Monday, December 22, 2008

பிஎஸ்ஜி ஏழு ஆண்டுகள் (4)

2008ல், குறிப்பிட்ட/குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவைகளை அளிக்கும் முறை முழு வடிவம் பெற்றது.

நிறுவனத்தின் செயல்முறையில் ஒரு பெரிய திருப்பம் வேண்டும் என்று முடிவு செய்த பிறகு அது நடைமுறைக்கு முழுமையாக வருவதற்கு பல மாதங்கள் பிடிக்கின்றன.

முதல் கட்டமாக இது வரை என்ன செய்து கொண்டிருந்தோம், அதில் என்னென்ன குறைபாடுகள் தெரிகின்றன, என்னென்ன சாதித்திருக்கிறோம், எப்படிப்பட்ட திருப்பம் வேண்டும், அதனால் என்னென்ன சாதக பாதகங்கள் ஏற்படும், திருப்பத்தை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்று மனதளவில் சிந்தித்து அலசி ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

அந்த திருப்பத்தைக் குறித்த விபரங்களை ஆவணப்படுத்திக் கொள்வது அடுத்த படி. நிறுவனத்தில் பணி புரிபவர்கள், முதலீடு செய்தவர்கள், வாடிக்கையாளர்கள் என்று தொடர்புடைய எல்லோருக்கும் ஏதோ ஒரு வழியில் திருப்பத்தை மாற்றங்களை தெரிவிக்க வேண்டும். திட்டமிட்டு குறிப்பாக விபரம் அறிவிக்கா விட்டால், நாட்கள் போகப் போக படிப்படியாக எல்லோருக்கும் மாற்றம் போய்ச் சேர்ந்தே தீர வேண்டும். அதைத் திட்டமிட்டுக் கொண்டால் வேகமாக முறையாக நடந்து விடும்.

நிறுவனத்துக்குள் செயல் அமைப்புகள், செயல் முறைகள் இரண்டுமே மாற்றப்பட்ட வழிக்கு ஏற்றவாறு தகவமைைத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரே நாளில் செய்து விட முடியாது.

இரு சக்கர வண்டி ஓட்டும் போது திசை திருப்புவது என்றால் முன்னும் பின்னும் பார்த்து விட்டு எளிதாகத் திரும்பி விடலாம். நான்கு சக்கர வண்டிகளான கார் அல்லது பேருந்து ஓட்டும் போது திரும்புவதற்கு வேறு வண்டிகள் வருகிறதா என்று பார்ப்பது தவிர, திரும்பும் பகுதிகளில் நமது வண்டி உரசாமல் போகுமா என்று கவனிக்க வேண்டும். கேரளத்தில் நடக்கும் படகுப் போட்டிகளில் படகைத் திருப்ப வேண்டுமானால், துடுப்பு போடும் எல்லோருக்கும் சொல்லி, எல்லோரும் மனது வைத்தால்தான் திருப்பம் நடக்கும்.

ஒரு நிறுவனத்தின் திருப்பங்கள் கடைசியில் சொன்னப் படகுத் திருப்பம் போல. நிறுவனத்தில் பணி புரிபவர்கள், வெளியிலிருந்து வழிநடத்துபவர்கள், வாடிக்கையாளர்கள், சேவை வழங்குபவர்கள் என்று ஒவ்வொருவரும் திசை திரும்பப் போவதைத் தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு, தமது பகுதியில் அந்தத் திருப்பத்துக்கான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும். எல்லோரும் மனது வைக்காவிட்டால், பாதி பேர் திரும்ப முயல, மீதிப் பேர் வேறு கோணத்தில் போக முயற்சிக்க, கடைசியில் போக நினைத்த இலக்கை விட்டு வேறு இடத்துக்குப் போய் நிற்போம்.

2008இலும், நிறுவனத்தின் பங்குகளை திறமையான, நிறுவனத்துக்கு வழி காட்டக் கூடியவர்களுக்கு விற்பதைத் தொடர்ந்தோம். ஆகசுடு 1ம் தேதி 16 பங்குதாரர்கள். எல்லோருமே நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டக் கூடியவர்கள். பெரிய நிறுவனங்களில் பணி புரிபவர்கள், சொந்தமாகத் தொழில் செய்பவர்கள் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள்.

