Wednesday, March 12, 2008

சன்னுக்கு என்ன ஆச்சு?

ஐபிஎம் நிறுவனங்களுக்கு தகவல் தொழில் நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனமாகத் தன்னை மறு அடையாளப்படுத்திக் கொண்டது. பயனர் கணினிப் பிரிவை லெனோவோ நிறுவனத்துக்கு விற்று விட்டது. இன்றைக்கு விற்பனையில் ஒரு பெரும் பகுதி சேவைகளிலிருந்து கிடைக்கிறது.

ஆரக்கிள் நிறுவனம் நிறுவன வள மேம்பாட்டு சேவை நிறுவனமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. தரவுத் தளம் மட்டும விற்கும்் நிறுனமாக இருந்து நிறுவனத்துக்குத் தேவையான எல்லா சேவைகளையும் வழங்கும் படி மற்ற சின்ன நிறுவனங்களை வாங்கி உள்வாங்கி சக்கை போடு போடுகிறது.

மைக்ரோசாப்டுக்கு அடுத்த சில ஆண்டுகளுக்கு மேசைக் கணினிகளுக்கு இயங்குதளமும் அலுவலக மென்பொருளும் விற்பதிலேயே நிறைந்து விடும். அதைச் சுற்றிச் சுற்றி மதில்கள் எழுப்புவதிலேயே முழுக்கவனமும் இருப்பது போல தெரிகிறது.

சன் மைக்ரோ சிஸ்டமஸ்் என்ன செய்கிறது?

ஜாவா தொடர்பான சேவைகளில் அதை உருவாக்கிய சன்னை முந்தி விட்டன பிற நிறுவனங்கள். சன் தனது இயங்குதளம் சோலாரிசை ஓப்பன் சோர்சாக வெளியிட்டு விட்டது. லினக்சு முதலான ஓப்பன் சோர்சு மென்பொருட்களுக்கும் ஆதரவு உண்டு.

சோலாரிஸ் கணினிகளின் விற்பனை வளர்ச்சி போதுமானதாக இல்லை. எங்கே போகிறது சன்?

3 comments:

dondu(#11168674346665545885) said...

//சன் தனது இயங்குதளம் சோலாரிசை ஓப்பன் சோர்சாக வெளியிட்டு விட்டது. லினக்சு முதலான ஓப்பன் சோர்சு மென்பொருட்களுக்கும் ஆதரவு உண்டு.//
ஒரு வேளை அதுதான் சன் செய்த தவறோ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சீனு said...

பெரும்பாலும் மைக்ரோசாப்ஃடை ஒழிக்கவே இந்த ஓப்பன் சோர்ஸ் வகையறாக்கள் கொண்டுவரப்பட்டன. ஆனாலும் இப்போதைக்கேனும்(!) மைக்ரோசாப்ஃடை ஒழிக்க முடிய்யாது போல தோன்றுகிறது.

மா சிவகுமார் said...

டோண்டு சார்,

நான் கொடுத்துள்ள சுட்டியில் ஜோயல் விளக்கியிருப்பது இப்படி:

ஒரு பொருளின் துணைப் பொருளின் விலை குறைந்தால் முதல் பொருளின் தேவை அதிகமாகும். எடுத்துக்காட்டாக, செல்பேசி சேவைக் கட்டணம் குறைந்தால், செல்பேசிக் கருவிகளின் தேவை அதிகரிக்கும்.

புத்திசாலித்தனமான நிறுவனங்கள், தாம் விற்கும் பொருளின் துணைப்பொருட்களின் விலையைக் குறைக்க அல்லது அது இலவசமாகக் கிடைக்க வைக்கத் திட்டம் போடுவார்கள்.

IBM ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்களுக்கு உதவி புரிகிறது என்றால், நிறுவன மென்பொருட்களின் விலையைக் குறைக்க முயற்சிக்கிறது என்று பொருள். அதன் மூலம் தான் விற்கும் நிறுவன தொழில் நுட்ப சேவைக்கு தேவையை அதிகரிக்க வைக்கிறது.

