Thursday, October 11, 2007

வலுவான ரூபாயின் விளைவுகள்

டாலரின் மதிப்பு குறைந்ததால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
  1. நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் விற்பனை குறையும்.

    ஒரு பொருள் செய்ய 100 ரூபாய் செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம் டாலருக்கு 45 ரூபாய் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த பொருளை லாபமும் சேர்த்து 2.5 டாலருக்கு விற்றால், ஏற்றுமதியாளருக்குக் கையில் 112.50 ரூபாய்கள் கிடைக்கும். 12.50 ரூபாய்கள் லாபம்.

    இப்போது அதே பொருளை 2.5 டாலருக்கு விற்றால் (1 டாலர் 39.50) 99.50 காசுகள்தான் கிடைக்கும். 50 காசுகள் இழப்பு.

    இதைச் சரிகட்ட செலவுக் கணக்கைக் குறைக்கப் பார்க்கலாம் அல்லது விற்பனை விலையை ஏற்றப் பார்க்கலாம். வாடிக்கையாளர் விலையை 2.70 ஆக ஏற்ற ஒப்புக் கொண்டால் அதே பொருளை விற்று 106.60 ரூபாய்கள் கிடைக்கும். கூடவே உள்ளிடு பொருட்கள் வாங்கும் போது விலை குறைக்கச் சொல்லி கேட்கலாம். தேவையில்லாத செலவுகளைக் குறைக்கலாம், முதலீடுகளைத் தள்ளிப் போடலாம். பழையபடி 12.50 ரூபாய்கள் லாபம் நிற்கும் படி முயற்சிப்பார்கள்.

  2. வெளிநாட்டிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்கள் மலிவாகக் கிடைக்க ஆரம்பிக்கும்.
    எரிஎண்ணையின் விலை பேரலுக்கு 70 டாலர்கள் என்றால் அதன் விலை முன்பு 70*45=3150 ரூபாய்களாக இருக்கும். இன்றைக்கு அதே விலை எண்ணெய் வாங்க 70*39.5= 2765 ரூபாய்கள் செலவழித்தால் போதும்.

    இது இரண்டு வகையில் போகலாம். திறமையான மக்களாக இருந்தால் இப்படிக் கிடைத்த தமது நாணயத்தின் வலிமையைப் பயன்படுத்து வெளி நாடுகளிலிருந்து மூலப் பொருட்களை வாங்கி தமது உற்பத்தியைப் பெருக்கிக் கொள்வார்கள் அல்லது முதலீட்டில் செலவிட்டு புதிய இயந்திரங்கள், வெளி நாட்டில் விற்பனை அலுவலகங்கள் என்று ஆரம்பித்து தமது உற்பத்தி வலிமையையும் சந்தைப்படுத்தும் திறனையும் அதிகப்படுத்திக் கொள்வார்கள்.

    மாறாக, இறுதிப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தால் உள்ளூர் மக்களின் பாடு திண்டாட்டமாகிப் போகும்.

    இந்தியாவில் அரிசி கிலோ 25 ரூபாய்க்கு விற்கிறது என்று வைத்துக் கொள்வோம். பழைய மதிப்பில் கிலோ 0.5 டாலருக்கு அமெரிக்காவின் அரிசி இங்கு வந்து சேர்ந்தால் அடக்க விலையே 22.50ல் ஆரம்பிக்கும் (45*0.5). இப்போது அதே அரிசியின் அடக்க விலை ரூபாய் 19.75 ஆக இருக்கும். மற்ற செலவுகள் போக கிலோவுக்கு 2 ரூபாய் லாபம் பார்க்கலாம் என்று ஒருவர் அமெரிக்க அரிசியை நம் ஊரில் விற்க ஆரம்பித்தால் விவசாயிகள் நிலைமை திண்டாட்டமாகிப் போய் விடும்.

  3. ரூபாய்களில் சம்பாதிப்பவர்களின் வளம் அதிகரிக்கும். இந்தியாவில் செயல்படும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு நல்ல ஆதாயம். புதிய கருவிகள் வாங்கும் செலவுகள், வெளிநாட்டு இணைப்புக்குக் கொடுக்கும் கட்டணம் எல்லாம் குறைந்து விடும். வருமானமோ குறையப் போவதில்லை.

    இந்தியாவிலிருந்து துபாய்க்கு தொலைபேசி அழைப்புக்குக் கட்டணம் நிமிடத்துக்கு 4.50 ரூபாய்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 0.05 டாலர்கள் துபாய் நிறுவனத்துக்கு பிஎஸ்என்எல் கொடுக்க ஒப்பந்தம். முந்தை செலாவணி விகிதத்தில் ஒரு நிமிடத்துக்கு கொடுக்க வேண்டிய தொகை 2.25 ரூபாய்கள், மிஞ்சும் தொகை 2.25 ரூபாய்கள். இப்போதைய விகிதத்தில் கொடுக்க வேண்டிய தொகை அதே 0.05 டாலர்களுக்கு ரூபாய்களில் 1.95 காசுகள். ஒரு நிமிடத்துக்கு 30 காசுகள் லாபம்.

    இது 2வதாக சொன்ன அதே இறக்குமதி ஆதாயம்தான். துபாய் நிறுவனத்தின் சேவையை இறக்குமதி செய்து கொடுக்கிறது இந்திய நிறுவனம். அதற்கான செலவு குறைவு.

    இதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து வெளி நாடுகளுக்கு அழைக்கும் கட்டணங்கள் குறைக்கப் படலாம். எதிர்மறையாக வெளிநாடுகளிலிருந்து இந்தியாவை அழைக்கும் கட்டணங்கள் உயரலாம்.

  4. வெளிநாடுகளில் சுற்றிப் பார்க்க, தொழில் தொடர்பாக, படிக்கப் போகும் இந்தியர்களுக்குச் செலவு குறைவு.
    ஆங்காங்கில் விற்பனை அலுவலகம் ஒன்றைத் திறந்து அந்த ஊர் ஊழியரை வேலைக்கு வைக்க ஆகும் மொத்த செலவு மாதத்துக்கு 5000 டாலர்கள் என்று வைத்துக் கொள்வோம். டாடா தேயிலை நிறுவனம் குறைந்த செலவில் அலுவலகத்தை ஆரம்பித்து நடத்தலாம். முன்பு 2.225 லட்ச ரூபாய்கள். இப்போது 1.95 லட்ச ரூபாய்கள்தான்.

    இரண்டு ஆண்டுகள் மேலாண்மை படிப்புக்குச் செலவு 20000 டாலர்கள் என்றால் முன்பு 9 லட்சம் ரூபாய்கள் தேவைப்படும் இப்போது 7.9 லட்சத்தில் முடித்து விடலாம்.

    நியூயார்க்கில் ஒரு இரவு தங்குவதற்கான விடுதிச் செலவு 80 டாலர்கள் என்றால், இப்போதைய செலாவணி விகிதத்தில் 420 ரூபாய்கள் குறைவான செலவு.

  5. வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பும் போது கிடைக்கும் மதிப்பு குறைந்து விடும். 1000 டாலர்கள் சேமிப்பு முன்பெல்லாம் 45 ஆயிரங்களாக மாறிக் கொண்டிருந்தது, இப்போது 39 ஆயிரங்கள்தான் கிடைக்கும்.

    என்னென்ன செய்யலாம்? முதலீடுகளை டாலர்களில் செய்யலாம். வேலை பார்க்கும் நாட்டிலோ, டாலர்களில் செலாவணி நடக்கும் நாடுகளிலோ சொத்துக்களை வாங்கிப் போடலாம்.

    இந்தியாவில் முதலீட்டுக்காக வாங்கி வைத்திருந்த சொத்துக்களை விற்று டாலராக மாற்றிக் கொண்டால் லாபம் கிடைக்கும்.

    ஒரு ஆண்டு முன்பு 20 லட்சம் ரூபாய்களுக்கு ஒரு வீடு வாங்கும் போது அதற்காக 45,000 டாலர்களை மாற்றிச் செலவழித்திருக்க வேண்டும். இப்போது அதே வீட்டை அதே விலைக்கு விற்று டாலராக மாற்றினால் 50,000 டாலர்களுக்கு மேல் கிடைக்கும். நிகர லாபம் 11%. வீட்டு விலைகள் தாறுமாறாக ஏறியிருக்கும் நிலையில் அதே வீட்டுக்கு 40 - 45 லட்சங்கள் கிடைத்தால் அதை டாலராக மாற்றி வேலை பார்க்கும் நாட்டில் முதலீடு செய்யலாம்.

  6. ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள்
    மென்பொருள், துணி, ஆடைகள், தோல் போன்ற துறை நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் கொஞ்சம் இறுக்கிப் பிடித்தலுக்குத் தயாராக வேண்டும். முன்பு போன்ற ஊதிய உயர்வுகள், புதிய வேலையில் தாவும் வாய்ப்புகள் இருக்காது.

    தொலை தூர நிறுவனச் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு நெருக்கடி அதிகமாக இருக்கும். பல மாறுதல்களைப் பார்க்கலாம்.

23 comments:

வடுவூர் குமார் said...

சாதக பாதகங்கள் இல்லாத நிகழ்வுகள் இல்லயே!!
அப்படி பார்த்தால் அதில் இதுவும் ஒன்றே.

manasu said...

//அதை டாலராக மாற்றி வேலை பார்க்கும் நாட்டில் முதலீடு செய்யலாம்.//

finally $ has to be converted to Rs. only na? for that $ has to go up again. will it in neaar future?

மா சிவகுமார் said...

வாங்க குமார், மனசு.

//சாதக பாதகங்கள் இல்லாத நிகழ்வுகள் இல்லயே!!
அப்படி பார்த்தால் அதில் இதுவும் ஒன்றே.//

ஆமாமா, சாதகங்களைப் பயன்படுத்து முன்னேறுவது புத்திசாலித்தனம்.

//finally $ has to be converted to Rs. only na?

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? வெளிநாட்டில் சொத்துக்களை நிர்வகித்து வருமானம் பார்க்க முடியாதா? பல இடங்களில் வாங்க அனுமதி இருக்காது. ஆனால் வாங்க முடிகிற இடங்களில் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா!

//for that $ has to go up again. will it in neaar future?//

உறுதியாச் சொல்ல முடியாத ஒன்று அது. டாலரின் மதிப்பு கூடலாம், அல்லது இன்னும் சரியலாம். ஒரே அறிவுரை என்னவென்றால், தொழில் முறை செலாவணி தரகர்களைத் தவிர மற்றவர்கள் செலாவணி விகிதத்தைச் சார்ந்து வாழ்வது புத்திசாலித்தனம் அல்ல.

அன்புடன்,
மா சிவகுமார்

Anonymous said...

//வெளிநாட்டிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்கள் மலிவாகக் கிடைக்க ஆரம்பிக்கும்.
எரிஎண்ணையின் விலை பேரலுக்கு 70 டாலர்கள் என்றால் அதன் விலை முன்பு 70*45=3150 ரூபாய்களாக இருக்கும். இன்றைக்கு அதே விலை எண்ணெய் வாங்க 70*39.5= 2765 ரூபாய்கள் செலவழித்தால் போதும்.
//

Will the government reduce the price of petrol/diesel ?

I have some question and correct me If I am wrong.

1) If the rupee becomes stronger then the Inflation is very less. But I dont see any where the cost of any product is getting reduced. Day by day it is increasing as if the inflation is more?. in otherwords if the Rupee is becoming stronger then our Purchasing Power Parity should be stronger. i.e., If I spent Rs.100 last year then it is enough for me to spent Rs.98 this year. Was it happening ?

2) In most of the IT companies the recruitment process become slow in India in the 1st and 2nd quarter of this year. The reason they want to keep the high margin profit and start using resources from bench. In the following months you can see the real impact in IT companies. The same may be applicable to all the export industries.

3) How does the stronger rupee will play an effective role in local market which neither depend on expoprt or import.
-Anand

வவ்வால் said...

மா.சி,

இந்த பணமதிப்பு குறித்தான பல பதிவுகள் வர ஆரம்பித்துள்ளது, நல்ல முன்னேற்றம் தரும் செய்தியே. பலவற்றையும் படித்தேன் , இது கொஞ்சம் எளிமையாக, சில உதாரணங்களுடன் சாமன்யனின் பாஷையில் உள்ளது. அனைவருக்கும் புரிய ஒரு வாய்ப்பாக இருக்கும்.

நீங்கள் கொடுத்துள்ள பெட்ரோல் உதாரணம் கூட தியரிப்படி சரி ஆனால் நடைமுறைப்படி சரியல்ல.

பெட்ரோல் அமெரிக்காவில் இருந்து வரவில்லை. எனவே எண்ணை விற்பவன் டாலர் சரிவால் அவன் நாட்டு நாணயத்தில் முன்னர் என்ன மதிப்பை பெற்றானோ அது வரும் அளவுக்கு விலையை ஏற்றிக்கொள்வான். இங்கே தான் திருப்பூர்காரர்கள் மாட்டிக்கொள்கிறார்கள் அப்படி ஏற்றி புதிய விலையை வைக்க முடியாது.நம் விற்பனை ஒப்பந்தம் அப்படி போட்டுக்கொள்கிறோம், எண்ணை விற்பவன் அப்படி அல்லவே!

அனானி நீங்கள் கேட்ட பெட்ரோல்/டீசல் விலை குறையுமா என்பதற்கும் இதான் பதில்.

மேலும் சிலது கேட்டுள்ளார், அதற்கு எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

இந்திய ரூபாயின் மதிப்பு கூடிய அளவிற்கு நம் நாட்டில் உற்பத்தி பெருகி தாரளமாக கிடைக்கவில்லை. எனவே விலை குறைய வேண்டும் என்றால் உற்பத்தியும் கூட வேண்டும்.

தற்சமயம் உற்பத்தி அதே அளவில் இருக்க நாணயம் மட்டும் பணப்பரிவர்த்தனை அடிப்படையில் மதிப்பினை கூடப்பெற்று இருக்கிறது.

