Friday, December 19, 2008

பிஎஸ்ஜி - ஏழு ஆண்டுகள் (2)

குழந்தை கண்களைத் திறக்காமல் ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் தூங்கிக் கொண்டே இருக்கும் நாட்கள் போய், அடுத்த நிலையில் தவழ வேண்டும். 2002ம் ஆண்டு டிசம்பர் வாக்கில் சேமிப்புகள் கரைந்து விட்டன. சேமிப்புகள் என்றால் சீனாவில் வேலை செய்யும் போது வங்கியில் போட்டு வைத்த வைப்புத் தொகைகள், அப்பா அம்மா ஓய்வு பெற்றதும் கிடைத்த பணத்தில் கொடுத்த பங்கு என்று எல்லாவற்றையும் செலவழித்து விட்டேன் (டோம்). இப்போது ஒரு திருப்புச் சந்தியில்.

'வங்கியில் கேட்டுப் பார்க்கலாமே' என்று நண்பன் சொல்ல, நிறுவனத்தின் கணக்கு வைத்திருந்த சௌராசுடிரா வங்கி மேலாளரை சந்திக்க முயற்சித்தேன். 'நம்ம கிளையில் நகை வைக்க பாதுகாப்புப் பெட்டகம் பற்றி விசாரிச்சாங்களே அவங்க கணவன்தான்' என்று அறிமுகப்படுத்தினார் உதவி மேலாளர். ஒரு ஆவணத்தில் அடுத்த மாதங்களில் வருமானம், செலவின உத்தேசங்களை போட்டு எடுத்துப் போயிருந்தேன். அதற்கு முன்பாக தொழில் விபரங்கள், எப்படி வாடிக்கையாளர்களை கவரப் போகிறோம் என்றெல்லாம் குறிப்புகள்.

அவர் நேராக எண்களுக்குள் மட்டும் புகுந்தார். ஐந்து லட்ச ரூபாய் கடன் கேட்டிருந்தேன். 'கடன் கொடுப்பதற்கு 3 காரணிகளைப் பார்ப்பேன். கடன் கேட்பவரின் திருப்பிக் கொடுக்கும் திறமை, தொழிலின் வருமான வாய்ப்புகள், மூன்றாவதுதான் சொத்துப் பாதுகாப்பு. அப்படிப் பார்த்ததில் உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று மரியாதையாக தெளிவாக அனுப்பி வைத்து விட்டார். ஏதாவது பிணைச் சொத்து இருந்தால்தான் கடன் கொடுப்பார்கள் என்று அவதூறு சொல்வதற்கு வழி இல்லை.

அடுத்த நிலையில் உறவினர்கள், நண்பர்களிடம் கேட்பது என்று முடிவு. நண்பன் ஒரு 30000 ரூபாய் கொடுத்து தொடங்கி வைத்தான். அப்பா/அம்மா, அத்தான்/அக்கா, அண்ணன் என்று சில லட்சங்கள் திரட்டி விட்டேன். கணினிகள், மடிக்கணினிகள் வாங்கியது, 2003ம் ஆண்டு தொடக்கத்தில் நடந்து தோல் கண்காட்சியில் பங்கு பெற்றது எல்லாம் அந்தப் பணங்களைப் பயன்படுத்திதான்.

அந்தக் கண்காட்சியின் போது ஒரு இடத்தை எடுத்து படம் காட்டும் கருவியில் எப்படி நிறுவனம் தோல் துறைக்குச் சேவை அளிக்கும் என்று விளக்கிக் கொண்டிருந்தேன். நிறைய பேர் வந்து பார்த்து விட்டுப் போனார்கள். எதுவும் வாடிக்கையாளராக கிடைத்து விடவில்லைதான். அதற்கு ஓரிரு மாதங்கள் முன்பு, ஸ்லாஷ்டாட் போல விவாதக் களம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தரவுத்தளம் வடிவமைத்து நிரல் எழுதி இணைய வழங்கியில் போட்டு விட்டேன். தினமும் தோல் துறை தொடர்பான செய்திகளை இணைய சுட்டியுடன் போட்டு அது தொடர்பான கருத்துக்களை போடும் வசதி செய்து கொடுத்திருந்தேன். அதை மாணவர்களிடமும், துறையில் பணிபுரிபவர்களிடமும் பரப்புவதற்கான முயற்சிகளையும் கண்காட்சியின் போது செய்ய முடிந்தது.

2003ம் ஆண்டில் வாடிக்கையாளர் பட்டியல் கிடைத்திருந்தது. ஏதோ வருமானமும் மாதா மாதம் கிடைக்க ஆரம்பித்திருந்தது. எல்லாமே இணைய வழங்கியில் பயன்படுத்தும் பயனர்கள்தாம். ராணிப்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் உள்ளே புகவே முடியவில்லை. இணைய இணைப்பு பரிதாபமாக இருந்தது. வருமானத்துக்காக சீன மொழி கற்றுக் கொடுத்தல், சீன மொழியில் நிறுவன ஆவணங்களை செய்து கொடுத்தல் என்று உப தொழில் செய்து வந்தேன். அதில் மாணவர்களும், தொடர்புகளும் கிடைத்தன. பெரும்பாலும் தோல் துறையைச் சார்ந்தவர்களே வாடிக்கையாளராகக் கிடைத்தார்கள்.

ஆண்டின் நடுப்பகுதியில் திரட்டிய காசு கரைந்து மீண்டும் நெருக்கடி. அண்ணா நகரில் வணிக நிதி உதவி நிறுவனம் என்ற விளம்பரத்தைப் பார்த்து தொலைபேசினால் வரச் சொன்னார்கள். ஏதோ ஒரு ஒத்திசைவில், கோயமுத்தூரில் இருந்து ஏதாவது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து தொழிலில் இறங்க விருப்பம் தெரிவித்தவருடன் சேர்த்து விட்டார்கள். அவரும் நாகர்கோவில் காரர்.

அவரை அழைத்து வந்து வீட்டில் காட்டினேன். அவருக்கும் ஏதாவது வேலையில் இருந்து விட வேண்டும் என்று அழுத்தம். வீட்டில் திருமணம் செய்து வைக்க அவசரப்படுத்துகிறார்கள். அவரது அப்பாவிடம் பணம் வாங்கி முதலீடு செய்யப் போகிறார். 5 முதல் 10 லட்சம் போடலாம் என்று சொன்னார். அவரது அப்பா சென்னை அசோகா விடுதியில் வந்து தங்கியிருக்கையில் போய்ப் பார்க்கப் போனோம். 5 லட்ச ரூபாய் தருவதாக ஒத்துக் கொண்டார். நிறுவனத்தில் பங்கு அளிக்காமல், கடனாக வாங்கிக் கொள்வதாகச் சொன்னேன். ஏதோ ஒரு காரணத்தால் அவரை பங்குதாரராகச் சேர்த்துக் கொள்ள மனது வரவில்லை.

நாகர் கோவில் போய் அப்பாவையும் கூட்டிக் கொண்டு போய் 5 லட்ச ரூபாய் வாங்குவதற்கான ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வந்தோம். 'நிறுவனத்தை வீட்டிலிருந்து நடத்தக் கூடாது, தனியார் பங்கு நிறுவனமாக மாற்ற வேண்டும்' என்று திட்டமிட்டுக் கொண்டோம். கடனுக்கு பணம் திரும்பக் கொடுப்பது ஒரு ஆண்டுக்குப் பிறகு ஆரம்பிக்க வேண்டும்.

அரும்பாக்கத்தில் கடைத்தெருவில் ஒரு அலுவலகம் பிடித்து, தரையில் மர உரிப்பு ஒட்டி, ஜன்னலில் வெனிசியன் திரை எல்லாம் போட்டு புதிய நாற்காலிகள் மேசைகள் வாங்கி போய் விட்டோம். வீட்டின் வாடகையைக் குறைக்க குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு அருகிலேயே 2000 ரூபாய் குறைவில் மாறிப் போய் விட்டோம். செலவழிப்பது பெரிதும் குறைந்து போயிருந்தது. அடுத்தவர் பணத்தைக் கடன் வாங்கி நமது விருப்பப்படி செலவழிக்க முடியுமா? குழந்தைகளின் படிப்புக்கும், உணவுத் தேவைகளுக்கு மட்டும்தான் செலவழிக்க வேண்டும் என்று முடிந்தது. அதனால் உரசல்கள் தீவிரமடைந்தன.

வாங்கிய 5 லட்ச ரூபாயில் மீதியிருந்த பணத்தில் 2004ம் ஆண்டு தோல் கண்காட்சியில் பங்கேற்பு, 2003ம் ஆண்டு டிசம்பரில் சீனா போய் வருவது என்று திட்டமிட்டுக் கொண்டோம். 2004ம் ஆண்டில் சீன மொழி மாற்றுச் சேவைகள் வருமானத்தைத் தந்து கொண்டிருக்க, தமிழ்க் கணினி என்று திட்டத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

சீனாவுக்குக் கிட்டத்தட்ட 70000 ரூபாய்கள் செலவழித்துப் போய் வந்தேன். ஒரே ஒரு வாடிக்கையாளரை உருப்படியாகப் பார்க்க முடிந்தது. தொடர்பு கொண்ட மற்றவர்கள் யாரும் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அவ்வளவு காசு செலவழித்ததற்கு ஒரே பலன், நாம் திட்டமிடும் சேவைக்கு வாடிக்கையாளர்களிடையே ஆர்வமிருக்கும் என்று தெரிய வந்ததுதான்.

நண்பர்கள் இரண்டு பேருடன் போய் வந்தேன். திரும்பும் வழியில் இணையத்தில் 'பயன்பாட்டை வைத்திருந்தால் யாரும் சேர மாட்டார்கள். வாடிக்கையாளரது கணினியிலேயே மென்பொருள் இருக்கும் படி சேவை வழங்கு. நானும் அதை வாங்கிக் கொள்கிறேன். மாதா மாதம் பணத்தையும் தவறாமல் வாங்கிக் கொள்.' என்று நண்பன் சொல்ல, கடைசியில் கசப்பான அந்த நடைமுறையை புரிந்து கொண்டு, அப்படியே சேவை வழங்கும் படி மாறிக் கொண்டோம்.

நண்பனின் நிறுவனம், அதைத் தொடர்ந்து முதல் வாடிக்கையாளர் என்று வாடிக்கையாளர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள். 2004ம் ஆண்டு தோல் கண்காட்சியில் தெரிந்த ஒருவரின் நண்பரின் நிறுவன அறிமுகம் கிடைத்தது. அவர்களிடம் மாதக் கட்டணத்துக்கு வேலை செய்ய பேசிக் கொண்டோம். அந்த ஆண்டு முழுவதும் இந்த நிறுவனங்களுக்குப் பணி புரிந்து தோல், வேதிப் பொருட்கள், வாங்குதல், சரக்குக் கையாளுதல், உற்பத்தி விபரங்கள், போன்ற பகுதிகள் உருவாகி வந்தன. ராணிப்பேட்டை, பாண்டிச்சேரி, கூடுவாஞ்சேரி என்று நாலாபுறமும் போய் வர வேண்டும். அலுவலகத்திலேயே ஒரு சீன மொழி வகுப்பு, சென்னை அசோக் நகரில் ஒரு வகுப்பு என்று அந்தப் பக்கமும் வளர்ந்தது.

2004ம் ஆண்டு கோடையில் நண்பனுடன் இரு சக்கர வண்டியில் கடற்கரைச் சாலையில் தமிழகத்தின் தென் கோடியைத் தொட்டுத் திரும்பி வந்தோம். அந்த நண்பனிடம் பணம் வாங்கி கடனை வட்டியுடன் திருப்பி விட்டேன். நண்பன் பணம் வந்த போது வந்தால் போதும் என்று கொடுத்திருந்தான். அந்தப் பணத்தில் மீதியும் வைத்து வரும் சொற்ப வருமானத்தையும் வைத்து கொஞ்ச நாள் ஓடியது. வீட்டுச் செலவுகளில் குறையே ஏற்பட முடியாமல் இருந்தது. எதை எதையோ புரட்டி நிறுவனத்தையும் வீட்டுச் செலவுகளையும் சமாளிக்க முயன்று கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் ஒவ்வொருவராக அணியினரின் எண்ணிக்கையும் பெருகி விட்டிருந்தது. ஏழெட்டு பேராகி விட்டிருந்தோம். இரண்டு ஆண்டு அனுபவம் பெற்று விட்டிருந்தார்கள். வேறு வேலை பார்ப்பதாகச் சொன்னார். அந்த ஆண்டு தோல் கண்காட்சியில் பங்கு பெறுவதற்கு வழியே தெரியவில்லை.

அரும்பாக்கம் அலுவலகத்தை விட்டு மிகக் குறைந்த வாடகையில் போரூருக்கு அருகில் மதனந்தபுரம் என்ற கிராமத்தில் ஒரு கடையின் மாடியில் நகர்ந்தோம். 10000 ரூபாய் முன்பணம் கொடுப்பதற்குக் கூட அப்பா பணம் அனுப்பித்தான் நடந்தது. எல்லாமே இறுகிப் போய் செயல்பட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. வாணியம்பாடியில் ஒரு குழுவினருக்கு சீனமொழி கற்றுக் கொடுக்கப் போய்க் கொண்டிருந்தேன். சென்னையில் ஒரு காலணி நிறுவனத்துக்கு சீன மொழி மாற்றம் செய்து கொடுத்ததன் மூலம் அறிமுகம் ஏற்பட்டிருந்தது.

இடையில் ஐஎஸ்ஓ தணிக்கைக் குழுவினரில் துறை வல்லுனராக ஓரிரு நிறுவனங்களின் அறிமுகம் கிடைத்தது.