இப்போது சன் நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம்:
சன் மைக்ரோசிஸ்டத்தின் முக்கிய வருமானம், கணினிகளை (சோலாரிஸ்) விற்பது மூலம் கிடைக்கிறது. அவற்றில் இயங்கும் மென்பொருட்களின் விலை குறைந்தால் கணினி விற்பனை அதிகமாகும். அதற்காக சோலாரிஸ் ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்களை ஆதரிப்பது புரிந்து கொள்ளலாம்.

அதே நேரத்தில் அவர்கள் ஜாவா கோட்பாட்டிலும் நேரம் செலவிடுகிறார்கள். ஜாவா மொழியின் சிறப்பு என்னவென்றால் ஒரு முறை எழுதி விட்டால் அந்த நிரலை எல்லா வகை கணினிகளிலும் பயன்படுத்தலாம். அதாவது சோலாரிஸ் மட்டும் இல்லாமல் எந்தக் கணினியிலும் இயங்கக் கூடியதாக ஒரு மென்பொருள் கோட்பாட்டை சன் ஏற்படுத்தியது.

இதனால் மென்பொருளின் மதிப்பு அதிகரித்து கணினிகளின் விலை சரியும்.

இப்படி எதிரெதிர் பக்கங்களில் இழுத்துக் கொண்டு போகும் சன் எங்கு போய் நிற்கும் என்று தெரியவில்லை.

குறிப்பாக உங்கள் கேள்விக்கு விடை:

//ஒரு வேளை அதுதான் சன் செய்த தவறோ.//

இல்லை. சோலாரிஸ் கணினிகளின் விற்பனை அதிகமாவதற்கு மென்பொருட்களை விலை சரிய வைப்பதுதான் சரியான அணுகுமுறை.

சீனு,

//பெரும்பாலும் மைக்ரோசாப்ஃடை ஒழிக்கவே இந்த ஓப்பன் சோர்ஸ் வகையறாக்கள் கொண்டுவரப்பட்டன. //

மைக்ரோசாப்டு மென்பொருள் விற்பது மூலமே தனது வருமானத்தைப் பெருமளவு ஈட்டுகிறது. நீங்கள் சொல்வது போல ஓப்பன் சோர்ஸ் வந்திருக்கா விட்டால், யூனிக்சும், சோலாரிசும் நிராகரிக்கப்பட்ட சிறிய நடுத்தர நிறுவனங்களில் மைக்ரோசாப்டின் சர்வர் மென்பொருட்கள் இன்றைக்கு மேசைக் கணினிகளில் இருப்பது போல தனிக்காட்டு ராஜாவாக விளங்கியிருக்கும்.

ஐபிஎம் முதலானோர் அதை உணர்ந்துதான், சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு லினக்சு முதலான ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்களை பயன்படுத்த வைத்து அதற்கான சேவைகளை அளிக்க வழி செய்து கொண்டார்கள். (ஓப்பன் சோர்சு இயக்கம் அதற்கு வெகு காலம் முன்பே இருந்து வருகிறது)

இதன் மூலம் சர்வர் பக்கத்தில் மைக்ரோசாப்டின் ஆதிக்கம் ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொண்டார்கள்.

//இப்போதைக்கேனும்(!) மைக்ரோசாப்ஃடை ஒழிக்க முடிய்யாது போல தோன்றுகிறது.//

இன்றும் மைக்ரோசாப்டு வலிமையாக இருப்பது மேசைக் கணினிகளுக்கான இயங்கு தளம் அலுவலக பயன்பாடுகளுக்கான சந்தைகளில் மட்டும்தான். அந்தப் பிடி தளர ஆரம்பித்து மைக்ரோசாப்டின் அங்கும் ஆதிக்கத்தின் முடிவின் ஆரம்பம் வந்து விட்டது என்பது எனது அவதானம்.

அன்புடன்,
மா சிவகுமார்