ஏன் இந்த டாலர் எல்லாம் சரியாமலே திண்டுக்கல்/ஒட்டன் சத்திரம் பக்கம் போனால் பார்க்கலாம் சில நாட்களில் தக்காளி ஒரு கூடை அளவுக்கு 1 ரூபாய் என கூட விலை இருக்கும் காரணம் அங்குள்ள மார்கெட்டுக்கு தக்காளி அதிகம் வந்து இருக்கும். சில நாட்களில் அந்த 1 ரூபாய்க்கு கூட விலைப்போகாமல் சாலையில் கொட்டிவிடுவார்கள்.

Anonymous said...

//ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் மென்பொருள், துணி, ஆடைகள், தோல் போன்ற துறை நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் கொஞ்சம் இறுக்கிப் பிடித்தலுக்குத் தயாராக வேண்டும். முன்பு போன்ற ஊதிய உயர்வுகள், புதிய வேலையில் தாவும் வாய்ப்புகள் இருக்காது.

தொலை தூர நிறுவனச் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு நெருக்கடி அதிகமாக இருக்கும். பல மாறுதல்களைப் பார்க்கலாம்.//
திருப்பூர் ஏற்றுமதியில் வரும் லாபம் அடிவா
ங்கியுள்ளது. டாலர் மதிப்பை லாபமாக வைத்து செயல்படும் மென்பொருள், ஆய.ஆடை போன்ற துறையினர் இதை எப்படி சமாளிப்பார்கள்????
-விபின்

மா சிவகுமார் said...

ஆனந்த்,

//Will the government reduce the price of petrol/diesel ?//

இந்த எரிபொருட்களின் விலை நிர்ணயிப்பில் பல சிக்கலான குழப்பங்கள். மத்திய வரிகள், மாநில வரிகள், நிறுவன ஆதாயம் என்று அவரகள் சொல்வதுதான் கணக்காக இருக்கிறது. எப்போது உயர்த்த வேண்டுமோ உயர்த்திக் கொள்வார்கள்.

டாலரின் மதிப்புக் குறைந்தாலும், அதற்கேற்ப எண்ணெய் விலையும் ஏறி விடலாம் (வவ்வால் சுட்டிக்காட்டியது போல)

//1) If the rupee becomes stronger then the Inflation is very less. But I dont see any where the cost of any product is getting reduced. Day by day it is increasing as if the inflation is more?. in otherwords if the Rupee is becoming stronger then our Purchasing Power Parity should be stronger. i.e., If I spent Rs.100 last year then it is enough for me to spent Rs.98 this year. Was it happening ?//

இப்போதைய ரூபாய் மதிப்பு அதிகரிப்பின் உடனடிக் காரணங்களில் பெரும் பங்கு பங்குச் சந்தையில் வந்து சேரும் வெளியாட்டு முதலீடுகள்.

உண்மையிலேயே நம்முடைய PPP உயர வேண்டுமானால், நம்முடைய உற்பத்தித் திறன் உயர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் வலுவான ரூபாயின் பலன் பரவலாக எல்லோருக்கும் போய்ச் சேரும்.

பங்குச் சந்தை பணப் பெருக்கம் மூலமாக நிறுவனங்கள் வளர்ந்து, புதிய முதலீடுகள் நிகழ்ந்து மற்றவர்களின் உற்பத்தித் திறன் உயர்ந்து (அதே அளவு வேலையின் விளைவு அதிகமாவது) PPP அதிகமாக நாள் பிடிக்கும்!

//In most of the IT companies the recruitment process become slow in India in the 1st and 2nd quarter of this year. The reason they want to keep the high margin profit and start using resources from bench.//
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

//How does the stronger rupee will play an effective role in local market which neither depend on expoprt or import. //

எந்த விளைவும் இருக்காது, அப்படி ஒரு உள்ளூர் சந்தை இருந்தால். சிறிய கிராமத்தில் கூட பொருட்களை ஏற்றிச் செல்ல லாரி வந்து போனால் இறக்குமதி செய்யப்படும் டீசல் விலை கணக்கில் வந்து விடுகிறது. உலக மயமாக்கலால் தொடப்படாத சந்தைகள் மிகக் குறைவுதான்.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் said...

வவ்வால்,
//பெட்ரோல் அமெரிக்காவில் இருந்து வரவில்லை. எனவே எண்ணை விற்பவன் டாலர் சரிவால் அவன் நாட்டு நாணயத்தில் முன்னர் என்ன மதிப்பை பெற்றானோ அது வரும் அளவுக்கு விலையை ஏற்றிக்கொள்வான்.//

ஆமா, அந்த அளவுக்கு விலை ஏறத்தானே செய்யும்!

//இந்திய ரூபாயின் மதிப்பு கூடிய அளவிற்கு நம் நாட்டில் உற்பத்தி பெருகி தாரளமாக கிடைக்கவில்லை. எனவே விலை குறைய வேண்டும் என்றால் உற்பத்தியும் கூட வேண்டும்.

