Sunday, April 8, 2012

ஒளிரும் இந்தியா - 1

ஆண்டு தோறும் மத்திய அரசும் மாநில அரசுகளும் அறிவிக்கும் திட்டங்களையும், விளம்பரப்படுத்தும் சாதனைகளையும் மட்டும் வைத்துப் பார்த்தால், இந்திய மக்கள் அனைவரும் வேலை செய்யாமல் வீட்டில் தூங்கிக் கொண்டே வாழலாம் என்று தோன்றும்.
  • ரேஷனில் இலவச அரிசி, 
  • பொழுபோக்குக்கு கலைஞர் தொலைக்காட்சி, 
  • அரைப்பதற்கு மிக்சி, கிரைண்டர், 
  • புழுங்கினால் போட்டுக் கொள்ள மின்விசிறி, 
  • அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு இலவசச் சத்துணவு, இலவச சீருடை, இலவச புத்தகங்கள், 
  • மேல்நிலை பள்ளிக்கு வந்து விட்டால் மிதி வண்டி, 
  • மடிக்கணினி
யாருக்கும் எந்த கஷ்டமும் கிடையாது.

இவை அனைத்தும் மக்களின் உழைப்பை உறிஞ்சும் வலி தெரியாமல் இருக்க கொடுக்கப்படும் போதை மருந்துகள் என்று சொல்லாமல் சொல்கிறது 2012-13ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்.

1991ல் ஆரம்பித்த தனியார் மயம், தாராள மயம், உலக மயமாக்கலுக்குப் பிறகு நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் வந்து குவிந்து, இந்திய தொழிலதிபர்கள் புதிய தொழில்களை ஆரம்பித்து இந்திய பொருளாதாரம் தலை தெறிக்கும் வேகத்தில் வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தால், இந்தியாவில் தேனாறும் பாலாறும் ஓடுவதாகத்தான் தோன்றும்.

"உலக பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கவும், நிலை கொள்ள  முடியாமல் அலையும் பன்னாட்டு மூலதனத்துக்கு ஒரு போக்கிடமாக இந்தியாவை உருவாக்கத்தான் இந்த கொள்கைகள்" 

என்று தனது பட்ஜெட் உரையில் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்  2012-13ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

பட்ஜெட் ஆவணங்கள் மற்றும் இந்திய பொருளாதார சர்வே ஆவணங்களிலிருந்து சில தகவல்களை தெரிந்து கொள்வோம்.

1. விவசாயம், தொழில் துறை, சேவைத் துறை

இந்தியா இன்னமும் ஒரு விவசாய நாடாகவே இருக்கிறது. பெரும்பான்மை மக்கள் (50%க்கும் மேல்) விவசாயத்தை சார்ந்தே வாழ்கிறார்கள். ஆனால் நாட்டின் மொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 1950கள் முதல் தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. 1950-51ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 53 சதவீதமாக இருந்த விவசாயத் துறை 2011-12ல் 13.9% ஆக தேய்ந்திருக்கிறது.

கிராமப்புறங்களில் வேலை செய்பவர்களில் 67.9% பேர் விவசாயத் துறையில் வேலை செய்கிறார்கள்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் துறை வாரியான பங்கீடு
ஆண்டு விவசாயம் தொழில் சேவை
1950-51 53.1 16.6 30.3
1960-61 48.7 20.5 30.8
1970-71 42.3 24.0 33.8
1980-81 36.1 25.9 38.0
1990-91 29.6 27.7 42.7
2000-01 22.3 27.3 50.4
2010-11 QE 14.5 27.8 57.7
2011-12 AE 13.9 27.0 59.0

இதன் பொருள் என்ன என்று பார்ப்போம்.

ஒரு பொருளாதார அமைப்பு என்ற வட்டத்தில் உற்பத்தி ஒரு பாதி, நுகர்வு என்ற இன்னொரு பாதி அதை முழுமை செய்கிறது. இன்றைய அமைப்பில் இந்த இரண்டையும் இணைப்பது சந்தை மற்றும் பணம். 50% மக்களின் உழைப்பில் உருவாகும் உற்பத்திக்கு 13.9% பணம் மட்டுமே சந்தையில் கிடைக்கிறது.

சுமார் 22% மக்கள் பங்கு பெறும் சேவைத்துறையில் 59% பணம் புழங்குகிறது.  சேவைத் துறை என்றால் எந்தெந்த துறைகள்?

  1. வர்த்தகம், ஹோட்டல்கள், உணவு விடுதிகள் - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.9%
  2. நிதி மேலாண்மை, காப்பீடு, ரியல் எஸ்டேட், தொழில் துறை சேவைகள் - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.4%

ஒவ்வொரு விவசாயியும் சந்தையில் ஒரு பொருளை வாங்கப் போகும் போது கையில் இருக்கும் பணத்தின் அளவு சுமார் 70 காசுகள் (14/50), சேவைத் துறையில் வேலை செய்யும் ஒருவர் கையில் இருக்கும் பணம் சுமார் 3 ரூபாய்கள். விவசாயி ஏழையாகத்தான் வாழ முடியும் என்பது தெளிவு.