டிசம்பர் மாதத்தில் நண்பர் ஒருவரின் அறிமுகம் மூலம், ராணிப்பேட்டையின் பெரிய வேகமாக வளர்ந்து வரும் நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிறுவனத் தலைவரைப் பார்க்கப் போன போது, முன்பணமாகத் தாருங்கள் என்று கேட்டு விட, 5000ம்தான் கொடுப்பேன் என்று காசோலை ஒன்றைக் கொடுத்து விட்டார். திக்குமுக்காடிப் போன உணர்வு. எல்லாம் தொலைந்து போய் நம்பிக்கை அற்றுப் போயிருந்த நிலையில், மழையின்றி வாடி உலர்ந்து போன செடியின் மீது மழைத்துளி விழுந்தது போல இருந்தது அந்த 5000 ரூபாய் காசோலை.

2004 ஜனவரியில் காலணி நிறுவனத்திலும் பணியை ஆரம்பிக்கச் சொல்லி விட்டார்கள். சீன மொழிக் கற்றுக் கொடுத்த வாணியம்பாடி நிறுவனத்திலும் வேலை ஆரம்பித்து விட்டோம். வாடிக்கையாளர் பட்டியல் வளர்ந்து விட்டது.

பிஎஸ்ஜி - ஏழு ஆண்டுகள் (1)

இந்தக் குழந்தைக்கு வயது ஏழு ஆகி விட்டது. 2001ம் ஆண்டில் டிசம்பரில்தான் இந்தப் பணித்திட்டத்தில் தீவிரமாக இறங்கி நடைமுறைப்படுத்துவதை ஆரம்பித்தேன்.

இப்படி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் கருக் கொண்டது 2001ம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரியில் இருக்கலாம். பிஎல்சி நிறுவனத்தின் சார்பாக செய்து வந்த பணிகள் ஓய்ந்து கொண்டிருந்த சமயம். நிரல் உருவாக்கத்திலும், தமிழ் டாட் நெட் தொடர்ந்த எறும்புகள் குழுமத்திலும் ஆர்வமாக பணி செய்து கொண்டிருந்த சமயம்.

2001 டிசம்பரில் ஆரம்பிக்கும் போது, பெற்றெடுக்க உதவியாக இருந்தது கல்லூரி நண்பன். சீனாவிலிருந்து திரும்பி வந்து சென்னையில் இடம் பிடித்து வாழ்க்கையை அமைப்பதற்கு ஓரிரு மாதம் பிடித்தது. செயிண்ட் தாமசு மலைக்கருகில் இருந்த ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். அருகிலேயே இருந்த அவனுக்கு தொலைபேசி விபரம் சொன்னேன். இங்கே தங்கினால் நிறைய செலவாகும். இன்னொரு நண்பனின் வீட்டில் இப்போது இடம் இருக்கிறது, என்று அவன்தான் ஆலோசனை சொன்னான்.

அடையாறில் வீட்டில் இருந்து கொண்டே வாடகைக்கு வீடு தேடினேன். இந்து பத்திரிகையில் அகர வரிசையில் முதலில் வருவது அண்ணா நகர். வழக்கமான தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளை விட்டு விட்டு தேடினேன். அண்ணா நகரில் இரண்டு வீடுகள் அடையாளம் கண்டு கொண்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை பார்க்கக் கிளம்பினோம். முதல் வீடு புத்தம் புதிதாக வீட்டுக் காரர் ஆர்வமே இல்லாமல் காட்டினார். இரண்டாவது வீடு அமைந்து விட்டது.

நிறுவனம் தொடர்பாக நிரல் உருவாக்க வேண்டும். எறும்புகள் சந்திப்பு ஒன்றுக்குப் போனோம். அடையாறில் இருந்த ஒரு எறும்புகள் உறுப்பினரின் அலுவலகத்தில் நடந்தது. அங்கு ஒருவர். தோல் துறை தொடர்பான பயன்பாட்டை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார். அவருடன் சேர்ந்து செயல்படலாம் என்று முடிவு செய்தோம்.

வளசரவாக்கத்தில் இருக்கும் வீடு அல்லது போரூரில் இருக்கும் அலுவலகத்துக்கு வாங்க பேசலாம் என்றார். ஒரு நல்ல நாளில் என்னை அடையாறிலிருந்து இரு சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வளசரவாக்கம் நோக்கி அழைத்துச் சென்றான். கிளம்பும் போதே தாமதமாகி விட்டிருந்தது. எனக்கு நேரம் தவறி விடுமோ என்று எரிச்சல். நான்கு முறை தொலைபேசி தாமதமாக வருவதாகச் சொல்லி விட்டேன். 'அவர் வெளிநாட்டில் இருந்து வந்ததால்தான் இப்படி நேரம் பற்றிக் குறிப்பாக இருக்கிறார்' என்று அப்புறமாகச் சொன்னார்.

அவரது அலுவலகம் ஒரு வீட்டுக்குள் இருந்தது. புதியத் திட்டப் பணிக்காக ஒரு நிறுவனம் உருவாக்கி அதில் 50க்கு 50 என்று பொறுப்பும் உரிமையும் பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டால், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்.

அவர்கள் நிரல் எழுதிக் கொடுத்து விட வேண்டும். நாங்கள் விற்றுப் பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். எப்படி இருக்க வேண்டும் என்று என்னுடைய எண்ணங்களை விளக்கினேன். அங்கு நிரல் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடமும் விளக்கச் சொன்னார். முதலில் பயனர் மேலாண்மை பகுதியைச் செய்து விடலாம் என்று உடனேயே உறுதி அளித்தார்கள். வளசரவாக்கத்தில் இருந்த ஒரு விடுதியில் மதிய உணவும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.

திட்டப்படி, தோல் செய்யும் நிறுவனங்களுக்கு தோல் தேவையை அனுப்பும் வாடிக்கையாளர்கள் தமது தேவைகளை இணையத்தில் இணைந்து நமது பயன்பாடு மூலம் உள்ளிடுவார்கள். தோல் நிறுவனம் உள்நுழையும் போது புதிதாக வந்திருக்கும் தேவை விபரங்களைத் தெரிந்து கொள்வார்கள். அந்தத் தேவைகளை உற்பத்திக்கு எடுத்து, தயாரான பிறகு வாடிக்கையாளருக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த விபரங்களையும் இதே பயன்பாட்டில் போட்டு வைப்பார்கள். வாடிக்கையாளர்கள் எந்த நேரமும் எத்தனை தேவைகள் அனுப்பியிருக்கிறோம், எவ்வளவு உற்பத்தியில் இருக்கிறது, எந்தத் தேவைக்கு எவ்வளவு தோல் அனுப்பியிருக்கிறார்கள், எவ்வளவு மீதி இருக்கிறது போன்ற விபரங்களை இணையம் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு தோல் நிறுவனத்துக்கு 10 வாடிக்கையாளர்கள் இருந்தால், தோல் நிறுவனம் எல்லா வாடிக்கையாளர்களின் தேவை விபரங்களையும் பயன்பாட்டில் உள்ளிடும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது தேவை விபரங்களை மட்டும் பார்த்துக் கொள்ள முடியும். பயனரைப் பொறுத்து விபரங்களை மட்டுப் படுத்த வேண்டும்.

