2004 டிசம்பரில் சுனாமி வந்த அன்று ஞாயிற்றுக் கிழமை. அந்த நேரத்தில் வாரத்துக்கு 7 நாட்கள் வேலை செய்து கொண்டிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் ஏபிஎன் அம்ரோ வங்கியின் சென்னையிலிருந்து சேவை அளிக்கும் பிரிவில் பணி புரிபவர்களுக்கு சீன மொழி வகுப்பு. அதை முடித்ததும் மாலையில் வாணியம்பாடியில் வகுப்பு. திங்கள் கிழமை காலையில் வாணியம்பாடியில் அடுத்த வகுப்பு. ஞாயிறு நேரத்தில் வாணியம்பாடி போய்க் கொண்டிருக்கும் பேருந்தில். வேலூர் பேருந்து நிலையத்தில் சுனாமி சிறப்பு செய்தி மலராக தினமலர் எல்லோருக்கும் வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். (சனி ஞாயிறு குழப்பம் சரி செய்யப்பட்டது - நன்றி முகம்மது இஸ்மாயில்)
2005ல் நுழைந்ததும் வாடிக்கையாளர் எண்ணிக்கை நன்றாகவே கூடியிருந்தது. வருமானம் இன்னும் இழுபறியாகவே இருந்தது. குழந்தை நடக்க ஆரம்பித்து விட்டிருந்தது, ஆனால் இன்னமும் கால்களில் பலமில்லை. அவ்வப்போது தடுமாற்றம்தான்.
நண்பர்கள் சிலருக்கு நிலைமையை விளக்கி, 'நான் தனியாக சமாளிக்க முடியவில்லை. சந்தையில் நல்ல வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன. நீங்களும் சேர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்' என்று மின்னஞ்சல் அனுப்பி வேண்டினேன். ஒரு நண்பர் ஆர்வம் காட்டினார். நெய்வேலியிலிருந்து பல முறை அலுவலகத்துக்கு வந்து பேசிக் கொண்டிருந்தார். கடைசியில் சேர்ந்து விடுவது என்று முடிவு செய்தார்.
அவரது முயற்சியில் குழுவினரின் எண்ணிக்கை வேறு திசையிலிருந்து வளர ஆரம்பித்தது. ஆரம்ப குழு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டு பணிக்குப் பிறகு இரண்டு பேரும் விலகி விட்டிருந்தார்கள். சந்தைப்படுத்தலில் நல்ல அனுபவம் படைத்த அந்த நண்பர் புதிய வாடிக்கையாளர்களை அணுகுதல், புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருதால் என்று கவனத்தைத் திருப்பினார். கூடவே அவரது நண்பர்கள் மூலம் முதலீடு பெறவும் முயற்சி செய்தார்.
பெங்களூரில் ஒரு தோல் ஆடை நிறுவனம், சென்னை, ராணிப்பேட்டை, வாணியம்பாடி, திருச்சியில் செயல்படும் நிறுவனம் என்று வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போனது. வாணியம்பாடியில் முதல் வாடிக்கையாளரின் மூலம் அடுத்த இரண்டு வாய்ப்புகள் வந்தன. ராணிப்பேட்டை, வாணியம்பாடி, சென்னை பல்லாவரம் என்று கூட்டங்கள் ஏற்பாடு செய்தோம். சுறுசுறுப்பாக வளர்ச்சிக்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.
அலுவலகம் அந்த அத்துவானக் காட்டில் இருப்பது சரிப்படாது என்று வேறு இடம் தேடினார். வளசரவாக்கத்தில், பெரிய ஒரு வீட்டில் மாறிக் கொண்டோம். குழுவினரின் எண்ணிக்கையும், செலவுகளும் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டே இருந்தது. வாடிக்கையாளர், வருமான வளர்ச்சியை விட செலவுகள் ஒரு படி முன்னதாகவே போய்க் கொண்டிருந்தன.
