குழந்தை கண்களைத் திறக்காமல் ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் தூங்கிக் கொண்டே இருக்கும் நாட்கள் போய், அடுத்த நிலையில் தவழ வேண்டும். 2002ம் ஆண்டு டிசம்பர் வாக்கில் சேமிப்புகள் கரைந்து விட்டன. சேமிப்புகள் என்றால் சீனாவில் வேலை செய்யும் போது வங்கியில் போட்டு வைத்த வைப்புத் தொகைகள், அப்பா அம்மா ஓய்வு பெற்றதும் கிடைத்த பணத்தில் கொடுத்த பங்கு என்று எல்லாவற்றையும் செலவழித்து விட்டேன் (டோம்). இப்போது ஒரு திருப்புச் சந்தியில்.
'வங்கியில் கேட்டுப் பார்க்கலாமே' என்று நண்பன் சொல்ல, நிறுவனத்தின் கணக்கு வைத்திருந்த சௌராசுடிரா வங்கி மேலாளரை சந்திக்க முயற்சித்தேன். 'நம்ம கிளையில் நகை வைக்க பாதுகாப்புப் பெட்டகம் பற்றி விசாரிச்சாங்களே அவங்க கணவன்தான்' என்று அறிமுகப்படுத்தினார் உதவி மேலாளர். ஒரு ஆவணத்தில் அடுத்த மாதங்களில் வருமானம், செலவின உத்தேசங்களை போட்டு எடுத்துப் போயிருந்தேன். அதற்கு முன்பாக தொழில் விபரங்கள், எப்படி வாடிக்கையாளர்களை கவரப் போகிறோம் என்றெல்லாம் குறிப்புகள்.
அவர் நேராக எண்களுக்குள் மட்டும் புகுந்தார். ஐந்து லட்ச ரூபாய் கடன் கேட்டிருந்தேன். 'கடன் கொடுப்பதற்கு 3 காரணிகளைப் பார்ப்பேன். கடன் கேட்பவரின் திருப்பிக் கொடுக்கும் திறமை, தொழிலின் வருமான வாய்ப்புகள், மூன்றாவதுதான் சொத்துப் பாதுகாப்பு. அப்படிப் பார்த்ததில் உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று மரியாதையாக தெளிவாக அனுப்பி வைத்து விட்டார். ஏதாவது பிணைச் சொத்து இருந்தால்தான் கடன் கொடுப்பார்கள் என்று அவதூறு சொல்வதற்கு வழி இல்லை.
அடுத்த நிலையில் உறவினர்கள், நண்பர்களிடம் கேட்பது என்று முடிவு. நண்பன் ஒரு 30000 ரூபாய் கொடுத்து தொடங்கி வைத்தான். அப்பா/அம்மா, அத்தான்/அக்கா, அண்ணன் என்று சில லட்சங்கள் திரட்டி விட்டேன். கணினிகள், மடிக்கணினிகள் வாங்கியது, 2003ம் ஆண்டு தொடக்கத்தில் நடந்து தோல் கண்காட்சியில் பங்கு பெற்றது எல்லாம் அந்தப் பணங்களைப் பயன்படுத்திதான்.
அந்தக் கண்காட்சியின் போது ஒரு இடத்தை எடுத்து படம் காட்டும் கருவியில் எப்படி நிறுவனம் தோல் துறைக்குச் சேவை அளிக்கும் என்று விளக்கிக் கொண்டிருந்தேன். நிறைய பேர் வந்து பார்த்து விட்டுப் போனார்கள். எதுவும் வாடிக்கையாளராக கிடைத்து விடவில்லைதான். அதற்கு ஓரிரு மாதங்கள் முன்பு, ஸ்லாஷ்டாட் போல விவாதக் களம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தரவுத்தளம் வடிவமைத்து நிரல் எழுதி இணைய வழங்கியில் போட்டு விட்டேன். தினமும் தோல் துறை தொடர்பான செய்திகளை இணைய சுட்டியுடன் போட்டு அது தொடர்பான கருத்துக்களை போடும் வசதி செய்து கொடுத்திருந்தேன். அதை மாணவர்களிடமும், துறையில் பணிபுரிபவர்களிடமும் பரப்புவதற்கான முயற்சிகளையும் கண்காட்சியின் போது செய்ய முடிந்தது.
2003ம் ஆண்டில் வாடிக்கையாளர் பட்டியல் கிடைத்திருந்தது. ஏதோ வருமானமும் மாதா மாதம் கிடைக்க ஆரம்பித்திருந்தது. எல்லாமே இணைய வழங்கியில் பயன்படுத்தும் பயனர்கள்தாம். ராணிப்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் உள்ளே புகவே முடியவில்லை. இணைய இணைப்பு பரிதாபமாக இருந்தது. வருமானத்துக்காக சீன மொழி கற்றுக் கொடுத்தல், சீன மொழியில் நிறுவன ஆவணங்களை செய்து கொடுத்தல் என்று உப தொழில் செய்து வந்தேன். அதில் மாணவர்களும், தொடர்புகளும் கிடைத்தன. பெரும்பாலும் தோல் துறையைச் சார்ந்தவர்களே வாடிக்கையாளராகக் கிடைத்தார்கள்.
