Wednesday, February 21, 2007

வரவுக்கு மேல் செலவு செய்வது எப்படி? (economics 47)

தனிநபர் ஒருவர் வரவுக்கு மேல் செலவு செய்தால் ஒரு நாள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் கணக்கு கொடுக்க வேண்டி வரும் என்பது பொதுவாகச் சொல்லப்படுவது. அதே விதி தொழில் நிறுவனங்களுக்கும், அரசாங்கங்களுக்கும் கூட பொருந்தும். வருவாய்க்குள் வாழாவிட்டால் கடைசியில் தொல்லைதான்.

கடன் என்பது வேறு ஒருவரின் சேமிப்பிலிருந்து வருவது. தனது வருவாயில் ஒரு பகுதியை செலவளிக்காமல் சேமித்து வைப்பதை இன்னொருவர் கடனாகப் பெற முடிகிறது. அப்படி கடனாக வாங்கியவர், உடனடி நுகர் பொருட்களில் அதைச் செலவிட்டால் முதலீடு எதுவும் உருவாகமல் கடனைத் திருப்ப வழியில்லாமல் போய் விடும்.

இதற்கு விதிவிலக்கு முதலீடு. வருமானம் பத்தாயிரம் ரூபாய். பத்தாயிரமும் வீட்டு செலவுக்குப் போய் விடுகிறது. இனிமேல் செலவு செய்ய வேண்டுமானால் கடன்தான் வாங்க வேண்டும்? இந்தக் கூடுதல் செலவு எதிர்காலத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்கக் கூடிய முதலீட்டுக்குப் பயன்பட்டால் கடன் வாங்கி கூட செலவு செய்யலாம்.

தனி நபர்கள், நிறுனங்கள், அரசுகள் வருவாயை மிஞ்சி செலவு செய்வது அடிப்படை ஒன்றேயானாலும் வெவ்வேறு முறையில் புரிந்து கொள்ளப்படுகின்றன.

  • தனி நபர்கள் துண்டு நிதித் திட்டம் போடுவது, வங்கிக் கடன் அல்லது தனிப்பட்ட கடன்களை அடிப்படையாக வைத்து. கணக்கியலில் தனிநபரின் எல்லா வரவையும் கூட்டி, எல்லா செலவையும் அதிலிருந்து கழித்து அவரது சேமிப்பை கணக்கிடுவார்கள்.

  • தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் புதிய திட்டங்களை செயல்படுத்த ஆரம்பிக்கும் போது கடன் வாங்கி செலவளிப்பார்கள். இதை முதலீடு என்று தனியாக கணக்கு வைத்து முழுச் செலவையும் அதே ஆண்டில் காட்டாமல் திட்டங்கள் பலன் கொடுக்க ஆரம்பிக்கும் ஆண்டுகளுக்கு செலவை பகிர்ந்தளித்து கொள்வார்கள்.

  • அரசாங்கம் வருமானத்தை மிஞ்சி செலவு செய்யத் திட்டம் போடும் போது பற்றாக் குறை நிதிநிலை. குறையை ஈடு செய்ய கடன் பத்திரங்களை வங்கிகளுக்கு விற்பது மூலம் பொது மக்களின் சேமிப்பை அரசு கடனாக வாங்கிக் கொள்ளும். அரசின் பற்றாக்குறை கடன் வாங்கல் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு, தனி நபர்களுக்குக் கிடைக்கக் கூடிய வங்கிக் கடன் வசதிகள் குறைந்து விடும்.
யாராயிருந்தாலும், செலவிடுவது முதலீடாக இருந்தால் பற்றாக்குறை நிலைமை ஏற்றுக் கொள்ளக் கூடியது. கடன் வாங்கி உடனடித் தேவைகளைப் பார்த்துக் கொள்ளும் பழக்கம் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாத ஒன்று.

2 comments:

Meenapriya said...

ரொம்ப நல்லா எழுதுறீங்க. அப்படியே தனி மனிதர்கள் எப்படி budget போடுவது என்பதை பற்றியும் கொஞ்சம் எழுதுங்க. இப்போ நீங்க எழுதுவது வீடு நாடு ரெண்டுக்கும் பொதுவா இருக்கு. ரொம்ப informativeவா இருக்கு

மா சிவகுமார் said...

வாங்க பிரியா,

தனி நபர் பொருளாதாரம் பற்றி முன்பே கொஞ்சம் எழுதியிருந்தேன்.

http://masivakumar.blogspot.com/search/label/பொருளாதாரம்

பட்ஜெட் போடுவது பற்றி என்ன சந்தேகம்? என்ன வரவு வருகிறது, எங்கு செலவு செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டால் போதாது? :-)

அன்புடன்,

மா சிவகுமார்