நண்பரின் கல்லூரித் தோழர் சொந்தத் தொழில் செய்து கொண்டிருந்தார். அவரும் அவரது அண்ணனும் முதலீடு செய்வார்கள் என்று பேச ஆரம்பித்தோம். பல முறை சந்தித்து, விபரங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். பங்குகளை வாங்கிக் கொண்டு பணம் தருவதாக ஒத்துக் கொண்டார்கள்.
2005ம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளப் பெருக்கின் போது, வீட்டின் முன்பு தண்ணீர் நிரம்பியது. அடுத்த மழையில் ஆலப்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு, வளசரவாக்கம் அலுவலகத்தின் அருகில் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்தது. தண்ணீர் அலுவலகத்துக்குள் வரும் இரவில் கண் மூடாமல், தண்ணீரைக் கண்காணித்துக் கொண்டிருந்தோம். நள்ளிரவில் எல்லாப் பொருட்களையும் முதல் மாடியில் இருந்த வீட்டு உரிமையாளரின் பகுதிக்கு மாற்றி வைத்தோம். அடுத்த இரண்டு வாரங்களுக்கு அலுவலகம் செயல்படாமல் எல்லோரும் வாடிக்கையாளர் இடங்களிலேயே பணியாற்றினோம்.
வீட்டில் சிக்கல் முற்றி, சண்டை பெருத்து டிசம்பர் மாதத்தில் நான் அலுவலகத்திலேயே தங்கிக் கொண்டிருந்தேன். நண்பன் நங்கநல்லூரில் தனது வீட்டில் தங்கிக் கொள்ளச் சொல்ல அங்கு மாறிக் கொண்டேன். நிறுவனத்தில் பணிக்குக் குறைவே இல்லை இப்போது. சீனமொழித் தொடர்பான சேவைகளை நிறுத்தி விட்டேன். தமிழ்க்கணினி வேலைகளிலிருந்தும் 2005லேயே ஒதுங்கியிருந்தேன்.
பணம் வருவது இழுபறியாகவே இருந்தது. 2006 ஜனவரியில் தோல் நிறுவனத்தில் நல்லபடியாக வேலை போகும் நம்பிக்கையில் அதே நிறுவனத்தின் காலணி மென்பொருளும் செய்யச் சொன்னார்கள். அவரிடமே கடன்/முன்பணமாக கணிசமாகக் கேட்டு வாங்கிக் கொண்டோம். முதலீடாக கணிசமான தொகைகளும் உள்ளே வந்தன.
புதிய கணினிகள், மேசைகள், நாற்காலிகள், சரியான நேரத்துக்கு சம்பளம் என்று வருவதும் போவதும் வேகமாக நடந்து கொண்டிருந்தது. இன்னும் இன்னும் அதிகமாக வேலை பார்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் எல்லோருக்கும். முதலீட்டாளர்களும் செலவுகளைக் குறைப்பதை விட, வருமானத்தைப் பெருக்குவதைப் பார்க்க வேண்டும் என்று வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள்.
புதிய காலணி நிறுவன வேலைக்கு தரவுத்தளத்தை புது வடிவத்தில் செய்வது என்று ஆரம்பித்தோம். அந்த வேலையில் பல மாதங்கள் இழுத்தடிப்பு நடந்து விட்டது. வாணியம்பாடியில் ஒரு வாடிக்கையாளரின் பயன்பாட்டைப் பார்த்து புர்கினா பாசோவைச் சேர்ந்த தோல் நிறுவனத்தின் நம்ம ஊர் பிரதிநிதி தொடர்பு கொண்டார். புர்கினா நிறுவனத்தின் உரிமையாளர் சென்னைக்கு வரும் போது அவரைச் சந்தித்து விற்பனை ஆவணங்களை தயாரித்துக் கொடுத்தோம். அவர்கள் பணியை ஏற்றுக் கொண்டோம்.
ஏற்கனவே பயன்படுத்தும் நிறுவனங்களைப் பார்த்து நம்மை அணுகும் வாடிக்கையாளர்கள் ஒன்றிரண்டாக சேர்ந்து கொண்டே இருந்தது.
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பெருக்கி வளரும் வழியில் சமாளிக்க முடியாது என்ற வழிகாட்டல் வந்தது. தவறான பாதையில் நடந்து கொண்டிருப்பதைத் திருத்திக் கொள்வது எனக்கு கொஞ்சம் எளிதாகவே வந்து விடுகிறது. நண்பருக்கு அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்வது முடியவில்லை. 2006ம் ஆண்டின் இறுதியில் அவர் விலகிக் கொள்வதாகச் சொல்லி அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்தோம்.
வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 15ஐத் தாண்டியிருந்தது. வாடிக்கையாளர் பட்டியலும் 20ஐத் தாண்டி விட்டிருந்தது. தனியார் பங்கு நிறுவனமாக வழிகாட்டுபவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்திருந்தது. பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் மேலும் மேலும் அதிக சேவை வழங்கி, ஆதாயம் உருவாக்கி, நமது வருவாயையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று வழிமுறைக்கு நகர்ந்தோம். குழந்தை பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.
சில ஆயிரம் ரூபாய்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை வாடிக்கையாளர்கள் நம் மீது அவ்வளவாக அழுத்தம் செலுத்தவில்லை. லட்சக் கணக்கில் பணம் பெற ஆரம்பித்ததும், அவர்களின் வேலைத் தேவைகளும் இன்னும் இறுகலாயின. வேலை செய்யும் முறை, ஆவணப்படுத்தும் முறைகள், தகவல் தெரிவிக்கும் முறைகள், சந்திப்புகள், விவாதங்கள் என்று மேலும் மேலும் மேம்படுத்த வேண்டியிருந்தது.
2005ம் ஆண்டின் இறுதியிலிருந்து தமிழ் வலைப்பதிவுகளுக்கு அறிமுகம் கிடைத்து 2006ம் ஆண்டில் முழுவீச்சில் எழுத, பங்கு பெற ஆரம்பித்திருந்தேன். அதன் மூலம் கிடைத்த அறிமுகம் ஒரு நண்பர். அவர், இன்னொரு இயக்குனர் பேரும் பெங்களூரிலிருந்து தீவிரமாக வழிகாட்டலைத் தர ஆரம்பித்திருந்தார்கள். வெற்றிகரமான மென்பொருள் நிறுவனங்களில் பின்பற்றும் நடைமுறைகளை அறிமுகப்படுத்தினார்கள்.
2006ம் ஆண்டில், கல்லூரி இறுதியாண்டு திட்டப்பணி செய்ய குழுவாக வந்த மாணவர்கள், நிரல் கோப்புகளில் மாற்றங்களை கையாள சிவிஎஸ்சிலிருந்து சப்வெர்சனுக்கு மாறியது, வாடிக்கையாளர் தேவைகளுக்காக செய்யும் பணிகளை பதிந்து வைத்துக் கொள்ள மென்பொருள் கருவி பயன்படுத்துதல் என்று பல மேம்பாடுகள்.
நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகளில் விட்டுப் போகிறவர்கள், சில மாதங்களிலேயே விட்டுப் போகிறவர்கள் என்ற நடைமுறை பெரும் அவதியாக இருந்தது. பேசியதில் சம்பளத்தின் அளவை ஏற்றுங்கள் என்று ஒரு வழி காட்டினார். 2007 ஜூலை, தொடர்ந்து அக்டோபர் என்று சம்பள விகிதங்களை இரு முறை இரட்டிப்பாக்க முடிவு செய்தோம். வருமானமே போதாத நிலையில் அதிக சம்பளமா! என்று யாரும் கேட்டு விடவில்லை.
குழுவை வலுப்படுத்த, வலுவான குழு தொடர்ந்து பணி புரிய அது அடிப்படைத் தேவை. நண்பர்களிடம் கடன் வாங்கி சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தோம். வாடிக்கையாளர்களிடம் வரும் பணத்தை வைத்து கடனைத் திருப்பலாம் என்று திட்டம். இதற்கிடையில் முதலீடு செய்ய விரும்புவதாகச் சொல்ல, அடுத்த சுற்று பங்குகளை வினியோகிக்க ஏற்பாடு செய்தோம்.
