Sunday, December 30, 2007

ஓடிக் கொண்டே இருக்கணும்

ராமகிருஷ்ணரின் குட்டிக் கதைகளில் ஒன்று. ஒரு விறகுவெட்டி காட்டுக்குப் போகிறார். காட்டின் விளிம்பில் உட்கார்ந்திருக்கும் முனிவரிடம் 'நல்ல மரங்கள் எங்கு கிடைக்கும்' என்று கேட்கிறார். "உள்ளே உள்ளே போ" என்கிறார் முனிவர்.

உற்சாகமாக உள்ளே போனார் விறகுவெட்டி. நல்ல உயர்தர விறகுக்கான மரங்கள் கிடைத்தன. நல்ல காசு. அடுத்த முறை மரம் எடுக்க வரும் போது முனிவரின் சொற்களை நினைவு கூர்ந்து இன்னும் உள்ளே போனார். வீடுகள் கட்ட, மரச்சாமான்கள் செய்யப் பயன்படும் அருமையான மரங்கள் இருந்தன. பல நாட்கள் கழித்து வரும் போது இன்னும் உள்ளே போகலாம் என்று போனால் சந்தன மரங்கள் இருந்தன. (அப்போதெல்லாம் சந்தன வீரப்பன் மட்டும்தான் வெட்ட முடியும் என்று இல்லை போலிருக்கிறது).

அவர் பெரும் பணக்காரராகி விட்டார்.

கதை சொல்வது என்னவென்றால், உன் நிலையில் நிறைவுற்று நின்று விடக் கூடாது. தொழிலாக இருந்தாலும் சரி, படிப்பு, கலை, விளையாட்டு, சமூக அறிவியலாக இருந்தாலும் சரி, ஆன்மீகமாக இருந்தாலும் சரி, தனி மனிதனோ, சமூகமோ மேலும் மேலும் மேம்பட முயற்சிக்க வேண்டும்.

ஜக்கி வாசுதேவ் சொன்னதாக என்னுடைய வாடிக்கையாளர் ஒருவர் சொன்னார்.
'நாம் விரிவடையும் போது பலர் அழிந்து போகிறார்களே அது பாவம் இல்லையா'

'அப்படி விரிந்து கொண்டே போவது மனித இயல்பு, அதுதான் இயற்கையின் அழைப்பு. உன் நிலையை தொழிலை பெருக்காமல் இருப்பதுதான் மனித இயல்புக்கு எதிரானது. நீயாகத் தேடிப் போய் ஒருவரை அழிக்க வேண்டும் என்று போகாத வரை, உனது விரிவாக்கலில் அடிபட்டு விடக் கூடியவர்களுக்கு நீ பொறுப்பு கிடையாது. ஒவ்வொரு உயிருக்கும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முனைப்பு உண்டு. அது உனக்கும் இருக்க வேண்டும்'

21 comments:

முரளிகண்ணன் said...

very nice post.

வடுவூர் குமார் said...

ஒவ்வொரு உயிருக்கும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முனைப்பு உண்டு
மிக்க சரி.

கைப்புள்ள said...

நல்ல பதிவு. சிந்தனையைத் தூண்டும் கருத்துகள். தங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Baby Pavan said...

நன்றி அங்கிள்

துளசி கோபால் said...

ஆமாம் சிவா. ஓட்டம் நிக்கக்கூடாது.

நல்ல கருத்துள்ள கதை. ஆனால் ஓடும்போது காலடியில் எதுவும் அகப்பட்டு அழியக்கூடாதுன்னு ஒரு எண்ணமும் கூடவே வரணும்.

ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

RK said...

இப்படியும் சிந்திக்கலாம், நாம் மற்றும் நமது தொழில் விரிவடையும் போது நம்மோடு சேர்ந்து உயர்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.நம்மால் நிறைய பேருக்கு வாழ்வாதரத்தை கொடுக்க முடியும்.

புத்தாண்டு வாழ்த்துகள்

மா சிவகுமார் said...

நன்றி முரளி கண்ணன், வடுவூர் குமார், கைப்புள்ள, பேபி பவன், துளசி அக்கா, ராதாகிருஷ்ணன்.

2008ம் ஆண்டு வளமாகவும் இனிமையாகவும் அமைய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

//ஓடும்போது காலடியில் எதுவும் அகப்பட்டு அழியக்கூடாதுன்னு ஒரு எண்ணமும் கூடவே வரணும்.//

அதான் நானும் நினைச்சேன். முடிந்தவரை மிதிபடக் கூடியவற்றை கவனத்தில் வைத்துப் போவது தேவை.

//நாம் மற்றும் நமது தொழில் விரிவடையும் போது நம்மோடு சேர்ந்து உயர்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.நம்மால் நிறைய பேருக்கு வாழ்வாதரத்தை கொடுக்க முடியும்.//

நிச்சயமாக.

ஆனால் ஒரு ஆர்டரைப் பிடிக்கும் போது அது போட்டியாளருக்கு இல்லாமல் போகிறது. வாடிக்கையாளரிடம் கறாராக பணம் வாங்கும் போது அவருக்கு சிரமங்கள் வரலாம்.

இங்கெல்லாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு விடைதான் குறிப்பிட்ட மேற்கோள்.

அன்புடன்,
மா சிவகுமார்

வினையூக்கி said...

:):) நன்றி

மா சிவகுமார் said...

வினையூக்கி,

இதையும் படித்துப் பாருங்க!

அன்புடன்,
மா சிவகுமார்

KARTHIK said...

