாலை-லாம் இருக்கு?

தோலை சந்தையில் விற்பனைக்கு வருவதற்குமுன் அரசாங்கத்தில இருந்து தர சான்றுதல் வாங்க வேண்டுமா?

மா சிவகுமார் said...

தென்றல்,

ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல் பகுதிகளில் இந்தத் தொழிற்சாலைகள் உள்ளன. நம்ம ஊரிலும் உலகின் பிற பகுதிகளிலும் எங்கெங்கு இந்தத் துறை பரவி இருக்கிறது என்பதை விளக்கமாக எழுதுகிறேன்.

தோல் தொழிற்சாலை அமைக்க மாசுக்கட்டுப்பாடு வாரிய சான்றிதழ் தேவை. பொருளை விற்பதற்கு அரசாங்க சான்றிதழ் தேவையில்லை. வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சான்றிதழ்கள் கொடுக்க வேண்டும்.

அன்புடன்,

மா சிவகுமார்

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

சிவா, உங்கள் துறை பற்றிய இந்தப் பதிவுகள் படிக்க எளிமையாகவும் நன்றாகவும் இருக்கின்றன. பயனுள்ள இந்த முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு வாழ்த்துக்கள். ஏசிடெக்/சிஎல்ஆர்ஐ போன்ற இடங்களில் சுற்றி இருப்பதால் என்னால் இவற்றை இன்னும் புரிந்து கொள்ள முடிகிறது.

murali said...

அட நீங்க நம்ப ஆளா!!
மா.சி, நான் தோல் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் இயந்திரங்களான, Ironing and embossing press, drier,
sparayer, area measuring m/c போன்ற இயந்திரங்களுக்கான installation & service engineer ஆக பணி புரிந்தவன்.

பெரும்பாலான தமிழக, இந்திய தோல் தொழிற்சாலைகளில் இயந்திரங்களை நிறுவி இருக்கிறேன். அதனால் உங்கள் பதிவு மிக சுவாரசியமாக இருக்கிறது.

தோல் தொழிற்சாலைகளின் மிகப் பெரிய பிரச்சனை அவற்றால் வெளியிடப்படும் கழிவுகள். அவை நிலத்தின்/நீரின் தன்மையையே மாற்றிவிடும்.

கங்கை மாசுபட, கான்பூரின் தோல் தொழிற்சாலைகள் காரணம்.பாலாறு மாசுபட நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, விஷாரம், திருப்பத்தூர், வேலூர் தொழிற்சாலைகள் காரணம்.ஆனால்
காசு கொழிக்கும் துறை இது.

உங்களின் மற்ற பதிவுகளை படிக்க ஆவலாய் காத்திருக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

மா சிவகுமார் said...

செல்வராஜ்,

நன்றி.

நீங்க என்ன வேலை செய்கிறீர்கள்? ஏசி டெக்கிலா படித்தீர்கள்?

முரளி,

பாத்தீங்களா, இதை எழுதினதுக்கு ஒரு அறிமுகம் கிடைத்து விட்டது :-). வாய்ப்புக் கிடைக்கும் போது உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

சுற்றுப் புறச் சூழல் மாசு படுதல் பற்றியும் எழுதுவேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

தென்றல் said...

/பொருளை விற்பதற்கு அரசாங்க சான்றிதழ் தேவையில்லை. வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சான்றிதழ்கள் கொடுக்க வேண்டும்.
/
இந்தியாவில் தர சான்றுதல் தேவையில்லாதனாலதான் நமக்கு கிடைக்கிறதவிட மற்ற வெளிநாடுகளில் நல்ல தரமுள்ளதாக கிடைக்கிறதா? இல்லை வேறதும் காரணங்கள் உண்டா?

மா சிவகுமார் said...

தென்றல்,

தேயிலையாயிருந்தாலும் சரி, தோல் பொருட்களாக இருந்தாலும் சரி, அதிக விலை கிடைக்கும் மேற்கத்திய சந்தைகளுக்கே உயர் தரப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பல தொழிற்சாலைகள் தமது முழு உற்பத்தியையும் ஏற்றுமதியே செய்கின்றன. ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு கொடுத்துள்ள சலுகைகளும் இதற்குக் காரணம்

நம் நாட்டில் கிடைக்கும் தோல் பொருட்கள் இரண்டாம் தர, மூன்றாம் தர தோல்களிலிருந்து அதற்கென இயங்கும் தொழிற்சாலைகளில் செய்யப்படுகின்றன.