கடன் கொடுத்திருந்த உறவினர்கள், நண்பர்களுக்கு கடன் தொகை, வட்டித் தொகை இரண்டையும் சேர்த்து ஈடாக பங்குகள் கொடுப்பது என்று திட்டம் தீட்டி அவர்களிடமும் பேசியதில் யாரும் மறுப்பு சொல்லவில்லை. அப்படிக் கேட்கும் நம்பிக்கையையும் நிறுவனத்தின் வளர்ச்சி அளித்தது. 2007ம் ஆண்டில் இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு உறுதியான சேவை வழங்கி அதிகப் பணம் பெறும் திசையில் முயற்சிகளைத் திருப்பினோம். அலுவலகத்தில் வேலை செய்யும் வசதிகளும் திடப்பட்டிருந்தன. சம்பள விகிதங்கள் ஓரளவு மதிப்பாக இருக்க, பணம் போதவில்லை என்று வேலையை விட்டு விட்டுப் போகிறவர்கள் நின்று போயிருந்தார்கள்.
2007ம் ஆண்டின் மத்தியில் தோல் துறையில் பணி புரிந்து கொண்டிருந்த நண்பர் நிறுவனத்தில் சேருவதாகப் பேசி சேர்ந்து விட்டார். அவரது அனுபவமும், நுணுக்கமும், நடைமுறை வழிகாட்டல்களும், வாடிக்கையாளருக்கு அளிக்கும் சேவையில் பல மடங்கு உயர்வு கொண்டு வந்தது. பல மாதங்களாக தொடர்ந்து கொண்டிருந்த நடைமுறைப்படுத்தும் பணிகளில், சரியான இடங்களில் கட்டுப்பாடுகளை புகுத்தி எல்லோரையும் நிமிர்ந்து உட்கார வைத்தார்.
இப்போது இன்னும் உயர் நிலையில் வரவை விட செலவு அதிகமாகப் போய்க் கொண்டிருந்தது. நண்பரின் கையிருப்புகளை கடனாக நிறுவனத்தில் கொண்டு வந்தார். முதலீடு செய்தவர்களிடமும், மற்ற நண்பர்களிடமும் அவ்வப்போது கைம்மாற்றாக வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்தோம்.
5 comments:
உங்களின் அனுபவங்களை சிறப்பாக பதிந்திருக்கிறீர்கள்...
பலருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்...
நன்றியுடன் வாழ்த்துக்கள்...!
// 2004 டிசம்பரில் சுனாமி வந்த அன்று சனிக் கிழமை//
Dear Maa .Si,
Thanks for sharing your experience to us. FYI : Don't mistake me, But the core of reply is 2004 Tsunami hit on Sunday. Not in saturday. Even it was occurred in 00:58:53 UTC at 26 Dec 2004.
Still we are seeking such strong warning system in our indian coastal communities saving from such natural calamites in future. But we can't find anything about the indian tsunami warning system except the link
http://www.incois.gov.in/Incois/tsunamicontents.jsp
I was emailed to the incois staff about dissemination of warning msg and never get any reply till now. This is not blame game. Blame game is Endless, We never interest such area.
We are running such same service under the name "Integrated Tsunami Watcher Service" at http://www.ina.in/itws/ and still working for safer costal communites. FYI: Your former Hutch and current Vodafone # also added in the list already. :))
with care and love,
Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.com
நன்றி இஸ்மாயில்,
//2004 Tsunami hit on Sunday//
எழுதும் போதே ஒரு குழப்பம் இருந்தது. சரி பார்க்காமலேயே விட்டிருந்தேன். திருத்தியமைக்கு நன்றி.
உங்கள் முயற்சிகளுக்கு நன்றி (என்னுடைய எண்ணையும் சேர்த்தற்கும் சேர்த்து)!
அன்புடன்,
சிவகுமார்
புதியவர்கள் பழைய பதிவுகளை படிச்சிட்டு இதை படித்தால் குழப்பம் இல்லாமல் இருக்கும்.
நன்றி நிமல்.
வணக்கம் வடுவூர் குமார்.
அன்புடன், மா சிவகுமார்
Post a Comment