சரி பணம் என்றால் என்ன? என் பையில் 100 ரூபாய் இருக்கிறது என்றால் அதன் பொருள் என்ன?
பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம். உலகில் பணம் என்ற கோட்பாடே இல்லை. பணம் என்பது மனிதன் உருவாக்கியதுதானே!
ஆரம்ப உலகில் காட்டில் தனியாக ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பசித்தால் போய் மரத்தில் காய்த்துத் தொங்கும் பழங்களைப் பறித்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான். அவர் ஒரு நாள் இன்னொருவரைப் பார்க்கிறார். இரண்டாமவர் தினமும் காலையில் எழுந்து சின்ன விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுகிறார்.
முதலாமவருக்கு தினமும் பழம் சாப்பிட்டு சாப்பிட்டு சலிப்பாக இருக்கிறது. ஆனால் வேட்டையாடுவதற்கான நுணுக்கங்களும், திறமையும் கற்றுக் கொண்டிருக்கவில்லை. இரண்டாமவருக்கு எந்த இடத்தில் நல்ல பழம் கிடைக்கும் எப்படிப் பறிப்பது என்றெல்லாம் விபரங்கள் தெரியாது.
இருவரும் தம்மிடம் இருப்பதில் ஒரு பகுதியை அடுத்தவருக்குக் கொடுக்கிறார்கள். இரண்டு பேருக்கும் பழங்களும் கிடைத்து விட்டன, இறைச்சியும் கிடைத்து விட்டன. இப்போது கை மாறிய பொருட்கள் பழங்கள் மற்றும் இறைச்சி.
இப்போது மூன்றாவதாக ஒருவர் வருகிறார். ஒல்லியான உருவம், ஊதினால் பறந்து விடுவது போன்ற உடல் வாகு. மென்மையான முகம். அவர் கைகளில் பூங்கொத்துகள். அவர் பூக்களின் இதழ்களைச் சாப்பிட்டுதான் வாழ்ந்து வருகிறார். மூன்றாமவர் இந்தப் பகுதிக்கு வந்தவுடன் ஏற்பட்ட நறுமணத்தை உணர்ந்த முதல் இரண்டு நண்பர்கள் கொஞ்சம் பூக்களை வாங்கி வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
மூன்றாமவருக்கு அந்த நறுமணம் கமழும் பூக்கள் கிடைக்கும் இடம் தெரியும். அவரிடம் பூக்களை வாங்கிக் கொண்டு முதலாமவர் பழங்களையும் இரண்டாமவர் இறைச்சியும் கொடுக்கிறார்கள். இப்போது 3 பொருட்கள் 3 பேருக்கும் கிடைத்து விட்டன. மூன்று வகையான பரிமாற்றங்கள். பழம் - இறைச்சி, பழம் - பூ, இறைச்சி - பூ
மீண்டும் தாவி தற்காலத்துக்கு வந்து விடுவோம். இந்த மூன்று பரிமாற்றங்களுக்கும் பொதுவாக என்ன இருக்கும்? பணம். நான் பரிமாறிக் கொள்வதில் பெரும்பாலும் பணமும் இடம் பிடித்து விடுகிறது. பழம் விற்பவர் பழம் தேவைப்படுபவரிடமிருந்து பணம் பெற்றுக் கொள்கிறார். பூ தேவைப்படுபவர் தான் விற்று சம்பாதித்த பணத்தைக் கொடுத்து பூக்களைப் பெற்றுக் கொள்கிறார்.
பணம் என்றால் என்ன?
மீண்டும் ஆரம்ப கால மூன்று நண்பர்களிடம் போவோம். அவர்கள் பணம் என்று எதையும் தெரிந்திருக்க மாட்டார்கள். அவர்களும் பரிமாற்றங்கள் செய்து கொண்டார்கள். அந்த மூன்று பரிமாற்றங்களையும் பொதுப்படையாக அளக்க எதை காரணியாக வைத்துக் கொள்ளலாம்? அதுதான் பணம்.
பழம் தேவைப்படுபவர் கொஞ்சம் முனைந்தால், தேடிப்பிடித்து மரத்தில் ஏறி உராய்ந்து பழங்கள் பறித்துக் கொண்டிருக்கலாம். இறைச்சி வேண்டுபவரும் ஓடும் விலங்கு ஒன்றைத் துரத்தி ஓடி பல தோல்விகளுக்குப் பிறகு ஒன்றைப் பிடிப்பதில் வெற்றி கண்டிருக்கலாம்.
அவரிடம் பழத் தோட்டம் இருந்தது, இவரிடன் முயல் பண்ணை இருந்தது என்பதால் பரிமாற்றம் ஆரம்பிக்கவில்லை.
எளிமையான அந்தக் காலத்தில் பரிமாற்றத்தின் அடிப்படை, பொருள் அல்லது சேவையை செய்வதற்குத் தேவையான அறிவு, திறமை, உழைப்பு. மிகச் சிக்கலான ஆயிரக்கணக்கான பரிமாற்றங்களின் அடிப்படையும் மனித அறிவு, திறமை, உழைப்புதான்.
'உனக்கு இருக்கும் பழம் கிடைக்கும் இடத்தைப் பற்றிய அறிவு, பழம் பறித்துக் கொண்டு வந்த உழைப்பு இவற்றை நான் வாங்கிக் கொண்டு என்னுடைய பூக்கள் பற்றிய அறிவு, அவற்றைச் சரிவரப் பறித்து கொண்டு வந்த உழைப்பை மாற்றாகக் கொடுக்கிறேன்.'
இதுதான் மார்க்சின் கோட்பாடு. எல்லா மதிப்பும் உழைப்பிலிருந்துதான் உருவாகின்றன. இயற்கை வளங்கள் எல்லோருக்கும் பொதுவாக இருந்தால் அதிகமாக உழைப்பவர் அதிகமான மதிப்பைப் பெறுவார்கள். சோம்பேறிகள் செல்வந்தர்களாக இருப்பது அவர்கள் வளங்களை வளைத்துப் போட்டுக் கொள்வதால்தான். எல்லாவற்றையும் பொதுவில் வைத்து விடுவதுதான் இதற்குத் தீர்வு என்பது கம்யூனிசம்.
அப்படிச் சேர்த்து வைத்த சொத்துகளை வைத்துக் கொண்டு முதலாளிகள் தொழிலாளிகளை சுரண்டுகிறார்கள். தொழிலாளிகள் கொடுக்கும் உழைப்பின் முழு மதிப்பையும் கொடுக்காமல் உபரியை தாமே தக்க வைத்துக் கொண்டு இன்னும் சுரண்டுவதற்கான ஆதாயத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment