Tuesday, April 17, 2007

பணம் படுத்தும் பாடு (economics - 48)

'ஒரு டாலருக்கு 45 ரூபாய் கிடைக்கிறது என்பது எப்படி நிர்ணயமாகிறது?' என்று கேட்டார் அலுவக நண்பர் ஒருவர். விளக்க ஆரம்பித்தேன். ஆரம்பித்த சில நிமிடங்களில் ஒரு சிறிய கூட்டமே கூடி விட்டது.

ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையே நடக்கும் பரிமாற்றங்களில்தான் இந்த வீதம் தீர்மானமாகிறது.

நமக்கு டாலர் எப்போது தேவைப்படும்?
வெளி நாட்டுக்குப் பயணம் போகும் போதோ, வெளி நாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்யும் போதோ டாலர் தேவைப்படும். அதற்காக நம் கையில் இருக்கும் ரூபாய்களைக் கொடுத்து டாலராக மாற்ற முயற்சி செய்வோம்.

சரி, டாலரை எப்போது விற்க முயல்வோம்?
நம்ம மென்பொருளை வெளிநாட்டுக்கு விற்றதால் வாடிக்கையாளர் அனுப்பிய டாலர்களை உள்ளூரில் செலவழிக்க ரூபாயாக மாற்றும் போதும் அதே கடைக்குப் போவோம். அல்லது வெளி நாட்டு உறவினர் பணம் அனுப்பினால் மாற்ற வேண்டியிருக்கும்.

இப்படி ஏற்றுமதி, வெளிநாட்டு பண வரவு, வெளிநாட்டிலிருந்து முதலீடு என்று ஒரு வெளிநாட்டு பணம் நம்ம ஊர் பணமாக மாற வேண்டிய தேவைகள். இறக்குமதி, வெளிநாட்டிற்கு பணம் அனுப்புதல் என்று நம்ம பணம் வெளிநாட்டுப் பணமாக மாற வேண்டிய தேவைகள்.

கடையில் கத்தரிக்காய் விற்பது போல, தேவைதான் இந்த விலையையும் தீர்மானிக்கிறது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதிகள், அங்கிருந்து வரும் இறக்குமதிகளை விடக் குறைவாக இருந்தால் டாலர் விற்பவர்களை விட வாங்குபவர்கள் குறைவாக இருக்க டாலர் விலை ஏறும். அதாவது 44 ரூபாயக்கு ஒரு டாலர் என்பது 45 ரூபாய் என்று ஏறி விடும். இது போல எல்லா விற்பனை, வாங்குதல்களின் சமநிலையில் ஒரு விலை வீதம் அமைந்து விடுவதுதான் பணமாற்ற வீதம்.

பெரும்பாலும் சந்தையிலேயே இந்த வீதம் தீர்மானிக்கப் பட்டாலும், ஒரு நாட்டின் அரசோ, அல்லது பன்னாட்டு நிதி நிறுவனங்களோ, மாற்று வீதத்தை குறிப்பிட்ட அளவில் வைக்க முயலலாம். ரூபாய் மதிப்பு 44ஐ விடக் கூடவோ, குறையவோ கூடாது என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்தால் 44 ரூபாய் வீதத்தில் விற்பதை விட அதிகமான டாலர்கள் வாங்குபவர்கள் வந்து 45 ஆக மாறப் போகிறது என்று தெரிந்தால் தன் கைவசம் இருக்கும் டாலர்களை சந்தையில் விற்பனைக்கு அளித்து விலை ஏறாமல் பார்த்துக் கொள்ளும்.

இன்னொரு பக்கம் டாலர்களின் எண்ணிக்கை அதிகரித்து 43ஆக மாறப் போகிறது என்று தெரிந்தால் டாலர்களை வாங்கி தன் கையிருப்பில் வைத்துக் கொள்ள ஆரம்பிக்கலாம்.

இதுதான் இன்றைக்கு நிலவும் பணமாற்று வீதங்களின் அடிப்படை.

குறிப்பிட்ட அளவு தங்கம் இருந்தால்தான் பணம் வெளியிட முடியும் என்பது உண்மையா?

முன்பெல்லாம் அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது பணத்தின் அளவை மத்திய வங்கி தீர்மானிக்கும் வகையில்தான் இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைக்கு தேவையான அளவு பணம் அச்சடித்து வெளியிடுவது அரசின் பொறுப்பு.