ஒரு தோல் நிறுவனத்துக்கு இதை விற்று விட்டால், அவர்கள் தமது வாடிக்கையாளர்களுக்குப் பயன்படுத்தக் கொடுப்பார்கள். அவர் இந்தப் பயன்பாட்டில் மனம் மகிழ்ந்து தான் தோல் வாங்கும் மற்ற நிறுவனங்களையும் இதே போல லெதர்லிங்க் பயன்பாட்டின் மூலமாக தனது தேவை விபரங்களை தெரிந்து கொள்ள வழி செய்யுமாறு வற்புறுத்துவார். அப்படி அவரது மற்ற விற்பனையாளர்களும் லெதர்லிங்கிலிருந்து பயன்பாட்டுக்கு பதிவு செய்து, வாடிக்கையாளருக்கு விபரங்கள் பார்க்க வழி செய்வார்கள்.

ஒரு வாடிக்கையாளருக்கு பல விற்பனையாளர்கள் லெதர்லிங்க் பயன்பாடு மூலம் தேவை விபரங்களை தெரிந்து கொள்ள வசதி கிடைத்திருந்தால், எல்லா விற்பனையாளர்களின் விபரங்களும் ஒரே இடைமுகத்தின் மூலம் வாடிக்கையாளருக்குத் தெரியும் படி வசதி செய்து கொடுத்து விட வேண்டும். லெதர்லிங்குக்கான பணம் விற்பனையாளர்களிடமிருந்து கிடைக்கும். வாங்குபவர்கள் கட்டணமின்றி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மிக உறுதியான திட்டம். பயன்பாட்டுக்குப் பணம் கொடுப்பவர்கள் நல்ல வாடிக்கையாளர் சேவை அளித்து தமது தொழிலை பெருக்கிக் கொள்ளலாம். அந்தச் சேவையால் மனம் மகிழ்ந்த வாடிக்கையாளர்கள் தாமே முன் வந்து மற்றவர்களுக்கு நமது பயன்பாட்டை பரிந்துரை செய்வார்கள்.

அப்படிப் பரிந்துரை செய்வதற்கான வசதிகளையும் கொடுக்க வேண்டும்.

இவ்வளவு விபரங்களையும் உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏதோ ஆட்கள் கிடைத்து விட்டார்கள், வேலையை ஆரம்பித்து விடலாம் என்றுதான் அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விட்டு நகருக்குள் சுற்றி வர ஒரு வண்டியும் வாங்கிக் கொள்ள வேண்டும். அண்ணா நகரின் 9வது பிராதானச் சாலையில் முதல் மாடியில் இருந்த வீட்டுக்கு முன்பணம் கொடுத்து குடிபுகுந்து விட்டேன். மூன்று அறைகள், ஒரு பெரிய முன்னறை, சமையலறை. ஒரு தளத்துக்கு நான்கு வீடுகள் வீதம், நான்கு தளங்கள் இருந்தன. அண்டை அயலாருடன் பழகும் இயல்பு எனக்கு கிடையாது.

அண்ணா நகரின் டிவிஎஸ் விற்பனை நிலையத்துக்குப் போய் வண்டிகளைப் பார்த்தோம். அங்கிருந்த விற்பனையாளர் சரியாகப் பேசிக் கவனிக்கவில்லை. விலையை காசோலையாகக் கொடுத்தால், காசோலை பணமாக மாறிய பிறகுதான் வண்டியை எடுத்துப் போக முடியும் என்று சொன்னதும் எனக்குக் கோபம் வந்து வெளியில் வந்து விட்டேன்.

நண்பர்கள் ஓட்டிக் கொண்டிருந்த சுசுகி சமுராய் வண்டியை வாங்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். 2001ம் ஆண்டில் அந்த தயாரிப்பையே ஓய்த்துக் கொண்டிருந்தார்கள். புதிதாக நான்கு சுழற்சி முறையிலான டிவிஎஃச் விக்டர் அறிமுகப்படுத்த இருந்தார்கள். கடைசியில் நங்கநல்லூரில் இருந்த புளூ பைக் நிறுவனத்தில் வண்டியை வாங்க பதிவு செய்து கொண்டோம். அவர்கள் வண்டி உரிமத்துக்கு ஏற்பாடு செய்ய 2 நாட்கள் பிடிக்க, 2 நாட்களுக்குப் பிறகுதான் வண்டியை எடுத்துக் கொண்டேன். அவர்களும் உடனடியாக வண்டியைக் கொடுத்து விடவில்லைதான்.

வண்டி வாங்கியாச்சு, ஓட்டப் படிக்க வேண்டும், ஓட்டுனர் உரிமம் வாங்க வேண்டும். கற்றுக் கொடுத்தலில் ஒரே நாளில் வண்டியை ஓட்ட ஆரம்பித்து விட்டேன். வேக மாற்றிகளைக் கையாளுதல் போன்ற புதிய விபரங்களில் தேர்ச்சி பெற வேண்டும். உரிமம் பெறுவதற்காக ஆலந்தூரில் இருந்த போக்குவரத்து அலுவலகத்தில் பழகுனர் உரிமம் வாங்கிக் கொண்டேன்.

அதை வைத்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் குழுவினர் எழுதும் நிரல், மென்பொருள் நிறைவளிக்கவில்லை. அவர்களுக்கு பரிநிரல் பயன்பாடுகளைப் பயன்படுத்த விருப்பமில்லை. மைஎசுகியூஎல் வேண்டாம் என்று காரணங்களை அடுக்கினார்கள். போசுடுஎசுகியூஎல் பயன்படுத்தலாம் என்றால் அவர்களுக்கு அதில் தேர்ச்சியில்லை. போகும் போது ஏற்கனவே செய்து வைத்த சில இடைமுகங்களைக் காட்டினார்கள். நமது பயன்பாட்டுக்குத் தொடர்பில்லாமல் பொதுவாக பயனர் மேலாண்மை என்று இருந்தது. இடையில் வீட்டுக்குக் கூட்டிப் போய் மதிய உணவெல்லாம் கொடுத்தார்.

வெளி நாட்டிலிருந்து இந்தியா திரும்பி ஒரு ஆண்டு முடியும் காலமாகியிருந்தது. அவன் வேலை ஒன்றில் சேர முடிவு செய்து, மைலாப்பூரில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து விட்டான். நான் தனியாகத்தான் வளர்க்க வேண்டும்.

தமிழ்க் குழுக்களின் மூலம் அறிமுகமாயிருந்த பேராசிரியர் தனது உறவினரின் மென்பொருள் நிறுவனம் வேளச்சேரியில் இருப்பதாகவும், அவர்கள் பரிநிரல் பயன்படுத்தி மென்பொருள் செய்வதாகவும் சொன்னார். அவரிடம் தொடர்பு எண்களை வாங்கிக் கொண்டு அவர்களிடம் பேசினேன். விபரங்களைக் கேட்டு விட்டு 17000 ரூபாய்கள் கொடுத்தால் முடித்துக் கொடுத்து விடுவதாகச் சொன்னார்கள்.