ஆண்டின் நடுப்பகுதியில் திரட்டிய காசு கரைந்து மீண்டும் நெருக்கடி. அண்ணா நகரில் வணிக நிதி உதவி நிறுவனம் என்ற விளம்பரத்தைப் பார்த்து தொலைபேசினால் வரச் சொன்னார்கள். ஏதோ ஒரு ஒத்திசைவில், கோயமுத்தூரில் இருந்து ஏதாவது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து தொழிலில் இறங்க விருப்பம் தெரிவித்தவருடன் சேர்த்து விட்டார்கள். அவரும் நாகர்கோவில் காரர்.
அவரை அழைத்து வந்து வீட்டில் காட்டினேன். அவருக்கும் ஏதாவது வேலையில் இருந்து விட வேண்டும் என்று அழுத்தம். வீட்டில் திருமணம் செய்து வைக்க அவசரப்படுத்துகிறார்கள். அவரது அப்பாவிடம் பணம் வாங்கி முதலீடு செய்யப் போகிறார். 5 முதல் 10 லட்சம் போடலாம் என்று சொன்னார். அவரது அப்பா சென்னை அசோகா விடுதியில் வந்து தங்கியிருக்கையில் போய்ப் பார்க்கப் போனோம். 5 லட்ச ரூபாய் தருவதாக ஒத்துக் கொண்டார். நிறுவனத்தில் பங்கு அளிக்காமல், கடனாக வாங்கிக் கொள்வதாகச் சொன்னேன். ஏதோ ஒரு காரணத்தால் அவரை பங்குதாரராகச் சேர்த்துக் கொள்ள மனது வரவில்லை.
நாகர் கோவில் போய் அப்பாவையும் கூட்டிக் கொண்டு போய் 5 லட்ச ரூபாய் வாங்குவதற்கான ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வந்தோம். 'நிறுவனத்தை வீட்டிலிருந்து நடத்தக் கூடாது, தனியார் பங்கு நிறுவனமாக மாற்ற வேண்டும்' என்று திட்டமிட்டுக் கொண்டோம். கடனுக்கு பணம் திரும்பக் கொடுப்பது ஒரு ஆண்டுக்குப் பிறகு ஆரம்பிக்க வேண்டும்.
அரும்பாக்கத்தில் கடைத்தெருவில் ஒரு அலுவலகம் பிடித்து, தரையில் மர உரிப்பு ஒட்டி, ஜன்னலில் வெனிசியன் திரை எல்லாம் போட்டு புதிய நாற்காலிகள் மேசைகள் வாங்கி போய் விட்டோம். வீட்டின் வாடகையைக் குறைக்க குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு அருகிலேயே 2000 ரூபாய் குறைவில் மாறிப் போய் விட்டோம். செலவழிப்பது பெரிதும் குறைந்து போயிருந்தது. அடுத்தவர் பணத்தைக் கடன் வாங்கி நமது விருப்பப்படி செலவழிக்க முடியுமா? குழந்தைகளின் படிப்புக்கும், உணவுத் தேவைகளுக்கு மட்டும்தான் செலவழிக்க வேண்டும் என்று முடிந்தது. அதனால் உரசல்கள் தீவிரமடைந்தன.
வாங்கிய 5 லட்ச ரூபாயில் மீதியிருந்த பணத்தில் 2004ம் ஆண்டு தோல் கண்காட்சியில் பங்கேற்பு, 2003ம் ஆண்டு டிசம்பரில் சீனா போய் வருவது என்று திட்டமிட்டுக் கொண்டோம். 2004ம் ஆண்டில் சீன மொழி மாற்றுச் சேவைகள் வருமானத்தைத் தந்து கொண்டிருக்க, தமிழ்க் கணினி என்று திட்டத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.
சீனாவுக்குக் கிட்டத்தட்ட 70000 ரூபாய்கள் செலவழித்துப் போய் வந்தேன். ஒரே ஒரு வாடிக்கையாளரை உருப்படியாகப் பார்க்க முடிந்தது. தொடர்பு கொண்ட மற்றவர்கள் யாரும் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அவ்வளவு காசு செலவழித்ததற்கு ஒரே பலன், நாம் திட்டமிடும் சேவைக்கு வாடிக்கையாளர்களிடையே ஆர்வமிருக்கும் என்று தெரிய வந்ததுதான்.
நண்பர்கள் இரண்டு பேருடன் போய் வந்தேன். திரும்பும் வழியில் இணையத்தில் 'பயன்பாட்டை வைத்திருந்தால் யாரும் சேர மாட்டார்கள். வாடிக்கையாளரது கணினியிலேயே மென்பொருள் இருக்கும் படி சேவை வழங்கு. நானும் அதை வாங்கிக் கொள்கிறேன். மாதா மாதம் பணத்தையும் தவறாமல் வாங்கிக் கொள்.' என்று நண்பன் சொல்ல, கடைசியில் கசப்பான அந்த நடைமுறையை புரிந்து கொண்டு, அப்படியே சேவை வழங்கும் படி மாறிக் கொண்டோம்.