தேவை என்பது என்ன?

நாட்டில் பத்தாயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் கைமாற வேண்டுமானால் பத்தாயிரம் கோடி பணம் புழக்கத்தில் இருக்க வேண்டும். (இந்தக் கணக்கில் இன்னும் பல காரணிகள் வரும், ஒரு எளிய புரிதலுக்கு இப்படியே வைத்துக் கொள்ளலாம்). பொருட்களின் அளவும் தரமும் உயராமல் திடீரென்று பணப்புழக்கம் இருபதாயிரம் கோடிகளாக உயர்ந்து விட்டால், இரண்டு மடங்கு பணம் அதே அளவு பொருட்களைத் துரத்த விலைவாசி இரண்டு மடங்காக உயர்வதுதான் மிஞ்சும்.

நாட்டின் உற்பத்தித் திறன் உயர்ந்து பொருட்களின் மதிப்பு உயர்ந்தால் அந்த மதிப்பை பரிமாறிக் கொள்ள வசதியாகக் கூடுதல் பணம் வெளியிடப் பட வேண்டும். இல்லையென்றால் பரிமாற்றங்கள் போதிய பணப்புழக்கம் இல்லாமல் முடங்கிப் போய் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டு விடும்.

இந்த இரண்டுக்கும் நடுவில் சரியான அளவில் பண அளவை கட்டுப்படுத்துவதுதான் மத்திய வங்கியின் பணி.

16 comments:

SurveySan said...

நல்ல உபயோகமான விஷயம்.

அப்படியே, இந்த கேள்விக்கும் பதில சொல்லிடுங்க.

இப்போ, இந்திய அரசு ஒரு விமானம் வாங்கணும்னா, அதுக்குத் தேவையான பணத்த தன் இஷ்டத்துக்கு அச்சடிச்சு, Boeing கிட்ட கொடுத்து ஏன் வாங்க முடியாது? எது அத தடுக்குது?

நன்றீஸ்.

dondu(#11168674346665545885) said...

//இப்போ, இந்திய அரசு ஒரு விமானம் வாங்கணும்னா, அதுக்குத் தேவையான பணத்த தன் இஷ்டத்துக்கு அச்சடிச்சு, Boeing கிட்ட கொடுத்து ஏன் வாங்க முடியாது? எது அத தடுக்குது?//
போயிங் கம்பெனி ரூபாயை ஒத்துக் கொள்ளாதே சர்வேசன்.

அதுக்காக டாலரை அச்சடித்தால் நம்ம தேச ரிசர்வ் பேங்க் கவர்னருக்கு அமெரிக்க சிங் சிங் சிறையில் கூழ் நிச்சயம். :)

அன்புடன்,
டோண்டு ராகவன்

வினையூக்கி said...

எளிமையாக புரிந்துகொள்ளக் கூடிய பதிவு. நன்றி. மா.சி

மா சிவகுமார் said...

நன்றி டோண்டு சார், வினையூக்கி.

சர்வேசன்,

டோண்டு சார் சொன்னது போல, இந்திய அரசு இந்திய ரூபாய்தான் அடிக்க முடியும், டாலர்களை அடிக்க முடியாது. அப்படியே அதிகமான ரூபாய்களை அச்சடித்து சந்தையில் டாலர்களை வாங்க முயன்றால் பதிவில் குறிப்பிட்டது போல நாட்டில் கிடைக்கும் பொருட்களின் மதிப்பை விட ரூபாய்களின் அளவு அதிகமாகி விலைவாசி உயர்வும், செலவாணி மதிப்புக் குறைவும் ஏற்பட்டு விடும்.

அன்புடன்,

மா சிவகுமார்

Jay said...

"நாட்டின் உற்பத்தித் திறன் உயர்ந்து பொருட்களின் மதிப்பு உயர்ந்தால் அந்த மதிப்பை பரிமாறிக் கொள்ள வசதியாகக் கூடுதல் பணம் வெளியிடப் பட வேண்டும். இல்லையென்றால் பரிமாற்றங்கள் போதிய பணப்புழக்கம் இல்லாமல் முடங்கிப் போய் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டு விடும்."

