Wednesday, October 17, 2007

நிரல் பராமரிப்பு - 5

தொகுப்புக்குள், ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒரு அடைவு. மொத்தம் 5 திட்டங்கள். ஒவ்வொரு திட்டத்துக்குள்ளும் மூன்று அடைவுகள். dev, test, pro.

தொகுப்பு
- திட்டம் 1
உருவாக்கம்
சோதனை
பயன்
- திட்டம் 2
உருவாக்கம்
சோதனை
பயன்
- திட்டம் 3
உருவாக்கம்
சோதனை
பயன்

என்ற விரிவு.
  • உருவாக்கம் என்பது புதிய கூறுகளை உருவாக்குதல், பெரிய மாற்றங்களை செய்தல் போன்ற வேலைகளுக்குப் பயன்படும்.
  • சோதனையும், பயனும் ஒரே மாதிரி இருக்கும். இரண்டிலுமே தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிரதிகள் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளர் பிரதிக்கும் ஒரு கிளை இருக்கும்.
திட்டம் 2
உருவாக்கம்
சோதனை - வாடி 1
வாடி 2
வாடி 3
பயன் - வாடி 1
வாடி 2
வாடி 3

பயன் அடைவில் இருக்கும் குறிப்பிட்ட வாடிக்கையாளர் கிளையிலிருந்து பிரதியை எடுத்துப் பார்த்தால் அது அவர்கள் இடத்தில் ஓடும் நிரலை அப்படியே ஒத்திருக்க வேண்டும்.

வாடிக்கையாளரிடமிருந்து வரும் புகார் அல்லது கோரிக்கைக்கேற்ப நிரலை மாற்றுவதற்கு சோதனைக் கிளையிலிருந்து நிரல் பிரதி உருவாக்கிக் கொள்ள வேண்டும். செய்ய வேண்டிய மாறுதல்களைச் செய்து கோப்பை தொகுப்புக்கு அனுப்புவார் உருவாக்குனர். தொகுப்புக்கு அனுப்பும் போது நமது issue tracker பயன்பாட்டில் வாடிக்கையாளர் கோரிக்கையை உள்ளிடும் போது கிடைத்த கோரிக்கை எண்ணையும் (issue id) குறிப்பிட வேண்டும்.

இந்த மாறுதல், குறிப்பிட்ட கோரிக்கை எண் தேவையைச் சரி செய்வதற்காக சேர்க்கப்பட்டது என்று தெரிந்து கொள்ள இது உதவும்.

மாறுதலை செய்த ஊழியர் அது பற்றிய விபரத்தை, தொகுப்புக்கு அனுப்பும் போது கிடைத்த மாறுதல் எண்ணைக் (revision no) குறிப்பிட்டு, 'இன்ன கோரிக்கை எண்ணுக்காக, இன்ன மாறுதல் எண்ணில் மாற்றங்களை சோதனைத் தொகுப்பில் சேர்த்திருக்கிறேன்' என்று மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பி விடுவார். அதே தகவல் சோதனை குழுவுக்கும் போகும்.

சோதனை செய்பவர் குறிப்பிட்ட மாறுதல் எண்ணுக்கான பதிப்பை தொகுப்பிலிருந்து பெற்று என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்ற விபரங்களையும் எடுத்து சோதனை செய்வார்.

மேலாளர் கோரிக்கை விபரங்களையும், மாறுதல்களையும் சீர்தூக்கிப் பார்ப்பார். எல்லாம் சரிவர இருந்தால், சோதனைக் குழுவின் சோதனை முடிவுகளும் ஒத்துப் போனால் அதே மாற்றங்களை சோதனைக் கிளையிலிருந்து பயன் கிளைக்கு கடத்துவார்.

இது போல மாற்றங்களை எடுத்தல், மாற்றங்களை ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு அனுப்புதல் போன்ற அன்றாட வேலைகளுக்கான கட்டளைகள் சப்வெர்ஷனில் மிக எளிதாக மாற்றப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர் பிரதிக்கு மேலாளர் பயன் கிளைக்கு கடத்திய மாறுதல் எண்ணுக்கான நிரல் மேம்பாட்டைச் செய்து விடுவோம். அதாவது வாடிக்கையாளரின் பயன்பாடும் சப்வெர்ஷன் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பிரதியாகவே இருக்கும். அங்கே போய் மேம்படுத்தும் கட்டளையைக் கொடுத்தால் மாற்றங்கள் இறங்கி வந்து விடும்.

யார் என்ன மாற்றம் செய்ய வேண்டுமானாலும் அது சோதனை கிளையில்தான் நடக்க வேண்டும். பயன் கிளையில் மாற்றங்களைச் சேர்ப்பது சோதனைக் கிளையிலிருந்து இணைக்கும் முறையில் மட்டும்தான் நடக்க வேண்டும். அந்த இணைப்புக்கான அனுமதி ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒருவரின் பொறுப்பில் இருக்க வேண்டும்.

நிரல் பராமரிப்புத் தொகுப்பை இணைய வழங்கியில் வைத்துக் கொண்டு வாடிக்கையாளர் கணினிகள், வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர் என்று எல்லா இடங்களிலும் ஒத்திசைவு செய்து கொள்ளலாம். வெளியூர்களிலிருந்து நமது உருவாக்கத்தில் பங்களிக்க முன்வருபவர்களுக்கும் வசதியாக இருக்கும்.

