'ஒரு டாலருக்கு 45 ரூபாய் கிடைக்கிறது என்பது எப்படி நிர்ணயமாகிறது?' என்று கேட்டார் அலுவக நண்பர் ஒருவர். விளக்க ஆரம்பித்தேன். ஆரம்பித்த சில நிமிடங்களில் ஒரு சிறிய கூட்டமே கூடி விட்டது.
ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையே நடக்கும் பரிமாற்றங்களில்தான் இந்த வீதம் தீர்மானமாகிறது.
நமக்கு டாலர் எப்போது தேவைப்படும்? வெளி நாட்டுக்குப் பயணம் போகும் போதோ, வெளி நாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்யும் போதோ டாலர் தேவைப்படும். அதற்காக நம் கையில் இருக்கும் ரூபாய்களைக் கொடுத்து டாலராக மாற்ற முயற்சி செய்வோம்.
சரி, டாலரை எப்போது விற்க முயல்வோம்? நம்ம மென்பொருளை வெளிநாட்டுக்கு விற்றதால் வாடிக்கையாளர் அனுப்பிய டாலர்களை உள்ளூரில் செலவழிக்க ரூபாயாக மாற்றும் போதும் அதே கடைக்குப் போவோம். அல்லது வெளி நாட்டு உறவினர் பணம் அனுப்பினால் மாற்ற வேண்டியிருக்கும்.
இப்படி ஏற்றுமதி, வெளிநாட்டு பண வரவு, வெளிநாட்டிலிருந்து முதலீடு என்று ஒரு வெளிநாட்டு பணம் நம்ம ஊர் பணமாக மாற வேண்டிய தேவைகள். இறக்குமதி, வெளிநாட்டிற்கு பணம் அனுப்புதல் என்று நம்ம பணம் வெளிநாட்டுப் பணமாக மாற வேண்டிய தேவைகள்.
கடையில் கத்தரிக்காய் விற்பது போல, தேவைதான் இந்த விலையையும் தீர்மானிக்கிறது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதிகள், அங்கிருந்து வரும் இறக்குமதிகளை விடக் குறைவாக இருந்தால் டாலர் விற்பவர்களை விட வாங்குபவர்கள் குறைவாக இருக்க டாலர் விலை ஏறும். அதாவது 44 ரூபாயக்கு ஒரு டாலர் என்பது 45 ரூபாய் என்று ஏறி விடும். இது போல எல்லா விற்பனை, வாங்குதல்களின் சமநிலையில் ஒரு விலை வீதம் அமைந்து விடுவதுதான் பணமாற்ற வீதம்.
பெரும்பாலும் சந்தையிலேயே இந்த வீதம் தீர்மானிக்கப் பட்டாலும், ஒரு நாட்டின் அரசோ, அல்லது பன்னாட்டு நிதி நிறுவனங்களோ, மாற்று வீதத்தை குறிப்பிட்ட அளவில் வைக்க முயலலாம். ரூபாய் மதிப்பு 44ஐ விடக் கூடவோ, குறையவோ கூடாது என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்தால் 44 ரூபாய் வீதத்தில் விற்பதை விட அதிகமான டாலர்கள் வாங்குபவர்கள் வந்து 45 ஆக மாறப் போகிறது என்று தெரிந்தால் தன் கைவசம் இருக்கும் டாலர்களை சந்தையில் விற்பனைக்கு அளித்து விலை ஏறாமல் பார்த்துக் கொள்ளும்.
இன்னொரு பக்கம் டாலர்களின் எண்ணிக்கை அதிகரித்து 43ஆக மாறப் போகிறது என்று தெரிந்தால் டாலர்களை வாங்கி தன் கையிருப்பில் வைத்துக் கொள்ள ஆரம்பிக்கலாம்.
இதுதான் இன்றைக்கு நிலவும் பணமாற்று வீதங்களின் அடிப்படை.
குறிப்பிட்ட அளவு தங்கம் இருந்தால்தான் பணம் வெளியிட முடியும் என்பது உண்மையா? முன்பெல்லாம் அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது பணத்தின் அளவை மத்திய வங்கி தீர்மானிக்கும் வகையில்தான் இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைக்கு தேவையான அளவு பணம் அச்சடித்து வெளியிடுவது அரசின் பொறுப்பு.
தேவை என்பது என்ன?
நாட்டில் பத்தாயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் கைமாற வேண்டுமானால் பத்தாயிரம் கோடி பணம் புழக்கத்தில் இருக்க வேண்டும். (இந்தக் கணக்கில் இன்னும் பல காரணிகள் வரும், ஒரு எளிய புரிதலுக்கு இப்படியே வைத்துக் கொள்ளலாம்). பொருட்களின் அளவும் தரமும் உயராமல் திடீரென்று பணப்புழக்கம் இருபதாயிரம் கோடிகளாக உயர்ந்து விட்டால், இரண்டு மடங்கு பணம் அதே அளவு பொருட்களைத் துரத்த விலைவாசி இரண்டு மடங்காக உயர்வதுதான் மிஞ்சும்.
நாட்டின் உற்பத்தித் திறன் உயர்ந்து பொருட்களின் மதிப்பு உயர்ந்தால் அந்த மதிப்பை பரிமாறிக் கொள்ள வசதியாகக் கூடுதல் பணம் வெளியிடப் பட வேண்டும். இல்லையென்றால் பரிமாற்றங்கள் போதிய பணப்புழக்கம் இல்லாமல் முடங்கிப் போய் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டு விடும்.
இந்த இரண்டுக்கும் நடுவில் சரியான அளவில் பண அளவை கட்டுப்படுத்துவதுதான் மத்திய வங்கியின் பணி.