Tuesday, June 29, 2010

பணம் என்பது திறமையின் வெளிப்பாடா?

தமிழ்நாட்டில் நீண்ட தூர பேருந்துகளில் கட்டண வீதம் ஒரு கிலோமீட்டருக்கு 28 பைசா.
  • 28 ரூபாய் இருந்தால் 100 கிலோமீட்டர் போகலாம். (100 கிலோமீட்டர் x 28 பைசா = 28 ரூபாய்).

  • 5 ரூபாய் இருந்தால் 15 கிலோமீட்டர் போகலாம் (500 பைசா / 28 பைசா = 17.8). 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊருக்கு போக முடியாது. (விரைவுப் பேருந்துகள் சிறப்புப் பேருந்துகள் என்று பல தடங்களில் கட்டணம் கூடுதலாக இருக்கும்.)
கணக்கை எளிமைப் படுத்த ஒரு ரூபாய்க்கு எத்தனை கிலோமீட்டர் போகலாம் என்று குத்துமதிப்பான எண்ணை வைத்துக் கொண்டு பார்க்கலாம். 100/28 = 3.5 கிலோமீட்டர்கள்.

இரண்டு ரூபாய் கொடுத்து நாளிதழ் வாங்குகிறோம் என்றால் 7 கிலோமீட்டர் (2x3.5) நடப்பதில் அல்லது ஓடுவதில் செலவாகும் உழைப்பை அந்த நாளிதழுக்காக தருகிறோம் என்பது பொருள். அப்படிப் பார்க்கும் போது 2 ரூபாய்க்கு மதிப்பு இன்னும் தெளிவாகப் புரிகிறது.

ஒரு வேலைக்கு பத்தாயிரம் ரூபாய் கேட்கிறோம் என்றால் கிட்டத்தட்ட 35,000 கிலோமீட்டர் (10,000x3.5=35,000) நடப்பதற்கான உழைப்பை நாம் அளிக்கிறோம் என்று பொருள். அந்த உழைப்பில் இப்போது செலவளிக்கும் நேரம் ஆற்றலுடன் கூடவே அந்த வேலையைச் செய்யத் தேவையான திறமையைப் பெற மேற்கொண்ட கல்வி, விபரங்களைத் திரட்ட செலவழித்த நாட்கள் இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு உழைப்பு அதில் இருக்கிறதா?

1 லட்சம் ரூபாய் மென்பொருளை விற்கிறோம் என்றால் கிட்டத்தட் (1,00,000x3.5=3,00,000) 3.5 லட்சம் கிலோமீட்டர் தொலைவு பயணிக்கும் முயற்சியும் பலனும் அளிக்க வேண்டும். அப்படி அளிக்கிறோமா?

இதுதான் கணக்கு.

  • பொருளாதார உலகில் எல்லாமே மனித உழைப்புதான். மற்றவை எல்லாம் இயற்கையில் கிடைப்பவை.
  • நிலம், தாதுப் பொருட்கள், விளைபொருட்கள் இவை இயற்கையிலேயே உருவாகியிருக்கின்றன.
  • நிலத்தைப் பண்படுத்த, தாதுப் பொருட்களை அகழ்ந்து தூய்மைப்படுத்த, விளைபொருட்களை பெருக்க, புதிய பொருட்களை உற்பத்தி செய்ய மனித உழைப்பு தேவைப்படுகிறது.
  • இந்த உழைப்பு நேரடியாகவோ அல்லது ஒரு இயந்திரம் மூலமாகவோ நடக்கலாம். இயந்திரம் செய்யவும் மனித உழைப்புதானே தேவைப்படுகிறது.

இந்த மனித உழைப்புக்கு மட்டும்தான் பொருளாதார பரிமாற்றத்தில் மதிப்பு. உழைப்பின் விளைவை பணமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

நமது உழைப்பினால் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து கொள்ள முயற்சிக்காமல், தேவைகளில் பலவற்றை மற்றவர்களின் உழைப்பின் மூலம் சாதித்துக் கொள்ள முடிகிறது. நமது உழைப்பின் பலனை அவர்களின் தேவைகளுக்குக் கொடுப்பது மூலம் அந்தப் பரிமாற்றத்தை நடத்திக் கொள்கிறோம்.

அப்படிப்பட்ட பரிமாற்றத்தின் செலாவணிதான் பணம். நான் உழைத்ததற்கு பணம் கிடைக்கிறது, அதைக் கொண்டு அடுத்தவரின் உழைப்பை வாங்கிக் கொள்கிறேன். ஒரு நாளின் 24 மணிநேரமும் ஒரு வாழ்நாளும்தான் ஒவ்வொரு மனிதரின் இயற்கையான சொத்து. அவற்றைப் பயன்படுத்தி உருவாக்கும் மதிப்பை விற்று பணம் ஈட்டி மற்ற தேவைகளை நிறைவேற்ற அடுத்தவரின் உழைப்பை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த உழைப்பு நேரடியான உடல் உழைப்பாக மட்டும் இன்றி, முந்தைய ஆண்டுகளில் குறிப்பிட்ட வேலையை செய்ய உழைத்த முயற்சிகளையும் உள்ளடக்கும். ஒரு துறையில் பட்டம் வாங்க உழைத்திருக்கிறோம், அந்த அறிவைக் கொண்டு குறிப்பிட்ட செயலை சிறப்பாக செய்ய முடிகிறது (அதிக மதிப்பு உண்டாக்க முடிகிறது), அதற்கு ஏற்ற பணம் விற்பனையில் கிடைக்கும்.

இந்த உழைப்பில் பணியை செய்வதற்குத் தேவையான கருவிகளை வாங்கிய பணமும் அடங்கும். கருவிகள் மூலம் உழைப்பு அதிக மதிப்பைத் தருகிறது. அந்தக் கருவிகளை வாங்குவதற்கு முந்தைய உழைப்பின் பலனைப் பயன்படுத்தியிருக்கிறோம். அந்த உழைப்பும் நமக்குக் கிடைக்கும் விலையில் அடங்க வேண்டும்.

உற்பத்தியின் காரணிகளாக நிலம், மனித உழைப்பு, மூலதனம் என்று எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பரிமாற்றத்தின் காரணிகளாக மனித உழைப்பு மட்டுமே இருக்க வேண்டும். நிலத்தைப் பண்படுத்திய உழைப்பு, மூலதனத்தை உருவாக்கிய உழைப்பு இரண்டையும் நேரடி உழைப்புடன் சேர்த்து உற்பத்தியின் மதிப்பை கணக்கிடலாம்.

No comments: