ஜோயல் ஆன் சாஃப்ட் வேர் ஜோயல் ஏதோ தொழில்நுட்பக் கருத்தரங்கு அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடத்தப் போகிறாராம். அதில் கலந்து கொள்ள கட்டணம் $99 டாலர்கள் தலைக்கு. எல்லா நகரங்களிலும் பேசப் போகிறவர் ஜோயல். அவர் பேசப் போவது அவர்கள் நிறுவனம் தயாரித்து விற்கும் FogBugz என்ற மென்பொருள் பயன்படுத்துவதைக் குறித்து. அதைத் தவிர மற்ற பேச்சாளர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களைக் குறித்துப் பேசுவார்கள்.
http://joelonsoftware.com/items/2009/05/12.html
10 ஆண்டுகளாக வலைப்பதிவில் எழுதிய புகழை வைத்துக் கொண்டு அரித்துக் கொட்டுகிறார். அவரது மென்பொருளைப் பற்றிக் கேட்பதற்கு கட்டணம் கட்டி வரும்படி மற்றவர்களை தூண்டும் அளவுக்கு செல்வாக்கு ஈட்டியிருக்கிறார். இவர் எழுதுவது எல்லாம் பலனுள்ள தகவல்களை தரும். இவர் பேசும் போது அவரது நிறுவன மென்பொருளை அடிப்படையாக வைத்திருந்தாலும், அதிலிருந்து உருப்படியாக பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறார். அதனால்தான் $99 டாலர் கட்டி அவர்களது கருத்தரங்குக்கு வரும்படி மக்களை வரவேற்கிறார்.
அதுவும் எப்படி, முதலில் கருத்தரங்கு எந்த மாதிரி இருக்கும். எப்படிப்பட்ட பேச்சுக்கள் இருக்கும். எந்த மாதிரி பேச்சாளர்கள் வருவார்கள் என்று சொல்லி விட்டு, அதை ஏற்பாடு செய்ய எவ்வளவு செலவாகும் என்று ஒரு கணக்கு. ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டணம் என்றால் இந்தப் பொருளாதாரச் சுணக்கத்தில் யாரும் வரப் போவதில்லை. அதனால் உங்களுக்காக $99 டாலரில் இதை ஏற்பாடு செய்கிறோம்.
கொஞ்சம் கீழே சாப்பாடு குறித்து சொல்கிறார். இந்த $99 டாலரில் சாப்பாடும், பானங்களும் அடங்கும். படிப்பவரின் மனதத்துவத்தை நன்கு புரிந்து கொண்டு எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் அவர் சம்பாதித்து வைத்திருக்கும் நல்லெண்ணத்தை அடிப்படையாக தொடங்கி, முதலில் பலன்கள். அதன் பிறகு அதற்கு ஆகக் கூடிய செலவுகள் என்று ஒரு பெரிய தொகை, அதைத் தொடர்ந்து குறைந்த செலவிலேயே எப்படி கலந்து கொள்ளலாம் என்று குறிப்பு, தொடர்ந்து அந்த கட்டணத்துக்கே இன்னும் என்ன கிடைக்கிறது என்ற விபரங்கள். இறுதியாக 300 பேருக்கான இடங்கள் சீக்கிரம் நிரம்பி விடும். முந்துங்கள் என்று சொல்லும் வாக்கியங்கள்.
ஒரு விற்பனை ஆவணம் இப்படித்தான் இருக்க வேண்டும். நமது தகுதியை முதலில் குறிப்பிட வேண்டும். நாம் சொல்வதை ஏன் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நிறுவி விட்டு, என்னென்ன ஆதாயங்கள் கிடைக்கும் என்று சொல்ல வேண்டும். அந்த ஆதாயத்தைப் பெறுவதற்கு பொதுவாக என்னென்ன செலவாகும் என்று சொல்ல வேண்டும். நாம் அதே பணிகளை அந்த செலவில் நான்கில் ஒரு பங்கில் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். அதைத் தொடர்ந்து நமது சேவையில் கூடுதல் என்னென்ன நன்மைகள். இறுதியாக கொஞ்சம் பிகு செய்து கொள்ள வேண்டும். படிப்பவர் இதை வாங்கா விட்டால் நாம் எதையோ தவற விட்டு விடுவோம் என்று நினைக்கும் படி இருக்க வேண்டும்.
2 comments:
சிவகுமார், இவ்விடுகையில் ஒரு தகவல் பிழை இருக்கிறது. இந்தக் கருத்தரங்கு அவரது தயாரிப்பான ஃபாக்பக்ஸ் பற்றியது அல்ல. அவரும் இன்னொருவரும் சேர்ந்து அமைத்த ஸ்டேக் ஓவர்புளோ என்னும் கணிய நுட்ப மன்றத்துப் பயனாளர்களுக்கான ஒன்று.
stackoverflow.com
நீங்கள் சொல்வது சரிதான் செல்வராஜ்.
ஜோயலின் இடுகையைப் படிக்கும் போது stackoverflow பற்றிய கருத்தரங்கு என்றுதான் படிக்க ஆரம்பித்தேன். அதில் பேசப் போகும் பொருள்களின் பட்டியல்
* Android
* Objective C and iPhone development
* Google App Engine
* Python
* jQuery
* ASP.NET MVC
* FogBugz 7.0
* Mercurial and Distributed Version Control
ஒன்பதாவது பொருள் FogBugz. FogBugz என்றது ஜோயலின் நிறுவனம் உருவாக்கும் ஒரு மென்பொருள் நிரலாக்க மேலாண்மை மென்பொருள், அவ்வளவுதான். அதை பெரிய பெரிய தொழில்நுட்பங்களுக்கு நடுவில் நுழைத்திருக்கிறார்.
ஒரு மென்பொருளை சந்தைப்படுத்துவதற்கு இந்த அணுகுமுறை சிறப்பாகப் பட்டது எனக்கு.
அதே கட்டுரையில் கீழே சில பத்திகள் கழித்து, எல்லா ஊர்களிலும் பேசப் போவது தான் ஒருத்தர்தான் உறுதி என்கிறார்.
இதை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் தனது வணிகத்தைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கில்தான் இந்த ஏற்பாடுகளைச் செய்கிறார். அதையும் புத்திசாலித்தனமாகச் செய்கிறார் என்று பட்டது.
அதைத்தான் இடுகையாகப் போட்டேன். மேலே சொன்ன என் எண்ண ஓட்டங்களை எல்லாம் வெளிப்படுத்தாமல் அமைந்து விட்டதால் தகவல் பிழை இருப்பதாக போய் விட்டது :-)
அன்புடன்,
மா சிவகுமார்
Post a Comment