பொருளாராம் வளர கூடுதல் பணம் வெளியிடப் பட வேண்டும் என்பது தேவைற்றது. நீங்கள் வெலாசிடி அஃப் மணி (Velocity of money) என்ற காண்செப்டை பற்றி தெரியாமல் இதை கூறியிருக்கலாம்.

இந்த கான்செப்டை கலைவானர் நகைச்சுவை மூலமாக ஒரு பழய படத்தில் காட்டியிருப்பார்.

கலைவானர் கிழிந்த பத்து ரூபாய் நோட்டை கழட்டி விடுவதற்க்கு மளிகை கடையில் அதை கொடுத்து பொருட்களை வாங்கி செல்வார். சுப்பு மளிகை கடையில் பொருள் வாங்கிவிட்டு மிதம் பத்து ரூபாய் வாங்குவார் (அந்த கடைக்காரர் இதே பத்து ரூபாயை சுப்புவிடன் கொடுப்பார்). சுப்பு கலைவானரிடம் கடன் வாங்கியிருப்பார். கலைவானர் அந்த கடனை திருப்பி கேட்க அதே கிழிந்த பத்து ரூபாய் நோட்டை அவரிடம் கொடுப்பார்.

ஒரே பத்து ரூபாய் எவ்வளவு வேலை செய்கிறது.

மேலும் சொல்ல போனால், பணம் உற்பத்தியினால்தான் நாட்டில் பல கேடுகள் உருவாகுகின்றன. விலைவாசி உயர்வு எல்லாம் இதனாலே. அரசு நோட்டிச்சா உன் பாக்கெட்ல இருக்க பண மதிப்பு குறைந்துவிடும். இது ஒரு மறைமுகமான வரி, மக்கள் மீது விதிக்கும் தேவையற்ற சுமை.

மா சிவகுமார் said...

ஜெய்,

வெலாசிட்டி பற்றி நினைவூட்டியதற்கு நன்றி. பணம் பயன்படுத்திடும் வேகம் மாறுவதற்கு பொருளாதார வளர்ச்சி மட்டும் காரணம் இல்லை என்று உங்களுக்குத் தெரியும். பொருளாதார நடவடிக்கைகள் வளர்ந்து அதை நடத்த தேவையான பணப்புழக்கம் இல்லை என்றால் தேக்க நிலை ஏற்படும் என்பது பொருளாதார வரலாற்றில் படித்திருப்பீர்கள்.

முன்பு தங்கம் பணமாகப் பயன்படுத்தப்பட்ட போது, தங்கச் சுரங்கங்கள் கண்டு பிடித்தால் வளர்ச்சியும் இடைப்பட்ட காலங்களில் தேக்கமும் இருந்த சுழற்சிகளையும் அறிந்திருப்பீர்கள். என்ன நடந்தாலும் பணத்தின் அளவு மாறாமல் இருக்க வேண்டும் என்பது ஒரு தீவிர மானிடரிஸ்டு வாதம், அது நடைமுறையில் எங்கும் கடைப்பிடிக்க முடியாதது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டதுதானே!

வங்கிகளில் கடன் கொடுக்கும் போது காசோலை கணக்குகளின் மூலம் பணம் உருவாகிறது. கடனட்டைகள் இன்னொரு புறம். இவை அனைத்தையும் மாறாமல் வைத்திருக்க முயன்றால் நவீன பொருளாதார இயக்கமே நின்று போய் விடுமே!

அன்புடன்,

மா சிவகுமார்

தென்றல் said...

எளிமையான நல்ல விளக்கம்.
நன்றி, சிவகுமார் !

நீங்கள் வங்கியில்-லா பணிபுரிகிறீர்கள்?

Jay said...

பதிலுக்கு நன்றி மா.சிவகுமார் அவர்களே.

நான் முன்பு கூறியதில் சிறிய திருத்தம், "வெலாசிட்டி அஃப் மணி'யை மறந்து நீங்கள் கூறியிருக்கல்லாம்" என்று எடுத்துகொள்ளவும்.

