Saturday, April 28, 2007

தோலின் கதை...

எந்த ஒரு தொழில் நிறுவனமும், ஒருவர் தனியாகவோ (proprietorship), கூட்டுச் சேர்ந்தோ (partnership), பங்கு போட்டுக் கொண்டோ (limited company) உழைத்து அந்த உழைப்பின் பலனாக வரும் பொருள் அல்லது சேவையை மற்றவர்களுக்கு வழங்குவதை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

அந்த பலனின் மதிப்பைப் பொறுத்து நிறுவனத்துக்கு பணம் கிடைக்கிறது.

இந்த உழைப்பு, பொருட்களை வாங்கி மதிப்பை அதிகமாக்கி விற்பதற்காக இருக்கலாம், அல்லது நேரடியாக சேவை வழங்குவதாக இருக்கலாம்.

'எதை விற்றாலும் வாங்குபவர்கள் சேவையைத்தான் வாங்குகிறார்கள்' என்பார்கள் சந்தைப்படுத்தலில். தொலைக்காட்சி வாங்குகிறார் ஒருவர் என்றால் அவர் வாங்குவது ஒரு பெட்டியை அல்ல, அந்தப் பெட்டியின் மூலம் தம்மை மகிழ்வித்துக் கொள்ள கிடைக்கும் சேவையைத்தான் வாங்குகிறார். ஒரு ஊரில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே தெரியாது என்றால் யாருமே தொலைக்காட்சி பெட்டி வாங்க மாட்டார்கள்தானே!

எல்லா தொழில்களுமே வாங்கி, மதிப்பு கூட்டி விற்பதை செய்தாலும் ஒவ்வொரு தொழிலிலும் சிறப்பு நுணுக்கங்கள் இருக்கும். அதைக் கற்றுக் கொள்ள பல ஆண்டுகள் கல்லூரி படிப்பு, பல ஆண்டுகள் நடைமுறை அனுபவங்கள் தேவைப்படும்.

நான் தோல் துறையில் பணி புரிவதால், தோல் துறையில் நுணுக்கங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். தோல் துறையை எடுத்துக்காட்டாகக் கொண்டு பொதுவான மேலாண்மை கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.

நம்மில் பெரும்பாலோருக்கு பதத்தோல் என்பது நாம் வாங்கிப் பயன்படுத்தும் செருப்பிலோ, மேலணியிலோ அல்லது தோலால் மூடப்பட்ட இருக்கைகளிலோ இடம்பெற்றுள்ள ஒன்று என்பதோடு சரி!

பதத்தோலைப் பற்றித் தெரிந்து கொள்ளாவிட்டால் வாழ்வே இருண்டு விடப் போவதில்லை என்றாலும், தோல் பொருள்களை வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும், ஏதேனும் தொந்தரவுகள் முளைக்கும் போதும், கைவசம் கொஞ்சம் விபரங்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

தோல் துறையில் முதலில் வரும் முறை-சார்ந்த நிறுவனங்கள் டேனரி எனப்படும் தோல் பதனிடும் சாலைகள். இந்த பதனிடும் சாலைகள் பச்சைத் தோலை வாங்கி, வேதிப் பொருட்களால் பதப்படுத்தி, இயந்திரங்கள் மூலம் மாற்றங்கள் நிகழ்த்தி காலணி/தோல் சட்டை/தோல் பொருட்கள் செய்வதற்கு ஏற்ற பதத் தோலாக விற்கின்றன.
இதற்கு நூற்றுக் கணக்கான ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.

6 comments:

Mugundan | முகுந்தன் said...

Arumaiyaana thakavalkaL.

NanRi sivakumaar.

anbudan
Mugu

மா சிவகுமார் said...

வணக்கம் முகு,

இனிமேலும் தொடர்ந்து இதை எழுத எனக்கு ஊக்கம் கொடுத்து விட்டீர்கள். :-)

அன்புடன்,

மா சிவகுமார்

தென்றல் said...

"தோலை உரித்து... " - தலைப்பு மிரட்டும்(!) படியாக இருந்தாலும் பதிவு இதமாகதான் இருக்கிறது...

தொடருங்கள், சிவகுமார்!

மா சிவகுமார் said...

வாங்க தென்றல்,

தலைப்பைப் பார்த்தும் சிலர் உள்ளே வருகிறார்கள் என்று கற்றுக் கொண்டதன் விளைவு :-)

அன்புடன்,

மா சிவகுமார்

Anonymous said...

சில தோலுரிப்புகள் செய்தபின், அடுத்து யார் தோலை உரிக்கப்போறீங்களோ என்று வந்தேன்...

நல்லதொரு மேலாண்மை கட்டுரையின் தொடக்கத்தை காணும் வாய்ப்பும் கிடைத்தது...

நன்றி...!!!!!!!!!!!!!!

மா சிவகுமார் said...

வாங்க ரவி,

:-)

பயனுள்ளதாக எழுத வேண்டும் என்று எண்ணம். எப்படி வருகிறது என்று பார்க்கலாம்.

அன்புடன்,

மா சிவகுமார்