Wednesday, October 17, 2007

நிரல் பராமரிப்பு - 6

சரி, ஏற்கனவே இருக்கும் நிரல் பிரதிகளை என்ன செய்வது. அவற்றை நிரல் பராமரிப்புத் தொகுப்புக்கு எப்படி கொண்டு வருவது என்றும் திட்டமிட வேண்டும்.

ஒவ்வொரு திட்டத்தின் சிவிஎஸ்சில் தற்போதைய பதிப்பை உருவாக்கம் கிளையாக ஆக்கி விட வேண்டும். எல்லா கோப்புகளையும் உருவாக்கம் கிளைக்குள் தகவிறக்கி விட்டால் போதும்.

உருவாக்கம் கிளையிலிருந்து புதிதாக உருவான கோப்புகளை அப்படியே சோதனை கிளையில் இருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர் கிளைகளுக்கு இணைத்து (merging) விட வேண்டும்.

வாடிக்கையாளர்களின் தற்போதைய நிரல் தொகுப்பிலிருந்து கோப்புகளை மேலே உருவாக்கிய கிளை பதிப்பில் நகல் செய்தால் அவர்களுக்காக செய்த மாற்றங்கள் நிரல் பராமரிப்புக்குள் வந்து விடும். அது சரிவர வேலை செய்கிறது என்று உறுதி செய்து கொண்ட பிறகு சோதனை கிளையிலிருந்து பயன் கிளைக்கு இணைக்கும் வேலையை மேலாளர் செய்து விடுவார்.

கடைசியாக பயன் கிளையிலிருந்து ஒரு பிரதியை எடுத்து வாடிக்கையாளர் இடத்தில் மாற்றி விடுவோம். இப்போது எல்லாமே ஒரே நிரல் கட்டுப்பாடு முறைக்குள் வந்து விட்டது.

மென்பொருள் பயன்பாட்டு நிரல்கள் ஒரு புறம் இருக்க, அதே நேரம் தரவுத் தள வடிவமைப்பின் பிரதிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு வாடிக்கையாளர் பிரதிக்கும் இன்னொரு வாடிக்கையாளர் பிரதிக்கும் நிரல் கோப்புகள் மட்டுமின்றி, தரவுத் தள வடிவமைப்புகளும் எப்படி வேறுபடுகின்றன என்று கவனிக்க வேண்டியிருக்கும்.

ஒரு பிரதியில் மூன்று அடைவுகள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
திட்டம் 3
உரு
சோதனை
பயன்
-வாடி1
- பயன்பாடு
- நிரல் தொகுப்புகள்
- நுட்பக் கோப்புகள்
பயன்பாடு அடைவில் மென்பொருளைப் பயன்படுத்தும் போது பயனர் அணுகும் கோப்புகள் மட்டும் இருக்க வேண்டும். நிரல் தொகுப்புகளில் செயலிகள் (functions), செயலிக்கூட்டுகள் (classes) போன்றவற்றின் தொகுப்புகள் இருக்க வேண்டும். இவை பயன்பாட்டு நிரல்களில் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். சேர்க்கப்பட்ட கோப்புகளுக்கான அடைவு இது என்று குறிப்பிட தோதுவாக இருக்கும்.

நுட்பக் கோப்புகளில் தரவுத் தளத்தை உருவாக்கப் பயன்படுத்திய உரைக் கோப்புகள் இருக்கும். தரவுத் தள வடிவமைப்பு ஒரு கோப்பு, கொடாநிலையாக முதலில் போட்டுத் தரும் தரவுகள் ஒரு கோப்பில், தரவுத் தள செயலிகளுக்கு ஒரு தனி அடைவு - அதில் ஒவ்வொரு செயலிக்கும் ஒரு கோப்பு. இப்படிப் போட்டு வைத்து விட்டால் வாடிக்கையாளர் பதிப்புகளுக்கிடையேயான தரவுத் தள மாறுதல்களையும் எளிதாகக் கையாளலாம்.

2 comments:

Anonymous said...

சிவா பகுதி 4க்கும் 5க்கும் தொடர்பின்றி கொண்டு சென்று விட்டீர்கள். அதான் 6ஆம் பகுதியும் குழப்புகிறது. பகுதி 4இல் சீவிஎஸ் பற்றி கதை சொல்லியவாறே 5ஆம் பாகத்தில் நடைமுறை புள்ளிவிவரத்தினுள் திடீரென பிரவேசித்து விட்டீர்கள். சரியாக பின்தொடர இயலாது. முடிந்தால் 4ஆம் பாக இறுதியில் அல்லது 5இன் ஆரம்பத்தில் ஏதேனும் ஒட்டு வேலை எனும் இணைப்பு பத்திகள் புகுத்துதல் புதியவர்களுக்கு எளிதாக இருக்கும்.

மா சிவகுமார் said...

//சிவா பகுதி 4க்கும் 5க்கும் தொடர்பின்றி கொண்டு சென்று விட்டீர்கள். அதான் 6ஆம் பகுதியும் குழப்புகிறது. பகுதி 4இல் சீவிஎஸ் பற்றி கதை சொல்லியவாறே 5ஆம் பாகத்தில் நடைமுறை புள்ளிவிவரத்தினுள் திடீரென பிரவேசித்து விட்டீர்கள்.//

தொடர்ச்சி இருந்தது போலத்தான் எனக்குப்பட்டது!

புதிதாகப் படிப்பதற்கு எளிதாக இல்லை என்பது இதனால்தான் இருக்கும்

//முடிந்தால் 4ஆம் பாக இறுதியில் அல்லது 5இன் ஆரம்பத்தில் ஏதேனும் ஒட்டு வேலை எனும் இணைப்பு பத்திகள் புகுத்துதல் புதியவர்களுக்கு எளிதாக இருக்கும்.//

செய்யப் பார்க்கிறேன் சிவா. சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்