நோபல் பரிசு பெற்ற பால் குரூக்மேனின் பத்தியிலிருந்து.
(நேற்றைய டெக்கான் குரோனிக்கிளில் வெளிவந்தது.)
பொருளாதாரச் சுணக்கத்திலிருந்து உலக நாடுகளின் பொருளாதாரம் இன்னும் குணமாகவில்லை. அதற்குள் செலவைக் குறைக்கிறேன் என்று அரசின் ஆதரவுத் திட்டங்களை நிறுத்தி விட்டால் அது இன்னொரு சுணக்கத்துக்கு வழி வகுத்து, பெரும் முடக்கத்தில் கொண்டு விடும்.
வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை இன்னும் பெரிதாகவே இருக்கிறது. வேலை வாய்ப்புகள் உருவாகி வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும் வரை அரசுகள் தமது செலவுக் கொள்கைகளைத் தொடர வேண்டும். இல்லை என்றால் பொருளாதாரக் கொள்கை மூலமாக 1930களில் ஏற்பட்டது போன்று பொருளாதார முடக்கத்தில் தள்ளப்பட்டு விடுவோம்.
1930களிலும் தொடர்ச்சியான வீழ்ச்சியாக இருக்கவில்லை. முதல் 2 ஆண்டுகளுக்கு சுணக்கம், அதன் பிறகு ஒரு ஆண்டு வளர்ச்சி, அதன் பிறகு அரசின் தவறான நடவடிக்கைகளால் மீண்டும் வீழ்ச்சி என்று போய் பொருளாதார முடக்கத்தில் அமெரிக்க பொருளாதாரம் கிட்டத்தட்ட 30% சுருங்கியது. வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடியது. ஃபிராங்கிளின் ரூஸ்வெல்டின் தைரியமான புதிய வாய்ப்பு திட்டங்கள் மூலமாக ஆரம்பித்த பொருளாதார மேம்பாடு இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட செலவுகள் மூலம் மீண்டும் வேகம் பிடித்தது.
இப்போதும் நாம் கிட்டத்தட்ட 1930களில் ஏற்பட்ட முதல் மேம்பாடுகளின் கட்டத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில் அரசுக் கொள்கைகள் பாதகமாக செயல்படுத்தப்பட்டால், பொருளாதாரம் முடக்கத்துக்குப் போய் ஆயிரக் கணக்கான பேர் வேலையில்லாமல் பல ஆண்டுகள் கழிக்க நேரிடும். பலர் இனிமேல் வேலை செய்யும் வாய்ப்பையே தமது வாழ்க்கையில் இழந்து விடுவார்கள். நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் பேரிழப்பு ஏற்படும்.
இதனைத் தடுக்க அரசாங்கம் தொடர்ந்து பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் செலவினங்களை செய்ய வேண்டும். இப்போது போய் வரவு செலவு சமன் செய்தல், சிக்கன நடவடிக்கைகள் என்பது அரசுகளுக்குப் பொருந்ததாது. தனி நபர்களும், தொழில் நிறுவனங்களும் அந்தப் பாதையில் போகும் போது அரசாங்கம் பற்றாக்குறை நிதித் திட்டத்தின் மூலமாக பொருளாதாரத்துக்கு வளர்ச்சி ஊக்கம் அளிக்க வேண்டும்.
பொருளாதார சுணக்கம் பற்றிய முந்தைய இடுகைகள்
பொருளாதாரச் சுணக்கம் - சில பகிர்வுகள்
கலிஃபோர்னிய தங்க வேட்டையும் தகவல் தொழில் நுட்ப...
உலகப் பொருளாதார நெருக்கடி - 1
No comments:
Post a Comment