##

இப்போது இந்தியாவில் கடைபிடிப்பது "Fractional Reserve Banking" இதற்கு வேறு பெயர் "Fiat Money System". இதில் ரிசர்வ் வங்கி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அச்சிடலாம், ஆனால் அதே அளவு தங்க கட்டிகள் இருப்பில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது ரிசர்வ் வங்கியில் தங்க இருப்பு 2-3%க்கும் குறைவாகவே உள்ளது. மிதம் 97% சும்மா அடிச்ச பேப்பர் நோட்டு. இந்த பணத்தைதான் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயம் (அதனால்தான் இதை Fiat Money என்று கூறுகிறார்கள்), இதை மீறுவது சட்டபடி குற்றம்.

பொருட்கள் அளவும் பணத்தின் அளவும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது நமது புரிதலுக்க்கே. It is an assumption of Optimal Supply of Money (by the way it can never be achieved). பண உர்பத்தியை குறைப்பதும், அதிகரிப்பதும் இந்த Optimal Supply of Money அடைவதற்கே என்று எடுத்துகொன்டாலும், இதற்கு தேவைக்கு அதிகமான சக்தி மத்திய ரிசர்வ் வங்கிக்கும் மற்றும் மத்திய அரசுக்கும் இருக்கிறது. பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கு கொடுத்த அதிகாரத்தை துஷ்ப்ரயோகபடுத்தி மத்திய அரசின் ஆனைபடி புதிய பணம் அச்சிட்டு அரசின் செலவுகளுக்கு பயன்படுத்தபடுகின்றன. இதனால் பாதிக்கப்டுவதோ எழைகள்தான், பணக்காரன் விலைவாசி உயர்விலிருந்து ஒரளவுக்கு தப்பிவிடுகிறான். உங்கள் பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவது இதனாலே.


ரிசர்வு வங்கியின் நடவடிக்கைக்கு இன்றைக்கும் தணிக்கை கிடையாது. மத்திய அரசின் சொல்படிதான் ரிசர்வ் வங்கி நடக்கிறது. ஆனால் ரிசர்வ் வங்கியின் செயல்பாடும் மத்திய அரசின் செயல்பாடும் தனித்தனி என்று மக்கள் நினைத்துகொண்டு இருக்கிறார்கள். இது பெரிய ஏமாற்றுவேலை.

மா. சிவகுமார்: //பணத்தின் அளவு மாறாமல் இருக்க வேண்டும் என்பது ஒரு தீவிர மானிடரிஸ்டு வாதம்//

சிவகுமார் ஐய்யா, எனது வாதம் பணத்தின் அளவு மாறாமல் இருக்க வேன்டும் என்பது அல்ல. பணத்தின அளவை எதற்காக அதிகரிக்கப்பதோ குறைப்பதோ என்பதில்தான். இருந்தாலும், 100% Reserve Banking கடைபிடித்தல் நல்லது.

மா. சிவகுமார்: //பணத்தின் அளவு.............மாறாமல் வைத்திருக்க முயன்றால் நவீன பொருளாதார இயக்கமே நின்று போய் விடுமே//

பொருளாதாரம் முடங்காது மாறாக விலைவாசி குறையும். மக்களுக்கு நன்மைதான்.

மேலும் படிக்க:
1.Funny Money
by Sauvik Chakraverti, TOI
http://tinyurl.com/3blkto

2.At this Rate.
Indian Express , 02 April 2007
http://tinyurl.com/36hy5c

3.What RBI wants.
Business Standard, 4 April 2007
http://tinyurl.com/36632o

படம் பார்க்க:
1.Money, Banking and the Federal Reserve
http://tinyurl.com/36632o

மா சிவகுமார் said...

//நீங்கள் வங்கியில்-லா பணிபுரிகிறீர்கள்?//

இல்லை தென்றல், எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்தான் :-) நம்ம ஜோசப் சாரைக் கேட்டால் இன்னும் தெளிவாக விளக்கம் கிடைக்கும்.

ஜெய்,

விளக்கமான பின்னூட்டத்துக்கு நன்றி. உங்கள் வாதத்தின் அடிப்படை புரிகிறது. அதை ஏற்றுக் கொள்ளவில்லை நான். மத்திய வங்கியும் அரசும் நல்ல எண்ணத்துடன் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையில் fractional reserve banking நல்லதையே செய்யும் என்பது இன்னும் இற்றுப் போகவில்லை என்று நினைக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

Jay said...

பதிலுக்கு நன்றி மா.சிவகுமார் அவர்களே.