நண்பனின் நிறுவனம், அதைத் தொடர்ந்து முதல் வாடிக்கையாளர் என்று வாடிக்கையாளர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள். 2004ம் ஆண்டு தோல் கண்காட்சியில் தெரிந்த ஒருவரின் நண்பரின் நிறுவன அறிமுகம் கிடைத்தது. அவர்களிடம் மாதக் கட்டணத்துக்கு வேலை செய்ய பேசிக் கொண்டோம். அந்த ஆண்டு முழுவதும் இந்த நிறுவனங்களுக்குப் பணி புரிந்து தோல், வேதிப் பொருட்கள், வாங்குதல், சரக்குக் கையாளுதல், உற்பத்தி விபரங்கள், போன்ற பகுதிகள் உருவாகி வந்தன. ராணிப்பேட்டை, பாண்டிச்சேரி, கூடுவாஞ்சேரி என்று நாலாபுறமும் போய் வர வேண்டும். அலுவலகத்திலேயே ஒரு சீன மொழி வகுப்பு, சென்னை அசோக் நகரில் ஒரு வகுப்பு என்று அந்தப் பக்கமும் வளர்ந்தது.
2004ம் ஆண்டு கோடையில் நண்பனுடன் இரு சக்கர வண்டியில் கடற்கரைச் சாலையில் தமிழகத்தின் தென் கோடியைத் தொட்டுத் திரும்பி வந்தோம். அந்த நண்பனிடம் பணம் வாங்கி கடனை வட்டியுடன் திருப்பி விட்டேன். நண்பன் பணம் வந்த போது வந்தால் போதும் என்று கொடுத்திருந்தான். அந்தப் பணத்தில் மீதியும் வைத்து வரும் சொற்ப வருமானத்தையும் வைத்து கொஞ்ச நாள் ஓடியது. வீட்டுச் செலவுகளில் குறையே ஏற்பட முடியாமல் இருந்தது. எதை எதையோ புரட்டி நிறுவனத்தையும் வீட்டுச் செலவுகளையும் சமாளிக்க முயன்று கொண்டிருந்தேன்.
இதற்கிடையில் ஒவ்வொருவராக அணியினரின் எண்ணிக்கையும் பெருகி விட்டிருந்தது. ஏழெட்டு பேராகி விட்டிருந்தோம். இரண்டு ஆண்டு அனுபவம் பெற்று விட்டிருந்தார்கள். வேறு வேலை பார்ப்பதாகச் சொன்னார். அந்த ஆண்டு தோல் கண்காட்சியில் பங்கு பெறுவதற்கு வழியே தெரியவில்லை.
அரும்பாக்கம் அலுவலகத்தை விட்டு மிகக் குறைந்த வாடகையில் போரூருக்கு அருகில் மதனந்தபுரம் என்ற கிராமத்தில் ஒரு கடையின் மாடியில் நகர்ந்தோம். 10000 ரூபாய் முன்பணம் கொடுப்பதற்குக் கூட அப்பா பணம் அனுப்பித்தான் நடந்தது. எல்லாமே இறுகிப் போய் செயல்பட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. வாணியம்பாடியில் ஒரு குழுவினருக்கு சீனமொழி கற்றுக் கொடுக்கப் போய்க் கொண்டிருந்தேன். சென்னையில் ஒரு காலணி நிறுவனத்துக்கு சீன மொழி மாற்றம் செய்து கொடுத்ததன் மூலம் அறிமுகம் ஏற்பட்டிருந்தது.
இடையில் ஐஎஸ்ஓ தணிக்கைக் குழுவினரில் துறை வல்லுனராக ஓரிரு நிறுவனங்களின் அறிமுகம் கிடைத்தது.
டிசம்பர் மாதத்தில் நண்பர் ஒருவரின் அறிமுகம் மூலம், ராணிப்பேட்டையின் பெரிய வேகமாக வளர்ந்து வரும் நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிறுவனத் தலைவரைப் பார்க்கப் போன போது, முன்பணமாகத் தாருங்கள் என்று கேட்டு விட, 5000ம்தான் கொடுப்பேன் என்று காசோலை ஒன்றைக் கொடுத்து விட்டார். திக்குமுக்காடிப் போன உணர்வு. எல்லாம் தொலைந்து போய் நம்பிக்கை அற்றுப் போயிருந்த நிலையில், மழையின்றி வாடி உலர்ந்து போன செடியின் மீது மழைத்துளி விழுந்தது போல இருந்தது அந்த 5000 ரூபாய் காசோலை.
2004 ஜனவரியில் காலணி நிறுவனத்திலும் பணியை ஆரம்பிக்கச் சொல்லி விட்டார்கள். சீன மொழிக் கற்றுக் கொடுத்த வாணியம்பாடி நிறுவனத்திலும் வேலை ஆரம்பித்து விட்டோம். வாடிக்கையாளர் பட்டியல் வளர்ந்து விட்டது.
No comments:
Post a Comment