பொருளின் தரத்துக்கும் தரச் சான்றிதழுக்கும் தொடர்பு பெரிதாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். சான்றிதழ்கள் பெரும்பாலும் அரசு கட்டுப்பாடுகளை திருப்தி செய்ய மட்டுமே பயன்படுகின்றன.

தரம், நிறுவனம் வாடிக்கையாளரை மகிழ்விக்க எடுக்கும் முயற்சிகளின் அடிப்படையிலே அமைகிறது என்று நம்புகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

தென்றல் said...

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி, சிவகுமார்!

/பொருளின் தரத்துக்கும் தரச் சான்றிதழுக்கும் தொடர்பு பெரிதாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். சான்றிதழ்கள் பெரும்பாலும் அரசு கட்டுப்பாடுகளை திருப்தி செய்ய மட்டுமே பயன்படுகின்றன.
/
அப்படியா? இந்தியாவை மட்டும் குறிப்பிடுறீங்களா அல்லது அனைத்து நாடுகளுக்கும் இது பொருந்துமா?

ஏனெனில் மற்ற நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் ஒவ்வொன்றிக்கும் (உ.தா. FDA) தரச் சான்றிதழ் பெற வேண்டும். அதுவும் அவ்வளவு எளிது கிடையாது. ஒரளவு தரமுள்ளதாகவே இருக்கும்.

மற்றும் தரம் ஏற்புடையதாக இல்லை (அரசு கட்டுப்பாடுகளை திருப்தி செய்யவில்லை) யெனில்,காரில் இருந்து உணவு வரை உடனே சந்தையிலிருந்து 'Recall' செய்துவிடுவார்கள். இவ்வாறு நம் நாட்டில் நான் கேள்வி பட்டதே இல்லை?!

மா சிவகுமார் said...

தென்றல்,

//ஏனெனில் மற்ற நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் ஒவ்வொன்றிக்கும் (உ.தா. FDA) தரச் சான்றிதழ் பெற வேண்டும். அதுவும் அவ்வளவு எளிது கிடையாது. ஒரளவு தரமுள்ளதாகவே இருக்கும்.//

இந்தியாவிலும் தரக் கட்டுப்பாடு சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. செயல்படுத்துவதில்தான் சுணக்கம்.

அமெரிக்காவிலும் அரசாங்க சட்டங்களின் கடுமை மட்டுமே சரியான தரத்தைக் கொடுத்து விடுவதில்லை என்பது நான் படித்து தெரிந்து கொண்ட வரையில் புரிந்து கொண்டது. நுகர்வோரின் விழிப்புணர்வு, பொதுவான தர உணர்வுதான் Recall செய்வதற்கான அடிப்படை காரணங்கள்.

அரசாங்க விதிமுறைகள் ஒரு தூண்டுகோலாக இருக்க முடியுமே தவிர அதுவே ஒரு தீர்வாக அமைவது இல்லை என்று நான் என்னுடைய அனுபவத்தில் அறிந்தது.

மைக்ரோசாப்டு நிறுவனம் தனது மோனோபோலி நிலையை சட்ட விரோதமாகப் பயன்படுத்தியது என்று குற்றம் சாட்டப்பட்டு நீதிபதி ஒருவர் அதை உறுதி செய்த பிறகு கூட சரியான நிவாரணத்திலிருந்து தப்பித்துக் கொண்ட வரலாறு உங்களுக்கு தெரியும்.

மருந்து நிறுவனங்கள் FDA ஒப்புதல் பெறப் படும் சிரமங்களைக் குறித்து நானும் படித்திருக்கிறேன்.

டாடாவில் என்னுடைய மேலாளர் இப்படிக் கூறுவார் 'என்னதான் ஒப்பந்தம் போட்டுக் கொண்டாலும், வாடிக்கையாளருடன் இருக்கும் நல்லுறவுதான் நமது பணத்துக்குப் பாதுகாப்பு' என்று. அதே போல, என்னதான் சான்றிதழ் இருந்தாலும் நிறுவனத்தின் நேர்மைதான் தரத்துக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.

கொஞ்சம் குழப்புகிறது இல்லை! :-)

அன்புடன்,

மா சிவகுமார்

வடுவூர் குமார் said...

கொஞ்சம் குழப்புகிறது இல்லை! :-)
இல்லை, தெளிவாக இருக்கிறது.

தென்றல் said...

விளக்கத்திற்கு நன்றி, சிவகுமார்!

மா சிவகுமார் said...

நன்றி வடுவூர் குமார், தென்றல்,

அன்புடன்,

மா சிவகுமார்