இன்றைய தேதியில் முழு நேரம் பணி புரிபவர்கள் 22 பேர். கூடவே பட்டப் படிப்பு இறுதியாண்டுக்கான திட்டப்பணி செய்யும் மாணவர்கள் 5 பேர், முதுகலைப் படிப்புக்கான திட்டப்பணி செய்யும் ஒருவர் பயிற்சிப் பணியில் ஈடுபடுகிறார்கள்.

1. நமது மென்பொருள் பயன்பாட்டைப் பயன்படுத்தி நிறுவனத்தின் அன்றாடப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் நிறுவனங்கள் 5. இவர்களுடன் மாத பராமரிப்பு மற்றும் பயன்படுத்தும் சேவைகளுக்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி நடந்து கொண்டிருக்கிறது.

மாதா மாதம் பணிகளைத் திட்டமிட்டுக் கொண்டு, அவர்களுக்குத் தேவையான வேலைகளை முடித்துக் கொடுத்து பணம் வாங்க வேண்டியிருக்கும். அவர்களைச் சார்ந்து நாமும், நம்மைச் சார்ந்து அவர்களும் தொழில் செய்யும் உறவு முறை இருக்கிறது. அவர்களது தேவைகள், நிறை குறைகள் நமக்கும், நமது நிறை குறைகள் அவர்களுக்கும் நன்றாகவே புரிந்திருக்கிறது.

2. நமது மென்பொருள் பயன்பாட்டை வாங்கி, நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் 2. மீதியிருக்கும் பணிகளை முடித்து மென்பொருளை அன்றாடப் பணிகளுக்கான பயன்பாட்டில் கொண்டுவரும் இலக்கு. திட்டப் பணி ஆரம்பித்து பல மாதங்கள், ஆண்டுகள் ஆனதால், அவர்களுக்கும் பல குறைகள், வேலை இழுத்துக் கொண்டே போகிறதே என்று நமக்கும் பொருள் இழப்பு.

இரண்டு பக்கமும் புரிந்துணர்வுடன் வேலை பார்த்து போட்ட பணத்துக்கும் செய்த வேலைக்கும் முறையான பலன் கிடைக்கச் செய்ய வேண்டும். தெளிவான வேலைத்திட்டம் வகுத்துக் கொண்டு குறுகிய காலத்துக்குள் நடைமுறைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதை இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும்.

3. கடந்த ஏழு ஆண்டுகளில் நமது மென்பொருளை வாங்கி, நமது ஈடுபாட்டுடன் மென்பொருளில் மாற்றங்கள், பயன்படுத்துவதற்கு பயிற்சி, நடைமுறைப்படுத்துவதற்கு உதவிச் சேவை என்று பல கட்டங்களைத் தாண்டி அன்றாட வேலைகளுக்கு மென்பொருளைப் பயன்படுத்தினாலும், மாதந் தோறும் நமது சேவைப் பணியை பயன்படுத்தாமல் இருக்கும் வாடிக்கையாளர்கள் 9 நிறுவனங்கள் இருக்கின்றன.

தொடர்ந்து மென்பொருளையும், அதன் அடிப்படை பயன்பாடுகளையும் பராமரித்து மேம்படுத்தாமல் விட்டு விட்டதால், நடைமுறைப் பயன்பாடும் சிறிது சிறிதாக முறை இழந்து நலிந்து போயிருக்கும். இவர்களைத் தொடர்பு கொண்டு இப்போது இருக்கும் நிலவரம், இது வரை முதலீடு செய்த பணம், இதனால் கிடைத்திருக்கும் பலன்கள், இனிமேல் எப்படி மேம்படுத்தலாம்/தொடரலாம் என்ற திட்டம், அத்தகைய மேம்பாடு மூலம் வரக் கூடிய ஆதாயங்கள், அதற்கு ஆகும் செலவுகள் என்று ஆவணப்படுத்தி விளக்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு முறை நம்முடன் பணி புரிந்ததால் நமது நிறை குறைகள் நன்றாக தெரிந்திருக்கும் வாடிக்கையாளர்கள் அவர்கள். மாதாந்தர சேவை வேண்டாம் என்று முடிவு எடுத்ததற்கான காரணங்களை கண்டு கொண்டு, சரியான முறையில் அணுகினால் மீண்டும் வாடிக்கையைப் பெற்றுக் கொள்ளலாம்.