வேளச்சேரியில் சுடாலினின் வீட்டுக்கு அருகிலேயே புரொபசனல் அல்காரிதம்சு என்று நடத்திக் கொண்டிருந்தார்கள். போசுடுகிரசுஎசுகியூஎல், பிஎச்பி என்று பேசினார்கள். தலைமையில் வேலை நடக்கும் என்றார்கள். எனக்கு என்ன தேவை என்பதை எழுதிக் கொடுத்து விடுமாறு கேட்டார்கள்.

நான் எச்டிஎம்எல்லில் எந்த மாதிரி இடைமுகங்கள், அறிக்கைகள் வர வேண்டும் என்று செய்து அதற்குள் நான் வாடகைக்கு எடுத்திருந்த இணையத் தளத்தில் போட்டு வைத்தேன். லெதர்லிங்க் டாட் நெட் என்ற முகவரியை பதிவு செய்து கொடுத்திருந்தார். போகசு இந்தியா என்ற நிறுவனத்தில் ஆண்டுக்கு 5000 ரூபாய் செலவில் இணைய வழங்கியில் இடம் வாங்கியிருந்தேன். அவர்கள் அதில் போசுடுகிரெசுஎசுகியூஎல்லும் போட்டுக் கொடுத்திருந்தார்கள்.

அந்தத் தளத்தில் போய் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்துக் கொள்ள வேண்டியது. முதல் தவணை பணத்தைக் கொடுத்து விட்டேன். மளமளவென்று நிரல் எழுத ஆரம்பித்து விட்டார்கள். பிப்ரவரி முதல் வாரம் தோல் கண்காட்சிக்கு முன்பு முடிக்க வேண்டும் என்று பேசியிருந்தோம். ஒரு மாதத்தில் முடித்து விடுகிறோம் என்று சொல்லியிருந்தார்கள்.

ஒரு மாதத்தில் எதுவுமே முடிந்திருக்கவில்லை, முடித்திருக்கவும் முடியாது. ஏதோ சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டார்கள். ஆனால் கொடுத்த பணத்துக்கு முழு பயன்பாட்டுக்கான அடிப்படை நிரல்கள் கிடைத்து விட்டன. கொஞ்சம் சண்டை போட்டு விட்டு நிரலை எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

குழந்தை கண்களை இறுக மூடிக் கொண்டு குட்டியாக கையில் இருந்தது. வீட்டில் ஒரு அறையில் இரண்டு கணினிகள், ஒரு மடிக்கணினி என்று போட்டு வைத்திருந்தேன். வேலையைத் தொடர சித்தப்பா பையன் தம்பி நண்பனின் தம்பி சேர்த்துக் கொண்டேன். இரண்டு பேரும் கணினிவியலில் பட்டம் பெற்று வேலை இல்லாமல் இருந்தார்கள். அவரவர் வீட்டில் இருந்து வேலை செய்து கொள்ளலாம்.

இதற்குள் சமாதானக் கொடி காட்டி அவளையும் குழந்தைகளையும் வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டிருந்தேன். தோல் கண்காட்சியில் அறிமுகத்தின் மூலம் ஒரு தோல் நிறுவன உரிமையாளரைச் சந்தித்து நமது பயன்பாட்டைப் பற்றி விளக்கியிருந்தேன். குரோம்பேட்டை நாகல்கேணியில் இருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்து அது வரை செய்து வைத்திருந்த பயன்பாட்டைப் பற்றிச் சொன்னேன். அவர் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம், பயன்படுத்திப் பார்த்தால் போதும் என்று பேசிக் கொண்டேன்.

அவருக்கு எனது சீனத் தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணம் இருந்திருக்கும். சீனாவில் தோல்களை விற்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். எனக்குத் தெரிந்த தொழிற்சாலைகளைத் தொடர்பு கொள்ளச் சொல்லலாம் என்று விபரங்களைக் கொடுத்தேன். எனக்கு அதில் ஆர்வமில்லை. பிற்காலத்தில் வளர்த்தபடி செய்யும் திட்டம் எட்டிப் பார்க்கவே இல்லை. தோல் விற்பதில் எனது திறமை பொருந்தாது என்று ஏற்கனவே சலித்திருந்தது.

ஆரம்ப கால வாடிக்கையாளர்கள் எல்லோருமே சீனத் தொடர்பின் அடிப்படையில்தான் கிடைத்தார்கள்.

தொழில்நுட்ப முகப்பில் இணையத்தில் தீவிரமாக படிப்பதிலும் கற்றுக் கொள்வதிலும் ஈடுபட்டிருந்தேன். ஸ்லாஷ்டாட், போசுடுகிரெசுகியூஎல், பிஎச்பி என்று ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் படித்துக் கொண்டிருப்பேன். பயன்பாட்டில் செய்ய வேண்டிய மாறுதல்கள், புரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் ஒவ்வொன்றையும் நானே புரிந்து கொள்ள முயற்சி செய்து வெற்றியும் கண்டு கொண்டிருந்தேன். பயன்பாட்டில் இருந்த தரவுத்தள வடிவமைப்பு, நிரல் அமைப்பு அனைத்தையும் முழுமையாகப் புரிந்து கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் ராணிப்பேட்டையில் போய் பேசி விட்டு வந்திருந்தேன். அவர்களுக்கு தகவல் மேலாண்மைக்கு உதவி செய்யலாம் என்று திட்டம். ராணிப்பேட்டையில் இணைய இணைப்பு சொதப்பலாக இருந்தது. இணையத்தில் அவர்களால் எதையும் செய்ய முடியாது. பாண்டிச்சேரியில் நிறுவனம் நடத்தி வரும் நண்பனிடமும் தொடர்பு கொண்டிருந்தேன். வேலை பார்க்கும் கல்லூரித் தோழியின் மூலம் அவர்களையும் சந்தித்துக் கொண்டிருந்தேன்.

வேலை தேட ஆரம்பித்திருந்தாள். நிறுவனத்துக்குப் போய் உரிமையாளரைச் சந்தித்த போது என்னைப் பற்றிச் சொல்ல என்னுடைய பயன்பாட்டைப் பார்க்க அழைத்திருந்தார். அங்கும் விற்பனைக்கான சாத்தியங்கள் தெரிந்தன.

நிரல் உருவாக்கத் தரப்பில் மனம் சலித்து வேறு வழி பார்த்து போயிருந்தார்கள். தொடர்பு கொண்டு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்க அவரது கல்லூரியில் மாணவர்களான இரண்டு பேரை அனுப்பி வைப்பதாகச் சொன்னார். அப்படி வந்து சேர்ந்தார்கள் இரண்டு பேர். 5000 ரூபாய் சம்பளம் தருகிறேன் என்று சொன்னதும், இரண்டு பேரும் சேர்கிறோம் ஆளுக்கு 2500 கொடுத்து விடுங்கள் என்று சேர்ந்து கொண்டார்கள்.

வீட்டில் அந்த அறையிலேயே சுவற்றில் பொருத்தும்படியாக ஒரு மேசை உருவாக்கி அவர்களும் உட்கார்ந்து பணி புரியும்படியான சூழலை உருவாக்கிக் கொண்டேன். வீட்டில் சூழலோ மோசமாகவே இருந்து வந்தது. உரசல்கள், வழக்கம் போல வெடிப்புகளாக அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. ஓரிரு முறை பணி புரிய வந்தவர்களும் அதைப் பார்க்க நேரிட்டது.