சரி, ஏற்கனவே இருக்கும் நிரல் பிரதிகளை என்ன செய்வது. அவற்றை நிரல் பராமரிப்புத் தொகுப்புக்கு எப்படி கொண்டு வருவது என்றும் திட்டமிட வேண்டும்.

ஒவ்வொரு திட்டத்தின் சிவிஎஸ்சில் தற்போதைய பதிப்பை உருவாக்கம் கிளையாக ஆக்கி விட வேண்டும். எல்லா கோப்புகளையும் உருவாக்கம் கிளைக்குள் தகவிறக்கி விட்டால் போதும்.

உருவாக்கம் கிளையிலிருந்து புதிதாக உருவான கோப்புகளை அப்படியே சோதனை கிளையில் இருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர் கிளைகளுக்கு இணைத்து விட வேண்டும்.

வாடிக்கையாளர்களின் தற்போதைய நிரல் தொகுப்பிலிருந்து கோப்புகளை மேலே உருவாக்கிய கிளை பதிப்பில் நகல் செய்தால் அவர்களுக்காக செய்த மாற்றங்கள் நிரல் பராமரிப்புக்குள் வந்து விடும். அது சரிவர வேலை செய்கிறது என்று உறுதி செய்து கொண்ட பிறகு சோதனை கிளையிலிருந்து பயன் கிளைக்கு இணைக்கும் வேலையை மேலாளர் செய்து விடுவார்.

கடைசியாக பயன் கிளையிலிருந்து ஒரு பிரதியை எடுத்து வாடிக்கையாளர் இடத்தில் மாற்றி விடுவோம். இப்போது எல்லாமே ஒரே நிரல் கட்டுப்பாடு முறைக்குள் வந்து விட்டது. மேலே சொன்ன நடைமுறைப்படி மாற்றங்களை கையாளலாம்.

மென்பொருள் பயன்பாட்டு நிரல்கள் ஒரு புறம், அதே நேரம் தரவுத் தள வடிவமைப்பின் பிரதிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு வாடிக்கையாளர் பிரதிக்கும் இன்னொரு வாடிக்கையாளர் பிரதிக்கும் நிரல் கோப்புகள் மட்டுமின்றி, தரவுத் தள வடிவமைப்புகளும் எப்படி வேறுபடுகின்றன என்று கவனிக்க வேண்டியிருக்கும்.

ஒரு பிரதியில் மூன்று அடைவுகள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
திட்டம் 3
உரு
சோதனை
பயன்
-வாடி1
- பயன்பாடு
- நிரல் தொகுப்புகள்
- நுட்பக் கோப்புகள்
பயன்பாடு அடைவில் மென்பொருளைப் பயன்படுத்தும் போது பயனர் அணுகும் கோப்புகள் மட்டும் இருக்க வேண்டும். நிரல் தொகுப்புகளில் செயலிகள் (functions), செயலிக்கூட்டுகள் (classes) போன்றவற்றின் தொகுப்புகள் இருக்க வேண்டும். இவை பயன்பாட்டு நிரல்களில் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். சேர்க்கப்பட்ட கோப்புகளுக்கான அடைவு இது என்று குறிப்பிட தோதுவாக இருக்கும்.

நுட்பக் கோப்புகளில் தரவுத் தளத்தை உருவாக்கப் பயன்படுத்திய உரைக் கோப்புகள் இருக்கும். தரவுத் தள வடிவமைப்பு ஒரு கோப்பு, கொடாநிலையாக முதலில் போட்டுத் தரும் தரவுகள் ஒரு கோப்பில், தரவுத் தள செயலிகளுக்கு ஒரு தனி அடைவு - அதில் ஒவ்வொரு செயலிக்கும் ஒரு கோப்பு. இப்படிப் போட்டு வைத்து விட்டால் வாடிக்கையாளர் பதிப்புகளுக்கிடையேயான தரவுத் தள மாறுதல்களையும் எளிதாகக் கையாளலாம்.

4 comments:

வடுவூர் குமார் said...

மா சி
எனக்கு சுத்தமாக புரியவில்லை.இப்போது தூங்கப்போகும் நேரம்,காலையில் படித்துவிட்டு சொல்கிறேன்.

மா சிவகுமார் said...

//எனக்கு சுத்தமாக புரியவில்லை.//

போச்சு :-). எனக்குப் பின்னணி தெரிந்து எழுதியதால் எளிதாகப் படுகிறது. விபரங்கள் தெரியாது புதிதாகப் படிப்பவர்களுக்கு சிரமம்தான். இன்னும் எளிதாக எழுத முயல்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

NoMad said...

எனக்கும் போஸ்டின் நீளத்தை பார்த்தவுடன் படிக்கும் எண்ணம் போய்விட்டது . அதே போல 'வாடி' , 'சோதனை' , 'உருவாக்கம்' , என்றெல்லாம் வார்த்தைகள் புரிய கடினமாக உள்ளது . .ஆனால் .. இது ஒரு அருமையான முயற்சி ... எளிமைப்படுத்துங்கள் . .ஆனால் கண்டிப்பாக இம்முயற்சி தொடர வேண்டும் என்பது என் விருப்பம் .தமிழில் தகவல் களஞ்சியங்கள் இன்னும் பல்கிப்பெருக வேண்டும் .

வாழ்த்துக்கள்

மா சிவகுமார் said...

வாங்க sknow on web,

இன்னும் எளிமையாக எழுத முயற்சிக்கிறேன். உங்கள் உற்சாகப்படுத்தலுக்கு நன்றி.

அன்புடன்,
மா சிவகுமார்