பிராண்டிங் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பேர்வளம் உருவாக்குவதைப் பற்றி பலராமன் என்பவர் நேற்றைக்கு ஏசிடெக் லெதர் அண்ட் ஃபுட்வியர் அலுமினி அசோசியேஷன் கூட்டத்தில் பேசினார். மிகவும் நன்கு தயாரிக்கப்பட்டு மனதில் பதியும் படி பேசினார்.
தோல் ஒரு மலிபொருள். ஆங்கிலத்தில் கமாடிடி எனப்படும் இந்த மலிபொருட்களுக்கான சந்தைகளின் இயல்புகளை விவரித்தார். மலிபொருட்களாக விற்பவர்களுக்கு ஆதாயம் குறைவாகத்தான் கிடைக்கும். நுகர்வோருக்கு அருகில் இருக்கும் பணிகளைச் செய்யும் நிறுவனங்கள் அதிகமாக சம்பாதிக்க முடியும்.
தோலைப் பொறுத்த வரை பேர்வளம் உருவாக்கி நுகர்வோருக்கு நுகர்பொருட்களை விற்கும் நிறுவனங்கள், எதை விற்பது, எந்த விலைக்கு விற்பது என்பதைத் தீர்மானித்து பெருவாரியான ஆதாயத்தையும், ஆண்டுக்கு ஆண்டு விற்பனை அதிகரிப்பையும் பெறுகிறார்கள்.
'பேர்வளம் உருவாக்குதல் பன்னாட்டு நிறுவனங்களால் மட்டுமே முடியும், அல்லது நிறைய பணம் செலவாகும் ' என்று நினைப்பது முற்றிலும் உண்மை இல்லை. சரவணபவனில் ஆரம்பித்து சக்தி மசாலா, தவிட்டு எண்ணைய் பேர்வளம் என்று பலர் மலிபொருள் சந்தையில் பேர்வளம் உருவாக்கி பெரிதாக வளர்ந்தவர்கள்.
பேர் வளம் உருவாக்க என்ன வழிமுறை:
1. வாடிக்கையாளர் எப்படி வேலை செய்கிறார், என்னென்ன விரும்புகிறார், எப்படி வாழ்கிறார், எப்படி பிறருடன் உறவு வைத்திருக்கிறார் என்று ஆழமாக அவதானித்துப் பார்க்க வேண்டும்.
2. வாடிக்கையாளரின் மனதில் இருக்கும் ஆழமான விருப்பம் ஒன்றை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
3. அந்த விருப்பத்தை நிறைவேற்றும் பொருள் அல்லது சேவை ஒன்றை தயாரித்து வழங்க வேண்டும்.
4. அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதை வாழ்க்கையின் குறிக்கோளாக வைத்து நாளுக்கு நாள் புதிய புதிய நுணுக்கங்களைப் பின்பற்றி விருப்பம் நிறைவேறுதலை மேம்படுத்திக் கொண்டே போக வேண்டும்.
நம்முடைய நிறுவனத்தைப் பொறுத்த வரை, வாடிக்கையாளரின் நடவடிக்கைகள் குறித்த புரிதல்கள் நிறையவே இருக்கின்றன. இன்னும் விபரமாகத் தெரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
வாடிக்கையாளரின் மனதில் இருக்கும் விருப்பம் அல்லது தேவை, தம்முடைய தொழில் நன்கு வளமடைய வேண்டும், அதற்குத் தேவையான தகவல்கள், முடிவுகள் சரியான நேரத்தில் சரியான நபருக்குக் கிடைக்க வேண்டும்.
தகவல்களைத் திரட்டுதல், சேமித்தல், எடுத்தல், வழங்குதல் என்ற நான்கு படிகளையும் முறைப்படி செய்வதன் மூலம் வாடிக்கையாளரின் மனதின் விருப்பம் அல்லது தேவையை நிறைவேற்றலாம். இது தோல் நிறுவனம் நடத்துபவர்களுக்கும், பொருள் உற்பத்தியாளர்களுக்கும், பொருள் விற்பவர்களுக்கும், பொருள் நுகர்வோருக்கும் பொருந்தும். அதுதான் நமது குறிக்கோள்.
தகவல்களை திரட்டி சேமித்து எடுத்து வழங்குதல் ஒவ்வொரு துறையிலும் மிகவும் தேவையான ஒன்று. கூகுள் இணையத்தில் இருக்கும் தகவல்களை எல்லாம் திரட்டி, சீராக சேமித்து வைத்து, தேவைப்படும் போது வசதியாக வெளியில் எடுத்து, பயனரின் விருப்பப்படி வழங்குகிறது. நாமும் அப்படி திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
தகவல்களை திரட்டுதல் - நமது மென்பொருளுக்குள் தரவுகளை உள்ளிடுதல். இதில் புதிய புதிய தொழில் நுட்பங்களுடன், பயனர் எப்படி பணி புரிகிறார் என்ற புரிதலும் அவசியம்
சேமித்தல் - தொழில் நுட்பம் தொடர்பான நுணுக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
எடுத்தல் - பயனர் கேட்கும் போது கேட்ட விபரத்தை வேகமாக எடுக்க முடிதல்.
வழங்குதல் - தேடுகருவி அல்லது அறிக்கைகள், அல்லது ஆவணங்கள், அல்லது மின்னஞ்சல், அல்லது அச்சுப் பிரதி என்று பல வகையில் தகவல்களை எடுத்துக் கொடுக்க முடிய வேண்டும்.
1. தொழில் நுட்பக் குழு இப்படி நான்கு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு செயல்படலாம்.
2. இந்த பேர்வளக் குறிக்கோளை குழுவினருக்கு வாடிக்கையாளருக்கு, பணம் கொடுப்பவருக்கு என்று எல்லோருக்கும் தெளிவாகச் சொல்லி விட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.
No comments:
Post a Comment