Saturday, January 3, 2009

வாழ்த்துக்களும் பரிசுகளும்

'உங்களது வழிகாட்டலுக்கும் நெறிப்படுத்தலுக்கும், ஆதரவுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் நிறுவனத்தின் வெற்றி நடையில் நாங்களும் பங்களிக்க வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றிகள்.

வரும் புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் நிறுவனத்துக்கும் இன்னும் ஒரு வெற்றிப்படியாக அமையட்டும்'

வாடிக்கையாளர் ஒருவருக்கு அனுப்பிய புத்தாண்டு வாழ்த்தின் சாரம். இப்படி ஒவ்வொரு நிறுவனத்தின் தலைவருக்கும் என் மனதில் பட்ட, நான் முழுமையாக நம்பிய நல்ல பண்புகளைக் குறிப்பிட்டு புத்தாண்டு செய்தி அனுப்பியிருந்தேன்.

ஒரு வாழ்த்துச் செய்தியை உருவாக்கி வைத்துக் கொண்டு குறுஞ்செய்தி மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ மொத்தமாக எல்லோருக்கும் அனுப்பி வைப்பது சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடுதான்.

வாழ்த்துச் செய்தி அனுப்பும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்:
  1. வாழ்த்து அட்டையில் கையால் எழுதிய செய்தியை சேர்த்து கையொப்பம் இட்டு அனுப்பலாம்.
  2. குறுஞ்செய்தி அனுப்பும் போது ஒவ்வொருவருக்கும் அவருக்குப் பொருத்தமான வகையில் எழுதி கையெழுத்துடன் அனுப்ப வேண்டும்.
  3. மின்னஞ்சலிலும் சுருக்கமாக, பெறுபவருக்கு மட்டும் போய்ச் சேருவதாக அவருடனான உறவைக் குறிப்பிட்ட அனுப்ப வேண்டும். (CCல் முழ நீளத்துக்கு முகவரிகள் இருந்தாலோ, நமது முகவரி தெரியாத BCC முறையிலோ வந்த மின்னஞ்சல்களை எல்லோரும் தெரிந்து கொள்வார்கள்).
  4. தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லி சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருக்கலாம். நேரம் காலம் தெரியாமல் அழைத்து அவர்களை தொல்லைப் படுத்தி விடக் கூடாது என்று கவனப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  5. மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் அல்லது தொழில் முறை தொடர்புகள் என்றால் நேரில் போய் வாழ்த்தி சாப்பிட்டு விட்டு வரலாம். அல்லது முன்கூட்டியே திட்டமிட்டு அவர்களுக்கு அழைப்பு விடுத்து புத்தாண்டு விருந்துக்கு ஏற்பாடு செய்யலாம்.
விருந்துக்கு ஏற்பாடு செய்யும் போதும் நமக்குத் தெரிந்த எல்லோரையும் ஒரே நாளில் அழைப்பது எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கும். திருமணம், பிறந்த நாள் என்று ஏதாவது வீட்டு நிகழ்ச்சிக்கு நம்மைச் சேர்ந்த எல்லோரையும் அழைப்பது சரியாக இருக்கும். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவார்கள், வாழ்த்தி விட்டு, சாப்பிட்டு விட்டுப் போவார்கள்.

நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ந்திருக்கும் வகையில் ஏற்பாடு செய்யும் விருந்துகளில் நம்மை மட்டும் மையமாக வைத்து ஆட்களை அழைப்பது கொஞ்சம் அநாகரீகமாகப் படுகிறது. வருபவர்கள் யார் யார், ஒவ்வொருவரும் மற்ற விருந்தினர்களை சந்திப்பதை எப்படி விரும்புவார்கள் என்று தீவிரமாக யோசித்துதான் விருந்தினர்கள் பட்டியலை தயார் செய்ய வேண்டும். ஒன்றிரண்டு பேரைத் தவிர மற்ற எல்லோரும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும்.

பல பேரை அழைத்து விட்டு, அழைத்தவர் தனித்தனியே வரவேற்று, அறிமுகம் செய்து வைக்க நேரமில்லாமல், விருந்தினர்கள் தமக்குத் தாமே அறிமுகம் செய்து கொண்டு பேசிக் கொண்டிருப்பது வீட்டு விருந்தில் பொருத்தமாகப்படுவதில்லை.

முக்கியமான ஒன்று பரிசுப் பொருட்கள். பரிசுப் பொருட்கள் திரட்டுவதற்காகவே விருந்து வைப்பவர்கள் விருந்துகளையே தவிர்த்து விட வேண்டும். வருபவர்கள் கொண்டு வரும் பரிசுப் பொருட்கள் மீது நமக்கு எள்ளவும் ஆர்வம் இருப்பதாக உணர்ந்தால், பரிசுப் பொருட்கள் வேண்டாம் என்று முன் கூட்டியே கண்டிப்பாக அறிவித்து விடுவது மிகவும் நல்லது. குறிப்பாக குழந்தைகளை, பிறந்த நாள் கொண்டாடினால் நிறைய விளையாட்டுப் பொருட்கள் பரிசாக கிடைக்கும் என்று சொல்லிக் கொடுத்து வளர்ப்பது ஒவ்வாத பண்புகளை விதைத்து விடும்.

விருந்து அளிப்பது நாலு பேருடன் சேர்ந்து பேசி மகிழ்ந்திருப்பதற்கு, குழந்தைகள் கூடி விளையாடுவதற்கு, நல்ல உணவுப் பொருட்களை பகிர்ந்து உண்டு களிப்பதற்கு என்ற நோக்கத்துடன் மட்டும் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி நடத்தும் போது வருபவர்கள் வெறுங்கையோடு போக வேண்டாம் என்று ஏதாவது பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். அப்போதும் கூட பரிசுப் பொருட்களை மொத்தமாக திரட்டி சமூகத்தில் வசதி குறைந்தவர்களுக்கு வினியோகித்து விடுவது நல்லது.

4 comments:

KARTHIK said...

புத்தாண்டு வாழ்துக்கள் அண்ணா

மா சிவகுமார் said...

வணக்கம் கார்த்திக்,
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2009ம் ஆண்டில் பலவற்றை சாதிக்கத் திட்டமிட்டு, திட்டமிட்டபடி சாதித்துக் காட்ட வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

துளசி கோபால் said...

விழாக் காலத்திற்கான இனிய வாழ்த்து(க்)கள் சிவா.

மனதில் மகிழ்ச்சி நிறைந்து பொங்கணும்

மா சிவகுமார் said...

வணக்கம் துளசி அக்கா,

உங்களுக்கும் மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,
சிவகுமார்