இந்தப் போக்கு 1950களில் ஆரம்பித்து கழுத்தை இறுக்கும் கயிறு போல  பெரும்பான்மை மக்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வாக முதலாளித்துவ அறிஞர்கள் சொல்லும், விவசாயத்தில் ஈடுபடும் மக்களை வேறு துறைகளுக்கு திருப்பி விட வேண்டும் என்ற திட்டமும் இந்தியாவில் செயல்படுத்தப்படவில்லை.

விவசாயத் துறையில் தேய்வு ஏற்படும் பகுதிகளில், உள்ளூர் தொழில்கள் வளர்ந்தால் விவசாய தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் வேலைக்கு போக முடியும். அவர்கள் யூனியனாக ஒன்று சேர்ந்து உறுதியாக வேலை செய்ய முடியும் தொழில் துறையில் வேலை வாய்ப்புகள் பெருமளவு குறைந்திருக்கின்றன.

1990-91க்குப் பிறகு தொழில் துறையின் பங்கு வளரவேயில்லை. தமக்கு வாழ்வாதாரத்தை அழித்து வந்த நிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு சந்தையின் சுனாமி போன்ற விசைகளால் தூக்கி எறியப்படும் ஆயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் நகரங்களுக்கு படை எடுக்க வைக்கப்பட்டு உதிரி பாட்டாளிகளாக மாற்றப்பட்டுள்ளார்கள்.

விவசாயத்திலிருந்து எந்த திட்டமிடலும் இல்லாமல், சுனாமியில் தூக்கி எறியப்படுபவர்கள் போல நகரங்களுக்கு நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ வந்து சேருபவர்கள், சேரிகளிலும், சாலை ஓரங்களிலும் வசிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஆண்டுக்கு சில மாதங்கள் மட்டும் ஊருக்குப் போய் விவசாய வேலைகளில் ஈடுபட்டு மற்ற நேரங்களில் நகரங்களை சார்ந்து இருக்கும் விவசாயிகள் இந்தியாவில் கோடிக்கணக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு விவசாயி என்ற முறையிலான வாழ்வாதாரமும் இல்லை, தொழிலாளி என்ற முறையிலான பாதுகாப்பும் இல்லை.

பீகார், உத்தர பிரதேசம், ஒரிசா, வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வந்து சென்னையில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளிகள்தான் வளரும் இந்தியாவின் சின்னங்கள்.

2 comments:

selvan said...

உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது...

A rough and ready test of the level of the economic development of a country is to find out how much percentage of the population is engaged in industry, and how much in agriculture. The greater the percentage of population in industry and lesser in agriculture the more prosperous the country. Thus, the U.S.A., the most prosperous country in the world today has only about 2 or 3% of its population in agriculture, while the rest is in industry or services.

Justice Markandey Katju

http://www.kgfindia.com/caste-system-in-india.php

மார்கண்டேய கட்ஜுவின் இந்த கூற்றை நீங்கள் எப்படி பார்கிறிர்கள்?

செல்வன்.

மா சிவகுமார் said...

வணக்கம் செல்வன்,

பாடப் புத்தக பொருளாதாரப்படி மார்கண்டேய காட்ஜூவின் கூற்று 100% சரிதான்.

நடைமுறையில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி நேர் கோட்டில் இருப்பதில்லை. இந்தியாவில் தொழில் துறை வளர்ச்சி என்பது

1. காலனி ஆட்சி வரலாற்றில் கருக்கப்பட்டு
2. 1947க்குப் பிறகு பன்னாட்டு பெரு நிறுவனங்களின் நிழலில் அங்கொன்று இங்கொன்றாக முளை விட்டு
3. 1990களுக்குப் பிறகு பெருமளவு மேற்கத்திய நாடுகளைச் சார்ந்த சேவைத் துறைக்கு அடிமையாகி விட

விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை சுருங்கி தொழில் துறை வளர்வது முடக்கப்பட்டிருக்கிறது.

இப்போது,

1. பெரும்பகுதி சிறு விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் தொழிற்சாலையில் வேலை பார்க்கப் போவதில்லை.

2. பெரும்பாலானவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக, அன்றாடங்காய்ச்சிகளாக பெருநகரங்களை அடைகிறார்கள்.

3. தொடர்ந்து விவசாயத்துடன் முடிந்த அளவு தொடர்பை வைத்திருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் 'இந்தியாவில் விவசாயத்தை சுருக்கி தொழில் துறையை வளர்ப்போம்' என்பது வறட்டுத்தனமான பொருளாதாரவியல் என்றே கருதப்பட வேண்டும்.

நன்றி.