Saturday, January 17, 2009

multitasking - பல்செயல் வன்மை

ஒரே நேரத்தில் இரண்டு அல்லது பல வேலைகளை செய்வதை multitasking என்று குறிப்பிடுகிறார்கள். கணினித் திரையில் ஒரு தத்தலில் மின்னஞ்சல், இன்னொன்றில் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆவணம், இன்னொன்றில் எழுதிக் கொண்டிருக்கும் நிரல், நான்காவதில் நிரலை சரிபார்க்கும் செயலி, ஐந்தாவதில் நண்பர் ஒருவருடன் இணைய அரட்டை என்று வைத்துக் கொண்டு இதிலிருந்து அதற்கு தாவுவது சிலருக்கு வாடிக்கை. எனக்கு அந்தப் பழக்கம் நிறையவே உண்டு.

சாப்பிடும் போது புத்தகம் படித்துக் கொள்வேன். பல் தேய்க்கும் போது, கழிவறையில் உட்கார்ந்திருக்கும் போது நாளிதழ் படித்துக் கொண்டிருப்பேன். பேருந்தில் பயணம் செய்யும் போது படித்துக் கொண்டிருப்பேன். வீட்டை ஒதுங்க வைக்கும் போது, துணி துவைக்கும் போது ஏதாவது பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருப்பேன். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே இன்னொரு வேலையிலும் கையை வைத்துக் கொண்டிருப்பேன்.

multitasking செய்வதை ஒரு பெருமையாக வைத்திருப்பார்கள் மூளையால் வேலை செய்பவர்கள். சதாவதானி, தசாவதானி என்று ஒரே நேரத்தில் முறையே 100, 10 செயல்களை செய்யக் கூடியவர்களும் உண்டு. நான்கைந்து செயல்களுக்கு தாவிக் கொண்டிருப்பது பலருக்கு பழக்கமாக இருக்கிறது.

அதற்கு ஒரு முடிவு கட்டலாம் என்று முடிவு செய்து பழக ஆரம்பித்தேன். பல் தேய்க்கும் போது பல் தேய்ப்பு மட்டும்தான். எண்ணக் கோர்வை வேறு எங்காவது போனால் அதை நூல் பிடித்து திருப்பி நிகழ்காலத்துக்குக் கொண்டு வர வேண்டும். சாப்பிடும் போது சாப்பாட்டில் மட்டும்தான் கவனம். சமைக்கும் போது சமையலில் மட்டும்தான் கவனம். கையில் புத்தகமோ நாளிதழோ இருக்காது.

நாளிதழ், புத்தகம் படிப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி சரியாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்க வேண்டும். தூங்கப் போகும் போது புத்தகம் எடுத்துப் போகக் கூடாது. அலுவலகத்துக்கு நடந்து செல்லும் போது வேறு எதைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடாது. கண்ணில் படும் ஏதாவது காட்சியினால் எண்ணங்கள் தூண்டப்பட்டு கடந்த காலை நினைவுகளுக்கும், எதிர்கால திட்டங்களுக்கும் இழுத்துச் செல்லப்பட்டாலும் அதை உணர்ந்ததும் என்ன வரிசையில் அப்படிப் போனோம் என்று தடம் பிடித்து நடக்கும் பாதையை அவதானிப்பது மட்டும் செய்ய வேண்டும்.

தியானம் என்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. வாழும் ஒவ்வொரு நிமிடமும் தியானத்தில் இருப்பதாக மனதை ஒருமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுதான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பாடம். பள்ளிப் பருவத்தில் வீட்டில் 'அறிந்ததனின்றும் விடுதலை' என்று அட்டையில் பிசாசு போல கிருஷ்ணமூர்த்தி இருக்கும் புகைப்படம் போட்டு தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று கிடந்தது. எது கிடைத்தாலும் முக்கி முக்கி படித்து முடித்து விடும் என்னால் கூட அதில் புகுந்து படித்து விட முடியவில்லை. அதன் பிறகு கல்லூரியில் படிக்கும் போது ஆங்கில மூலத்தில் சில நூல்களை பிடித்து கொஞ்ச கொஞ்சமாக படிக்க ஆரம்பித்தேன். மிகவும் தூக்கம் வரவழைத்து விடக் கூடிய நடை. மிகவும் ஆழமான தத்துவம். அதைப் புரிந்து கொண்டு விட்டால் அவரது மற்ற நூல்களைப் படிக்கத் தேவையில்லை.

நிகழ்காலத்தில் மட்டும் வாழ வேண்டும். கடந்த காலம் என்று பிணத்தையும், எதிர்காலம் என்ற மாயையும் சுமந்து கொண்டிருந்தால் மனம் துன்புறத்தான் செய்யும். Just Be. அதை புத்தகம் புத்தகமாக, பிரசங்கம் பிரசங்கமாக விளக்கியிருப்பார். அவரது விளக்கங்களில் மனம் மாறினாலும், முற்றிலும் நிகழ்காலத்தில் வாழ்வது என்பது உடனேயே செய்து விடக் கூடியது இல்லை.

நன்கு நடந்து பழக வேண்டும் என்று மனிதர்களுக்குச் சொல்வது எளிது. குழந்தை ஒன்று முதலில் தவழ்ந்து, அதன் பிறகு தத்தி நடந்து, அதன் பிறகுதான் நடக்க முடியும். ஆரம்பத்திலேயே Just Be என்றால் எதுவும் வேலைக்காகாது.

ஓஷோ என்ற ரஜ்னீஷ் சாமியார் கிருஷ்ணமூர்த்தியை கிண்டலடிப்பார். அவரது பாடங்கள் படிப்பதற்கும் பின்பற்றுவதற்கும் எளிதானவை. 'சாப்பிடும் போது திட உணவுகளை திரவம் போலவும், திரவ உணவுகளை திட உணவு போலவும் வாயில் ஆக்கி சாப்பிட வேண்டும் என்பார். திட உணவை நன்கு சவைத்து, திரவமாக்கி விழுங்க வேண்டும். திரவ உணவை திட உணவை சவைப்பது போல வாயில் சுழற்றி விழுங்க வேண்டும். அப்போதுதான் உணவின் சுவையையும் குணத்தையும் நன்கு உணர்ந்து சாப்பிட முடியும்.' இது போல சின்னச்சின்ன எளிதில் புரியக் கூடிய வழிகளை நூற்றுக் கணக்கில் சொல்லிக் கொண்டே போவதில் ஓஷோவின் பாடங்கள் எளிதில் பின்பற்றும்படி இருக்கும்.

No comments: