Thursday, February 14, 2019

நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு உள்ளதா? அது மட்டும்தான் உள்ளதா?

ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010

4

அத்தியாயம் 1 - உலகமயமாதலும், 'புதிய' ஏகாதிபத்தியமும்

"அனைத்து சர்வதேச உறவுகளும் முதலாளித்துவத்துக்கு உட்பட்டதாகவும், முதலாளித்துவத்தின் அதிகாரத்தால் ஆளப்படுவதாகவும் இருக்கும் உலகத்துக்கான ஏகாதிபத்தியம் பற்றி முறையான ஒரு கோட்பாட்டை நாம் இன்னும் உருவாக்கவில்லை. இதற்கான காரணம், ஏறக்குறைய உலகளாவிய முதலாளித்துவம் என்பது மிகச் சமீபத்திய நிகழ்வாக இருப்பதே ஆகும்." 1 – எல்லன் மெய்க்சின்ஸ் வுட்.

உலக அளவு பெரிதான இந்தக் கோட்பாட்டு இடைவெளியை இந்த ஆய்வறிக்கை நிரப்ப முயல்கிறது. “ஏறக்குறைய உலகளாவிய முதலாளித்துவ உலகத்துக்கான முறையான ஏகாதிபத்திய கொள்கை” இல்லாத நிலையை சரி செய்ய முயற்சிக்கிறது. இந்த ஒட்டு மொத்தப் பணியையும் ஒரே ஆய்வறிக்கை நிறைவேற்ற முடியாது என்பது உண்மை. எனவே, ஒரு முனைவர் பட்ட ஆய்வறிக்கைக்குள் கையாளப்படக் கூடிய அளவில், ஆனால் ஒட்டு மொத்த கட்டமைப்புக்கும் மையமான பரிமாணத்தை, அல்லது கூறு ஒன்றை அடையாளம் காண்பதை தனது பணியாக எடுத்துக் கொள்கிறது. இந்தப் பணி எவ்வாறு செய்யப்படுகிறது என்று இந்த அத்தியாயத்தின் முதல் பிரிவு விளக்குகிறது.

இரண்டாவது பிரிவில், சுரண்டலின் தன்மை பற்றிய சில முக்கியமான கருதுகோள்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. முதலாளித்துவ உற்பத்தி தனியார் அடிப்படையில் நடப்பதாலும், மாய்மாலமான, மாயத் தோற்றங்களை ஏற்படுத்தும், மேற்பார்வையில் ஏமாற்றங்களை தரக்கூடிய சந்தையை ஆதாரமாகக் கொண்டிருப்பதாலும் திரை போட்டு மறைக்கப்படும் ஆனால், தவிர்க்க முடியாத சுரண்டலின் இருத்தலையும் இருத்தலையும் அறிமுகப்படுத்துகிறது.

இறுதிப் பிரிவில், இந்த ஆய்வறிக்கையை வழிநடத்தும் கோட்பாட்டு சட்டகம் வளர்த்தெடுக்கப்படுகிறது. முதலாளித்துவம் ஏகாதிபத்தியம் பற்றிய நான்கு கோட்பாட்டு பாரம்பரியங்களை மீளாய்வு செய்து, அவற்றுக்கிடையே இணைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் இத்தகைய சட்டகம் உருவாக்கப்படுகிறது. கார்ல் மார்க்சின் மூலதனம், லெனினின் ஏகாதிபத்தியம், சார்புநிலை கோட்பாடு இவற்றோடு 'உலகளாவிய முதலாளித்துவம்’, 'புதிய ஏகாதிபத்தியம்' ஆகியவை பற்றிய தற்கால கோட்பாடுகள் இந்த ஆய்வு பாரம்பரியங்கள் ஆகும்.

ஆய்வறிக்கையின் எஞ்சிய பகுதிகள் பற்றிய விளக்கத்தோடு இந்த அத்தியாயம் நிறைவடைகிறது.