அடிக்கடி இதுலையும் (பொருள்செய்) பதிவு போட முயற்சியுகள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றி

Anonymous said...

//உனது விரிவாக்கலில் அடிபட்டு விடக் கூடியவர்களுக்கு நீ பொறுப்பு கிடையாது//

அப்போ உலகம் சரியான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறதா????.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மா சிவகுமார் said...

//அடிக்கடி இதுலையும் (பொருள்செய்) பதிவு போட முயற்சியுகள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றி//

ஊக்குவிப்புக்கு நன்றி கார்த்திக். வாரத்துக்கு மூன்று பதிவுகளாவது போட முயற்சிக்கிறேன்.

அனானி://அப்போ உலகம் சரியான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறதா????.//

ஜக்கி வாசுதேவ் சொன்னது, நியாயமான முறையில் தனது தொழில் செய்து கொண்டிருக்கும் ஒரு தொழிலதிபருக்கு. அவரது வளர்ச்சியால் போட்டியாளர்களின் தொழில் நலிவடையலாம், சரியாக சேவை கொடுக்காதவரிடமிருந்து பொருள் வாங்குவதை நிறுத்தி விட்டால் அந்த விற்பனையாளருக்கு இழப்பு ஏற்படும்.

அவற்றை நினைத்து செய்ய வேண்டியதை சரிவரச் செய்யா விட்டால், கடமையில் தவறி, நிறுவனத்தின் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், சமூகத்துக்கும் தனது அதிகமான தீங்கு இழைத்து விடுகிறார்.

எல்லாச் சூழலுக்கும் பொருந்தும் விடை எதுவும் இல்லை. நமது கேள்விக்குத் தகுந்த விடையை தேடிக் கொள்ள வேண்டும்.

அன்புடன்,
மா சிவகுமார்

வால்பையன் said...

மனிதன் தான் வாழ்க்கை தரத்தை உயர்த்த எதை வேண்டுமானாலும் செய்யலாமா?
அதை பற்றிய என் கேள்விகள் இங்கே இருக்கிறன,
என் கேள்வி

மற்றபடி சென்னை வந்தும் உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமே!

வால்பையன்

நாச்சியப்பா said...

//உற்சாகமாக உள்ளே போனார் விறகுவெட்ட//
nicely said siva.
how I view this is the belief on saints words and cent percent involvement of the wood-cutter has shown him the right way of growth and he fetched benefits by his hard work
//"உள்ளே உள்ளே போ"//
In another context, this means go deep into yourself to find your way for growth.

தமிழ்மணி said...

நல்ல பதிவு.
2008ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

####
கண்ணுக்குக் கண் என்று பழிவாங்க ஆரம்பித்தால் உலகமே குருடாவதில்தான் முடியும்
- காந்தி
####

மா சிவகுமார் said...

வால்பையன்,
//மனிதன் தான் வாழ்க்கை தரத்தை உயர்த்த எதை வேண்டுமானாலும் செய்யலாமா?//

நிச்சயமாக இல்லை. தனக்கும் மற்றவர்களுக்கும் பலன் தரும் வழிகளை மட்டும் பின்பற்றலாம். அப்படிச் செய்யும் போது போட்டியாளர்களுக்கு தீங்கு விளைந்தால் நின்று விடக்கூடாது.

அடுத்த முறை வாய்ப்புக் கிடைக்கும் போது சந்திக்கலாம் :-)

வாங்க நாச்சி,

//belief on saints words and cent percent involvement of the wood-cutter has shown him the right way//

இது ஒரு புதிய கோணம். நன்றி!

தமிழ்மணி,
உங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்

Sridhar V said...

//தனக்கும் மற்றவர்களுக்கும் பலன் தரும் வழிகளை மட்டும் பின்பற்றலாம். //

ஓநாய்க்கும், ஆடுக்கும் நியாயங்கள் வேறு வேறானவைதான். அவரவர் நியாயங்கள் அவரவர்க்கு.

பதிவின் தலைப்பை பார்த்ததும் நினைவுக்கு வருவது -

ஒரு மானானது வேகமாக ஓடும் சிறுத்தையை விட வேகமாக ஓட வேண்டும்... தன்னை காப்பாற்றிக் கொள்ள

ஒரு சிறுத்தையானது மெதுவாக ஓடும் மானை விட வேகமாக ஓட வேண்டும் தன்னை காப்பாற்றிக் கொள்ள

ஆக எல்லாரும் ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டும். வேகம்தான் மாறுபடும்.

ILA (a) இளா said...

//எல்லாரும் ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டும். வேகம்தான் மாறுபடும்.//
நல்ல கருத்துள்ள பதிவுங்க.

மா சிவகுமார் said...

வணக்கம் ஸ்ரீதர்,
//ஆக எல்லாரும் ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டும். வேகம்தான் மாறுபடும்.//

அதுதான் வாழ்க்கை வகுத்த நெறி போலிருக்கிறது.

//நல்ல கருத்துள்ள பதிவுங்க.//
நன்றி இளா.

அன்புடன்,
மா சிவகுமார்

கோகுலன் said...

மிக மிக பயனுள்ள கதைகள்.. பதிவு!
பகிர்வுக்கு மிக்க நன்றி..

மா சிவகுமார் said...

கோகுலன்,

உங்கள் பின்னூட்டத்தினால், இந்த இடுகையையும் பின்னூட்டங்களையும் மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கும் வாய்ப்பு. நன்றி :-)

அன்புடன்,
மா சிவகுமார்