Tuesday, October 28, 2008

யாருக்கும் வருந்த வேண்டியதில்லை!

ஒரு சின்ன புள்ளி விபரக் கணக்கு - மும்பைப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் மாற்றங்கள்:
ஆதாரம்


1. 5000ஐத் தாண்டியது - ஜனவரி 2000
2. 3000 ஆக இறங்கியது - ஆகத்து 2002
3. மீண்டும் 5000 - டிசம்பர் 2003 (16 மாதங்களில்)
4. 10000ஐத் தாண்டியது - மார்ச்சு 2006 (27 மாதங்களில்)
5. 20000ஐத் தொட்டது - நவம்பர் 2007 (20 மாதங்களில்)

டிசம்பர் 2003லிருந்து 4 ஆண்டுகளில் குறியீட்டு எண் நான்கு மடங்காகியிருக்கிறது. ஆகத்து 2002லிருந்து ஐந்து ஆண்டுகளில் 7 மடங்காகியிருக்கிறது.

அந்த காலகட்டத்தில் "அப்படி என்ன சிறப்பாக நடந்து விட்டது" என்று கேட்டால், 'இந்திய வளர்ச்சி கதை', 'அடிப்படை வலிமை' என்று மாற்றி மாற்றி ஜல்லி அடித்துக் கொண்டிருந்தார்கள். பங்குகளின் விலை ஏற்றத்தின் காரணமாக இன்னும் பலர் வாங்குவதில் இறங்க விலை இன்னும் ஏறியது.

அடிப்படை 'நிறுவனம் ஆண்டுக்காண்டு சாதிக்கும் விற்பனையும் அதன் மூலம் ஈட்டும் உபரித் தொகையும்தான்' அதிலிருந்து வரும் பகிர்வுத் தொகையின் அடிப்படையில்தான் பங்கு விலை இருக்க முடியும். ஒரு சில வார நோக்கில் கூடுதல் குறைவு ஏற்பட்டாலும், ஓரிரு ஆண்டுகள் நோக்கில் அதுதான் ஒரே அடிப்படை. அதைத் தவிர்த்த மற்ற எல்லாம் சூடான காற்றுதான்.

பங்குச் சந்தையில் வாங்கி விற்கப்படும் பங்குகளின் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஆண்டு விற்பனையையும், ஆதாயத்தையும் இரட்டிப்பாக்கினவா? என்று கேட்டிருந்தால் கடைசி இருபது மாதங்களில் 10000 புள்ளிகள் உயர்ந்தது நடந்திருக்காது.

இது 2008ன் கதை மட்டுமல்ல. பங்குச் சந்தை ஆரம்பித்த நாட்களிலிருந்தே 19ம் நூற்றாண்டிலிருந்தே இந்த ஏற்றமும் இறக்கமும் வளமையாகத்தான் இருக்கின்றன.

2008ல் இப்போது நடப்பது நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் உருகி ஓடுதல். இறுக்கமாக பாதுகாப்புப் பட்டியை அணிந்து கொண்டு உழைத்து மட்டும் வரும் பணத்தில் வாழ தயாராகிக் கொள்ள வேண்டியதுதான்.

4 comments:

KARTHIK said...

// 'நிறுவனம் ஆண்டுக்காண்டு சாதிக்கும் விற்பனையும் அதன் மூலம் ஈட்டும் உபரித் தொகையும்தான்' அதிலிருந்து வரும் பகிர்வுத் தொகையின் அடிப்படையில்தான் பங்கு விலை இருக்க முடியும். ஒரு சில வார நோக்கில் கூடுதல் குறைவு ஏற்பட்டாலும், ஓரிரு ஆண்டுகள் நோக்கில் அதுதான் ஒரே அடிப்படை. அதைத் தவிர்த்த மற்ற எல்லாம் சூடான காற்றுதான்.//

சரிதான்.

வடுவூர் குமார் said...

அப்பாடி! வனவாசம் முடிந்ததா?
வெகுநாட்களுக்கு பிறகு வருகிறீர்கள்,வரவேற்கிறேன்.

samratarul said...

what is the relationship between interest rate and inflation!

மா சிவகுமார் said...

நன்றி கார்த்திக், வடுவூர் குமார். வனவாசம் எல்லாம் இல்லை :-)

சாம்ராட் அருள்,
பணவீக்கம் (inflation)
இன்றைக்கு 100 ரூபாய்க்கு வாங்க முடியும் பொருட்களை, ஒரு ஆண்டுக்குப் பிறகு வாங்கப் போனால் விலைகள் உயர்ந்திருக்கும். அது 110 ரூபாயாக இருந்தால் 10% பண வீக்கம்.

ஒருவர் பொருளை வாங்காமல் கையில் பணமாக வைத்திருந்தால் 10 ரூபாயை இழந்திருப்பார்.

வட்டி வீதம் (interest rate)
பணத்தை சேமிப்பாகவோ, கடனாகவோ வைத்திருந்தால், குறிப்பிட்ட காலம் தாண்டிய பிறகு மேலே சொன்ன படி அதன் வாங்கும் சக்தி குறைந்திருக்கும். அதற்கு ஈடாக பணம் வாங்கியவர் கொடுத்தவருக்குக் கொடுக்கும் கட்டணம்தான் வட்டி வீதம்.

வட்டி வீதம் பணவீக்கத்தை விட அதிகமாக இருந்தால் சேமிப்பவர்களுக்கு ஆதாயம். வட்டி வீதம் பணவீத்தை விட குறைவாக இருந்தால் கடன் வாங்கியவர்களுக்கு ஆதாயம்.

அன்புடன்,
மா சிவகுமார்