தற்சமயம் உற்பத்தி அதே அளவில் இருக்க நாணயம் மட்டும் பணப்பரிவர்த்தனை அடிப்படையில் மதிப்பினை கூடப்பெற்று இருக்கிறது.//

சரியாகச் சொன்னீர்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் said...

வாங்க விபின்,

//டாலர் மதிப்பை லாபமாக வைத்து செயல்படும் மென்பொருள், ஆய.ஆடை போன்ற துறையினர் இதை எப்படி சமாளிப்பார்கள்//

செலவுகளை இறுக்கிப் பிடித்தல், வாடிக்கையாளரிடம் விலை ஏற்றிக் கேட்டல், மூலப் பொருட்கள் வாங்குவதில் விலை குறைத்தல், புதிய முதலீடுகளை தள்ளிப் போடுதல் என்று பல வழிகளைப் பின்பற்றலாம்.

அன்புடன்,
மா சிவகுமார்

Anonymous said...

/// ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள்,மென்பொருள், துணி, ஆடைகள், தோல் போன்ற துறை நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் கொஞ்சம் இறுக்கிப் பிடித்தலுக்குத் தயாராக வேண்டும். முன்பு போன்ற ஊதிய உயர்வுகள், புதிய வேலையில் தாவும் வாய்ப்புகள் இருக்காது.///

இதுக்கெல்லாம் அவசியமே இல்லை மா.சி.

இந்த டாலர் மதிப்பு குறைவால் திருப்பூரில் நிறைய நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.

மூன்று மாதத்திற்கு முன் ஒரு டி சர்ட் 3 டாலருக்கு (ரூ.45 x 3 = ரூ.135) ஒப்பந்தம் செய்யப்பட்டு, இப்போது ஏற்றுமதி செய்து விட்டு கணக்கு போட்டு பார்த்தால் ரூ.117 (ரூ.39 x 3) தான் கிடைக்கிறது.

மேலும், ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தப்படி ஆடைகளை ஏற்றுமதி செய்தால் நிச்சயம் நட்டம் தான்.

இந்தியாவுக்கு வர வேண்டிய புதிய ஒப்பந்தங்கள் சீனா மற்றும் பங்களாதேசு நாடுகளுக்கு சென்று விட்டது.

இனி அடுத்த ஆண்டு தான் திருப்பூர் மீண்டு எழ முடியும்.

டாலர் மதிப்பு குறைதல் இந்திய நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது ஆனால் ஏற்றுமதியாளர்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.

K.R.அதியமான் said...

////இந்திய ரூபாயின் மதிப்பு கூடிய அளவிற்கு நம் நாட்டில் உற்பத்தி பெருகி தாரளமாக கிடைக்கவில்லை. எனவே விலை குறைய வேண்டும் என்றால் உற்பத்தியும் கூட வேண்டும்.//

prices rise will continue as long as govt prints and pumps too much money into the system to finance its deficts. this is a basic truth.
last year money supply (M-3) rose by 22 % ; GDP growth of some 9 % absorbed half of the money supply increase while the rest is translated into inflation. as inflaton is rated to be around 5 - 6 %, it is obvious that the rest of the missing percentage has been absorbed by the real growth in black economy which is not reflected in govt statistics !!! ?

exchange rates depend on local interest rates too, which is a function of local inflation.

unless the govt reduces money supply and deficit financing to output growth level, inflation will continue, which hurts all.
no use blamming FII, IT or capitalism for our folly.

US too is doing the same thing and hence the fall of USD due to its budget and trade deficts in trillions as USD continues to be the reserve currecy of the world and used extensively as the hard currency of international trade,
US is coping. otherwisw, inflation and free fall of USD will occur.

pls check the Indian rates of inflation in 1956-80 when there was no LPG, free trade, FII, FDI and when rupee was neither 'floated' in current account nor were aby IT cos here. 20 % inflation was not uncommon then and crores of people were impoverished as their real earnings and savings were wiped out. more people were impoverished and died of 'malnutrition' (an euphemism for starvation) thru such follies of 'good' men who believed in defict financing for 'full employment', confiscatory tax regime (99 %) and closed and controlled economy with licnese raaj, than any war or draught or natural catastrophe...

மா சிவகுமார் said...

வணக்கம் வெயிலான்,

//இந்த டாலர் மதிப்பு குறைவால் திருப்பூரில் நிறைய நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.//

:-(

//இனி அடுத்த ஆண்டு தான் திருப்பூர் மீண்டு எழ முடியும்.

டாலர் மதிப்பு குறைதல் இந்திய நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது ஆனால் ஏற்றுமதியாளர்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.//

டாலர் மதிப்பு ஏறிக் கொண்டே போகும் போது நன்மைகளை அனுபவித்த ஏற்றுமதியாளர்களுக்கு இப்போது சோதனைக் காலம்!!

அதியமான்,

வழக்கம் போல உங்கள் கருத்துக்களை தமிழில் எதிர்பார்க்கிறோம் :-)

அன்புடன்,
மா சிவகுமார்

உண்மைத்தமிழன் said...

மா.சி. மிக மிக எளிமையாக என்னைப் போன்ற சாமான்யனும் புரியும்வகையில் எழுதியிருக்கிறீர்கள். நன்றிகள்.

ஆனாலும் எனக்குள்ள சந்தேகம் டாலரின் மதிப்பு குறைவதால் ஏற்றுமதி மட்டும்தானே பாதிக்கும். அதனால் உள்நாட்டு உற்பத்தியோ, மற்றைய விலைவாசிகளுக்கோ பாதிப்பு இல்லையே..

அப்படியானால் டாலரின் மதிப்பு குறைவது நல்லதுதானே..

//டாலர் மதிப்பு குறைதல் இந்திய நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது ஆனால் ஏற்றுமதியாளர்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.//

இது உண்மையானால், ஏற்றுமதியாளர்களின் கொள்கைகள் பொதுமக்களுக்கும், நாட்டுக்கும் விரோதமானதா..? புரியவில்லை.

மா சிவகுமார் said...

வாங்க உண்மைத் தமிழன்,

//ஆனாலும் எனக்குள்ள சந்தேகம் டாலரின் மதிப்பு குறைவதால் ஏற்றுமதி மட்டும்தானே பாதிக்கும். அதனால் உள்நாட்டு உற்பத்தியோ, மற்றைய விலைவாசிகளுக்கோ பாதிப்பு இல்லையே..//

இறக்குமதி விலை குறைந்து உள்நாட்டு உற்பத்தி, விலைவாசிகள் குறைய வழி ஏற்படும்.

//அப்படியானால் டாலரின் மதிப்பு குறைவது நல்லதுதானே.. //

அதுதான் நானும் நினைக்கிறேன். டாலரின் மதிப்புக் குறைந்தால் அமெரிக்க பொருள்கள், சேவைகள் குறைந்த செலவில் நமக்குக் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

//ஏற்றுமதியாளர்களின் கொள்கைகள் பொதுமக்களுக்கும், நாட்டுக்கும் விரோதமானதா..? //

விரோதம் கிடையாது. ஏற்றுமதி அதிகரித்தால் என்ன பொருள். நம் உற்பத்தி வெளிநாடு போகிறது. அதனால் நம் நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

ஆனால், டாலரின் மதிப்பு அதிகரித்தால் நமக்குத் தேவையான பொருட்களை வாங்க அதிகம் செலவழிக்க வேண்டும். அதனால் சம்பாதிக்கும் பணத்தில் குறைவாகத்தான் பொருட்கள் கிடைக்கும். அதனால் டாலரின் மதிப்புக் குறைவு உள்நாட்டுச் சந்தையில் உழைக்கும் மக்களுக்கு சில வகைகளில் ஆதாயமாக இருக்கும்.

எல்லா மாற்றங்களிலுமே யாருக்குமே முற்றிலும் பாதகம் அல்லது முற்றிலும் சாதகம் என்று இருக்காது. நிகர விளைவைத்தான் பார்க்க வேண்டும்.

அந்த நிகர விளைவு என்ன என்பதைப் புரிந்து கொள்வதில்தான் விவாதம் ஏற்படும்.

அன்புடன்,
மா சிவகுமார்

ஜீவி said...

டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கத்திற்கும் இந்திய பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கும்

ஏதும் சம்பந்தமில்லையா?..

மா சிவகுமார் said...

//டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கத்திற்கும் இந்திய பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கும்

ஏதும் சம்பந்தமில்லையா?..//

இருக்கு ஜீவா. அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தைக்குள் பணத்தைக் கொட்டுவதும் இப்போதைய இந்திய பண மதிப்பு அதிகரிப்பின் முக்கிய காரணங்களில் ஒன்று

அவர்கள் பங்குகள் வாங்க டாலர்களைக் கொண்டு வருகிறார்கள். அதனால் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கிறது.

அன்புடன்,
மா சிவகுமார்

பாலராஜன்கீதா said...