//மத்திய வங்கியும் அரசும் நல்ல எண்ணத்துடன் செயல்படுவார்கள் //

அரசின் மீதும் அரசியல்வாதிகள் மீதும் உங்களுக்கு நம்பிக்கை அதிகம் போலும்.

//fractional reserve banking நல்லதையே செய்யும் என்பது இன்னும் இற்றுப் போகவில்லை என்று நினைக்கிறேன்.//

Fractional Reserve Banking நல்லது இல்லை, இதில் அரசியலவாதிகள் புந்து விளையாட நிறைய ஓட்டைகள் உள்ளன. Fractional Reserve Banking னால் அதிகம் பாதிக்கபடுவது நீங்களோ, நானோ அல்ல. பாதிகப்படுவது ஏழைகள்தான் அதிகம். இது நான் கொடுத்த லிங்க்'களை படித்திருந்தால் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மேலும் ஒரு லிங்க் தருகிறேன் அதயும் படியுங்கள்.

Fallacy of Money Supply

http://tinyurl.com/2jbp7c

கொடுத்த லிங்க் எல்லாவற்றையும் படித்த பிறகே உங்கள் கருத்தை கூறுமாறு அன்பு கட்டளை இடுகிறேன்.

மா சிவகுமார் said...

கட்டளைக்குப் பணிந்து லிங்குகளைப் படித்தேன் ஜெய் :-)

நீங்கள் சொல்லும் 100% ரிசர்வ் முறை வந்தால் கிட்டத்தட்ட காந்திய பொருளாதாரம் நடைமுறைக்கு வந்து விடும் என்று படுகிறது. எந்த புதிய தொழில் முயற்சிகளும் நடக்க முடியாது. ரிஸ்க் எடுப்பது என்பது மறைந்து விடும்.

குழப்பமாக இருக்கிறதா? இந்தக் கட்டுரைகளும் இதே போல என்ன நடக்கலாம் என்று மங்கலான குழப்ப சூழல்களையே சித்தரிக்கின்றன. fractional reserve முறையை நெறிப்படுத்தி ஓரளவு கட்டுக்குள் வைத்திருப்பது மத்திய வங்கிகள்தானே! அந்த முறையையே அளித்து விட்டால் மேற்கத்திய சந்தைப் பொருளாதார நடவடிக்கைகளே மறைந்து போய் விடலாம் என்று படுகிறது.

மேலே சொன்ன இரண்டு பத்திகளுமே எனது குழப்பத்தில் விளைந்தவை!

அன்புடன்,

மா சிவகுமார்

தென்றல் said...

/இல்லை தென்றல், எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்தான் :-)
/
ம்ம்... தன்னடக்கம்.... வாழ்த்துக்கள், சிவகுமார்!

(நீங்க என்ன தொழில் பார்க்கிறீங்கனு சொல்லலையே ?)

மா சிவகுமார் said...

தென்றல் நான் இங்குதான் பணி புரிகிறேன்.

http://www.leatherlink.net/management.htm

அன்புடன்,

மா சிவகுமார்

தென்றல் said...

/நான் இங்குதான் பணி புரிகிறேன்.
...
/

நன்றி, சிவகுமார்!

K.R.அதியமான் said...

If money supply is increases in proportion to the grwoth rate of economy then prices will be stable.
but we are(were) pumping in money at much much higher rate. Prices have multiplied by over 150 times since 1947, while wages donot be proportiantely rise. the poor becomes poorer due to this.

Keynes never recommend 12 % deficit
fiancing (as we do now).

The proverb "there are no free lunches" is always true. someone somewhere pays for it as the govt prints fia money and spends it on
'welfare'

it is a good example of the Hindu concept of 'maya'..

Pls re-read Milton Freidman's book
Free to Choose ; the chapter "cures for inflation"
and the chapter "anatomy of a crisis" (about the great depression of 30s)..

மா சிவகுமார் said...

அதியமான்,

எந்த வேகத்தில் பண அளவு அதிகரிக்க வேண்டும் என்று யார் தீர்மானிப்பார்கள்? தேவையை விடக் குறைந்தாலும் பாதகம் இல்லை, கூடினால் பேராபத்து என்பது உங்கள் வாதம். அதிகமானாலும் பரவாயில்லை, பத்தாமல் போய் விடக் கூடாது என்பது என்னுடையக் கருத்து :-)

அன்புடன்,

மா சிவகுமார்