1.1 புதிய தாராளவாத உலகமயமாதலும் ஏகாதிபத்திய/மூன்றாம் உலக வேறுபாடுகள் தொடர்தலும்

இந்த அறிமுகப் பிரிவு 5 பணிகளை நிறைவேற்றுகிறது.

  • முதலாவதாக, இந்த அத்தியாயத்திலும், இந்த ஆய்வறிக்கையின் பிற பகுதிகளிலும் விரிவாக பேசப்படவிருக்கிற குறிச்சொற்களுக்கும், கருதுகோள்களுக்கும் ஆரம்ப வரையறையை தருகிறது.
  • இரண்டாவதாக, இந்த ஆய்வறிக்கைக்கு காரணமாக அமைந்து, அதன் வடிவமைப்புக்கு வழிகாட்டிய பரந்துபட்ட கோட்பாட்டு அடித்தளத்தை விளக்குகிறது. 
  • ஆய்வு செய்யப்பட வேண்டிய களத்தை வரையறுப்பதற்கான குறிப்பான செயல்முறைகளையும், உறவாடல் கட்டமைவுகளையும் அடையாளம் காண்கிறது. 
  • நான்காவதாக, இந்த ஆய்வறிக்கைக்கு அடிப்படையாக அமையும் வாதங்களையும், கூற்றுகளையும் தெளிவாக முன்வைக்கிறது. 
  • ஐந்தாவதாக, இந்த வாதங்களை வளர்த்தெடுக்கவும், இந்தக் கூற்றுகளை உறுதிப்படுத்தவும் தேவையான ஆய்வு அணுகுமுறைகளை விளக்குகிறது.
உலக அரசியல் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாக ஏகாதிபத்திய நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வான, சுரண்டும், ஒடுக்கும், எதிர்மறையான, மனிதத்தன்மையற்ற உறவு முதன்மையானதாக உள்ளது. ஆனால்,  இதை மையநீரோட்ட சமூகவியல் மட்டுமின்றி, மார்க்சிய மையநீரோட்டமும்  அங்கீகரிக்கத் தவறுகின்றது. இந்த ஆய்வறிக்கை இந்த இடைவெளியை இட்டு நிரப்பும் நோக்கத்தில் திட்டமிடப்பட்டது. மார்க்சிய மையநீரோட்டத்தில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் சிந்தனையாளர்கள் பற்றிய மீள்ஆய்வில் இது தொடர்பான விபரங்களை நாம் பார்ப்போம். நாடு பிடித்தல், கொள்ளை அடித்தல் ஆகியவற்றின் அடிப்படையிலான முதலாளித்துவத்தின் முந்தைய நூற்றாண்டுகளுக்கும் இன்றைய உலகுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. பெரும்பான்மையான மையநீரோட்ட தாராளவாத அணுகுமுறைகளும், மார்க்சிய அணுகுமுறைகளும் இதைச் செய்யத் தவறியிருக்கின்றன.

'வளர்ந்த', அதிக தனிநபர் உற்பத்தி (ஜி.டி.பி) கொண்ட, அதிக அளவு கனிம வளங்களை பயன்படுத்தும் பகுதிகளுக்கும் பிற பகுதிகளுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வு, அதாவது ஏகாதிபத்திய-மூன்றாம் உலக ஏற்றத் தாழ்வு, விண்வெளியிலிருந்து பார்க்கும் போது தெளிவாக தெரிகிறது. உலக மக்கள் தொகையில் 14% மட்டும் கொண்ட ஐரோப்பா, வட அமெரிக்கா, ஜப்பான்  உலகின் பிற பகுதிகளை காட்டிலும் பல மடங்கு அதிக ஒளியை இரவில் வெளியிடுகின்றன. இதை இந்த ஆய்வுரையின் தொடக்கத்தில் தரப்பட்டுள்ள விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தில் காணலாம். 2


இந்த அத்தியாயத்தில் ஆரம்பத்தில் தரப்பட்டுள்ள, '2008-ம் ஆண்டு உலக வரைபடம்' உலகம் இரண்டாக பிளவுபட்டிருப்பதை இன்னும் தெளிவாகக் சித்தரிக்கிறது.


