Sunday, April 12, 2009

கூட்டுறவும் முதலாளித்துவமும்

ஒரு நிறுவனத்தில் விற்பனை மதிப்பிலிருந்து எல்லா இடுபொருட்களின் விலையை கழித்தால் கிடைப்பது நிறுவனம் கூட்டிய மதிப்பு. அந்த மதிப்பில் ஒரு பகுதி வேலை செய்தவர்களுக்கு ஊதியமாகவும், ஒரு பகுதி அரசாங்கம் செய்து கொடுத்த வசதிகளுக்கு வரியாகவும், கடைசி பகுதி முதலீடு செய்தவர்களுக்கு ஆதாயமாகவும் போக வேண்டும்.

ஒரு வகை நிறுவனம்
10 லட்ச ரூபாய் மதிப்பு கூடுதல் கிடைத்தால் பத்தாயிரம் (1%) ரூபாய் சம்பள செலவு, மீதியில் அரசு நிர்ணயித்த வீதத்தில் வரி கட்டி கிட்டத்தட்ட 6 முதல் 7 லட்ச ரூபாய் ஆதாயமாக எடுத்துப் போவது முதலாளித்துவ நடைமுறை. மதிப்பு கூடுதல் பாதியாக குறைந்து 5 லட்சம் ஆகி விட்டாலும் சம்பளம் கொடுக்கப்படும், அரசுக்கு வரி தொகை குறையும், முதலாளியின் ஆதாயமும் குறையும். இப்படி குறைந்து போகும் மதிப்பு கூடுதலை சரிகட்ட எதிர்பார்த்த அளவு செயல்படாத ஊழியர்களை பணி நிறுத்தம் செய்து விடுவார்கள். சம்பளச் செலவு 7000 முதல் 8000 ஆக குறைந்து போகலாம்.

கூடுதல் மதிப்பு 3 லட்சம் அல்லது 2 லட்சம் என்று ஆகி விடும் நிலைமை வருவதற்கு முன்னால் நிறுவனமே இழுத்து மூடப்பட்டு விடும்.

இப்படி இருக்கும் நிறுவனம் எப்படி இருக்கும்?
  1. முதலாளி கடவுளாக மதிக்கப்படுவார். அவர் சொல்வதுதான் வேத வாக்கு. அவரது ஒரு சொல்லின் மூலம் பணி புரியும் ஊழியரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடலாம்.
  2. 'உன்னிடம் சொன்ன வேலையை செய், கேள்விகள் கேட்பதை மறந்து விடு. மாதா மாதம் சம்பளம் கிடைக்கிறது அல்லவா. முதலாளிக்குத் தெரியும் என்ன நடக்கிறது என்று'. வேலை செய்பவர்களின் மனத் திறமையில் பெரும்பகுதி அடைபட்டுப் போய் விடும்.
  3. ஒன்றாம் தேதி ஆனால் சம்பளப் பணம் கையில் வந்து விட வேண்டும்.
  4. 'விருப்பம் இருக்கும் வரை வேலை செய். இன்னொரு நிறுவனத்தில் 10 ரூபாய் கூடுதல் ஊதியம் தருகிறார்கள் என்றால் விட்டு விட்டுப் போய் விடு'.
இன்னொரு வகை நிறுவனம்

10 லட்ச ரூபாய் மதிப்பு கூடுதல் கிடைத்தால் ஒன்பதரை லட்ச ரூபாய் (95%) சம்பளம், அரசுக்கு வரி கட்டுவதற்கு எதுவும் மிஞ்சாமல், முதலீட்டுக்கு ஆதாயமும் கிடைக்காமல் போகிறது.

மதிப்பு கூடுதல் 15 லட்சமாக அதிகரிக்கும் போது சம்பளம் கொடுப்பதும் 14 லட்சமாக அதிகரிக்கிறது. இப்படியே அதிகரித்து மதிப்பு கூடுதல் 1.5 கோடி ரூபாய் ஆகும் போது சம்பளம் 1.3 கோடி கொடுத்து மீதி இருப்பதில் வரியும் ஆதாயமும் பார்த்துக் கொள்ளலாம் என்று நிறுவனம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இங்கு நிலவரம் எப்படி இருக்கும்?
  1. முதலாளி மனிதராக மதிக்கப்படுவார். அவரை போல நல்லவர் கிடையாதுங்க. எல்லோருக்கும் எவ்வளவு வாய்ப்புகள் கொடுக்கிறார். உடன் பணி புரிபவர்களை இயந்திரங்கள் போல நடத்தாமல் அவர்களையும் தொழிலை புரிந்து அதில் தமது பணியை செய்ய ஊக்குவிக்கிறார்.
  2. 'நிறுவனத்தில் என்ன வருமானம் வருகிறது, என்ன செலவாகிறது என்று உனக்குத் தெரியும். வருமானம் வருவது குறைந்தால் நம் எல்லோருக்கும் பாதிப்பு உண்டு வருமானம் வருவது அதிகமானால் எல்லோருக்கும் நல்லது'. வேலை செய்பவர்களின் மனத் திறமைக்கு சவால்.
  3. சம்பளம் கிடைப்பது நிறுவனத்தின் மாதாந்திர வெற்றி தோல்வியைப் பொறுத்தது. எல்லோரும் நிறை குறைகளை விவாதித்து குறைகளை களைந்து சரியான வழி வகுத்து நிறுவனம் முன்னேற முயற்சிப்பார்கள்.
  4. ஒவ்வொரு ஊழியரும் ஒரு தொழில் முனைவராக செயல்பட்டு நிறுவனத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்துவார்கள். கூடுதல் வருமானம் தேவைப்பட்டால் நிறுவனத்தின் வருமானத்தை இப்படி பெருக்கினால் நான் அதில் X சதவீதத்தை ஊதியமாக கேட்டுப் பெறலாம். எதற்கு வேறு இடத்தைப் பார்க்கப் போக வேண்டும்.
இவ்வகை நிறுவனம் செயல்பட சாத்தியங்கள் உண்டா?

4 comments:

Unknown said...

//இவ்வகை நிறுவனம் செயல்பட சாத்தியங்கள் உண்டா? //

சுத்தமாக இல்லை.

கொள்ளை லாபம் கிடைக்கத்தான் தொழிலை துவக்குகிறார்கள் முதலாளிகள்.பத்து லட்சம் சம்பாதித்து ஒன்பதரை லட்சத்தை சம்பளமாக கொடுக்க அவர்கள் என்ன தரும சத்திரமா நடத்துகிறார்கள்? :-))

"நல்ல கற்பனை.ஆனால் நடைமுறையில் சாத்தியமற்றது...." அதுக்கு பெயர்தான் பொதுவுடமை.

மா சிவகுமார் said...

செல்வன்,

//கொள்ளை லாபம் கிடைக்கத்தான் தொழிலை துவக்குகிறார்கள் முதலாளிகள்//

உண்மையிலேயே அப்படித்தான் நினைக்க ஆரம்பித்து விட்டீர்களா என்ன? எனக்கு அப்படித் தோன்றவில்லை. கொள்ளை லாபம் என்று யாரும் தொழில் தொடங்குவதில்லை. அதற்கான அடிப்படை உந்துதல் வேறு வகையில் இருக்கும். அதற்குப் பிறகு எவ்வளவு லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பது வேறு கதை.

அன்புடன்,
மா சிவகுமார்

Anonymous said...

This is possible. We are working with a company in Bangalore. In our company everyone knows what we are billing and how much we are making. Also, it is possible for us, if we do more output, we will get more at the end of the year. We have been doing this for last 3 yrs. And we have grown from 5 people company to 80 people in 3 yrs.

மா சிவகுமார் said...

உங்கள் முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள் அனானி.

அன்புடன்,
மா சிவகுமார்