இந்தியாவிலிருந்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு இந்த நாணய பரிமாற்ற விளைவுகள் பாதிக்காத வகையில் இந்திய வங்கிகளில் Forward Exchange Rate Contract என்ற ஒரு வசதி உள்ளதே அதைப் பயன்படுத்தலாம். அதாவது இன்றிலிருந்து ஒருமாதம் / இரண்டுமாதம் / மூன்றுமாதம் ..... என்ற குறிப்பிட்ட காலம் கழித்து ஏற்றுமதிக்கான அயல்நாட்டு நாணயத்தினை ஒரு குறிப்பிட்ட விலைக்கு இந்திய ரூபாயாக மாற்றிக்கொள்ள ஏற்றுமதியாளர்கள் இந்திய வங்கிகளுடன் குறிப்பிட்ட விலை விகிதத்தில் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். அந்தக் குறிப்பிட்ட காலம் முடிந்து ஏற்றுமதிக்கான அயல்நாட்டு நாணயம் நமக்கு வந்தவுடன் நாம் ஒப்பந்தம் செய்து கொண்ட விலையில் அதை இந்திய ரூபாய்களாக மாற்றிக்கொள்ளலாம். இதனால் அப்போதைய நாணயச் சந்தை நிலவர விலை மாற்றங்களால் இந்திய ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதிக்கு பாதிப்பு வராது. (குறிப்பிட்ட காலம் கழித்து அமெரிக்க டாலர் / இந்திய ரூபாய் மதிப்பு அதிகமாகுமா / குறையுமா என்று யூகிப்பது சற்றுக் கடினம்தான்)

மேலும் இறக்குமதிப் பொருள்களுக்காகச் செலவழிக்கவேண்டிய இந்திய ரூபாய்கள் அளவு குறையும் அல்லவா ? பொதுவாக இந்தியாவில் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் என்பதால், இது இந்திய நாட்டிற்கும் இறக்குமதியாளர்களுக்கும் நல்லதுதானே ?

இவைகுறித்து வங்கிகளில் அயல்நாட்டு வணிகச் செலாவணி துறையின் (Foreign Exchange Department) பணிகள் அறிந்தவர்கள் விளக்கமாக எழுதினால் நன்றாக இருக்கும்.

Anonymous said...

//அதை டாலராக மாற்றி வேலை பார்க்கும் நாட்டில் முதலீடு செய்யலாம்.//

அதுவும் அவ்வளவு சுலபமில்லை. மா.சி. ஏன்? கறுப்பு பணம்தான். வாங்குகிறவர்கள் யாரும் 100% வெள்ளையில் கொடுக்க முன்வருவதில்லை. (வரி கட்ட நான் ரெடி!). அதிர்ஷ்டமிருந்தால் 30% கிடைக்கும் வெள்ளையில். பாக்கி 70% -ஐ எப்படி டாலராக மாற்றுவது? (சிவாஜியைத்தான் கேட்கணும்?)

- ரவி

கோபி said...

Please take part in testing Tamil Domain

http://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்
http://உதாரணம்.பரிட்சை/தமிழ்

மா சிவகுமார் said...

வணக்கம் பாலராஜன்,

//Forward Exchange Rate Contract என்ற ஒரு வசதி உள்ளதே அதைப் பயன்படுத்தலாம். //

பெரிய மற்றும் நடுத்தர அளவு நிறுவனங்களில் இதைச் செய்து கொள்கிறார்கள் என்று பார்த்துள்ளேன். இதன் மூலம் ஏற்கனவே எடுத்த ஆர்டர்களில் கிடைக்கும் பணம் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். அந்த வசதிக்கான கட்டணத்தையும் விலையில் சேர்த்துக் கணக்குப் போட்டுக் கொள்ளலாம்.

இனிமேல் புதிதாகப் போடப்படும் ஒப்பந்தங்களுக்கு தற்போதைய செலாவணி சார்ந்த கணக்குதானே போட முடியும். இதற்கேற்ப எதிர்கால விற்பனை ஒப்பந்த செலாவணியும் குறைந்திருக்கும் அல்லவா.

//மேலும் இறக்குமதிப் பொருள்களுக்காகச் செலவழிக்கவேண்டிய இந்திய ரூபாய்கள் அளவு குறையும் அல்லவா ? பொதுவாக இந்தியாவில் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் என்பதால், இது இந்திய நாட்டிற்கும் இறக்குமதியாளர்களுக்கும் நல்லதுதானே ?//

நிச்சயமாக. ஆனால் ஏற்றுமதி நிறுவனங்களின் வணிகம் குறைந்து அங்கு வேலை இழப்புகள் ஏற்படலாம். என்ற வகையில் நாட்டுக்குக் கேடு.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் said...

ரவி,

//அதிர்ஷ்டமிருந்தால் 30% கிடைக்கும் வெள்ளையில். பாக்கி 70% -ஐ எப்படி டாலராக மாற்றுவது? (சிவாஜியைத்தான் கேட்கணும்?)//

இது சிரமம்தான். டாலராக மாற்றவும் கறுப்புச் சந்தை இருக்கிறதே. ஆனால் சட்ட விரோதமான நடவடிக்கையாகப் போய் விடும்.

இப்போது கறுப்புச் சந்தையில் டாலரின் மதிப்பு அதிகார பூர்வ சந்தையை விட அதிகமா? குறைவா?

அன்புடன்,
மா சிவகுமார்

Narain Rajagopalan said...