டாடா நிறுவனத்தில் ஓட்டுனராக இருந்தவர் தனது உறவினர் என்று ஒருவரை அனுப்பி வைத்தார். அவர் எப்படிக் கற்றுக் கொள்கிறார் என்று பார்த்து விட்டு முடிவு செய்தவாகச் சொல்லியிருந்தேன். அவரை சும்மாவே அனுப்பி வைத்து விட்டேன்.

நிரல் உருவாக்கத்தை முழுப் பொறுப்புடன் எடுத்துக் கொண்டார்கள். இரண்டு இடத்துக்கும் போய் அவர்களைப் பயன்படுத்த வைத்தோம். நமது பயன்பாட்டில் வாடிக்கையாளர் தேவைகளை உள்ளிடவும் ஆரம்பித்தார்கள். கொஞ்சம் காசு கூட வாங்கிக் கொண்டோம்.

கையில் இருந்த சேமிப்புகள் வேகமாகக் கரைந்து கொண்டிருந்தன. வீட்டு வாடகை, வீட்டுக்குப் பொருட்கள் வாங்குவது - சோபா, தரை விரிப்புக் கம்பளம், துணி துவைக்கும் எந்திரம், தொலைக்காட்சி, குளிர்பதன கருவி என்று எதையும் விட்டு வைக்காமல் வாங்கி முடித்தோம். வெளியில் சுற்றுவது, சாப்பிடுவது என்றும் குறையில்லை. இதோ ஓரிரு மாதங்களில் நிறுவனத்திலிருந்து பணமாகக் கொட்டப் போகிறது. அதனால் எந்தக் கவலையும் இல்லை.

வாடிக்கையாளர்களுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் அளவுக்கு பலன் கிடைக்கவில்லை. இணைய இணைப்பு சரியில்லாமல் பயன்படுத்துவது சரியில்லாமல் எதுவும் வெளிப்பாடு வரவில்லை. ஆனால் நடைமுறைத் தகவல்களை உள்ளிட முயற்சிக்கும் போது பயன்பாட்டில் பல மேம்பாடுகள் செய்ய வேண்டியது தெரிந்து செய்து முடித்தோம்.

தொழில் நுட்பப் புத்தகங்களையும் வாங்கிக் குவித்தேன். வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சேவை அளிக்க வேண்டுமானால் சொந்தமாக வழங்கி இருக்க வேண்டும் என்று நெட்பார் இந்தியாவில் நமது வழங்கியை வைத்துக் கொள்ள ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன். மாதா மாதம் அதற்கு 7000 ரூபாய் செலவாகி வந்தது.

அந்த 7000, வீட்டு வாடகையில் நிறுவனத்தின் பங்காக 3000, சம்பளம் 5000 என்று 15000 ரூபாய்கள் செலவாகி வந்தது. இது போக தொலைபேசிக் கட்டணம், பயணச் செலவுகள் என்று மாதம் 20000 தாண்டியது. வீட்டுச் செலவுகளாக வாடகையில் பங்கு 4000, சாப்பாட்டுச் செலவுகள் 5000, வெளியில் போய் வரும் செலவுகள், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் என்று 20000 தொட்டுக் கொண்டிருந்தது. மொத்தச் சேமிப்பு சில லட்சங்கள்தான் இருந்தது. டிசம்பர் வரும் போது எல்லாமே வறண்டு போயிருந்தது.

Friday, October 31, 2008

பொருளாதாரச் சரிவு - யாருக்கு என்ன பாதிப்பு?

அமெரிக்காவின் கண்மூடித்தனமான ஆட்டத்தின் விளைவுகளை முழு உலகமும் தாங்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது. இதில் யாருக்கு எந்த வகையில் பாதிப்புகள் ஏற்படும்?

1. எவ்வளவுதான் பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்தாலும், மக்கள் சாப்பிடத்தான் வேண்டும், உடுத்தத்தான் வேண்டும்.

உணவுப் பொருட்கள் மற்றும் ஆடை/அணிகலன்கள் துறையினருக்கு மற்ற சேவைத் துறைகளுடன் ஒப்பிடும் போது நல்ல தொழில் நடக்கும். விவசாயிகள், விவசாய இடுபொருட்கள் விற்பவர்கள், துணி உற்பத்தியாளர்கள், உடை தயாரிப்பவர்கள் கடந்த 10 ஆண்டுகள் பட்ட பாட்டுக்கு பரிகாரமாக நல்ல நிலைக்கு வருவார்கள்.

இந்தத் தொழிலில் இருக்கும் நிறுவனங்களுக்கும் வங்கித் துறையில் ஏற்படும் சரிவால் தொழில் செய்ய கடன் தொகை கிடைக்காமல் போனால் மட்டும் சிக்கல் உண்டாகி விடும்.

2. மதிப்புக் கூடுதல் சேவையாக, உயர்தர உணவு விடுதிகள், விலை உயர்ந்த அணிகலன்கள் கொஞ்சம் இழுத்துப் பிடிக்க ஆரம்பிக்கும்.

3. தகவல் தொழில் நுட்பத் துறையில், திறமை வாய்ந்த ஊழியர்களை கொண்டிருக்கும் பெரிய நிறுவனங்கள் (இன்போசிசு, டாடா, விப்ரோ) தமது தொழில் முறை, சந்தை அணுகல் உத்திகளை வெற்றிகரமாக மாற்றி அமைத்து ஏற்பட்டுள்ள நலிவை தாண்டி வர வாய்ப்புகள் அதிகம். ஆதாய வீதம், வளர்ச்சி வீதம் குறுகிய கால நோக்கில் வெகுவாக மட்டுப்பட்டு விடும்.

4. பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட்டு அவர்களை விடக் குறைந்த விலை என்ற ஆதாயத்தின் மூலம் மட்டும் அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் அவர்கள் செய்யும் அதே மாதிரியான பணிகளை பெற்று நடந்து வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். தமக்கென்று தனிச் சிறப்பாக சேவை அல்லது பொருளை உருவாக்கிக் கொண்டால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும்.

5. கோடிக்கணக்கான ரூபாய்கள் முதலீட்டில் பளபளக்கும் அடுக்குமாடி கடைகள், உயர்தர தங்கும் விடுதிகள், துணிச்சலான புதிய முயற்சிகளுக்கு முதலீடு கிடைக்காமல் போய் விடும். கட்டிடத் துறையைச் சார்ந்து பங்குச் சந்தையில் தமது பங்குகளை வெளியிட்டுள்ள நிறுவனங்களுக்கு பெருத்த சரிவு ஏற்படும்.

மற்ற நிறுவனங்களைப் போல விலை உயர்வது வரை சும்மா இருப்போம் என்று இருந்து விடவும் முடியாது. ஒவ்வொரு காலாண்டும் வளர்ச்சியைக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும்.

6. ஏற்றுமதித் துறை நிறுவனங்களுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் நிதி நிலைமை மோசமானால் வணிகம் நலிவடைவதை மட்டும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிப்படையில் உறுதியான உற்பத்தி திறன், உயர்ந்த தர நிர்ணயம் இருக்கும் நிறுவனங்கள் இந்த சிரமமான காலத்துக்குப் பிறகு இன்னும் சிறப்படைய முடியும். கொஞ்சம் நோஞ்சான்களான நிறுவனங்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

Tuesday, October 28, 2008

யாருக்கும் வருந்த வேண்டியதில்லை!

ஒரு சின்ன புள்ளி விபரக் கணக்கு - மும்பைப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் மாற்றங்கள்:
ஆதாரம்


1. 5000ஐத் தாண்டியது - ஜனவரி 2000
2. 3000 ஆக இறங்கியது - ஆகத்து 2002
3. மீண்டும் 5000 - டிசம்பர் 2003 (16 மாதங்களில்)
4. 10000ஐத் தாண்டியது - மார்ச்சு 2006 (27 மாதங்களில்)
5. 20000ஐத் தொட்டது - நவம்பர் 2007 (20 மாதங்களில்)

டிசம்பர் 2003லிருந்து 4 ஆண்டுகளில் குறியீட்டு எண் நான்கு மடங்காகியிருக்கிறது. ஆகத்து 2002லிருந்து ஐந்து ஆண்டுகளில் 7 மடங்காகியிருக்கிறது.

அந்த காலகட்டத்தில் "அப்படி என்ன சிறப்பாக நடந்து விட்டது" என்று கேட்டால், 'இந்திய வளர்ச்சி கதை', 'அடிப்படை வலிமை' என்று மாற்றி மாற்றி ஜல்லி அடித்துக் கொண்டிருந்தார்கள். பங்குகளின் விலை ஏற்றத்தின் காரணமாக இன்னும் பலர் வாங்குவதில் இறங்க விலை இன்னும் ஏறியது.

அடிப்படை 'நிறுவனம் ஆண்டுக்காண்டு சாதிக்கும் விற்பனையும் அதன் மூலம் ஈட்டும் உபரித் தொகையும்தான்' அதிலிருந்து வரும் பகிர்வுத் தொகையின் அடிப்படையில்தான் பங்கு விலை இருக்க முடியும். ஒரு சில வார நோக்கில் கூடுதல் குறைவு ஏற்பட்டாலும், ஓரிரு ஆண்டுகள் நோக்கில் அதுதான் ஒரே அடிப்படை. அதைத் தவிர்த்த மற்ற எல்லாம் சூடான காற்றுதான்.

பங்குச் சந்தையில் வாங்கி விற்கப்படும் பங்குகளின் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஆண்டு விற்பனையையும், ஆதாயத்தையும் இரட்டிப்பாக்கினவா? என்று கேட்டிருந்தால் கடைசி இருபது மாதங்களில் 10000 புள்ளிகள் உயர்ந்தது நடந்திருக்காது.

இது 2008ன் கதை மட்டுமல்ல. பங்குச் சந்தை ஆரம்பித்த நாட்களிலிருந்தே 19ம் நூற்றாண்டிலிருந்தே இந்த ஏற்றமும் இறக்கமும் வளமையாகத்தான் இருக்கின்றன.

2008ல் இப்போது நடப்பது நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் உருகி ஓடுதல். இறுக்கமாக பாதுகாப்புப் பட்டியை அணிந்து கொண்டு உழைத்து மட்டும் வரும் பணத்தில் வாழ தயாராகிக் கொள்ள வேண்டியதுதான்.

Tuesday, September 23, 2008

செலாவணி பரிமாற்ற தெரிவு ஒப்பந்தம்

பணம் வருவது உறுதியாக இருந்தால் முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். பணம் வருவது உறுதியில்லாமல் இருந்தால் என்ன செயவது?

ஒரு ஏற்றுமதியாளர் 3 மாதங்களுக்குள் முந்திரிப்பருப்பு ஏற்றுமதி செய்து அதற்கான பணத்தை (10000 டாலர்) டாலர்களில் பெறுவதாக எதிர்பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஏற்றுமதிக்கான உடன்பாடு இவருக்குக் கிடைப்பது 2 மாதம் கழித்துதான் உறுதியாகும். இன்றைக்கு உடன்பாட்டுக்கான விலையை அனுப்பி வைக்க வேண்டும்.

உள்ளூர் சந்தையில் முந்திரிப் பருப்பை ரூபாய்க்கு வாங்கி டாலருக்கு விற்க வேண்டும். இன்று 1 டாலர் = 46 ரூபாய்கள் செலாவணி வீதம் என்ற கணக்கில் விலை நிர்ணயிக்கிறார். இந்த ஆர்டர் கிடைத்து ஏற்றுமதி செய்து விட்டால் வருமானம் வரும், டாலரை 46 ரூபாய் வீதத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு வேளை ஆர்டர் கிடைக்கா விட்டால், மாற்றுவதற்கு டாலர் இருக்காது.

இந்த நிலையில் Forward ஒப்பந்தம் என்ற முன்பேர ஒப்பந்தம் சரிப்படாது. ஆர்டர் கிடைக்காமல் போய், டாலரின் மதிப்பு ஏறி விட்டால், (1 டாலர் = 50 ரூபாய்) இவர் ஒப்பந்தப்படி 10000 டாலர்களை 1 டாலர் = 46 ரூபாய் என்ற வீதத்தில் விற்றே தீர வேண்டும். அதற்கு சந்தையில் 50 ரூபாய் வீதத்தில் டாலர் வாங்கி 46 ரூபாய்க்கு விற்க வேண்டியிருக்கும்.

Options எனப்படும் தெரிவு ஒப்பந்தத்தில் விருப்பப்பட்டால் விற்கலாம் என்ற தெரிவு இருக்கும். 90 நாட்களுக்குப் பிறகு 1 டாலர் = 46 ரூபாய்கள் என்ற வீதத்தில் 10000 டாலர்களை விற்கும் தெரிவு, ஒப்பந்ததாரருக்குக் கிடைக்கிறது. அவர் விரும்பா விட்டால் விற்காமல் இருந்து விடலாம்.

இந்த தெரிவு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கான கட்டணங்கள் முன்பேர ஒப்பந்தங்களை விட அதிகமாக இருக்கும்.

Monday, September 22, 2008

முன்பேர ஒப்பந்தம்

forward trading என்பதை முன்பேர வணிகம் என்று வளர் தொழில் பத்திரிகையில் கையாளுகிறார்கள். எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம் என்பதை விட முன்பேர ஒப்பந்தம் கைக்கடக்கமாக இருக்கிறது!

இது போன்று முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்வதால் என்ன நடக்கும். ஒரு நடைமுறை உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

மாதா மாதம் 10000 டாலர்கள் வருமானம் பெறும் ஒருவர் மாதம் 5000 டாலர்களை 1 டாலர் = 46 ரூபாய்கள் என்ற வீதத்தில் விற்பதாக முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

1. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர்=46 ரூபாய்
ஒப்பந்தத்துக்கான கட்டணத் தொகை வீணாக வங்கிக்குக் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தமே இல்லாமல் இருந்தாலும் சந்தையில் டாலரை விற்று 46 ரூபாய் பெற்றிருக்கலாம்.

2. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர் = 48 ரூபாய்
ஒப்பந்தம் செய்து கொண்டதால் 46 ரூபாய்க்கே டாலர்களை விற்றுத் தொலைக்க வேண்டிய கட்டாயம். ஒப்பந்தம் செய்யாமல் இருந்திருந்தால் 5000 டாலர்களுக்கு, 10000 ரூபாய்கள் கூடுதலாக கிடைத்திருக்கும்.

3. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர் = 40 ரூபாய்
ஒப்பந்தம் செய்து கொண்டதால் 46 ரூபாய் கிடைத்து விடும். ஒப்பந்தம் இல்லாமல் இருந்திருந்தால் 5000 டாலர்களுக்கு 30000 ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருக்கும்.

முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு
அ. டாலர் வருமானம் வருவது உறுதியாக இருக்க வேண்டும். வருமானத்தின் அளவோ நேரமோ உறுதியின்றி இருந்தால், முன்பேர ஒப்பந்தம் ஒத்து வராது.
ஆ. நாம் எதிர்பாராத திசையில் செலாவணி வீதம் போனால், அதை நினைத்துக் குழப்பிக் கொள்ளாத மனநிலை வேண்டும்.

Friday, September 19, 2008

எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம்

போன வாரம் ஒரு நாள். வெளி நாட்டில் வேலை பார்க்கும், தற்போது விடுமுறையில் வந்திருக்கும் உறவினர் ஒருவர் காலையில் எகனாமிக் டைம்ஸ் நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தார்.

"என்ன! டாலர் 46 ரூபாய் ஆகி விட்டதா." உடனேயே அருகிலிருந்த அவரது மனைவியிடம், "கையிலிருக்கும் டாலரை எல்லாம் இன்னைக்கே ரூபாயா மாத்திரலாம்" என்றார்.

ஒரு டாலருக்கு 43, 44 என்று கபடி ஆடிக் கொண்டிருந்த நாணய மாற்று வீதம் ஒரு வாரத்துக்குள் 5%க்கு மேல் மாறி ஒரு டாலருக்கு 46 ரூபாய், அடுத்த நாளே 46.90 ரூபாய் என்று கூட ஆகி விட்டிருந்தது.

இந்த வரைபடத்தைப் பார்த்தால் டாலர் ரூபாய் வீதத்தின் ஊசலாட்டம் புரியும்.
http://ichart.finance.yahoo.com/1y?usdinr=x

மேலே சொன்ன உரையாடலின் பின்னணி என்ன?

'திடீரென்று டாலரின் மதிப்பு ஏறியிருக்கிறது. இதே நிலையில் இன்னும் பல நாட்கள் தாக்குப் பிடிக்காது. மீண்டும் அதன் மதிப்பு இறங்குவதற்கு முன்னே நம்ம கையில் இருப்பதை ரூபாயாக மாற்றிக் கொள்ளலாம்'. அதாவது வரும் நாட்களில் டாலரின் மதிப்பு குறையும் என்று இவர் நம்புகிறார்.

பொதுவாக, டாலரில் சம்பளம் வாங்குபவர்கள், டாலருக்கு பொருள் ஏற்றுமதி செய்பவர்கள் - வருங்காலத்தில் டாலரில் வருமானம் கிடைக்க இருப்பவர்கள் - இந்தக் கோணத்தில் நினைக்கத் தலைப்படுவார்கள். 'இனி மேல் ஏறா விட்டாலும் பரவாயில்லை. இப்போ இருக்கிற மதிப்பில் இருந்தாலே நமக்கு லாபம்தான்'

இதே செய்தியைப் படிக்கும் இன்னொருவர் வேறு மாதிரி நினைக்கலாம். 'என்னடா, ஒரு டாலருக்கு 46 ரூபாய் ஆகி விட்டது. இப்படியே போனால், இன்னும் ஓரிரு மாதங்களில் ஒரு டாலருக்கு 50 ரூபாய் என்று ஆகி விடலாம்.' அதாவது வரும் நாட்களில் டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏறும் என்று அவர் நம்புகிறார்.

டாலரில் பணம் கொடுக்க வேண்டியிருப்பவர்கள் - இறக்குமதி செய்பவர்கள், வெளி நாட்டிலிருந்து கடன் வாங்கியிருப்பவர்கள் - இப்படி கவலைப்படுவார்கள். வரும் நாட்களில் டாலரின் மதிப்பு இன்னும் ஏறி விட்டால் நமக்கு செலவு அதிகமாகி இழப்பு ஏற்படும். இதே மதிப்பில் நமக்கு டாலர் கிடைத்தால் போதும் என்று நினைப்பார்கள்.

இப்படி டாலர் எதிர்கால வரவு இருப்பவர்கள் ஒரு புறமும் தேவை இருப்பவர்கள் மறுபுறமும் இருப்பவர்களை இணைப்பது எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம்.

ஏற்றமதி செய்பவரைப் பொறுத்தவரை

'1 டாலருக்கு 44 ரூபாய் கணக்கில் விலை நிர்ணயித்து 10,000 டாலர் மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்கிறேன். வாடிக்கையாளரிடமிருந்து டாலர் எனக்கு வந்து சேர 1 மாதம் பிடிக்கலாம்.

அப்போது 1 டாலருக்கு 46 ரூபாய் வீதத்தில் மாற்ற முடிந்தால் 4,60,000 ரூபாய்கள் கிடைக்கும். ஒரு வேளை விலை சரிந்து 42க்கோ, 40க்கோ போனால் பேரிழப்பு (4,.4 லட்சம் ரூபாய் வர வேண்டும் என்ற கணக்கு தவறிப் போய் 4.2 லட்சம் அல்லது 4 லட்சம்தான் கையில் கிடைக்கும்).

பேசாமல், ஒரு மாதம் கழித்து 46 ரூபாய்க்கு 1 டாலர் என்று விற்பதாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்.'

யாரிடம் இவர் ஒப்பந்தம் போடுவார்?

இறக்குமதி செய்பவர்
'10,000 டாலர் மதிப்பிலான பொருளை வாங்க ஆர்டர் கொடுத்திருக்கிறேன். ஒரு மாதம் கழித்து பணம் கொடுக்கும் நேரம் வரும் போது டாலரிம் மதிப்பு 50 ரூபாய் என்று ஆகி விட்டால் 5 லட்சம் கொடுக்க வேண்டி வரும். இதே 46 ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் 4.6 லட்ச ரூபாய்களில் வேலை முடிந்து விடும்.'

இப்படி இரண்டு பேரும் 46 ரூபாய்க்கு ஒரு மாதம் கழித்து டாலர்களை பரிமாறிக் கொள்வதாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். ஆங்கிலத்தில் Forward Contract எனப்படும் எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படை இதுதான்.

நடைமுறையில் ஏற்றுமதியாளரும் இறக்குமதியாளரும் நேரடியாக ஒப்பந்தம் போடுவதில்லை. இடைத் தரகர்களாக வங்கிகள் இருப்பார்கள்.