2008-ம் ஆண்டில் 90% மனிதர்கள் சராசரி ஜி.டி.பி $11,000-க்கு குறைவாகவோ $33,000-க்கு அதிகமாகவோ உள்ள நாடுகளில் வசிக்கின்றனர்;3 இந்த 90% மக்கள் தொகையில் பாதிப் பேர் $11,000-க்கும் $15,000-க்கும் இடையே தனிநபர் ஜி.டி.பி கொண்ட பகுதிகளில் வசிக்கின்றனர்.4 இதே போன்ற தரவுகளை ஆய்வு செய்த அந்தோனி பாய்னே, “இதில் வெளிப்படும் விஷயம் மிகவும் தீவிரமானது; இன்றைய உலகப் பொருளாதாரத்தின் மீது ஏகாதிபத்திய நாடுகள் செலுத்தும் ஆதிக்கம் பற்றிய மிகவும் மறுக்கமுடியாத ஆதாரத்தை இது வழங்குகிறது”5 என்று கூறுகிறார்.

மைய கருதுகோள்கள்
'ஏகாதிபத்திய நாடுகள்-மூன்றாம் உலக நாடுகள்' என்ற சொல் புரிந்து கொள்ள சிரமமானதாக இருக்கலாம். ஏனென்றால், அளவில்லா சிக்கல்கள் நிரம்பிய உலகத்தை அளவுக்கதிகமாக எளிமைப்படுத்துவதாக இது உள்ளது. இருப்பினும், இந்த உலகைப் பற்றிய இரண்டு வரைபடங்களில் தெரிவது போல, இந்த எளிமைப்படுத்தல் பருண்மையானதும், யதார்த்தமானதுமாகும். ஏகாதிபத்திய நாடுகளுக்கும்-மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வு பரிணாம வளர்ச்சி அடைவதோடு திடீர் திடீர் என மாற்றங்கள் அடைகிறது. அதற்கு தீவிரமான எதிர்ப்பு உள்ளது. அது ஆழமான நெருக்கடியில் உள்ளது - இருப்பினும் இன்னும் நம்மிடையே தொடர்கிறது.

உலகை விளக்குவதற்கான சொற்றொடர் என்ற அளவில் 'ஏகாதிபத்திய நாடுகள்-மூன்றாம் உலக நாடுகள்' என்பது இரண்டு வலிமைகளை பெற்றிருக்கிறது : அது உலக அரசியல், சமூக, பொருளாதார பிரிவினையின் புவிசார் தன்மையையும், நிலப்பரப்பு சார் தன்மையையும் துலக்கமாக காட்டுகிறது. இந்த பிரிவினை கடகரேகையை ஒட்டிய ஒரு மாபெரும், வளைந்து நெளிந்து செல்லும், உலகளாவிய பிளவு ஆகும்6. இது இப்போதைய உலகநிலைமை காலனியாதிக்க ஏகாதிபத்திய முந்தைய நூற்றாண்டுகளின் தொடர்ச்சியாக இருப்பதை குறிக்கிறது.

2000-ம் ஆண்டு தென் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சராசரி மனிதரின் ஆண்டு வருவாய் ஏகாதிபத்திய நாட்டின் ஒரு சராசரி மனிதரின் வருவாயில் 13-ல் ஒரு பங்குதான் என்று சுட்டிக் காட்டுகிறார். பெய்ன். ஆசியாவின் மூன்றாம் உலக நாடுகளின் மக்களுக்கு இது 24-ல் ஒரு பங்காகவும், சராசரி ஆப்பிரிக்க மனிதருக்கு 60ல் ஒரு பங்காகவும் உள்ளது.
வளர்ந்த/வளரும், மைய/விளிம்பு, ஏகாதிபத்திய/மூன்றாம் உலக நாடுகள் என உலகம் பிளவுபட்டுள்ளது என்ற கருத்து இன்றைய உலகின் நாடுகளுக்கிடையேயான உறவுகளின் பல நுணுக்கங்களையும், யதார்த்த நிகழ்வுகளுக்கும் நிலைமைகளுக்கும் உள்ள சிக்கலான இயக்க உறவையும் சித்தரிக்கிறது. ஆனால், இவற்றில் எதுவும் புதிய உலகமய சகாப்தத்தின் விரிந்து செல்லும் எல்லைகளை விளக்குவதற்கு போதுமானதாக இல்லை என்று பெய்ன் கருதுகிறார்.7

இருப்பினும், தனது கண்ணோட்டத்தை முன் வைப்பதற்கு பெய்ன் பயன்படுத்தும் 'பணக்கார' நாடுகள், 'ஏழை' நாடுகள் என்ற சொற்றொடர் ஏகாதிபத்திய நாடுகள்/மூன்றாம் உலக நாடுகள் என்பதில் உள்ள அதே வரம்புகளை கொண்டுள்ளது.

'ஏகாதிபத்திய நாடுகள்-மூன்றாம் உலக நாடுகள்' போன்ற உலகை இரண்டாக பிரிக்கும் கோட்பாடுகள், அளவுக்கு அதிகமாக எளிமைப்படுத்துகின்றன : ஒவ்வொரு நிலையிலும் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் தமக்குள் சமூக வர்க்கங்களாக பிரிந்திருப்பதை அவை வெளிப்படுத்துவதில்லை. அதாவது, ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் உள்ள விகாரமான ஏற்றத் தாழ்வுகள் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட துணைக்கோள் புகைப்படத்திலோ, '2008 உலக செல்வ பரவல் வரைபடத்திலோ' பிரதிபலிக்கப்படவில்லை.

அதாவது, சொத்து வினியோகம் பரவல் தொடர்பாக உலக வரைபடத்தில் வெளிப்படுத்தப்படும் நாடுகளுக்கு இடையேயான ஏற்றத் தாழ்வுகளுக்கு இணையான ஏற்றத் தாழ்வு ஒவ்வொரு நாட்டு எல்லைகளுக்குள்ளும் நிலவுகிறது8. நாடுகளுக்கு இடையேயான ஏற்றத் தாழ்வு அதிகரித்திருக்கிறதா என்பது பற்றிய சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் அதே நேரம் ஒவ்வொரு நாட்டின் உள்ளே ஏற்றத் தாழ்வு சமீபத்திய பல ஆண்டுகளில் வேகமாக அதிகரித்திருக்கிறது.9

ஏகாதிபத்திய நாடுகள்-மூன்றாம் உலக நாடுகளுக்கு இடையேயான உறவை சமூக வர்க்க பிரிவினையை ஒதுக்கி விட்டு பார்க்காமல், ஏகாதிபத்திய நாடுகளுக்கும்-மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான ஏற்றத் தாழ்வு பற்றிய வர்க்க பகுப்பாய்வு செய்ய வேண்டிய பணி உள்ளது. அத்தகைய வர்க்க பகுப்பாய்வு வருமான வினியோகத்தின் மீதே தனிச்சிறப்பாக கவனம் செலுத்துவதோடு மட்டுமின்றி அதை விட வேகமாக அதிகரித்து வரும் சொத்துக்களின் வினியோகத்தின் மீதும் கவனம் செலுத்துவதை கோருகிறது. நாடுகளுக்கிடையேயும் நாடுகளுக்குள்ளேயும் சொத்து வினியோகத்தின் ஒரு பக்க சார்பு வருமான வினியோகத்தின் ஒரு பக்கச் சார்பை விட மேலும் தெளிவாக வெளிப்படுகிறது.10

(தொடரும்)
  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

  2. ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்

  3. பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் - உலகம் எப்படி உள்ளது?

No comments: