Decoupling என்பது நடந்து, அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் நிகழ்வது இந்திய பொருளாதாரத்தை பாதிக்கவே செய்யாது என்று இருந்தால் ஒழிய இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு கவனமாக இருப்பது மிகவும் தேவை
கலிஃபோர்னிய தங்க வேட்டை யின் வீணாக்கல்களை இன்னும் முழுவதுமாக களைந்து முடிக்காமல் 'இனி எல்லாம் சுகமே' என்று பாட்டு பாட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்க / பன்னாட்டு பெருவங்கிகள். அரசாங்கங்களின் முட்டுக் கொடுப்பால் தப்புக்கு தண்ணீர் குடிக்காமல் தவிர்த்துக் கொண்ட வங்கிகள் மீண்டும் தமது வளமையான பேராசை/சுயநல நிதி நிர்வாக முறைகளுக்கு திரும்ப முயற்சிப்பதாக செய்திகள்.
அமெரிக்கர்கள் 100 டாலர்களுக்கு உழைத்தால் 1 டாலர் கூட சேமிக்காத நிலைமை கடந்த பத்தாண்டுகளில் இருந்தது. சேமிப்பு இல்லை என்றால் புதிய முதலீடுகள் தொழில் முனைவுகள் சாத்தியமாகாது. அமெரிக்கர்களின் வாழ்க்கைக்கு சீனாவும், மற்ற வளரும் நாடுகளும் தமது சேமிப்புகளை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன. சீனாவின் கையில் குவிந்திருக்கும் டாலர் கையிருப்புகள் அதற்கு சாட்சி.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கர்களின் சேமிப்பு வீதம் அதிகரித்திருக்கிறது.
100 டாலர் வருமானத்தில் 95 டாலர்தான் செலவழிக்கிறார்கள். 5 டாலர் சேமிக்கிறார்கள். (சீனாவில் இந்த வீதம் 100க்கு 30 முதல் 40 வரை (யுவான்) சேமிப்பு, இந்தியாவில் 100க்கு 30 ரூபாய் சேமிப்பு).
1990களிலிருந்து அமெரிக்க சேமிப்பு வீதம் எப்படி மாறியிருக்கிறது என்று இங்கே பார்க்கலாம்.
இப்படி அமெரிக்கர்கள் 4% குறைவாகச் செலவழிக்கிறார்கள் என்றால், சந்தை தேவை பெரிதாக குறைந்து விட்டிருக்கும். இந்த சேமிப்பு இன்னும் வளர்ந்து 100க்கு 15 முதல் 20 வரை சேமிப்பு என்ற நிலை வரும்போதுதான் அமெரிக்காவின் பொருளாதார ஆரோக்கியம் சீரடையும். அதற்குள் பொருளாதார உலகின் திட்டங்கள், நடைமுறைகள் எல்லாம் மாறி, புதியதோர் நிதிநிர்வாக, தொழில்/வணிக முறை உருவாகியிருக்க வேண்டும்.
கிட்டத்தட்ட 10% அமெரிக்க செலவழிப்பில் குறைவை, உலகின் பிற பகுதிகள் ஈடு கட்ட வேண்டும் - இந்த செலவு நுகர் பொருட்களிலேயே இருக்க வேண்டும் என்றில்லாமல், புதிய தொழில் நுட்பங்களில் முதலீடு என்ற அளவிலும் இருக்கலாம்.