4. மென்பொருளை வாங்கி, பகுதி அல்லது முழுமையாக பணம் கொடுத்து நடைமுறைப்படுத்த ஆரம்பித்த பிறகு முழுமை பெறாமல் போய் விட்ட வாடிக்கையாளர் உறவு 10. இவர்களுக்கு நமது மற்றும் நமது சேவைகளின் குறைகள் மட்டும் நன்கு மனதில் பதிந்திருக்கும். திரும்பப் போய் கதவைத் தட்டி, அவர்களுடன் உட்கார்ந்து பேசி மீண்டும் சேவைகளை ஆரம்பிப்பது இருப்பதில் சிரமமான வேலை. இதற்கு திட்டம் ஒன்றை வகுத்துக் கொண்டு விடாமல் முயற்சி செய்தால் 10 பேரில் பாதி வாடிக்கையாளர்களாவது மீண்டும் தொடர முன் வரலாம்.

5. தற்போது தொழிலை விட்டு விட்ட நிறுவனங்கள் இரண்டு.

6. இவற்றைத் தவிர, விற்பனை முயற்சிகளின் மூலம் தொடர்பு கொண்டு அவர்களது தேவைகளை அலசி ஆராய்ந்து, திட்டப் பணி ஆவணப்படுத்திக் கொடுத்து இறுதியில் பணி ஆரம்பிக்காமலேயே இருக்கும் நிறுவனங்கள் ஏழெட்டு இருக்கின்றன. இவர்களுக்கு கொஞ்சம் நம்மீது பரிவு இருக்கும்.

7. 2006ம் ஆண்டிலும் 2007ம் ஆண்டிலும் செய்த சந்தைப்படுத்தல் முயற்சிகளின் மூலமாக தமிழ்நாட்டின் தோல் துறை நிறுவனங்களில் பலவற்றுக்கு நமது நிறுவனத்தைப் பற்றிய விபரங்களைக் கொண்டு சேர்த்திருக்கிறோம். சிலருக்கு பெயர் மட்டும் தெரிந்திருக்கலாம், சிலருக்கு சேவை விபரங்களும் தெரிந்திருக்கலாம். அடுத்த கட்டமாக ஒவ்வொருவராக அணுக முயற்சிக்கலாம்.

அடுத்த ஏழு ஆண்டுகளில் நமது நிறுவனம் எப்படி வளர்ந்திருக்க வேண்டும்.

2015ல் நமது மென்பொருளின் அடிப்படையில் அன்றாடப் பணிகளைச் செய்து வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை 20ஆக இருக்க வேண்டும். இப்போது இருக்கும் மென்பொருள் வசதிகளுடன் இன்னும் முக்கியமான கணக்குப் பிரிவு, மனித வளப்பிரிவு, எந்திரங்கள் பராமரிப்புப் பிரிவு போன்றவற்றையும் சேவை வரையறைக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாதம் ரூபாய் 5 லட்சத்துக்குக் குறையாமல் சேவை வழங்கி சம்பாதித்தால், மாத வருமானம் இந்தப் பிரிவிலிருந்து 1 கோடி ரூபாய்களாக இருக்கும்.

நிறுவனம் ஆரம்பித்த போது இருந்த குறிக்கோளான, நிறுவனங்களை இணைக்கும் சேவையை பெருக்குவதில் முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும். வாடிக்கையாளர் தொடர்பு, விற்பனையாளர்கள் உறவை மேலாள்வது என்று ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களுடனுன் விற்பனையாளர்களுடனும் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கின்றன.

தொடங்கும் போது இந்தத் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பான மென்பொருள் சேவை அளிப்பதாக திட்டமிட்டிருந்தாலும், இணையத் தொடர்பு வளர்ச்சி போதுமானதாக இல்லாததாலும், துறையில் கணினி மயமாக்கல் போதுமானதாக இல்லாததாலும், ஒரு நிறுவனத்துக்குள்ளே பயன்படுத்தும்படியான மென்பொருள் சேவைகள் அளித்துக் கொண்டிருக்கிறோம்.

இப்போது சின்ன நகரங்களில் கூட அகலப்பட்டை இணைய இணைப்பு கிடைக்கிறது, துறையில் இருக்கும் நிறுவனங்களும் தகவல் தொடர்பு மற்றும் கணினி பற்றிய பயன்பாடுகளின் தேவையை உணர்ந்து முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள்.

2009 முதல் தோல் பதனிடும் நிறுவனங்கள், தோல் பொருள் உற்பத்தியாளர்கள், தோல் பொருள் விற்பவர்கள், தோல் பொருள் வடிவமைப்பவர்கள், எந்திரங்கள் வேதிப் பொருட்கள் செய்து கொடுப்பவர்கள் என்று 5 பிரிவினரை இணைக்கும்படியான மென்பொருள் சேவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரம்பம் முதலே மென்பொருளின் வடிவமைப்பில் இத்தகைய இணைக்கும் தேவையை கருத்தில் கொண்டிருப்பதால், அத்தகைய தொழில் நுட்பப் பயன்பாடுகளையே பயன்படுத்திக் கொண்டிருப்பதால் இந்தத் திசையில் திரும்புவது தொழில் நுட்பரீதியாக சாத்தியமானதாகவே இருக்கும்.

அதற்கான பணிகளையும் ஆரம்பித்து விட்டிருக்கிறோம்.

திட்ட விபரங்களை நிறுவனத்தில் முழு நேரம் பணி புரியும் குழுவினர், தற்போதைய வாடிக்கையாளர்கள், இனிமேல் சேவையை வழங்கத் திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்கள், நெறிப்படுத்தும் இயக்குனர் குழுவினர், முதலீட்டாளர்கள் எல்லோரிடமும் விவாதித்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஏப்ரல் மாதம் முதல் புதிய சேவைகளில் பணம் ஈட்டுவதாகத் திட்டமிட்டுக் கொள்ளலாம். மூன்று மாதங்களில் இதற்கான அடித்தளம் அமைத்து, தேவையான மூலப் பொருட்களை, வளங்களை தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிப்ரவரி முதல் வாரத்தில் வரவிருக்கும் இந்திய பன்னாட்டு தோல் கண்காட்சியை மையமாகக் கொண்டு சந்தைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். தோல் துறையில் பணி புரிபவர்கள், மாணவர்கள் பயன்படுத்தும் தனிநபர் பயன்பாடுகளையும் அறிமுகப்படுத்த வேண்டும். இது எல்லாவற்றுக்கும் தெளிவான திட்டமிடலும், செய்த திட்டத்தை எல்லோரிடமும் விளக்கி, அவர்களது கருத்துக்களை உள்ளடக்கி மேம்படுத்துவதும், திட்டப்படி பணிகளை நிறைவேற்றலும், நிறைவேற்றிய பணிகளை வாடிக்கையாளருக்குப் பயன்படும்படியாக பொதிந்து கொடுத்து, பணம் ஈட்டுவதும் தேவையான பணிகள்.

4 comments:

K.R.அதியமான் said...

Arumaiyaana pathivuhal.

hat's off to your tireless efforts and self-confidance.

Best Wishes for a prosperous future.

ILA (a) இளா said...

Welcome Back அண்ணாச்சி!

மா சிவகுமார் said...

நன்றி அதியமான், இளா.

அன்புடன்,
சிவகுமார்

Kochadaiyaan Video Songs said...

நல்ல தகவல் நண்பரே...!