சிவா,

நிறைவாக எழுதியிருக்கிறீர்கள். டாலரின் மதிப்பு குறைந்தது என்பது இந்தியாவின் ரூபாய்க்கு மட்டும் எதிராக அல்ல. யுரோ வுக்கும் எதிராக குறைந்திருக்கிறது. டாலரின் மதிப்பு குறைந்தால் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கிறது, அப்போது இறக்குமதி செய்யப்படும் பொருளின் விலை குறையும். ஆனால் இந்தியாவில் கொஞ்சம் வித்தியாசமிருக்கிறது. இன்றைய நிலையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் $100 னை தொட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் காரணங்களுக்காகவும், சில மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தலுக்காகவும், காங்கிரஸ் உள்ளிட்ட UPA அரசு விலையினை ஏற்றாமல் இருக்கிறது. அவ்வாறு செய்வதால், நாம் இவ்வளவு நான் சேர்த்து வைத்திருந்த Foreign Exchange கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பிக்கும். இந்த வாரத்திய பணவீக்கத்தினைப் பார்த்தால் அது 3.01% லிருந்து 3.11% உயர்ந்திருக்கிறது.

இது தவிர, ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்காக மத்திய அரசு சில சலுகைகளையும், சில விஷயங்களில் கண்டும் காணாமலும் சில செயல்களை செய்திருக்கிறது. மென்பொருள் சேவையிலிருக்கும் பெரிய நிறுவனங்களான விட் நிறுவனங்கள் (Wipro, Infosys, TCS) இப்போதே டாலரினை யுரோவுக்கு எதிராக hedge செய்யப்போவதாக கேள்விப்பட்டேன். பல நிதி நிறுவனங்கள், வங்கிகளின் தகவல் அறிக்கையினை பற்றி படித்துக் கொண்டு வருவதால், இன்னமும் குறைவான மதிப்புடைய டாலருக்கு [weakening dollar] இந்தியாவில் இருக்கும் ஏற்றுமதி நிறுவனங்கள் தயாராகுதல் அவசியம். என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை அமெரிக்க டாலர், இந்திய ரூபாய் மதிப்பு 36னினை அடுத்த ஆண்டு (2008) மத்திம வாக்கில் (second quarter July, August, September) எட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கான காரணம், இந்திய வளர்ச்சியில் மட்டுமல்ல, அமெரிக்க வீழ்ச்சியிலும் இருக்கிறது. அமெரிக்க பெடரல் வங்கி அடுத்த வருடத்து அமெரிக்க வளர்ச்சியினை 2% மேலிருக்காது என்று கணித்திருக்கிறது. இது தாண்டி, ஈராக் /ஆப்கன் போர்களும், sub prime பிரச்சனையும், வளர்ந்து கொண்டிருக்கும் அன்னிய கடன்களும், கச்சா எண்ணெய் தேவையும் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலும் சேர்ந்து அமெரிக்கா ஒரு மிகப்பெரிய சரிவினை எதிர்நோக்கிப் போய் கொண்டிருக்கிறது.

உலக வணிகத்தினை கூர்ந்து கவனிப்பவர்கள் அனைவரும் ஒரு சேர டாலரின் மதிப்பு இறங்குவது என்பது வெறும் அமெரிக்க நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல, இது உலகின் பிரச்சனை என்று பேச தொடங்கியிருக்கிறார்கள். 2 டிரில்லியன் டாலர்கள் இதுவரை போர்களுக்கு அதிபர் புஷ் காலக்கட்டத்தில் செலவு செய்யப்பட்டிருக்கிறது. உலகின் எல்லா நாடுகளும் அமெரிக்க அரசின் பத்திரங்களை (American Bonds) வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் திருப்பி கேட்க ஆரம்பித்தால், இன்னமும், அமெரிக்க அரசுக்கு பிரச்சனைகள் புதிதாக உருவாகும். வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, சீனா, ரஷ்யா, கிழக்கு ஐரோப்பா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு ஏற்கனவே அமெரிக்க பெருந்தனவந்த நிறுவனங்கள் தங்களின் முதலீட்டினை திருப்பி விட்டன. இந்தியாவின் சென்செக்ஸ் தலைதெறிக்க ஒடிக் கொண்டிருப்பதன் காரணமும், அன்னிய முதலீடே. இந்தியாவினை பொருத்தவரை செபியின் திரு. தாமோதரன் மிக கண்டிப்பான ஆசாமியாக இருப்பதால் நாம் தப்பிப்போம் என்று நம்புகிறேன். மேலுள்ள விவரங்கள் உங்கள் பதிவோடு இணைத்து படிக்கவேண்டி இருப்பது என்பதால் எழுதியிருக்கிறேன். நன்றிகள்.

மா சிவகுமார் said...

உங்கள் கருத்துக்களையும் கவனிப்புகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நரேன். இந்த விவாதத்துக்கு நல்ல செறிவூட்டுவதாக அமைகிறது உங்கள் பின்னூட்டம்.

அன்புடன்,

மா சிவகுமார்